பதிவுகள்

இன்றைய சமூகத்தில் திரைத்துறையில் எண்ணற்ற பெண்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். திரை இயக்குநர்களாக எண்ணற்ற பெண்கள் உருவாக வேண்டிய அவசியமும், இச் சமூகத்தின் மீதான அவர்களது அக்கறையும் முக்கியமான தேவைகளாக நம்முன் இருக்கின்றன.

இதற்கான முதல் முயற்சியாகச் சிறந்த திரைப்படங்களை உருவாக்கிய பெண்களையும், அவர்களது திரைப்படங்களையும் இச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் சென்ற ஆகஸ்டு 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மதுரையில் ‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கம் சார்பில் ‘சர்வதேச பெண் இயக்குநர்களின் திரைப்பட விழா’ நடத்தப்பட்டது.

‘பெண் திரை 2007’ என்ற இந்த விழாவில் முழு நீளப்படங்கள் குறும்படங்கள், ஆவணப்படங்கள் என 28 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கத்தைச் சார்ந்த பெண்கள் ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றியும் அறிமுகப்படுத்த படங்கள் திரையிடப்பட்டன. அதன் பின்பு படங்கள் குறித்தும், படத்திற்காக அதன் பெண் இயக்குனர்கள் தேர்ந்தெடுத்த ‘கரு’ குறித்தும், திரைப்படம் என்ற துறை வாயிலாக அவர்கள் பயன்படுத்திய நவீன தொழில்நுட்பம் குறித்தும் பார்வையாளர்கள் தங்கள் கருத்துக்களாய் பகிர்ந்துக் கொண்டனர்.

 
லீ ஜியோங், அபர்ணா சென், தீபா மேத்தா,வறானா மக்பல்பஃப், மார்க்கரெத்தா, ஃபாண்டிபிராட்டா, கீதாஞ்சலி ராவ், டிம்பிள் பிவுரகா தத்தா, ஆர்.ரேவதி, வசுதா ஜோஷி, இன்லால், நடாவா மென்டோன்கா, வுமீரா போன்ற இயக்குனர்களின் படங்கள் திரையிடப்பட்டன.

முடிவில் இயக்குனர்கள் ரேவதி, டிம்பிள், கீதா இளங்கோவன் ஆகியோருடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

விழாவினைக் கூடு பெண்கள் வாசிப்பரங்கம் சார்பில் சாலை செல்வம். கீதா, இந்திரா மற்றும் ரஞ்சனி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.


Pin It