புதிய வைரம்

இலக்கியத்தின் எல்லைப் பரப்பை விரிவாக்கிக் கொண்டே, ஏற்கனவே இருக்கிற சுவடுகளையும் தக்க வைத்துக் கொள்கிற பெரும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவே சிற்றிதழ்கள் நினைக்கின்றன. சிற்றிதழ்களின் தலையங்கங்களும் உள் பெட்டிச் செய்திகளும் அதற்கான சான்றாகி விடுகின்றன. தனித்த ஒருவரால் இழுக்க முடியாத தேர்தான் சிற்றிதழும் ‘வைரம்'குழுவாய் செயல்படும் இதழ்!

சமூகச் செயல்பாடுகளை அக்கறையோடு செய்யத் தூண்டுகிற வரிகளாகவும், போலித்தனங்களை சுட்டிக் காட்டும் விதமாகவும், தலையங்கம் அமைந்திருப்பது ‘வைரம்' இதழின் சமூகப் பொறுப்பிற்குச் சான்று.

தரமான கவிதைகள் இதழைச் சிறப்பிப்பதுடன் புதியவர்களும் இடம் பெற வாய்ப்பளித்துள்ளனர். ஆய்வு நோக்கில் எழுதப்படும் கட்டுரைகள் வாசகர்களின் தேடலுக்குப் பொருத்தமானதாக இருக்கின்றன. திருக்குறள் பற்றிய மஞ்சை வசந்தனின் கட்டுரை, முனைவர் அ.அறிவு நம்பியின் கட்டுரை ஆகியவையே அதற்கு ஆதாரம்! நூல் விமர்சனம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தலாம்! சிறுகதையும் உண்டு.

‘சொல்லத் துடிப்பவர்கள் சொல்லட்டும்! வெல்லத் துடிப்பவர்கள் வெல்லட்டும்' என்ற முழக்கத்தோடு வரும் வைரம் இதழ் புதியவர்களை அறிமுகப் படுத்துவதுடன் முன்னணிக் கவிஞர்களோடும் கைகோர்த்து வருகிறது. அட்டையும், தாளும் கூடுதல் கவனிப்பதற்குரியதாக மிளிர்கிறது.

இதழ்: புதிய வைரம், ஆண்டு கட்டணம்: 30 ரூபாய்.

சிறப்பு ஆசிரியர்:

கலைமாமணி கல்லாடன்.
பொறுப்பாசிரியர்: இளங்கவி அருள்.
முகவரி: 19டி, கவிராஜன் குடில்,
காமராஜ் வீதி, முருங்கப்பாக்கம்,
புதுச்சேரி-4.

பயணம் புதிது

இன்றைய சூழலில் சுதந்திரப் போராட்டம் பற்றியோ போராட்ட வீரர்களைப் பற்றியோ பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஏது நேரம்..? கடந்த காலம் உதிர்ந்த சருகைப் போல மிதிபட நிகழ்காலமோ வருங்காலத்தைத் தேடி பொய்யான பாதையில் பயணிக்கிறது. ‘பயணம் புதிது' பகத்சிங்கை நினைவு கூர்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

‘மாறுவது இயல்பு: இல்லையேல் மாற்றுவது மனிதம்' என்கிற மாற்றத்திற்கான சொற்களை முன்னிறுத்தி வருகிற இதழ் ‘பயணம் புதிது..!' சிறு பத்திரிகைகளின் தவிர்க்க இயலாதபடி நிகழ்ந்து விடுவது காலதாமதம்...! தடங்கல்களைக் கடந்து இதழ் பயணம் தொடர்கிறது.

கடந்த காலத்தின் நினைவுகளைப் பற்றிய கட்டுரை இதழின் மணிமகுடமாகத் திகழ்கிறது. ருத்திரனின் அரசியல் தொடர்பான கட்டுரை இதழில் பெரும்பகுதியை எடுத்துக் கொள்கிறது. ஆனாலும் தேவையானதாக இருப்பது கட்டுரையைப் பலப்படுத்துவதுடன் இதழுக்கும் கனம் கூட்டுகிறது.

மாறுபட்ட சிந்தனையைத் தூண்டும் படியாய் கட்டுரைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக் கப்பட்டுள்ளது. கட்டுரைகள் கருத்தாழம் மிக்கதாகவும் அடுத்த கட்ட நகர்வுக்கான வழிகாட்டியாகவும் விளங்குகின்றன. கட்டுரைகள் என்கிற பெயரில் புரியாத புதிர்களும் எவ்விதத்திலும் வாழ்வுக்கு உதவாதசொற்களைக் குவிக்கிற ஊதாரித்தனமும் இதழில் இல்லை.

கவனிக்கப்படாத, சிறந்த கவிதை நூல்களுக்கான விமர்சனமும் இதழில் இருக்கிறது. நேர்மையாக செய்யப்படுகிற விமர்சனமாகவும் இருக்கிறது. தகுதியான நேர்காணலும் இருக்கிறது.

சில சிற்றிதழ்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் நேர நெருக்கடியிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. போலி அறிவு ஜீவிகளிடமிருந்து மக்களை விலக வைக்கிற கவனமும், எதிர் காலத்திற்கான பாதையை அடையாளப்படுத்தும் பணியையும், ‘பயணம் புதிது' தொடர்ந்து செய்யும் என்பதை அறுபத்து மூன்று இதழ்களை இதுவரை கொண்டு வந்திருப்பதன் மூலம் உறுதிப்படுத்தலாம்.

இதழ்: பயணம் புதிது, ஆண்டுக்கட்டணம்: ரூ.50/
பொறுப்பாசிரியர்: ப.முருகேசன்

முகவரி:
பயணம் புதிது,
புலியர் அஞ்சல்,
கரூர் 639114
பேசி: 9443150292.

