வறட்சியாலும், அரசாங்கத்தின் உழவர் விரோதக் கொள்கைகளின் பாதிப்பாலும், உலகமயமாக்கலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 25, 2017 அன்று திமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பிற கட்சிகளும், தொழிற்சங்கங்களும், பொது மக்கள் அமைப்புக்களும் தமிழ்நாடெங்கிலும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஏஐடியுசி, எல்பிஎப், சிஐடியு, ஏஐசிசிடியு, உழைக்கும் மக்கள் தொழிற் சங்க மையம், எச்எம்எஸ், வங்கி ஊழியர் சங்கங்கள், ஏஐபிஓசி, பிஇஎப்ஐ, தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் மற்றும் பல தொழிற் சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

strike 600வறட்சி நிவாரணமாக தமிழக உழவர்களுக்கு ரூ 40,000 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும், தேசிய வங்கிகளில் உழவர்கள் பெற்றுள்ள எல்லா கடன்களையும் ரத்து செய்ய வேண்டுமென்றும், காவிரி நதி மேலாண்மைக் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டுமென்றும் முக்கிய கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழ் நாடெங்கிலும் பெரும் ஆதரவு இருந்தது. எல்லா பெரு நகரங்களிலும், பேரூர்களிலும் போக்குவரத்தும், வர்த்தகமும், கல்விக் கூடங்களும், மற்ற பணிகளும் முழுவதுமாக முடங்கின. மாநிலத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் தொழிலாளர்களும் மக்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் உழவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தொழிலாளர் ஒற்றுமை இயக்கமும் பங்கேற்றது.

அசோக் லேலண்டு – ஓசூர், சிம்சன்-செம்பியம், ரானே-டிஆர்யூ ஸ்டீரிங் சிஸ்டம்-கூடுவாஞ்சேரி, எல் & டி வால்வ்ஸ் – காஞ்சிபுரம், அசோக் லேலண்டு – எண்ணூர், பிரிகால்-கோவை உட்பட தமிழ்நாடெங்கிலும் தொழிற்சாலைகளின் நுழைவாயிலில் உழவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். உழவர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்பாட்டங்களிலும் கூட்டங்களிலும் மத்திய மாநில அரசாங்கங்களின் உழவர் விரோத போக்கையும், வங்கிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவான போக்கையும், கொள்கைகளையும் கடுமையாக சாடினர். உழவர்களுடைய பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் கோரினர்.