“சந்தேகம் வரும் வகையில் பல நிகழ்வுகளில் என்கவுண்டர் முறையைப் பின்பற்றுவது அபாயகரமானது. கொடுங்குற்றங்கள் நிகழும் பொழுது சிலசமயம் மக்கள் மத்தியில் எண்கவுண்டர் முறைக்கு ஆதரவு இருக்கலாம். அதற்காக கொடுங்குற்றவாளிகளின் கதையை அவ்வாறு முடிப்பது சர்ச்சைக்குரியது.” இது என்கவுண்டர் முறையை எதிர்ப்பவர்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ கூறிய கருத்துக்கள் அல்ல. கண்ணியமிக்க தமிழக காவல்துறையின் பொறுப்புமிக்க நேர்மையான காவல்துறை அதிகாரி சமீபத்தில் கூறிய கருத்துக்கள் தான் இவை. இந்த வரிகளை ஒவ்வொரு காவல்துறையினரும் நன்கு உணர வேண்டும்.

அண்மையில் கோவையில் சின்னஞ்சிறு மழலைகள் முஸ்கின் மற்றும் ரித்திக் ஆகியோரைக் கடத்திய டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன் நடந்து கொண்ட விதம் கல் நெஞ்சக்காரர்களையும் கவலையுறச் செய்தது. இதனைத் தொடர்ந்து கோவையில் காவல்துறையினர் மோகனகிருஷ்ணனை என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொலை செய்தபின் கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் என்கவுண்டரை ஆதரித்தும், காவல்துறையினரைப் பாராட்டி அரசியல்வாதிகளை விஞ்சும் அளவுக்கு வண்ணவண்ணமாய் தமிழகம் முழுதும் அலங்கரித்தன போஸ்டர்கள். இந்த ஒரு என்கவுண்டர் மூலம் காவல்துறை புனிதமடைந்ததைப்போலவும், இதற்கு முன்னர் நடத்தப்பட்ட என்கவுண்டர்கள் அனைத்தும் நியாயமானதாக சித்தரிக்கும் விதமாகவும், அமைந்திருந்தன. என்கவுண்டர் முறையை எதிர்த்துப் பேசிவரும் இயக்கங்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் ஒரு குற்றவாளிகளைப் போல் சித்தரிக்கும் விதமாகவும் தொடர் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

மே மாதம் 10 ஆம் தேதி சட்டபேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்டின் லூதர் கிங்கின் “law and order exist,for the purpose of establishing justice,and when they fail in this purpose,they become the dangerously structured dams,that block the flow of social progress” குறிப்பிட்டுப் பேசியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் 2007 ஆம் ஆண்டு 1521 கொலைகளும், 2008 ல் 1630 கொலைகளும், 2009 ல் 1644 கொலைகளும் நடந்திருப்பதாகக் குறிப்பிட்டு அவைகள் எந்தெந்த காரணங்களுக்காக நடந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார். மேலும் காவல் நிலையத்தில் லாக்‍அப்‍பிலே இருக்கக் கூடியவர்கள் சிறைக்கோ, நீதிமன்றத்திற்கோ அழைத்துச் செல்லப்படுகிற நேரத்தில் சில சந்தர்ப்பங்களில் இதுபோன்ற சம்பங்கள் நடைபெற்றுவிடுகின்றன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கைகளை தயங்காமல் எடுத்து வருகிறது. கடந்த 2001 முதல் 2006 வலையிலான அதிமுக ஆட்சியில் காவல்துறை பாதுகாப்பில் 35 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், 2006 முதல் 2010 மே வரையில் திமுக ஆட்சியின் 4 ஆண்டு காலங்களில் 15 தான் நடந்துள்ளதாகவும் பெருமைபடக் கூறியுள்ளார்.

