(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

2. திரிபுகளும் உண்மைகளும்

இந்த ஆராய்ச்சியை ஊடகங்கள் எப்படிச் செய்தியாக்கின? "ஆரிய திராவிடப் பிளவு ஒரு மாயை: ஆய்வு முடிவு" – இப்படி 2009 செப்டம்பர் 25ஆம் நாளன்று ஒரு நாளிதழின் தலைப்புச் செய்தி ஆர்ப்பரித்தது. இந்த ஆய்வின் துணை ஆசிரியரும் ஐதராபாத் செல்லியல் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்தின் முன்னாள் இயக்குனருமான லால்ஜி சிங்கின் மேற்கோள் ஒன்று அந்நாளிதழின் கட்டுரையில் இடம் பெற்றிருந்தது: "இந்த ஆய்வுத்தாள் வரலாற்றைத் திருத்தி எழுதுகிறது... வடக்கு-தெற்குப் பிளவு என்பதாக ஒன்றும் இல்லை." இந்த ஆய்வறிக்கையில் இப்படி ஒரு கருத்தும் இடம் பெற்றிருந்தது: "தொடக்கக் குடியேற்றங்கள் அந்தமான் தீவுகளில் 65,000 ஆண்டு முன்பும், தொன்மை தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்திலும் நடைபெற்றன. இதனால் இப்பகுதியில் மக்கள் தொகை பெருகியது. பிற்பாடு 40,000 ஆண்டு முன்பு தொன்மை வட இந்தியர்கள் தோன்றியது ஆங்கு மக்கள் தொகை மேலும் பெருகக் காரணமாயிற்று. ஆனால் ஏதோ ஒரு காலக் கட்டத்தில் தொன்மை வடவர்களும் தொன்மை தென்னவர்களும் ஒன்றுகலந்து வேறு ஒரு மக்களினம் உருவானது. அந்த மக்களினந்தான் இன்றும் உள்ளது. இந்தியாவுக்குள் இருந்த மக்களினத்துக்கு இடையே மரபணு உறவு உள்ளது." ஆனால் உண்மை என்னவென்றால், அந்த ஆய்வு அப்படிப்பட்ட கருத்துகள் எதையும் தெரிவிக்கவே இல்லை – சொல்லப் போனால், 65,000, 40,000 என்ற எண்களே கூட அதில் இடம் பெறவில்லை!

17THaryan migrationஅந்த ஆய்வு சொன்னதற்கும், ஊடக அறிக்கைகள் சொன்னதற்குகும் இந்த அப்பட்டமான முரண் கவனிக்கப்படாமைல் போய் விடவில்லை. டிஸ்கவர் மேகசின் என்ற இதழுக்கு எழுதிய கட்டுரையில் மரபணுவியலர் ரசிப் கான் இந்த ஆய்வு குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டது பற்றி இப்படிச் சொன்னார்: "ஆனால் ஊடகங்களில் வெளிவந்த மேற்கோள்களில் (ரைக் தவிர்த்த) மற்ற ஆசிரியர்கள் இந்த ஆய்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட முடிவுகளுக்கு இட்டுச் செல்வதாகப் படுகிறது. வட இந்திய மூதாதையர் மூல-இந்தோ-ஐரோப்பியர் ஆவர் என்ற கருத்தின் பக்கம் சாய்வதற்குப் பதிலாக, அவர்கள் அதை மறுத்தனர்."

இருக்கட்டும், இப்போது பெருமளவுக்குத் தரவுகள் கிடைக்கத் தொடங்கியுள்ளனவே, இப்போது இது பற்றி கேட்டால் ரைக் என்ன சொல்வார்? சென்ற ஆண்டு (2016) எட்ஜ் என்ற இதழுக்கு ரைக் நேர்காணல் அளித்தார். நேர்காணலில் ஓரிடத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் ஸ்டெப்பி வெளிகளில் தோன்றி ஐரோப்பா, தெற்காசியா இரண்டுக்குமே பரவியது பற்றிப் பேசுகையில் இப்படிக் கூறினார்: "ஸ்டெப்பி கருதுகோளை மரபணுவியல் ஆதரிக்கும் போக்கு தெரிகிறது. ஏனென்றால் நாம் கடந்த ஆண்டில் மிக வலுவான பாங்கு ஒன்றை அடையாளம் கண்டுள்ளோம். அதன்படி, நாம் இன்று ஐரோப்பாவில் காணும் தொன்மையான வட யுரேசிய மூதாதையர் ஐரோப்பாவுக்குள் எப்போது வந்து சேர்ந்தார்கள் என்பது இப்போது நமக்குத் தெரியும். அவர்கள் 4,500 ஆண்டு முன்பு கிழக்கில் அமைந்த ஸ்டெப்பிக்கு வந்து சேர்ந்தார்கள்..." இந்தியா குறித்து அவர் கூறினார்: "காட்டாக, இந்தியாவில் இந்த ஆழமான மக்களினக் கலப்பு நிகழ்ச்சியானது 2,000 ஆண்டுக்கு முன்னைக்கும் 4,000 ஆண்டு முன்னைக்கும் இடைப்பட்டக் காலத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு ரிக் வேதம் இயற்றப்பட்ட காலக் கட்டத்துடன் ஒத்துச் செல்கிறது. மிகப் பழமையான இந்துச் சமய நூலாகவும் உலகின் மிகப் பழமையான இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகவும் திகழ்கிற இந்த ரிக் வேதம் கலப்புச் சமுதாயம் பற்றி வர்ணிக்கிறது." பரந்த நோக்கில் அந்த ஒரே காலக்கட்டத்தைக் கருத்தில் கொள்கையில், ரைக் சாரமாகச் சொல்வது என்னவென்றால், ஐரோப்பா, தெற்காசியா ஆகிய இரண்டுக்கும் பரவிச் சென்ற இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோர் மக்கள்தொகை தாறுமாறாகப் பெருத்ததற்குக் காரணமாயினர்.

