ஒரு முறை பெங்களூருக்கு தாமதமாக சென்று கொண்டிருந்த ரயிலில் ஒருவர், ‘நல்லவேளை இராஜீவ் காந்தி ரயில் பாதையில் கொல்லப்படவில்லை. அப்படி நடந்திருந்தால்..... நடந்த இடத்திலேயே நினைவுச் சின்னம் எழுப்பி, இருக்கும் ரயில்பாதையை தள்ளிப்போட்டிருப்பார்கள். இன்னும் கொஞ்ச நேரம் கூட தாமதமாகி இருக்கும்‘ என்றார். அதைக் கேட்டதும் முதலில் கோபம்தான் வந்தது. கொல்லப்பட்ட தலைவர் ஒருவர் குறித்து இப்படி கொச்சையாகப் பேசுகிறாரே என்று. அப்புறம் மெல்ல யோசித்தபோது அவர் சொன்னதில் வெறும் கிண்டல் மட்டுமல்ல ஒரு ஆதங்கமும் இருப்பதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஒரு தலைவர் இறந்தால் அந்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைப்பது அரசியலில் இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆம் அதனை அரசியல்வாதிகள் தவிர்க்க விடுவதில்லை. அதுவும் இறந்தவரின் வாரிசுகள் அல்லது அவரது கட்சி செல்வாக்காக ஆட்சியில் இருந்தால் அந்தத் தலைவர் மீது தவிர்க்க முடியாத பாசம் வந்துவிடும்.

இப்படித்தான் ஆந்திராவில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி நல்லமலை காட்டுக்குள் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த இராஜசேகர ரெட்டிக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று கொடி பிடித்தனர். அதுவும் எங்கே தெரியுமா - ஆள் போக முடியாத அடர்ந்த காட்டுக்குள், அங்கிருக்கும் வளங்களை, விலங்குகளை எல்லாம் அழித்து கட்ட வேண்டுமாம். அதேநிலைமைதான் ராஜீவ் காந்தி இறந்த திருப்பெரும்புதூருக்கும். அங்கு கோவில் நிலத்தை கையகப்படுத்தி டெல்லியில் இருக்கும் நினைவுச் சின்னத்தை விட பெரிய நினைவுச் சின்னத்தை ஏக்கர் கணக்கில் அமைத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல ராஜீவ் காந்தி பெயரில் இளைஞர் மேம்பாட்டு கல்வி நிறுவனம் வேறு. இதற்கும் ஏக்கர் கணக்கில் கோவில் நிலமும், பொதுமக்களின் விவசாய நிலமும் கையகப்படுத்தப்பட்டன. இதெல்லாம் திருப்பெரும்புதூரின் புகழை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுமாம்; திருப்பெரும்புதூர் வளர்கிறதாம். ஆனால் நிஜத்தில் பார்த்தால் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட இடம் என்பதால் திருப்பெரும்புதூரில் அந்த ஊர் மக்களே வாழ முடியாத அளவிற்கு வெளிநாட்டுத் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து அங்கிருக்கும் வளங்களையும், மக்களையும் அழிக்க வேண்டும் என்ற இலக்குடன் அதிகாரவர்க்கம் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

அது எந்த அளவுக்குத் தெரியுமா? அந்தத் தொகுதியின் பேராயக் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் யசோதா அதுவும் சட்டப்பேரவையில், ‘இனி திருப்பெரும்புதூர் தொகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டாம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அமையுங்கள். எங்கள் தொகுதியில் விவசாயநிலங்களையும், நீர்நிலைகளையும் மிச்சம் வையுங்கள்’ என்று கெஞ்சும் அளவுக்கு.