மேலும் கொலை, கொள்ளை போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபட்டோரை கைது செய்யும்போதோ, விசாரனைக்கு அழைத்துச் செல்லும்போதோ, அவர்கள் காவல்துறையினரை தாக்க முற்படும்போது தங்களுடைய பாதுகாப்பிற்காகவோ, தப்பித்து போய்விடக் கூடாது என்றோ, துப்பாக்கி சூடு நடத்தவேண்டியது அவசியமாகிறது என்றும் என்கவுண்டர்கள் குறுக்கு வழியில் தண்டனை வழங்கும் முறையாக அமைந்துவிடக் கூடாது என்றும் தனக்குரிய கவலைகளைத் தெரிவித்துள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணையம் துவக்கப்பட்டபின் வந்துள்ள 1502 புகார்களில் 12 என்கவுண்டர்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளன. அதே நேரம் 1993 முதல் 2010 வரையில் பெறப்பட்டுள்ள 1560 புகார்களில் 856 போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையமே தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகளான வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோர் போலி என்கவுண்டர்கள் நடத்தியது கண்டறியப்பட்டு அவர்களின் மீது வழக்குகள் பதியப்பட்டு இன்று விசாரனை நடைபெற்று வருகிறது. இதேபோல் மஹாராஷ்டிராவில் தயாநாயக் மற்றும் பிரதீப்ஷர்மா ஆகியோர் போலி என்கவுண்டர்கள் மூலம் கடை விரித்து பணம் சம்பாதித்து நீதிமன்றப் படிகளில் ஏறின‌ர். நம் அண்டை மாநிலமான கேரளத்தில் வயநாடு மாவட்டத்தில் மலைவாழ் மக்களுக்காக முன்னின்று போராட்டத்தை நடத்திய வர்க்கீஸ் என்பவர் 1970 ஆண்டு பிப்ரவரி 18 ம் தேதி போலிஸாரால் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார். பின்னாளில் 1998 ஆம் ஆண்டு காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்ற ராமச்சந்திரநாயர் என்பவர் வர்க்கீஸ் என்பவர் என்கவுண்டரில் கொல்லப்படவில்லையென்றும் எஸ்.பி விஜயன் மற்றும் டி.எஸ்.பி லட்சுமணா ஆகியோர் விரும்பியதால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கூற வழக்கு திசைமாறி சி.பி.ஐ விசாரனைக்கு சென்று குற்றம் நிரூபிக்கப்ப‌ட அப்போதைய டி.எஸ்.பியும் ஐ.ஜி ஆகி ஓய்வு பெற்றவருமான லட்சுமா வயதான முதுமையைக் காரணம் காட்டி கெஞ்சப்போய் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது இது போன்ற நிகழ்வுகளை தமிழக காவல்துறையினர் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும்.

அதேநேரம் டெல்லியில் சஞ்சய், கீதா என்ற குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பிய நிலையில் பில்லா, ரங்கா என்ற இருவரால் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அங்குள்ள காவல்துறையினர் சிறப்பாக புலன்விசாரனை நடத்தி குற்றவாளிகள் இருவருக்கும் தூக்குத்தண்டனை வாங்கிக் கொடுத்ததையும் தமிழக காவல்துறையினர் விருப்பு, வெறுப்பின்றி சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சிகள் புகார் எழுப்பும்போதும், ஆளும்கட்சியின் செல்வாக்கு மக்களிடம் குறையும் நிலையில் ஆளும்தரப்பை திருப்திபடுத்தும் விதமாக என்கவுண்டர் சாவுகள் நிகழ்த்தப்படுவதாக மனித உரிமை ஆணையம் தெரிவிக்கிறது. அதேநேரம் ஆளும்கட்சி ஆதரவு மற்றும் அரசியல் செல்வாக்கு மிகுந்த ரவுடிகள் பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். என்கவுண்டருக்குப் பிறகே கொல்லப்பட்டவரின் கொலை, கொள்ளை குறித்த விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படுகிறது. காவல்துறையினர் மாவட்ட அளவில் திருவிழாக் காலங்களில் திருட்டு, வழிப்பறி செய்பவர்கள் குறித்து விளம்பரம் மற்றும் துண்டுபிரச்சாரம் வெளியிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நினைப்பதைப்போல, ஏன் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்தும், அவர்களின் மீதான வழக்குகள் குறித்தும் விபரங்களை அவ்வப்போது வெளியிடக் கூடாது? அதேபோல் பெரும்பாலான என்கவுண்டர்கள் குற்றவாளிகள் பலரும் திருந்தி வாழும் நிலையிலேயே காவல்துறையினரால் நிகழ்த்தப்படுவதாகவும் பரவலான குற்றசாட்டு எழுகிறது.

திண்டுக்கல் பாண்டி என்பவரது என்கவுண்டர் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே மற்றும் நீதிபதி சசிதரன் ஆகியோரைக் கொண்ட அமர்வு குற்றவாளியாகவே இருந்தாலும் கூட யாரையும் கொலை செய்வதற்கு போலீஸாருக்கு உரிமை இல்லை என்றே கூறியுள்ளனது.

தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டில் குமரி ராஜன் தொடங்கி 6 என்கவுண்டர் கொலைகளும், 2007ல் 4 என்கவுண்டர்களும், 2008ல் 7 என்கவுண்டர்களும், 2009ல் 5 என்கவுண்டர்களும் 2010ல் கோவை டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன் (எ) மோகன் ராஜ் வரையில் 8 என்கவுண்டர்கள் என மொத்தம் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 27 காவல்துறை மோதல் சம்பவங்களில் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் தாராளமாக சுற்றித்திரியும் பல ரவுடிகளும் அரசியல்வாதிகளின் பின்புலத்திலேயே பாதுகாப்பாக உள்ளனர்.

இன்று நடைபெற்றுவரும் பல்வேறு குற்றங்களுக்கு ஊடகங்களும் பெரும்பங்காற்றி வருகின்றன. ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் கடுமையான விதிகள் உருவாக்கப்பட்டு கண்டிப்பான முறையில் கடைபிடிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் பல்வேறு புதுமையான வழிகளில் குற்றங்களும், மாபாதக கொடுஞ் செயல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மக்கள் ரசிக்கிறார்கள், டி.ஆர்.பி ரேட்டிங் எகிறுகிறது என்ற காரணங்களைக் காட்டி கண்ட, கண்ட குப்பைகளையும், கும்மாளங்களையும், குத்தாட்டங்களையும் தவிர்க்கும் கட்டாயம் உருவாக்கப்படவேண்டும்.

குற்றங்களைத் தடுப்பதும், கண்டுபிடிப்பதும் தான் காவல்துறையின் தலையாய பணிகள். அமைதிக்குத் தேவையான தகவல்களை முன்கூட்டியே சேகரிக்காவிட்டால் குற்றங்கள் பெருகத்தான் செய்யும். சட்டங்களை அமுலாக்குவதில் பெரும்பங்காற்றும் காவல்துறை பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெற்றால்தான் பணியை சிறப்பாக செய்ய முடியும். குற்றத்தடுப்பு நடவடிக்கையை மையமாகக் குறிவைத்தால், துப்பாக்கியால் எதிரிகளைக் குறிவைக்கும் நிலை வராது என்ற பணி அனுபவமுள்ள அதிகாரிகளின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக தமிழக அரசு தமிழக காவல்துறையை தயார்படுத்தி என்கவுண்டருக்கு மாற்றுவழிகளை பல தரப்பினரும் அரசின் முன்வைக்கத் தயாராய் உள்ளனர். என்கவுண்டர்கள் குறித்து தானும் மிகுந்த கவலைப்படுவதாகக் கூறியுள்ள தமிழக முதல்வர் அவற்றை முறைப்படுத்தி குறுக்கு வழியில் தண்டனை வழங்கும் முறை இல்லாத (என்கவுண்டர் அற்ற) புதிய தமிழகத்தை உருவாக்க முன்வரவேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் ஒட்டுமொத்த விருப்பமாக இருக்கும்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்

1) என்கவுண்டரை கொலையாகப் பாவித்து காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கவேண்டும்.
2) கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களை சாட்சிகளாக விசாரிக்க வேண்டும். என்கவுண்டரில் ஈடுபட்டவருக்கு உடனடி பதவி உயர்வோ, பாராட்டோ வழங்கக் கூடாது.
3) எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு சம்பவம் நடந்த காவல் எல்லைக்கு வெளியே உள்ள காவல்துறையினர் விசாரிக்க வேண்டும்.
4) என்கவுண்டர் குறித்து ஆர்.டி.ஓ விசாரனைக்குப் பதிலாக நீதிமன்ற விசாரனை நடத்தப்படவேண்டும். தன்னாட்சி கொண்ட சிபிசிஐடி மற்றும் சிபிஐ தொடர் விசாரனை தேவை.
5) என்கவுண்டரில் இறந்தவர்களுக்காக இரங்கல் கூட்டம் நடத்துபவர்கள், மக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் போன்றவர்களை விசாரணை என்ற பெயரில் சோதனை செய்வதும், உடல், மனரீதியாக சித்ரவதை செய்வதும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
6) ஒவ்வொரு என்கவுண்டரும் இந்திய சாட்சி சட்டபடி தனிப்பட்ட பாதுகாப்பான உரிமை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவேண்டும்.

- மு.ஆனந்தகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
9443287434

Pin It