உத்தப்புரத்தில் அனைத்து சாதி மக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் பிரச்சனையை உருவாக்குகிறது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதைத் தொடர்ந்து, உத்தப்புரத்தில் சாதிக்கலவரத்தை தூண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டிப்பதாகக் கூறி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய வடக்குத்தெருக்காரர்கள், தற்போது ஒளி ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களின் துணையோடு பொய்ப்பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாக ஆக-12 ந்தேதி உசிலம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டச்செய்தியை பெரிதாக்கி சன் தொலைக்காட்சி ஊதிவிட்டது.

யாருக்கு அரசியல் செல்வாக்கு என கருத்துக்கணிப்பு வெளியிட்ட தினகரன் நாளிதழ் எரிக்கப்பட்டு 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பிறழ்சாட்சிகளால் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கை சிபிஐ மேல்முறையீடு செய்தது. அந்தச்செய்தியைக் கூட வெளியிடாத சன் தொலைக்காட்சி மற்றும் அதன் அச்சு ஊடகம், மார்க்சிஸ்ட் கட்சி மீதான வெறுப்பை உத்தப்புரம் பிரச்சனையில் செய்தியாகப் பதிவு செய்கிறது.

உத்தப்புரத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என ஆகஸ்ட்-12 ந்தேதி மதுரையில் சிலர் பேட்டியளித்தார்கள். அதில் முக்கியமானவர் உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைமார் சமுதாயத்தின் பிரதிநிதி எனச்சொல்லப்படுகிற ஆடிட்டர் முருகேசன். இன்னொருவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலச் செயலாளர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட சுரேந்திரன். இவர்களுக்கு முட்டுக்கொடுப்பது போல, உத்தப்புரத்தில் தலித் மக்களுக்கு எதிராக வேலை செய்து வரும் செல்வராஜ் என்பவர். அவரோடு உத்தப்புரம் ஊராட்சித்தலைவர் புஷ்பம் ஆகியோரும் இந்தப் பேட்டி நிகழ்வில் கலந்து கொண்டனர். தீக்கதிர் நாளிதழின் மதுரை மாவட்ட செய்தியாளர் என்ற முறையில் நானும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

தமிழகத்தில் திராவிடர் கழகத்தைத் தொடர்ந்த துவங்கப்பட்ட பல திராவிடக்கட்சிகள்( அவை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுகிறதா என்பது வேறுவிஷயம்) தங்களுடைய கட்சிப் பெயர்களில் “திராவிட” என்பதை சேர்த்துக் கொள்ளுவதை வழமையாகக் கொண்டுள்ளன. ஆன்மீகம் போற்றும் நடிகர் விஜயகாந்தும் தனது கட்சிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனப்பெயர் வைத்துள்ளார்!

அது போல தமிழகத்தில் பலர் பார்வர்ட் பிளாக் கட்சிகளை நடத்தி வந்தனர். இதனை முறியடித்து அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த பெருமை நடிகர் கார்த்திக்கையே சேரும். தேவர் ஜெயந்தி அன்று மதுரையில் பல்வேறு பார்வர்ட் பிளாக் கட்சி நடத்தும் கூட்டங்களால் காவல்துறைக்கு தாவு தீர்ந்து போகும். பார்வர்ட் பிளாக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரிடம் டீ வாங்கிக்கொடுத்துக் கொண்டிருந்த ஒருவர், திடீரென தேர்தல் நேரத்தில் அவர் பெயரிலேயே ஒரு கட்சியைத் துவங்கி விட்டார். இப்படி சிதறிக்கிடந்த பார்வர்ட் பிளாக் இயக்கங்களை ஒன்றுதிரட்டிய கார்த்திக்கிற்கு தலைவர் பதவியும் தரப்பட்டது. தொடர்ந்து அவர் கூட்டங்களில் கலந்து கொள்ளாததால் கட்சித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய தலைமையின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் பி.வி.கதிரவன் அக்கட்சியின் மாநிலப்பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மதுரையில் உத்தப்புரம் பிரச்சனை தொடர்பாக பேட்டியளித்த சுரேந்திரன் என்பவர், தன்னை பார்வர்ட் பிளாக் மாநிலப்பொதுச்செயலாளர் என அறிமுகம் செய்தவுடனே நான் எழுந்து, நீங்கள் எந்த பார்வர்ட் பிளாக் எனக் கேட்டேன். நாங்கள் சுபாசிஸ்ட் பார்வர்ட் பிளாக் கட்சி. இதன் அகில இந்திய கூட்டம் ஜார்கண்டில் நடைபெற உள்ளது என்று ஒரு குண்டை சுரேந்திரன் தூக்கிப் போட்டார். தமிழகத்தில் எத்தனை பேர் இந்த இயக்கத்தில் இருக்கிறார் எனத் தெரியாமல் பத்திரிகையாளர்கள் திகைத்தனர்.