ஆனால் திருப்பெரும்புதூரை உண்டு இல்லை என்று ஆக்க நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கு இது பொறுக்குமா? அங்கு பசுமைத் தள விமானத்தளம் அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அப்போதுதான் திரு.ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு நேரிடையாக விமானத்தில் வந்து இறங்கி அஞ்சலி செலுத்த முடியும். அதுமட்டுமல்ல அவரின் பிறந்தநாளுக்கு யாரும் திருப்பெரும்புதூர் நினைவிடத்திற்கு வராமல் போய்விட்டார்களே என்று குற்றம் சாட்ட முடியாதல்லாவா. அதற்கு வசதியாகத்தான் இந்த விமானத்தளம். திரு.ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட திருப்பெரும்புதூரில் இந்த விமானநிலையம் அமைந்தால் அதற்கும் அவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று போராடுவார்கள் இல்லையில்லை மிரட்டுவார்கள்.

பிறந்தநாளுக்குக் கூட எட்டிப்பார்க்க முடியாத பேராயக் கட்சிக்காரர்கள் தங்கள் தலைவரின் பெயரைப் பார்க்கும் இடங்களுக்கெல்லாம், பார் புகழ்பெற்ற இடங்களுக்கெல்லாம் வைக்க வேண்டும் என்று அல்லாடுகின்றனர். இங்கு ஆள்பவர்கள் ‘அப்படிக் கிடையாது’ என்று சொல்லிவிட்டாலும் மாநில அரசின் குடுமியை தன் கைக்குள் வைத்திருக்கும் பேராயக் கட்சிக்காரர்கள் தாங்கள் சொன்னபடியெல்லாம் ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால்தான் பழைய மாமல்லபுரம் சாலை - அவர்கள் உத்தரவிட்டதால் ‘தகவல் தொடர்புப் பாதை’ என்று அழைக்கப்பட்டதையும் மீறி - ‘இராஜீவ்காந்தி சாலை’ என்று பெயரிடப்பட்டது. சொல்வதற்கெல்லாம் இந்த அரசு தலையாட்டும் என்று தெரிந்ததால் ராதாபுரம் பேருந்து நிலையம், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தங்கள் தலைவர்களின் பெயர்கள் வைக்க அடம் பிடிக்க ஆரம்பித்தனர்.

ராதாபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு கருணாநிதியின் பெற்றோர் பெயர் வைத்ததை எப்படி நியாயப்படுத்த முடியாதோ.... அப்படித்தான் அந்த பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்கச் சொன்னதும். காரணம், பெருந்தலைவர் என்று போற்றப்பட்ட அவரை ஏதோ சாதிக் கட்சித் தலைவர் போலவே நடத்த பேராயக்கட்சியும் துள்ளிக் குதிப்பதுதான். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு எந்த பேருந்து நிலையத்திற்கும் காமராஜர் பெயரே வைக்காததைப் போன்று அந்த ஊர் பேராயக் கட்சிக்காரர்கள் அடம் பிடித்தனர். போதாதற்கு சென்னையிலும் நிதானம் தவறிப் பேசும் தலைவர்களும் துள்ளிக் குதித்தனர்.

காரணம் சாதி வாக்குகள்தான். ஆனால் இவர்களுக்குத் தெரியாது அந்த சாதியினரே இல்லாத வட, மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையான பேருந்து நிலையங்களுக்கு காமராஜர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது என்பது. அதை வசதியாக மறந்து விட்டதால் தொடர் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் பேராயக்கட்சியின் மிரட்டலை சமாளிக்க முடியாமல் பணிந்த கருணாநிதி தனது பெற்றோரின் பெயரை மாற்றி காமராஜர் பெயரை வைத்து விட்டார்.

இந்த வெற்றியுடன் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தியின் பெயரை வைக்க கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டனர். தொடர்ந்து உண்ணாவிரதம். அதில் பேசிய நிதானம் தவறிப்பேசும் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏகப்பட்ட மிரட்டல்களை மாநில அரசுக்கு விட்டார். முதல்வர் கருணாநிதியும் யோசிக்க ஆரம்பித்து விட்டார். தேர்தலைக் குறி வைத்தே அரசியல் நடத்திவரும் அவர் பேராயக்கட்சியின் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்யத் தயாராகிவிடுவார்.

