2010 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, சீனாவைச் சேர்ந்த லியூ ´யோபோ என்பவருக்குக் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, ஒரு கிரிமினலுக்கு நோபல்பரிசு கொடுத்ததன் மூலம் அந்தப் பரிசை அவமானப்படுத்தியுள்ளது என்று நோபல் பரிசுக் குழுவைக் கண்டித்துள்ளது.

“மனித உரிமைக்கும் அமைதிக்கும் எப்போதும் தொடர்பு இருக்கிறது. அமைதி வழியில் சீனாவின் மனித உரிமைகளுக்காகவும், சனநாயகத்தை ஏற்படுத்தவும் போராடி வரும் லியூ ´யோபோவுக்கு இந்த ஆண்டின் நோபல் பரிசு தகுதியுடையது” என்று திருப்பி அடித்தது நோபல் குழு. “நோபல் விருதுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் குழு, முழு சுதந்திரம் உடையது. அதில் யாரும் தலையிடமுடியாது” என்று நார்வே அழுத்தமாகக் கூறிவிட்டது.

தன்னைப் பொதுவுடைமை நாடு என்று சொல்லிக் கொள்ளும் சீனா, பொருளாதார வளர்ச்சியையும், வல்லாண்மை ஆளுமையையும் மட்டுமே வலுப்படுத்திக் கொண்டு வருகிறது. அதனால் சீனமக்களின் உரிமைகளை அந்த நாடு மீறிவருகிறது. இந்த அத்துமீறலை ‡ மனித உரிமை மீறலை தென்கிழக்காசிய நாடுகளிலும் அது நிலைநிறுத்தி வருகிறது என்பதற்கு ஈழ மக்கள் படுகொலையும், அதற்குச் சீனாவின் அனைத்துதவியும் சான்றுகள்.

சீனத்தின் மனித உரிமை மீறலை லியூ எதிர்த்தார். அதை உலகறியும் வண்ணம் கவனத்தை ஈர்த்தார். அதனால் 1989 ஆம் ஆண்டு 21 மாதங்கள் சிறையில் அடைத்தது சீனா. பின்னர் சோவியத் யூனியனுக்கு எதிராக, மனித உரிமை ஆர்வலர்கள் செக்கோசுலோவாக்கியாவில் சார்ட்டர் ‡ 77 என்ற சாசனத்தை வெளியிட்டுப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

அதுபோலவே, சீன அரசியல், சனநாயக முறைக்கு மாறவேண்டியும், அதை இனியும் தள்ளிப் போடக்கூடாது என்றும் செக்கோசுலோவோக்கிய சாசனத்தின் வழியில் சார்ட்டர் ‡ 8 என்ற மனித உரிமைச் சாசனத்தை டிசம்பர் 2008 ஆம் ஆண்டு வெளியிட்டார் லியூ ´யோபோ

உடனே அவரை கிரிமினல் என்று கூறி 11 ஆண்டுகள் சிறையில் அடைத்துவிட்டது சீன அரசு. இப்பொழுதும் சிறையிலிருக்கும் அந்தப் போரா ளிக்குத்தான் நோபல்பரிசு கிடைத்திருக்கிறது.

1989 ஆம் ஆண்டு திபெத் விடுதலை இயக்கத் தலைவர் தலாய்லாமாவுக்கு நோபல் பரிசு கிடைத்தபோது சீனா அதைக் கடுமையாக எதிர்த்தது. இது திபெத்தின் உரிமையை மீறிய செயல்.

ஈழத்தில் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைத் தன் அதிகாரத்தின் மூலம் தடைசெய்தது சீனா. இது ஈழமக்களின் உரிமையை மீறிய செயல்.

அருணாச்சலப் பிரதேசத்தின் மீது அத்துமீறிக்கொண்டு இருக்கும் சீனாவின் செயல் இந்தியாவின் உரிமையை மீறிய செயல்.

இப்படி உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் மனித உரிமை மற்றும் இறையாண்மைகளின் உரிமையை மீறிக்கொண்டிருக்கும் சீனா, லியூ ´யோபோவிற்குக் கிடைத்த நோபல் பரிசைத் தடை செய்ய எடுக்கும் முயற்சி கண்டனத்திற்கு உரியது மட்டுமல்ல, அந்நாடு மனித உரிமைகளை மதிக்கவில்லை, நசுக்குகிறது என்பதையும் வெளிக்காட்டிவிட்டது.

லியூ ´யோபோவின் சாசனத்தின் 19 வகைச் சீர்திருத்தங்களுக்குச் சீனா இன்று தடையாக இருக்கலாம், நாளை அத்தடை நொறுங்கும்.

ஒடுக்குமுறைக்கு மனித உரிமை என்றும் தலைதாழாது என்பதை லியூ ´யோபோவின் நோபல் பரிசு மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

Pin It