தேசத்தின் மாதிரிக் குழந்தைகளை, விமான விளம்பரம் துவங்கி, சாதாரண ஜட்டி விளம்பரம் வரை தினமும் தொலைக்காட்சிகளில் சுமார் 200 முறை காட்டுகிறார்கள். பார்த்தால் மட்டும் போதுமா, எதுவும் தாய்மார்களுக்குப் புரிந்தபாடில்லை. குழந்தைகளை இப்படியா வளர்ப்பது?. உலகின் எடை குறைந்த குழந்தைகளில் 5 சதம் நைஜீரியா வில் வாழ்கிறார்கள். மக்கள் தொகையில் நம்மை விஞ்சும் சீனா உட்பட எல்லா வளரும் நாடுகளையும் சேர்த்துக் கூட்டினாலே 53 சதம் தான் வருகிறது, இந்தியாவில் மட்டும் 43 சதம் (2009, யுனிசெஃப்). இந்தியாவின் வளர்ச்சியைப் பாருங்கள், 9 புள்ளிகள் வளர்ந்திருக்கிறது. 11 லட்சம் கோடிக்கு வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது மத்திய அரசு. இப்படி உண்மை இருக்கையில், தாய்மார்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்வது எப்படி?.

மேற்சொன்ன வாசகம் கற்பனைதான், ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் அனைத்தும் உண்மை. குளிரூட்டப்பட்ட கார்களில் பவனி வரும் நமது நாட்டின் அமைச்சர்கள் வரும் நாட்களில் இப்படியும் பேசலாம்.

இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளே .., இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சுதந்திரத்திற்கு முன்னரும், இப்பொழுதும் நம் குழந்தைகளில் பெரும்பாலோர் சவலைக் குழந்தைகளாகவே தொடர்கிறார்கள். அவர்கள் எடை குறைவானவர்களாக, உயரம் குறைந்தவர்களாக சத்துக் குறைபாட்டுடன் வாழ்கிறார்கள். சத்துக்குறைவு மூளையின் செயல்பாட்டை தடுக்கிறது. இதனால் அவர்களின் கல்வியில், சமச்சீரற்ற போட்டி நிலை  ஏற்படுகிறது. மேலும், அவர்கள் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

சத்துக்குறைவினால் இந்தியாவில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் வருடத்திற்கு 2 லட்சம் பேர் செத்து மடிகிறார்கள். அதாவது, ஒரு சிறு நகரமே பூண்டோடு அழிக்கப்பட்டு, மயானங்களில் புதைக்கப்பட்டு விடுகிறது. எங்கோ தூர தேசத்தில் நடக்கும் கொலை பாதகங்களை கண்டு துடிக்கும் நம் நாட்டு மக்களுக்கு, சொந்த நாட்டில் நடைபெறும் இதுபோன்ற உண்மைகள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. நமது வருங்காலத்தை நோஞ்சானாக்கும் இந்த தாக்குதல் தற்செயலானதல்ல.

உலகமய காலத்தில்தான், இந்தியாவின் கிராமப்புற மக்களும், பழங்குடி மக்களும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள். பட்டினியும், வறட்சியும் வரலாறு காணாதவகையில்  அதிகரித்துள்ளது. இது தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பை குறைத்துள்ளது. இரண்டாவது,  பொது விநியோகத்திட்டத்தில் ஏற்பட்ட சீர்குலைவானது மக்களுக்கு கிடைத்துவந்த குறைந்தபட்ச உணவு உத்திரவாதத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நிலைமை இத்தனை மோசமாகியுள்ள போதும், மத்திய அரசு 100 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்புக்காக ஒரு வருடம் முழுக்க செலவிடும் தொகை எவ்வளவு? வெறும் ரூ.450 கோடி. இந்த தொகையை அதிகரிக்கக் கேட்டால், நிதிச்சுமையை அரசு தாங்காது என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