அரசு பொது மருத்துவமனைக்கு இராஜீவ்காந்தி பெயர் வைக்க அவர்கள் சொல்லும் காரணம். திருப்பெரும்புதூரில் கொல்லப்பட்டவரின் உடல் அந்த மருத்துவமனையில்தான் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இப்படி உடற்கூறாய்வு செய்ததால் அந்த மருத்துவமனைக்கு அவரது பெயர் சூட்ட வேண்டுமாம். ‘சூட்டாவிட்டால் அவ்வளவுதான்’ என்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

இடையில் தி.க. உரிமையாளர் கி.வீரமணி, ‘ஈவே.ராமசாமி பெரியார் வைக்க வேண்டும் என ஏற்கனவே கோரியுள்ளோம்’ என்கிறார். இதை அவராகவே நினைவுபடுத்துகிறாரா இல்லை யாராவது சொல்லி நினைவுப்படுத்துகிறாரா என்பது தெரியவில்லை. தன் கோரிக்கைக்கான காரணத்தை சொல்லவில்லை. ஒருவேளை தமிழகத்தின் பெரிய மருத்துவமனை என்பதால் பெரியார் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறாரோ என்னவோ.

ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இப்போதாவது பெரியார் நினைவு வீரமணிக்கு வந்ததே’ என்று கிண்டல் செய்கிறார். அதேநேரத்தில் தாத்தா பெயர் வைக்காவிட்டாலும் ராஜீவ் பெயர் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அது நியாயமா? உடற்கூறாய்வு செய்ததற்காக எல்லாம் ஒரு மருத்துவமனைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்றால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சில்க் சுமிதாவில் இருந்து மோனல் வரை எத்தனை பெயர் வைக்க முடியும்? அவர்களின் ரசிகர்கள் போராட்டத்தில் இறங்கினால் தமிழ்நாடு தாங்குமா? பேராயக்கட்சியின் உறுப்பினர்களை விட ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்றே! அரசு பொது மருத்துவனையிலும் எத்தனை பெரிய தலைவர்கள், சுதந்திர போராட்டத் தியாகிகள், அறிவியல் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் எல்லாம் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். இப்போதுதான் அரசியல்வாதிகளின் செல்வாக்கின் அடையாளம் அப்பல்லோ மருத்துவமனை. அதற்குமுன் அரசு பொது மருத்துவமனைதானே. இப்படி சிகிச்சை பெற்றவர்கள் இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக ஏராளமானவர்கள். இவர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்? விபத்தில் சிக்கியதால் எத்தனை தலைவர்களுக்கு உடற்கூறாய்வு செய்திருப்பார்கள்?

இப்படி 1664ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 350 ஆண்டுகால அரசு பொதுமருத்துவமனை வரலாற்றில் இராஜீவ் ஒருவர்தான் தலைவரா? இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்கு எத்தனை பேர் பாடுபட்டிருப்பார்கள்? ஆரம்பித்த வெள்ளைக்காரர்கள் கூட தங்கள் பெயரை வைத்துக் கொள்ளவில்லையே?

புனித ஜார்ஜ் கோட்டைக்குள் வெள்ளைக்கார வீரர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவனையை மேம்படுத்திய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகவர் சர்.எட்வர்ட் வின்டர் கூட தன் பெயரை வைத்துக் கொள்ளவில்லை. இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த மருத்துவமனையை இடம் மாற்றி தொழில் மருத்துவமனையாக மாற்றியவர் அன்றைய ஆளுநர் சர்.எலிகு யேல். இவர்தான் உலகம் அறிந்த யேல் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தார். அவர் கூட தன் பெயரை இந்த மருத்துவமனைக்கு வைக்கவில்லை. அதுமட்டுமல்ல 1722ல் நிரந்தரமான இடத்திற்கு இடம் மாறிய பிறகும் கூட யாரும் அதற்கு பெயர் மாற்றவில்லை. அதன் முதன் கண்காணிப்பாளரான மருத்துவர்.டி. மோர்டிமர் பெயரும் வைக்கப்படவில்லை.

