ஒரு இனத்திற்குரிய அடையாளங்களுள் முதன்மையானதும் முக்கியமானதுமாகக் கருதப்படுவது மொழி. மொழி என்பது வெறுமனே தகவல் தொடர்பிற்கான கருவி மட்டுமல்ல. ஒரு இனத்தை, அவ்வினத்திற்கான பண்பாட்டுக் கூறுகளை, வாழ்வியலை, வரலாற்றை, அற, மற நெறிகளை அறிய வேண்டுமாயின் அவ்வினத்திற்குரிய மொழியை அறிய வேண்டும்.

மொழியின் கூறுகளைத் தீர்மானிக்கும் காரணி களாக ஆட்சி அதிகாரம் இருந்தாலும் ஒடுக்கப்பட் டோருக்கான மொழி, மிகுந்த வீரியத்தோடே வெளிப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில், மிகக் குறைந்த அளவே வெளிப்பட்டி ருப்பினும் தலித் இலக்கிய எழுச்சியும், பெண் படைப்பாளர் களின் படைப்பும் ஏற்படுத்திய அதிர்வை யாராலும் மறுக்க இயலாது.

தாய் வழி சமூகத்திலிருந்து படிப்படியாக மாறிய சமூக அமைப்பில் பெண்களிடமிருந்து பறி போனவை களில் மொழியும் ஒன்று.

ஆண் மைய சமூகத்தில் பெண் ணின் மொழியும் வலியும் ஆவணங்களற்றுப் போய்விட்டது எனினும் ஆட்டுக்குத் தழை ஒடிக்கும் அருவாளை இடுப்பில் சொறுகும் இலாவகத்தோடு மொழியைக் கையாண்ட ஆத்தாள் களின் மொழி வாய்மொழி யாகவே இன்றளவும் நீடித்திருக்கிறது.

மொழியின்நுட்பமான வடிவங்களில் வீரியம் மிகுந்த நுணுக்கமானவடிவமே பழமொழி.

நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் சாதி, மதம், வர்க்கம் என்ற எவ்விதப் பேதமுமற்று மிகச் சரளமாக வெளிப்படக் கூடிய வடிவமாகப் பழமொழி திகழ் கிறது. எனினும் மொழியின் எல்லா வடிவங்களிலும் இயங்கும் அரசியல் பழ மொழியில் மிக அதிகமாகவே புழங்குகிறது.

ஒரு குறிப்பிட்ட இனத்தின், குழுவின் உளவிய லைக் கட்டமைக்கும் கூறுகளில் பழமொழிகளுக்கு முக்கியப்பங்குண்டு என்பதை மறுக்கஇயலாது.

ஒருமுறை வட்டாட்சியர் அலுவலகம் சென்றிருந் தோம். அரசு அலுவலகங்கள் கணினி மயமாக்கப் படுவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்த காலகட்டமது. அலுவலகத்திலிருந்து வெளிப்பட்ட வயதான பெண்மணி ஒருவர் போகிற போக்கில் ஒருபழமொழியை வீசிவிட்டுச் சென்றார். "கீழொண்ணும் (மடி கணினி) மேலொண்ணும் (கணினி) வச்சுத் தட்டிட்டே இருக் கானுக வேலதா ஒண்ணும் ஆக மாட்டேங்குது'' அறுக்க மாட்டாதவன் கையில அம்பத்தெட்டு அருவாளாம்'' என்றுகூறிச் சென்றார்.

ஒரே ஒரு பழமொழியில் அரசு இயந்திரத்தின் மெத்தனப் போக்கின் மீதானஒட்டுமொத்த விமர்சனத் தையும் அவரால் வீசிச் செல்ல முடிந்தது.

தகவல் தொழில் நுட்பமும், நவீன மயமும் மனிதர்களின் மனப்பான்மை மாறினாலேயன்றி அதன் உயர்வான நோக்கத்தை அடையவே இயலாது என்ற தனது ஆத்திரத்தை ஒரு பழமொழியில் அவரால் பதிவு செய்ய முடிந்தது. ஒருசாதாரண பழமொழி கலகக் குரலாக ஒலித்தது.

பாமர மக்களின் மீது ஏவப்படும் அடக்கு முறைகள் யாவும், தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை என்று மிக இயல்பாய் அம்மக்களே ஏற்றுக் கொள்ளும் உளவியலைக் கட்டமைப் பதில் பழமொழிகளின் பங்கு அசாத்தியமானது.

“முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?'' எனும் பழமொழி மிக இயல்பாக அவரவர்க்கான இருத்தலை வரையறைப்படுத்துகிறது. சாதியாலே õ, வர்க்கத்தாலோ, பாலினத்தாலோ, ஒருவருக்கென்று பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எல்லையை, வாழ்க்கை முறையை மாற்றியமைப்பது குறித்து யாரும் சிந்திக்கத் தேவையில்லை என்று உபதேசிக்கிறது. சிந்திக்கக் கூடாதுஎன்று கட்டளை யிடுகிறது. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படு வதை இயலாத காரியமாகச் சித்தரிக்கிறது. முடவர் கொம்புத் தேனைப் பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்வதைத் தடை செய்கிறது

. இத்தகைய உளவியல் கட்டமைப்புக் களால்தான் நூறுகோடிக்கும் மேற்பட்ட மனித மூளைகள் சிந்திப்பதையே மறந்து தேசியங்களின் சிறைக் கூடத்தில் சீரழிகிறது. மனித மலத்தை மனிதனே தன்கையால் அள்ளுகின்ற, தன் தலையில் சுமக்கின்ற அவல நிலை இன்றளவும் தொடர்கின்றன தெனில், முடவன்கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாதென்ற உளவியல் கட்டமைப்புதான். இதுதன் விதி; இதைத் தாண்டி சிந்திக்கக் கூடாது என்பதுதான்.

“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொலலும்'' எனும் பழமொழி நீதியின்பால் மக்களுக்கு இருக்கும் எழுச்சியை மழுங்கடிக்கிறது. எவ்வளவு அநியாயம் நடப்பினும் அதை தெய்வம் நின்று கொல்லும் என்று ஆசுவாசப்பட வைக்கிறது.

பசுவைக் கொன்ற மகனைத்தேர்க் காலில் இட்டுக் கொன்றவனை மனு நீதிச் சோழன் என்று புகழ வைக்கிறது. மனித நீதியை மறுக்கிறது. தேர்க்காலில் ஒரு பசுவைத் தவிர ஒரு எருமையோ, நாயோ, பன்றியோ விழுந்திருந்தால் சரித்திரத்தில் இந்நிகழ்வு பதிவாகியிருக்குமா? மன்னன் இதேபோல் செயல் பட்டிருப்பானா என்று ஆராய்வதை, கேள்வி கேட்பதை மறுதலித்து அரசன் நினைத்தால் அன்றே கொல்ல முடியும் என்று நம்ப வைக்கிறது.

இதே ரீதியில்தான் பெண்களின் இயல்பு குறித்த பழமொழிகளும் பெண்களின் ஒழுக்கத்தை அடிமைத் தனத்தை திட்டமிட்டே கட்டமைப்பவைகளாகத் திகழ்கின்றன.

'அடுப்படியே திருப்பதி

வாசப்படியே வைகுந்தம்

ஆம்பளையே பெருமாள்'

 மேலோட்டமாகப் பார்த்தால் இப்பழமொழிக்கு இன்று வேலையே இல்லை. வழக்கொழிந்ததாகத் தோன்றும். ஆனால் அது வெறும் தோற்றம்தான் உண்மையல்ல. இங்கே அடுப்படி என்பதோடு கூடுதலாக அலுவலகம் என்றொரு வார்த்தையும் சேர்ந்துவிட்டால் இன்றளவும் இப்பழமொழியில் பெரிய மாறுதல் வந்துவிடவில்லை என்பதை உணரலாம். பெண்ணின் கல்வி வருமானத்திற்கானது. பெண்ணின் வருமானம் குடும்பத்திற்கானது. வேறு எதையும் அவள் சிந்திக்கத் தேவையில்லை.

காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றியோ, போபால் விஷ வாயு விபத்தில் இழைக்கப்பட்ட அநீதி பற்றியோ அவள் கவலை கொள்ளத் தேவையில்லை. வங்கிகள் தன்வாடிக்கையாளர்களுக்கு அக்கறையாய் வழங்கும் ஏடிஎம் அட்டைகளை அதை விடவும் அக்கறையாய் தன் தந்தையிடமோ, தனயனிடமோ கணவனிடமோ ஒப்படைத்துவிட்டு அடுப்படியும் அலுவலகமுமாய் இனிதே இருக்கலாம். (அம்மாவிடம் ஏடிஎம் கொடுத்தேன் என்று கூறிய எந்த மனித ஜீவ ராசியையும் நான் இதுவரை சந்திக்க நேராதது ஒருவேளை என் வாய்ப்புக் கேடாக இருக்கலாம்)

“அடுக்களைக்கு ஒருபொம்பளை

அம்பலத்துக்கு ஒரு ஆம்பளை...'

எனும் போக்கால்தான் வன்புணர்ந்தவனையே மணம் புரியச் சொல்லும் அதி அற்புதமானதீர்ப்புகள் நம்மவூர் நாட்டாமைகளால் நிலைநாட்டப்பட்ட கேலிக் கூத்துக்கள் அரங்கேறியிருக்கின்றன. இந்தத் தீர்ப்பை இன்றளவும் நிலைநாட்டுவதில் கட்டிக் காப்பதில் பழமொழிகளை விடவும் கோடம் பாக்கத்தின் கலையுலக பிரம்மாக்களுக்கே புண்ணியம் கோடி.

பரத்தையினால் தலைவன் பிரியலாம், பிரிந்து பரத்தையரோடு கூடிக் களித்துவிட்டு தலைவியின் நினைவு வரும்போது பாங்கனையோ, பாங்கியையோ இன்னும் யார் யாரையெல்லாமோ கொ.ப.செ.வாய் தன் யோக்கியதையை விளக்கிக் கூறி நிரூபிக்கத் தூதனுப்ப லாம் என்றெல்லாம் இலக்கணம் வகுத்த சமூகம், பெண்ணின் பாலுணர்வை அங்கீகரிக்கவுமில்லை. அனுமதிக்கவுமில்லை. பரத்தியரைத் தாழ்த்துவதற்குத் தவறியதுமில்லை.

"அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே..' என்று அச்சுறுத்துகிறது. தன் நிலையிலிருந்து வேறொன்றுக்கு ஆசைப்பட்டு விடாதே. அப்படி ஆசைப்பட்டு விட்டால் உள்ளதையும் இழந்து விட வேண்டும் என்று பயமுறுத்துகிறது. ஒருவேளை ஒரு பெண் அவ்வாறு தேர்ந்தெடுத்து தன் நிலையினின்று தாழ்ந்து விட் டாலும், அது அவளின் தனிப்பட்ட வாழ்க்கை, தன் தேர்வு, அவள் தீர்மானிக்கட்டும் என அனுமதிக்க மறுக்கிறது.

“ஒண்ணுந் தெரியாத பாப்பா...

ஓரக் கண்ணால் போட்டாளே தாழ்ப்பா..'

என்று பெண்ணினுடைய பாலுணர்வைக் கொச்சைப்படுத்துகிறது. கரப்பான் பூச்சிக்கும் பாலியல் தெரியும். ஆனால் ஒரு பெண் தெரிந்து வைத்திருப்பது குற்றமா?

"பொண்டாட்டி செத்தா... புருசன் புது மாப்பிள்ளை'யாம். எவ்வளவு இயல்பாக ஆணின் மறுமணம் அங்கீரிக்கப்படுகிறது. ஆனால் இன்றளவும் இளம் விதவைகள் இல்லாத ஒரு ஊரையேனும் நாம் பார்த்துவிட முடியுமா? விமர்சனங்கள் எதுவுமற்று விதவை மறுமணத்தை நடத்தி விடத்தான் முடியுமா?

"தளுக்குப் போச்சு மினுக்குப் போச்சு

தலப் புள்ளையோட...

முகத்தில் இருந்த பவுசும் போச்சு

மூணாம் புள்ளையோட..'

இப்பழமொழியின் பொருள் இன்று ஓரளவு மாறியிருக்கலாம். பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அவ்வழகு ஆளுமையாக உயராமல், சுய சிந்தனையோடு வெளிப்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவும், நுகர்வுப் பொருளாக வுமே பெருமளவு நின்று விடுகிறது.