மற்றொரு புறம், இந்தியாவின் சொத்தான இந்திய ஜவுளிக் கழகத்திற்கு சொந்தமான நிலங்கள் ஆன் லைனில் ரூ.5000 கோடிக்கு ஏலம் விடப்படுகிறது. மத்திய அமைச்சரே இதனை முன்நின்று நடத்துகிறார். இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியின் பங்குகளை விற்க அரசு அவசர அவசரமாக சட்டம் இயற்றுகிறது. ஆனால் இந்திய உணவுக் கழகத்தில், புளுத்துப்போய், எலிகளுக்கு இறையாகிக் கொண்டிருக்கும் சுமார் 6 லட்சம் டன் தானியங்களை உச்சநீதிமன்றமே உத்தரவிட்டபோதிலும் அதனை மக்களுக்கு விநியோகிக்க மனமின்றி முகம் திரும்பிக் கொள்கிறார்கள், ஆட்சியாளர்கள்.

இப்போது ஒரு சட்டம் கொண்டுவரப்போவதாக தம்பட்டம் அடிக்கிறது. இந்த சட்டம் மக்களின், உணவுப் பாதுகாப்பை (?) உத்திரவாதப்படுத்தும் என்று சொல்கிறார்கள் . உண்மையில், அது மக்களுக்கு கிடைத்துவரும் உணவுப் பொருளின் அளவைக் குறைப்பதுடன், பொது விநியோகத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாக உள்ளது. மத்தியில் ஆட்சி தொடர இடதுசாரிகள் ஆதரவு தேவைப்படாத ஆளும் வர்க்கங்கள் ஏழைகள் மீது அப்பட்டமான தாக்குதலைத் தொடர்கின்றன.

உணவுக்கும், உடைக்கும் இருப்பிடத்திற்கும் அல்லாடும்  மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிகிறார்கள். ஆனால், முதலாளித்துவ அரசியல் கட்சிகளோ, நிலைமையை மாற்றத் தயாரில்லை. தேர்தல்களில் அவர்கள், மக்களையும், வாக்குகளையும் விலைக்கு வாங்க கோடி கோடியாய் பணம் செலவிட தயாராய் இருக்கிறார்கள். இந்த நிலை ஏன்?. நம்  நாட்டின் தலைமை இன்றளவிலும் பெருந் தன்மையானவர்களிடம் இருந்ததில்லை. மாறாக பொதுவாழ்க்கையின் எச்சங்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் விடியலுக்கான அரசியல் இன்னும் பெரும்பாலான மக்களைச் சென்றடையவில்லை.

மேற்சொன்னதெல்லாம் நாம் குறிப்பிட்டது, ஆம், அரசியல் ஒரு சாக்கடை எனும் நடுத்தர வர்க்க  மனநிலைக்கு ஒத்து ஊதுவதற்காக அல்ல. அந்தச் சாக்கடையை சுத்தம் செய்யாமல் சமூக முன்னேற்றம் சாத்தியமில்லை என்பதை அறிவிக்க.

நமது நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும், ஆளும் வர்க்கத்தின் இரக்கமற்ற தாக்குதலில் இருந்து காப்பாற்றவேண்டும். அதற்கான சூத்திரமும் மக்களிடம்தான் அடங்கியிருக்கிறது. பசியில் துடிக்கும் மக்களின் பாதுகாப்பை, பணக்காரர்களின் ஆட்சி ஒருபோதும் ஏற்படுத்தாது. என்ன செய்வது? என்ற கேள்வியுடன் மக்கள் கையைப் பிசைகிறார்கள்.

....அதிகரித்துவரும் நெருக்கடிக்கு காரணத்தை அரசு தெரிந்துகொள்ளவில்லை. மக்களின் ஸ்தாபன ரீதியிலான ஒற்றுமையின் முன் அது இணங்க வேண்டியதுதான்... நிலையை மாற்ற அவர்கள் முன்வர மாட்டார்கள். நெருக்கடியை தாக்கி தகர்க்க வேண்டியவர்கள் நாம், நமது மக்கள். (மாற்றத்தை ஏற்படுத்தும்) சக்தி நமது கையில் இருக்கிறது.  (9.6.1943) ப.ஜீவானந்தம். மேற்சொன்ன வாசகம் நமக்கு கட்டளையிடுகிறது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டமாய், வலுப்பெறட்டும் எதிர்த் தாக்குதல்.

Pin It