மார்க்சிஸ்ட் கட்சியால் உத்தப்புரத்தில் பாதிக்கப்பட்ட அந்த கட்சியைச் சேர்ந்தவர் என ஒரு நபரை சுரேந்திரன் அறிமுகம் செய்து வைத்தார். புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேனியில் போட்டியிட்ட செல்வராஜ் என்பவரைத் தான் மார்க்சிஸ்ட் கட்சிக்காரர் என அவர் அறிமுகம் செய்து வைத்தார். இதுகுறித்து நான் கேள்வி எழுப்பியதற்கு, ‘ஆமாம் நான் தான் அந்த செல்வராஜ்’ என அவர் ஒப்புக்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது குற்றம் சொல்வதை குறைந்தபட்ச திட்டமாகக்கொண்டு தயார் நிலையில் வந்தவர்கள், பேட்டி ஆரம்பித்தவுடனேயே இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதற்காக கட்சியில் இல்லாத ஒருவரை கட்சிக்காரர் எனச்சொல்லி அறிமுகம் செய்ததில் இருந்தே அவர்களுடைய நோக்கம் செய்தியாளர்களுக்குத் தெரிந்து போனது.

‘தி ஹிந்து நாளிதழில் உத்தப்புரம் குறித்து பொய்யான செய்தி வெளியானதில் இருந்து பிரச்சனை துவங்கியது’ என பேட்டியைத் துவக்கிய ஆடிட்டர் முருகேசன், ‘பொதுவழி மறித்து தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டதாக பொய் செய்தியை வெளியிட்டது’ என்றும் கூறினார். ஆனால், அதன் பின் பேசிய சுரேந்திரன் 1989-ஆம் ஆண்டு 16 பஞ்சாயத்தார் அமர்ந்து பேசி அந்த சுவர் கட்டப்பட்டதாகக் கூறினார் உத்தப்புரம் சுவர் தீண்டாமைச் சுவர் இல்லாவிட்டால் எதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது? அக்கட்சியின் அகில இந்தியப்பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் உத்தப்புரம் வருகிறார் எனத் தெரிந்தவுடன் வேக, வேகமாக அரசே அச்சுவரின் ஒரு பகுதியை உடைத்து பொதுப்பாதை என ஏன் அறிவித்தது என்ற வினாக்கள் வட்டமிட்டன.

 மார்க்சிஸ்ட் கட்சி பப்ளிசிட்டிக்காக இப்பிரச்சனையை எடுத்தது என்ற முருகேசன் கடந்த 2008ஆம் ஆண்டு அக்-1 ந்தேதி வடக்குத் தெருவில் 19 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறினார். உத்தப்புரத்தில் பொதுப்பாதை திறந்து விட்ட போது, மலையேறிய வடக்குத் தெருக்காரர்கள், மலையில் இருந்த தலித் மக்களின் சொத்துக்களை சூறையாடியதுடன் அங்கிருந்த மரங்களை வெட்டிப் போட்டதுடன், அங்கிருந்த கோழிகளையும் பிடித்து தின்று தீர்த்ததும் நமக்கு ஞாபகத்திற்கு வந்தது. இன்னமும் அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்பது வேதனையான விஷயமாகும்.

அடுத்துப் பேசிய புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த செல்வராஜ் , மார்க்சிஸ்ட்டுகள் தூண்டுதலால் என்னை உத்தப்புரம் தலித் மக்கள் விலக்கி வைத்தனர் என்று குற்றம் சாட்டினார். ‘அப்படியென்றால் உத்தப்புரம் தலித் மக்கள் அனைவரும் மார்க்சிஸ்டுகள் பக்கம் தான் நிற்கிறார்களா’ என நான் கேள்வி எழுப்பியதற்கு, வேக வேகமாக மறுப்பு தெரிவித்த ஆடிட்டர் முருகேசன், ‘15 பேர் தான் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்’ எனக்கூறினார்.

‘பதினைந்து பேர் எப்படி இவரை ஊரில் இருந்து விலக்கி வைக்க முடியும்?’ என நான் பதில் கேள்வி எழுப்பியதற்கு, அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. தொடர்ந்து பேசிய செல்வராஜ், ‘நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்ட நிவாரணத்தொகை உண்மையான நபர்களுக்குக் கிடைக்கவில்லை’ எனக்குற்றம் சாட்டினார். ‘காவல்துறை உத்தப்புரத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி அமைக்கப்பட்ட குழுவின் மூலம் வழங்கப்பட்ட நிவாரண நடவடிக்கை தவறு எனக்கூறுகிறீர்களா’ என செல்வராஜிடம் நான் வினாஎழுப்பியதற்கு, அவர் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார். அருகில் இருந்த வழக்கறிஞரான சுரேந்திரன், ‘அப்படி அவர் சொல்லவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியினரால் நிவாரண வழங்கப்பட்ட மேடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் உண்மையானவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை’ என செல்வராஜ் கூறுவதாக தமிழில் பேசியதற்கே மொழி பெயர்ப்பு செய்தார்.