மேலும் இப்பழமொழி வெறும் அழகியலோடு மட்டுமே நின்று விடாமல் ஆரோக்கியத்தையும் பேசுகிறது. குழந்தை பிறந்த பிறகு தாய் தன்னைப் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை. செலுத்த தேவையுமில்லை என்பதையும் பேசிச் செல்கிறது. இதனால் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தெ õடுகிற அதேநேரத்தில் கர்ப்பப் பை புற்று நோயினால் அறுவை சிகிச்சை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றியும் எவ்வித விவாதமும் இங்கு எழவில்லை.

"மண்ணுக்குப் பூசிப் பாரு

பெண்ணுக்குப் பூட்டிப் பாரு'

எவ்வளவு அழகானபழமொழி. வரதட்சணை பற்றியெல்லாம் பேசுவது இப்பொழுது மதிப்பிழந்து விட்டது. அந்தளவிற்கு வாழ்வியலின் தவிர்க்க முடியாததொரு அங்கமாகி விட்டது வரதட்சணை. இதுகுறித்து எந்தவொரு எம்பிஏ., எம்சிஏ பட்டதாரிகளும் வாய் திறப்பதில்லை. என்னதான் படித்த பட்டதாரியாகப் பெண் இருந்தாலும் அவளுக்கு (நகை) பூட்டித்தான் அழகு பார்க்க வேண்டும் என்பதுதான் இங்கு நியதி.

"பெண்ணின் கோணல்

பொன்னில் நிமிருமாம்'

அழகு குறைந்த பெண்களைப் பெற்றவர்களுக்கு அறிவுரை வேறு? பொன்னைச் சேர்த்து வை என்று உபதேசிக்கிறது பழமொழி.

"மாமியாரு ஒடச்சா மண்சட்டி

மருமக ஒடச்சா பொன்சட்டி'

இந்த ரீதியான பழமொழிகள் பெண்ணையே பெண்ணுக்கு எதிரியாக்குபவை. உண்மையில் ஆண் களின் இந்த சூத்திரம்தான் பெண்களை இந்தளவிற்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது.

இத்தனைகேலிக் கூத்துக்களை தன்னுள்ளே வைத்திருக்கும் இச்சமூகத்தில் குழந்தைகள் மட்டும் தாயைப் போல்தான் வளர வேண்டுமாம்.

தாயைப் போல பிள்ளை

நூலைப் போல சேலையாம்...

மரபியல்படி தாயின் குணங்களை குழந்தை பெற்றி ருக்கும் என்று ஜீன் அறிவியல்படி இப்பழமொழியை ஆராய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவ்வளவு அறிவார்ந்த பொருளில் இப்பழமொழி புழக்கத்தில் இல்லை.

தந்தை எவ்வளவு கேடு கெட்டவனாக இருந் தாலும், இச் சமூகம் எவ்வளவு கழிசடையாக புரையோடிப் போயிருப்பினும் தாய் ஒழுக்கமாயிருந் தால், குழந்தை ஒழுக்கமாயிருக்கும் என்று கருதுவது எவ்வளவு நகைப்புக்குரியது. உண்மையில் தாய் வழிச் சமூகமாயின் இப்பழ மொழியை ஆய்வுக் கெடுத்துக் கொள்ளலாம். ஆனால் பெண்ணை அடிமையாக வளர நடத்துகிற சமூகத்தில் குழந்தை ஒழுக்கமாக வளர வேண்டும் என்பது தாயின் மீது, பெண்ணின் மீது அனைத்துப் பொறுப்புகளையும் சுமத்தி ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று கட்டமைக்கிறது.

சமூகச் சீரழிவுகளால் ஒரு குழந்தை சீரழிந்தாலும் அது தாயையே குற்றம் சாட்டுகிறது. தாயை (பெண்ணை) குற்ற உணர்வுக்கு உள்ளாக்குகிறது.

உண்மையில் இப்பழமொழிகள் இக்காலத்தில் வழக்கிழந்து விட்டதாகவோ, பொருளற்றதாகவோ, எவரேனும் கருதினால் அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. மொழியை ஆயுதமாக்க வேண்டிய தேவை அநீதிக் கெதிராகப் பாடுபடும் அனைவர்க்குமே உரியதுதான். சமூக மறுமலர்ச்சியின்பால் சமத்துவத் தின்பால் நம்பிக்கை கொண்டு போராடுகிற அனைவர்க்குமான ஆயுதமே இது.

Pin It