பயணம்

வாசிக்கிறவர்களை மனத்தில் இருத்திக் கொண்டு, வெளியாகிற பத்திரிகைகளை விடவும், ஆசிரியர்களின் அறிவு ஜீவித்தனத்தையும் இதழ் சார்ந்தவர்களின் மேட்டிமைத் தனத்தையும் வெளிப்படுத்துகிற பத்திரிகைகள் பெருகிக் கொண்டிருக்கிற தருணம் இது. இதில் தீவிர இலக்கியப் பங்களிப்பென்கிற சொல் மிரட்டல் வேறு.

உண்மையில் படிக்கிற வாசகர்களைக் கவனத்தில் கொண்டு வெளியாகிற இதழ்களில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான இதழ்களில் ஒன்றாக மிளிர்கிறது ‘பயணம்'.

மக்கள் கலாச்சார இலக்கிய மாத இதழ் என்கிற முத்திரையோடு வருகிற இவ்விதழ் டிசம்பருக்குள் ஆயிரம் சந்தாதாரர்களை இணைப்பது இலக்கென்று செயல்படுகிறது. சந்தா கட்டுவதற்கு தகுதியான இதழ் தான்..!

ஜனநாயகம் குறித்த கருத்துக்கள் அடங்கிய அர்த்த முள்ள கட்டுரைகள், அணைகள் உருவான கதை, ஆழமான சிறுகதைகள், பொது மக்களும் சட்டம் அறிந்து கொள்ள வழி செய்யும் சட்டத் தொடர், செறிவு மிக்க புரிதல் கவிதைகளென்று இதழ் கனம் பெறுகிறது. செம்மலர் நடராசனின் தொடர் கட்டுரை, வரலாற்றை அறிந்து கொள்ள ஆர்வமாயிருக்கும் புதியவர்களுக்கு சிறந்த தொடர். அறிவியல் கட்டுரையும் உண்டு.

அட்டையிலேயே பயணம் சிற்றிதழ்களுக்கான முதன்மைப் பணியை துவங்கிவிடுகிறது. எளிமையான வடிவம், கூர்மையான சிந்தனைச் சிதறல்கள் என்று பயணம் எல்லோர்க்குமான பாதையாகிறது.

அறியாமையைச் சுட்டிக் காட்டுவதும், விழிப்புணர்வு பெற்றவர்களை தொடர்ந்து இயங்க வைப்பதும், இயங்குபவர்களை ஊக்கப்படுத்தும், இதழ்களுக்கான சிறப்பென கொண்டால் ‘பயணம்' சிறந்த இதழ்தான்.

இதழ்: பயணம்
ஆசிரியர்: இரா.சுந்தரராஜ்
ஆண்டுக்கட்டணம்: ரூ.30/ மட்டும்
முகவரி: பயணம் மாத இதழ்
மேலத்துலுக்கங்குளம்
மல்லாங்கிணறு (வழி), விருதுநகர்626109
செல் 9362231852.

அணி

இலக்கியப் படைப்பாக்கத்தில் துவக்க நிலையில் உயிர்த்துக் கொண்டு முளைப்பது பெரும்பாலும் கவிதைகளே...! கவிதையில் ஊறித்திளைத்தபின் படிப்படியாக அடுத்த கட்ட நகர்வுக்கு நகர்ந்து சிறுகதையாளர்களாகவும், நாவல் எழுத்தாளர்களாவும் பரிணமித்திருக்கிறார்கள்.

கவிதையின் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை கவிதை வளர்ச்சிக்கும் கவிதையை நேசிப்பவர்களுக்கான புகலிடமாகவும் விளங்குபவை சிற்றிதழ்களே..! பக்கத்தை நிறைக்கும் தகவல்களுக்கிடையில் மிச்சமான இடைவெளியை நிரப்பவே பெரும்பாலான வணிக இதழ்கள் கவிதையைப் பயன்படுத்தியதை மாற்றி, கவிதையை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு வந்த பெருமையும் சிற்றிதழ்களையே சேரும்.

கைவசமிருக்கிற குறைந்த பக்கங்களில் கவிதைக்கென்று குறைந்த அளவே ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் கவிதை ரசனைக்குத் தடைதான்..! கவிதைகளுக்கென்று சில இதழ்களாவது இன்றைக்கு அவசியம் தேவைதான். அந்தத் தேவையை நிறைவு செய்கிறது மும்பையிலிருந்து வரும் ‘அணி'’.

கவிதையின் பல்வேறு வடிவங்களுக்கும் அணி இடம் கொடுத்திருக்கிறது. தமிழின் முன்னணிக் கவிஞர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். கவிதையின் வடிவங்களாக லிமைரக்கூ, ஹைபுன், ஹைக்கூ கவிதைகள் என்று இதழ் முழுக்க கவிதைகள் நம்மை வசீகரிக்கின்றன. கவிதை நூல்களுக்கான விமர்சனம் ஏனோ தானோவென்று இல்லாமல் கூர்மையாக உள்ளது. வேற்று மொழிக் கவிதைகள் அறிமுகம், கவிஞர்கள் அறிமுகம், கட்டுக் கவிதை என்று ‘அணி'’ கவிதையை அலங்கரிக்கிறது.

கவிதையை நேசிப்பவர்களின் அகத்தில் இருக்க தோதான இதழ் ‘அணி'’.

இதழ்: அணி ஆண்டுக் கட்டணம் ரூ.50/ ஆசிரியர்கள்: அன்பாதவன், மதியழகன், சுப்பையா Add: ANI-BIMONTHLY, MADHIYALAGAN SUBBIYA,
10/1-B TRIVEDI DESAICHAWLM, D' MONJE LANEM MUMBAI-400064.
Pin It