‘ஏற்கனவே உத்தப்புரத்தைச் சேர்ந்த தலித் பிரிவைச் சேர்ந்த மிலிட்டரி பொன்னையா என்பவர் மீது தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக செல்வராஜ் புகார் அளித்துள்ளார். அத்துடன் விசாரணைக்கு வந்த பரூக்கி கமிஷனிடமும் புகார் அளித்துள்ளார். அப்படிப்பட்டவர் நீதிமன்றம் அமைத்த குழு பலமுறை விசாரணைக்கு வந்த போது, ஒரு முறை கூடவா அக்குழுவைச் சந்திக்க முடியாமல் மார்க்சிஸ்டுகள் தடுத்தார்கள்’ என நான் கேட்டதற்கு அவர்களிடம் பதில் இல்லை.

‘கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை அதாவது மார்க்சிஸ்ட் கட்சி இப்பிரச்சனையில் தலையிடும் வரை உத்தப்புரத்தில் எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை’ என சுரேந்திரன் கூறினார். 1989-க்கு முன் துப்பாக்கிச்சூடும், அதன் பின் பலமுறை மோதல்களும் நடந்து வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளதை மறைத்து செய்தியாளர்கள் மத்தியில் கூறியது பல செய்தியாளர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தியது.

‘ஆகவே, இப்பிரச்சனையில் இருபிரிவினரும் பேசித்தீர்த்துக் கொள்வோம். இனி மார்க்சிஸ்ட் கட்சியினர் யாரும் இப்பிரச்சனையில் தலையிடக்கூடாது’ என உத்தப்புரம் ஊரைச் சேராத சுரேந்திரன் கூறினார். உத்தப்புரம் பிரச்சனையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ராஜம்மாள் என்பவர் மனு செய்திருக்கும் போது, பேசித்தீர்க்க வேண்டும் என இவர்கள் கூறுவது வழக்கை திசை திருப்புவதற்காக என்பது தெளிவாக தெரிந்தது. ஆனாலும் விடாத நான்,  ‘கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது என நீதிமன்றங்கள் கூறியுள்ள நிலையில், தீராத பிரச்சனைகளை கட்டப்பஞ்சாயத்து மூலம் தீர்க்கிறோம் என்று கூறுகிறீர்களா’ என கேள்வி எழுப்பியதற்கு, ‘கிராமங்களில் நான்கு பேர் அமர்ந்து பேசுவதை கட்டப்பஞ்சாயத்து என சட்டம் சொல்லவில்லை’ எனக் கோபப்பட்டார் சுரேந்திரன்.

உத்தப்புரத்தில் மனிதர்களாக தலித் மக்கள் நடத்தப்படவில்லை என்பது பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின் உலகத்திற்கு தெரியவந்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடத்தப்பட்ட களஆய்வின் போது, உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் விஷயமும் வெளிச்சத்திற்கு வந்தது. பல்வேறு தலித் கட்சித்தலைவர்கள் கண்டு கொள்ளாத இப்பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெஞ்சுறுதியோடு எடுத்தது. அதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குகளைத் தொடுத்துள்ளது.

பத்து அடி பாதையை திறந்து விட்டதால் உத்தப்புரம், உத்தமபுரமாகி விட்டதாக பெருமை பேசிய நமது முதல்வரின் அறிக்கைகளைப் படித்து உடன்பிறப்புகள் புல்லரித்தால் நமக்கு கவலையில்லை. ஆனால், தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ள பொதுப்பாதையை தலித் மக்கள் பயன்படுத்துவது, நிழற்குடை அமைப்பது, தலித் மக்கள் பகுதியில் தேங்கியுள்ள ஊர்ச்சாக்கடையை வேறுபகுதிக்குக் கொண்டு செல்வது என்ற கோரிக்கைகள் நிறைவேறாத போது உத்தப்புரம் எப்படி உத்தமபுரமாகி விட்டது என மார்க்சிஸ்டுகள் கேள்வி எழுப்பி, அதற்காக இயக்கம் நடத்தினால், தடி கொண்டு தாக்கி மண்டையைப் பிளந்து குருதி சிந்த விட தமிழக அரசின் காவல்துறை தயாராகவே உள்ளது. தலித் மக்களுக்காக ரத்தம் சிந்த மார்க்சிஸ்டுகள் போராடுவது, உத்தப்புரம் வடக்குத்தெருக்காரர்களுக்கு பப்ளிசிட்டியாகத் தெரிகிறது!

