த‌ன்னை துனிசியாவிற்காக‌ தற்கொடை செய்த‌ அந்த‌ நாளிலிருந்து முக‌மது பௌ அசிசியும் துனிசிய‌ ம‌க்க‌ளின் நாய‌க‌னான். இவ‌ன‌து த‌ற்கொடையே மக்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கும், அதிப‌ர் சீன் அல் அபிதைன் ப‌த‌வி விலகி நாட்டை விட்டே ஓடுவ‌த‌ற்கும் கார‌ண‌மாயிற்று.

அவனுக்கு‌ வேலை கிடைக்காத‌ கார‌ண‌த்தால், அரசின் அனும‌தி இல்லாம‌ல் காய்க‌றிக‌ள், ப‌ழ‌ங்க‌ள் விற்று த‌ன‌து வாழ்க்கையை ந‌ட‌த்தி வ‌ந்தான் (நம்ம ஊர் தள்ளுவண்டி வியாபாரிகள் போல).

tunisia_321த‌ன்னைத் தானே எறித்துக் கொண்டு இற‌ந்தபோது திரு.பௌ அசிசிக்கு வ‌ய‌து 26. பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அவ‌ர‌து தங்கை சாமியா அளித்த‌ நேர்காணலில், இற‌ப்ப‌த‌ற்கு முன்ன‌ர் முக‌மது இருந்த‌ ம‌ன‌நிலையையும், எப்ப‌டி அவ‌ர் துனிசிய‌ ம‌க்க‌ளின் நாய‌க‌னானார் என்றும் விள‌க்குகின்றார்.

“ஒவ்வொரு முறை ப‌ழ‌ங்கள், காய்கறிகள் வாங்கும் போதும், விற்கும் போதும் அர‌சு அலுவ‌ல‌க‌ங்க‌ளில் இருப்போர்க‌ள் மொக‌ம்ம‌திட‌ம் ப‌ல‌முறை கையூட்டு வாங்கி அவனைத் தொந்த‌ர‌வு செய்துள்ளார்க‌ள். அன்று அவன் த‌ன்னைத் தானே எரித்துக்கொண்ட நாளன்றும் கூட‌‌ எங்க‌ளிட‌ம் ந‌ன்றாக‌த் தான் பேசினான். அன்றும் வ‌ழ‌க்க‌ம் போல அர‌சு அதிகாரிக‌ள் அவ‌னிட‌ம் கையூட்டு கேட்டுள்ளார்கள். அவ‌ன் த‌ர‌ம‌றுத்ததால், இவனிட‌ம் இருந்த‌ ப‌ழ‌ங்கள், காய்கறிகளை எல்லாம் அவ‌ர்கள் ப‌றித்துக் கொண்டார்க‌ள். அவ‌ர்க‌ளில் ஒருவ‌ன் அவனிடமிருந்த‌‌ எடைக்க‌ருவியையும் கேட்டான். அதை முக‌மது கொடுக்க‌ ம‌றுத்த‌தால் அவ‌ன் முக‌ம‌தை அடித்து துன்புறுத்தினான். அவ‌னுட‌ன் இருந்த‌ மூன்று அதிகாரிக‌ளும் சேர்ந்து முக‌ம‌தை தாக்கினார்க‌ள்.

முகமது அவ‌ர்களிடம் க‌ண்ணீர் விட்டு கெஞ்சிப் பார்த்தும் எந்த‌ ஒரு ப‌ய‌னும் கிட்டவில்லை. அவ‌ர்க‌ள் முகமதைத் தொட‌ர்ந்து அடித்து விட்டு, அவனது பொருட்க‌ளை எல்லாம் எடுத்துச் சென்று விட்டார்க‌ள். இத‌ன் பின்ன‌ர் முக‌மது ந‌க‌ர‌த்திலுள்ள‌ அர‌சு அலுவ‌ல‌க‌த்திற்கு சென்று த‌ன‌து பொருட்க‌ளை திருப்பி‌த்தருமாறு கேட்டிருக்கின்றான். அவ‌ர்க‌ள் ம‌றுத்து விட, அவ‌ன் அவ‌ர்க‌ளின் த‌லைமை அதிகாரியைச் சென்று ச‌ந்தித்து த‌ன‌து பொருட்க‌ளை திருப்பித்த‌ருமாறு கேட்டிருக்கின்றான். ஆனால் அங்கேயும் தோல்வியே அவ‌னுக்குப் ப‌ரிசாக‌ கிடைக்க‌, ம‌ன‌ம் த‌ள‌ராம‌ல் அந்ந‌க‌ர‌ ஆளுந‌ரைச் சென்று ச‌ந்திக்க‌ முய‌ன்ற‌ அவ‌னை காவ‌ல் துறை அதிகாரிக‌ள் தடுத்துள்ளார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் க‌ண்ணீர் விட்டு த‌ன‌து நிலையை விள‌க்கிக் கூறியுள்ளான். ஆனால் அவ‌ர்க‌ள் யாரும் இவ‌ன‌து நிலையை காது கொடுத்துக் கேட்க‌க்கூடத் தயாராக‌ இல்லை. அவ‌ன‌து க‌ண் முன்னே எல்லாக் க‌த‌வுக‌ளும் அடைக்க‌ப்ப‌ட்ட‌ன. அதன்பிறகுதான் அவ‌ன் ம‌ர‌ண‌த்தை ஒரு வாய்ப்பாகப் ப‌ய‌ன்ப‌டுத்தி அவ‌ர்க‌ளிட‌ம் பேச‌ முய‌ன்றான் (அது அவர்களைச் சென்றடைந்ததோ இல்லையோ, மக்களிடம் சரியாகச் சென்றடைந்தது). வெளியே சென்று க‌ல்லெண்ணெய்(Petrol) வாங்கி  வ‌ந்து த‌ன்னைத் தானே எரித்துக்கொண்டான்.

