அரை தோஷம் ஆணைவிட
பெண்ணுக்குக் கூடவைக்கக்
காரணமும் சொன்னார்கள்,
மறுபிறவி  எனப்படும்
பேறுகாலத்தில்
தவறு நடக்காதிருக்குமென்று.

காதலித்து நான்கு தோஷம்
குறைவாயிருந்த அக்கா
நான்கு குழந்தைகளுடன் நலமாக.

இரண்டுதோஷம் அதிகம்
கணவனுக்காகாது என்றார்கள்.
பொருத்தம் பார்த்து திருமணமான
இன்னோர் அக்கா.
பாவம் அவள் தான் செத்தாள்.

பாடுபட்டவனுக்கு விளைச்சல் அதிகமிருந்தால்
சாவு விளைச்சலாம்.
செத்துக்கிடந்த பைத்தியத்திற்கு
கைக்குட்டை கூட சொந்தமில்லை.

தின்று தூங்கி
பொழுதுபோக்க அரட்டையில்
கடவுள்பேச்சு வந்த போது
பல்லி கீச்சிற்று.
கடவுள் பேசுகிறார் என்றவர்களுக்கு
புரியாது போலும்
அதன் பசியினை.

கடவுள்
விதவிதமாக இருக்கலாம்.
அவரையே நம்பி வாழும் பலர் இருக்க
அவர் மட்டும் தின்றிருந்தால்
மகாபாவி.

கல்லுக்கு சக்தி கொடுத்து
கடவுளை உருவாக்கியவர் மனிதர்கள்
மனிதனை மட்டும்
உருவாக்கத் தவறி விட்டார்கள்.

ஒன்றுமேயில்லாத பலவற்றிற்கு
மழுங்கடிக்க சாயங்கள் பல
பூசப்பட்டு விட்டன.
எதனைச் சொல்லியும் விளங்காத நம் மக்கள்
செவ்வாய் கோளிலிருந்தே வரன் வந்தாலும்,
செவ்வாய் தோஷமென கழிப்பார்கள்.

அவநம்பிக்கைகள் கூட,
விலைவாசிபோல் உயர்ந்து விட்டன

- வேதாரணியம் வாசு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It