மருத்துவனையுடன் மருத்துவப்பள்ளி 1835ம் ஆண்டு ஆரம்பித்தபோது மெட்ராஸ் மருத்துவப் பள்ளி என்றும், பின்னர் 1850ல் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி என்றே அழைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாறிய பிறகும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி என்றே தொடர்கிறது. காரணம் அது உலகமறிந்த பெயர் என்பதால்தான்.

ஆனால் இதையெல்லாம் உணராமல் தங்கள் ஆதரவில் ஆளும் அரசை ஆட்டிப்படைக்கவும், கட்சி மேலிடத்தை மனநிறைவு கொள்ளச் செய்யவும், வரும் தேர்தலில் தங்கள் இடத்தை உறுதி செய்து கொள்ளவும் சிலர் நிதானம் இழந்து பேசுகின்றனர். பேராயக் கட்சியில் நேரு குடும்பத்தைத் தவிர வேறு தலைவர்களே இல்லையா? தமிழ்நாட்டில் யாரும் பேராயக்கட்சிக்காக பாடுபடவில்லையா?

பொது இடத்திற்கு வைக்கப்படும் பெயர்கள் அந்த மக்களின் பண்பாட்டை, அடையாளத்தை அழிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது. அப்படி மீறி அதிகாரத்தால் வைத்தால் அது நிரந்தரமாக இருக்காது என்பதை பல வரலாறுகள் உணர்த்தியுள்ளன. அவர்களும் உணரவேண்டும். இப்படி சொல்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று பேராயக்கட்சியினர் சொல்லலாம். அதற்கு ஆளும் தரப்பும் ‘ஆமாம்’ போடலாம். அது நடக்க வாய்ப்பு அதிகம். அதனால் எஞ்சிய அடையாளங்களையாவது காக்க வேண்டியது நமது கடமை. பெயர் வைப்பது நியாயம் என்று கருதினால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு – தமிழினத்திற்காக உயிர்க் கொடை தந்த தியாகி திரு.முத்துகுமார் பெயரைச் சூட்ட வேண்டும். உலகில் வாழும் தமிழர்களையெல்லாம் தன் உயிரால் இணைத்த தமிழர். அவர் உயிருடன் இருந்தபோதே அந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தலைவர்கள், காவலர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் அங்கு அவரிடம் பேசியுள்ளனர். வாக்குமூலம் தந்துள்ளார். அவரது உயிரும் அந்த மருத்துவமனையில் மாவீரர்களைத் தேடிப் பறந்தது.

எனவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தமிழருக்காக உயிர்க்கொடை தந்த உத்தமர் தியாகி. முத்துகுமார் பெயர் சூட்ட இந்த நியாயமான காரணங்கள் போதும். ஈழத்திற்கு அமைதிப்படையை அனுப்பி சுமார் 5000 தமிழர்களைக் கொன்று குவித்த - போபர்ஸ் ஊழல் புகழ் ராஜீவ் காந்தியின் பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு வைப்பதைவிட, தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காக உயிர் துறந்த முத்துக்குமார் பெயரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வைப்பது மேலானது. பேராயக் கட்சியினரை விட ஓங்கி இந்தக் கோரிக்கையை நாம் எழுப்புவோம். இந்தக் கோரிக்கை  நியாயம் என்று தோன்றினால், இது இன்று முதல் குறுஞ்செய்திகளாகவும், மின்னஞ்சல்களாகவும், பதாகைகளாவும், சுவரொட்டிகளாகவும், மனுக்களாகவும் மாறட்டும்.

- பெருங்காஞ்சி வே.செல்லன்

(இக்கட்டுரை ஏறக்குறைய 50 நாட்களுக்கு முன்னர் கீற்றிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இடையில் நிதி நெருக்கடி காரணமாக கீற்று செயல்படாமல் இருந்ததால் வெளியிட இயலவில்லை. கொஞ்சம் தாமதமாக இப்போது வெளிவருகிறது)