இது ந‌ட‌ந்து ச‌ற்று நேர‌த்தில் எங்கள‌து அண்டை வீட்டார் வ‌ந்து முக‌மது த‌ன்னைத் தானே எரித்துக்கொண்ட‌தாக‌வும், உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆப‌த்தான‌ நிலையில் இருப்ப‌தாக‌வும் என்னிட‌ம் கூறினார்கள்.

எங்க‌ளுக்கு அது பேர‌திர்ச்சியாக‌ இருந்த‌து. முக‌மது இற‌ந்த‌தில் இருந்து அவ‌னை எண்ணி நாங்க‌ள் அழுது புல‌ம்பிக்கொண்டிருக்கின்றோம். அவ‌ன‌து இழ‌ப்பு எங்க‌ள் குடும்ப‌த்திற்கு பேரிழ‌ப்பாகும். ஏனென்றால் எங்க‌ள் குடும்ப‌த்தில் யாருக்கும் எந்த‌ ஒரு வேலையும் இல்லை (துனிசியா வேலையில்லா திண்டாட்ட‌த்தின் உச்ச‌நிலையில் இருக்கின்ற‌து). எங்க‌ளுக்கு உதவவும் யாரும் இல்லை. முக‌மது இற‌ந்துவிட்டான் என்ப‌தை எங்க‌ள் குடும்ப‌த்தில் யாராலும் இன்னும் ந‌ம்ப‌முடிய‌வில்லை.

ஆனால் இதை எல்லாம் விட‌ முகமதின் புகைப்ப‌ட‌ம் தாங்கிய‌ ப‌தாகையை கையில் ஏந்திக் கொண்டு ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் அவ‌ன் பெய‌ரை உச்ச‌ரித்துக் கொண்டும், அழுது கொண்டும் செல்வது எங்களுக்கு இன்ன‌மும் ஆச்ச‌ர்யமான‌ ஒரு நிக‌ழ்வாக‌ இருக்கின்ற‌து. இது ஒரு மிகப்பெரிய மக்கள் போராட்டமாக மாறி உள்ளது. இத‌ற்கு முன்ன‌ர் துனிசியாவில் இப்படி ஒரு போராட்ட‌ம் ந‌டைபெற்ற‌தில்லை. முக‌ம‌தினால் இளைஞ‌ர்க‌ள் எல்லாம் ஒன்றாக‌ இணைந்து போராடுவ‌தை நான் என் கண்முன்னே காண்கின்றேன்”
……..

மாவீர‌ன் முத்துக்குமார்

முத்துக்குமார் சனவரி 29, 2009 அன்று ஈழத்திற்காக தீக்குளித்து தனது உயிரை ஈகம் செய்தான். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் நம் எல்லோருக்கும் தெரியும். முக‌மது பௌ அசிசியும் சனவரி 24, 2011 அன்று நாட்டிலுள்ள வேலையில்லா பிரச்சனைக்கு எதிராகத் தீக்குளித்து தனது உயிரை ஈகம் செய்தான். இதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் முக‌மதின் படம் தாங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தி வீதிக்கு வந்து போராடினார்கள். துனிசிய அதிபர் நாட்டிலிருந்து தப்பி ஓடும் வரை போராட்டம் தொடர்ந்தது. (ஆப்பிரிக்கர்கள் படிப்பறிவில்லாதவர்கள், நாகரிகமல்லாதவர்கள் என்று இன்றும் சிந்திந்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களே தயை கூர்ந்து யோசித்துப் பாருங்கள் நீங்கள் யார் என?)

ஓர் ஈகம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு சான்று. முத்துக்குமாரின் தியாகத்தைத் தொடர்ந்து மிகத் தீவிரமானப் போராட்டங்களை முன்னெடுத்து பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் காப்பாற்றி இருக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை நாம் செய்யத் தவறிவிட்டோம் என்பதை நாம் உணர வேண்டிய தருணமிது.

மூலச்செய்தி: http://www.bbc.co.uk/news/world-africa-12241082

மொழிபெயர்ப்பு. ப.நற்றமிழன்