ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா சூப்பர் பாம் எனப்படும் கொடூரமான குண்டைப் போட்டது : அமெரிக்காவும், எல்லா அன்னிய சக்திகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறு!

பெரிய போர்களுக்கு சோதனைத் தளமாக ஆப்கானிஸ்தான் பயன்படுத்துவதை நிறுத்து!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை ஏப்ரல் 16, 2017

ஏப்ரல் 13 அன்று, அமெரிக்க இராணுவப் படைகள், மாசிவ் ஆர்டினன்சு ஏர் பிளாஸ்ட் பாம் (MOAB) என்று அழைக்கப்படும் மிகவும் பயங்கரமான குண்டை ஆப்கானிஸ்தானிலுள்ள நான்காரின் அச்சின் மாவட்டத்தில் போட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானுடைய இறையாண்மையையும், எல்லா சர்வதேச நியதிகளையும் முழுவதுமாக மீறும் வகையில் நடத்தப்பட்ட இந்த குற்றச் செயலை கம்யூனிஸ்டு கெதர் கட்சி கண்டிக்கிறது.

எல்லா குண்டுகளைக் காட்டிலும் பயங்கரமான குண்டாக கருதப்படும் இந்த எம்ஓஏபி, உண்மையிலேயே பேரழிவை உருவாக்கக் கூடிய ஆயுதமாகும். 10,000 கிலோ எடையுள்ள இந்த குண்டு, ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தால் செலுத்தப்படுகிறது. இது வெடிப்பதற்கு முன்னர் உலோகம் மற்றும் கான்கிரீட்டையும் துளைத்து நிலத்திற்குள் செல்லக் கூடியதாகும். எனவே அது வெடிக்கும் போது மிகப் பெரிய பரப்பளவில் உயிர்களையும், கட்டிடங்களையும் மண்ணையும் முழுவதுமாக அழிக்கக் கூடியதாகும். அது வெடித்த பின்னர் எழும் புகை மண்டலமானது, அணு குண்டு வெடித்த பின்னர் எழுவதைப் போன்றதாகும்.

2003 இராக் போருக்கு முன்னர் இந்த எம்ஓஏபி குண்டை, அமெரிக்க இராணுவ சக்திகள் உருவாக்கினர். அப்போது சதாம் உசேனுடைய அரசாங்கத்தை, இந்த குண்டைக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் அச்சுறுத்தி வந்தனர். இப்போது 2017 இல் அவர்கள் அதை ஆப்கானிஸ்தான் மீது சோதனை செய்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 13 அன்று இந்த பயங்கரமான குண்டை, “ஐஎஸ்ஐஎஸ் சக்திகள் பல சுரங்கங்களையும், கட்டிடங்களையும் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தை” இலக்காக வைத்துப் போடப்பட்டிருப்பதாக, அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் கூறுகின்றனர். அமெரிக்க ஆட்சியாளர்களுடைய கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கையில் இது நம்பக் கூடியதாக இல்லை. அவர்கள் தீர்மானிக்கும் எந்த நாட்டின் மீதும் குண்டுகள் போடுவதையும், ஆக்கிரமிப்பு நடத்துவதையும் நியாயப்படுத்துவதற்காக, உளவுச் செய்தி என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பொய்களைப் பரப்பி வந்திருக்கும் நீண்ட வரலாறு அவர்களுக்கு இருக்கிறது. மிகவும் பயங்கரமான, பேரழிவான ஆயுதத்தை சோதிக்கும் களமாக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தும் தங்களுடைய குற்றச் செயலை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் மீண்டும் பொய்களைப் பரப்பி வருகின்றனர்.

உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சியை முன் கொண்டு செல்வதற்காக “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற கருவியானது உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் போதுமான அத்தாட்சிகள் காட்டுகின்றன. ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களை முதலில் அமெரிக்காவும், அதனுடைய உளவு நிறுவனங்களும் உருவாக்கினார்கள். எண்பதுகளில், சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுவதற்காக அவர்களுக்கு நிதியளித்து ஆயுதங்களை வழங்கினார்கள். தன்னுடைய சொந்த சுயநலமான நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, அன்னிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான ஆப்கான் மக்களுடைய நியாயமான போராட்டத்தை அமெரிக்கா திசை திருப்பியது. சோவியத் யூனியன் சிதறுண்ட பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் உலக மேலாதிக்கத்திற்கான தங்களுடைய திட்டத்தை முன் கொண்டு செல்வதற்காக, இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் என்றழைக்கப்படும் இவர்களை மறுபடியும் அணி திரட்டி, பல்வேறு நாடுகளிலும், பகுதிகளிலும் மீண்டும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