அவர்களின் உணர்வின் வெளிப்பாடு பேட்டியின் கடைசியில் சொல்லாய் வந்து விழுந்தது. “இனிமேல் உத்தப்புரத்திற்குள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் யாரும் வரக்கூடாது”. சிதம்பரத்தில் நந்தன் நடந்து வந்தான் என்பதற்காக அந்தப்பாதையை இன்னமும் அடைத்து வைத்து, அந்தப்பாதை வழியாக தலித்துகள் யாரும் வரக்கூடாது என்ற ஆரியக்குணத்தோடு எழுப்பப்பட்ட சுவரை இன்னமும் அடைகாத்து வரும் அரசு எந்திரங்களின் குரல்களை இவர்களும் வெளிப்படுத்தினார்கள். ‘மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் யாரும் உத்தப்புரத்திற்குள் வரக்கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க உள்ளோம்’ என்ற சுரேந்திரனிடம் ‘திடீர் என தலித் மக்கள் மீது உங்களுக்கு என்ன பிரியம்’ என நான் கேள்வி எழுப்பியதற்கு,  ‘நான் எப்போதுமே தலித் மக்களின் ஆதரவாளன் தான்’ என பதிலளித்தார்.

‘பத்து ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாமல் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிய மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டார் மங்கலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுவிசாரணையின் போது முன்னாள் நீதிபதிகள் முன்னிலையில்,  தலித் பஞ்சாயத்துகளில் தேர்தல் நடத்தக்கூடாது என நேரடியாக சாட்சியம் அளித்த நீங்கள் எப்படி, இப்போது தலித்துகளின் ஆதரவாளன் எனக் கூறுகிறீர்கள்’ என சுரேந்திரனிடம் கேள்வி எழுப்பியதற்கு, ‘தலித்துகள் அதிகமில்லாத தொகுதிகளை தனித்தொகுதியாக ஆக்கக்கூடாது எனக்கூறினேன்’ என்றார். இடஒதுக்கீட்டின் மூலம் தலித் மக்களுக்கு வழங்கப்படும் தொகுதிகளை வழங்கக்கூடாது என வாதிட்டவரோடு உத்தப்புரத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் புஷ்பம் மிக அமைதியாக அமர்ந்திருந்தார்.

‘உங்கள் பஞ்சாயத்தில் என்னனென்ன பணிகள் நடைபெற்றுள்ளது’ என நான் அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, அவரைப்பதில் சொல்லவிடாமல், ‘அவருக்குப்பதில் செல்வராஜ் பதிலளிப்பார்’ எனக் கூறினார்கள். ‘ஏற்கனவே, தான் கூறாததை காவல்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது என  பேட்டியளித்த புஷ்பம் இந்தக்கேள்விக்கு பதிலளிக்கட்டும்’ என பத்திரிகையாளர்கள் கூறினர். ஆனால், அவர் கடைசி வரை பதிலளிக்கவேயில்லை.

‘முதல்வர் இப்பிரச்சனையில் தலையிட்டு சுவரின் ஒரு பகுதியை இடித்தார். ஆகவே, மார்க்சிஸ்டுகள் இப்பிரச்சனையில் தலையிடக்கூடாது’ என கிளிப்பிள்ளை போல செல்வராஜ் கூறினார். ‘இதே முதல்வர் தான், பாதை கேட்டவர்களுக்கு பாதையும், பாதுகாப்பு கேட்டவர்களுக்கு பாதுகாப்பையும் இந்த அரசு வழங்கியுள்ளது. அப்படியென்றால் பாதை கேட்ட உங்களால் வடக்குத் தெருக்காரர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனையிருக்கிறது என எடுத்துக் கொள்ளலாமா’ எனக்கேட்டதற்கு, அவர் பதறிப்போனார். ‘எங்களால் அவர்களுக்கு என்ன பிரச்சனை’ என நம்மிடம் கேள்வி எழுப்பினார்.

உத்தப்புரத்தில் நிலவும் சாதியப்பாகுபாடு நீக்கப்பட வேண்டும் என மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜுலை12 ந்தேதி நடைபெற்ற முற்றுகைப்போராட்டத்தில் கைதான 369 பேரில் சரிபாதி பேர் உத்தப்புரத்தைச் சேர்ந்த தலித் மக்கள். காவல்துறையின் கடும் தாக்குதலையும் எதிர்கொண்டதுடன், கைதும் ஆனார்கள். அவர்களின் நலன் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மார்க்சிஸ்டுகளை உத்தப்புரத்திற்குள் வரக்கூடாது என இவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். சரி ,. உத்தப்புரமும் இந்தியாவிற்குள் தானே இருக்கிறது?

- ப.கவிதாகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)