அல் கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆகியன நன்கு அறிந்த சில குழுக்களாகும். இராக்கையும், லிபியாவையும் சீரழித்து, அடிமைப்படுத்துவதற்கும், சிரியா, ஏமன், சோமாலியா மற்றும் நைஜீரியா ஆகியவற்றை நிலைகுலையச் செய்யவும் இந்த பயங்கரவாதக் குழுக்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. குறுங்குழுவாத, இனவெறி மோதல்களைத் தூண்டிவிட்டு மேற்காசியாவின் வரைபடத்தை திருத்தி எழுத அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உதவுவதற்காக ஐஎஸ்ஐஎஸ் அமைக்கப்பட்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் போரிட்டு வருவது “பயங்கரவாதத்திற்கு எதிராக” அல்ல. மாறாக, தங்களுடைய இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடி வருகின்ற ஆப்கான் மக்களுக்கு எதிராகவும், மற்ற நாடுகளுடைய மக்களுக்கு எதிராகவும் அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் போர் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா தன்னுடைய பேரழிவு ஆயுதங்களைப் பரிசோதிக்க ஆப்கானிஸ்தானை சோதனைக் களமாகப் பயன்படுத்தி வருகிறது. அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி, தன்னுடைய வழியின் குறுக்கே வருகின்ற எந்த நாட்டையும் அமெரிக்கா அச்சுறுத்தி வருகிறது. “மிகவும் அச்சுறுத்தப்படும் சூழ்நிலைகளில் ஆழமாக புதைத்து வைக்கப்பட்டுள்ள இலக்குகளை கடுமையாகத் தாக்குவதற்கு” எம்ஓஏபி-ஐ அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்ற உண்மையை ஆயுதப்படைகள் எப்போதும் மறைக்கவில்லை. இரான் மற்றும் கொரிய சனநாயக மக்கள் குடியரசின் (வட கொரியா) அணு மற்றும் அரசாங்க இயந்திரம் அவர்களுடைய எதிர்கால இலக்குகளாக இருக்கலாமென அவர்கள் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.

ஆசியா மீது தங்களுடைய மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக மிகவும் ஆபத்தான, அழிவுகரமானப் பாதையில் அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஆப்கானிஸ்தான் மீது எம்ஓஏபி குண்டைப் போட்டிருப்பது மேலும் ஒரு அறிகுறியாகும். அவர்கள் வெளிப்படையாகவே வட கொரியாவை அச்சுறுத்தி வருகின்றனர். போரைத் தூண்டிவிடும் வகையில் கொரியாவை ஒட்டியுள்ள கடற் பகுதியில் தங்களுடைய பசிபிக் கடற்படையை அவர்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தாட் (THAAD) எனப்படும் ஏவுகணைப் பாதுகாப்புக் குடை அமைப்பை தென் கொரியாவில் நிறுவி வைத்திருக்கிறார்கள். சிரியா மீது ஏப்ரல் 10 அன்று ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள்.

சிரியாவின் அரசாங்கம் தன்னுடைய சொந்த மக்கள் மீதே இரசாயினப் போர் நடத்திவருவதாக அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் வெட்ட வெளிச்சமான பொய்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. சிரியாவின் அரசாங்கம் எந்த இரசாயின ஆயுதங்களையும் பயன்படுத்தவில்லையென அமெரிக்க உளவு நிறுவனங்களிலும், இராணுவப் படைகளிலும் உள்ள பலரும் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். வானிலிருந்து தாக்கப்பட்ட போது, சில கிளர்ச்சிக் குழுக்கள் சேமிப்புக் கிடங்களில் குவித்து வைத்திருந்த இரசாயின ஆயுதங்கள் வெடித்திருக்கின்றன.

சிரிய அரசாங்கத்தின் படைகளால் தோற்கடிக்கப்பட்டுவரும் சிரியாவில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு பெற்ற ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பிற பயங்கரவாதக் குழுக்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா கடும் முயற்சி செய்து வருகிறது என்பதை எல்லா உண்மைகளும் காட்டுகின்றன. சிரியாவை அழித்துவிட்டு, தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வேலை செய்யும் குழுக்களின் கீழ் அந்த நாட்டின் பல பகுதிகளைக் கொண்டுவர அமெரிக்கா விரும்புகிறது.

மிகவும் அபாயகரமான ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் போய்க் கொண்டிருக்கும் பாதை, ஆசியாவிலுள்ள எல்லா நாடுகளுக்கும் மக்களுக்கும், உலக அமைதிக்கும் ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனமான போக்கிற்கு எதிராக எல்லா நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையில் பரந்துபட்ட அரசியல் ஒற்றுமையை அமைக்க வேண்டும், அதை அமைக்கவும் முடியும்.

சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைவதற்கு எந்த நியாயமும் இல்லையோ அது போலவே அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஆப்கானிஸ்தானின் பிரச்சனைகளில் தலையிட எவ்வித நியாயமும் இல்லை. ஆப்கானிஸ்தானுடைய தலை விதியைத் தீர்மானிக்கும் உரிமை, ஆப்கான் மக்களைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவும், எல்லா அன்னிய சக்திகளும் உடனடியாக வெளியேற வேண்டுமென இந்திய மக்கள் கோர வேண்டும். குற்றவியலாக குண்டு போட்டதையும், அமெரிக்காவின் ஆபத்தான போர் தயாரிப்புக்களையும் இந்திய அரசாங்கம் கண்டிப்பதோடு, தெற்காசியாவிலும், உலகிலும் உள்ள எல்லா தேசங்கள், மக்கள் மற்றும் நாடுகளுடைய இறையாண்மைக்கு ஆதரவாக பேச வேண்டுமெனவும் நாம் கோர வேண்டும்.