2013இல் அமெரிக்க மாந்த மரபணுவியல் (American Journal of Human Genetics) என்னும் இதழில் வெளியான ஆய்வுத் தாள் ஒன்றில் ரைக் ஆழ்ந்த மக்களினக் கலப்பு நிகழ்ச்சி நடைபெற்ற காலம் பற்றிய குறிப்பை வந்தடைந்தார். இந்தத் தாளின் முதன்மை ஆசிரியர் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியின் பிரியா மூர்ஜனி ஆவார். துணை ஆசிரியர்களாக பலரில் ரைக், லால்ஜி சிங் ஆகிய இருவரும் இருந்தனர். இந்த ஆய்வுத்தாளுங்கூட வெளியிலிருநது இந்தியாவுக்குள் நடைபெற்ற இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோரின் புலப்பெயர்வுகளுக்கு எதிரான வாதுரைக்குப் பணியாற்றுவதற்கெனத் தள்ளி விடப்பட்டது. ஆனால் அந்தத் தாளே அப்படி எதுவும் சொல்லவில்லை. இங்கும் அதே கதைதான்!

இந்த ஆய்வுத்தாள் ஓரிடத்தில் சொல்கிறது: "நாங்கள் முன்வைக்கும் காலக் குறிப்புகளுக்கு இந்திய வராலாற்றில் குறிப்பிடத்தகுந்த விளைவுகள் உள்ளன. அதாவது அவை மக்கள்தொகையிலும் பண்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்ட ஒரு காலக்கட்டத்தை ஆவணப்படுத்துகின்றன. அந்தக் காலக்கட்டத்தில்தான் பெரும் வேறுபாடுகள் கொண்ட மக்களினங்களுக்கு இடையிலான கலப்பு தொடக்கத்தில் அதிகமாகவும் இறுதியில் அரிதாகவும் ஆயிற்று. இன்றிலிருந்து சுமார் 1,900 ஆண்டுகள் முன்னைக்கும் 4,200 ஆண்டுகள் முன்னைக்கும் இடைப்பட்ட காலந்தான் இந்தியாவில் ஆழ்ந்த மாற்றம் நடைபெற்ற காலம் ஆகும். அந்தக் காலந்தான் சிந்துசமவெளி நாகரிகத்தின் நகர்மயவிலகல் என்பதாக வர்ணிக்கப்படுகிறது. அந்தக் காலத்தில்தான் கங்கைச் சமவெளியின் மையப் பகுதியிலும் கீழ்நீரோட்டப் பகுதிகளிலும் மக்கள்தொகை அடர்த்தி அதிகரித்தது. இறந்தோரைப் புதைக்கும் வழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. அதுவே இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழிகளும் வேதச் சமயமும் முதன் முதலில் தோன்றிய காலமாக இருக்க வேண்டும்."

அந்த ஆய்வு இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோரின் புலப்பெயர்வுக்கு"மெய்ப்பித்தல்" ஆகவில்லை. ஏனென்றால் அதன் கவனம் மாறுபட்டதாக இருந்தது. அதாவது அது மக்களினக் கலப்பு நடைபெற்ற காலத்தைக் கண்டறிவதில் கவனம் செலுத்தியது. ஆனாலும் அதன் கண்டெடுப்புகள் புலப்பெயர்புக் காலங்கள் குறித்த மரபுசார் விளக்கங்களுடன் நன்கு பொருந்துவதாக ஆசிரியர்கள் கருதுகிறார்கள் என்பது தெளிவு. பார்க்கப் போனால், அந்த ஆய்வுத்தாள் மக்களினக் கலப்பு முடிந்து போவதைப் பழம் உரைகளில் காணப்படும் இனக் கலப்பு நோக்கிய பிறழ்வுப் போக்குகளுடன் ஒப்புமைப்படுத்துகிறது. ஆய்வுத்தாள் சொல்கிறது: "நாம் ஆவணப்படுத்துவதன்படி, பரந்துபட்ட கலப்பினத்திலிருந்து கடுமையான அகமணமுறை நோக்கிய அந்தப் பிறழ்வு பழமையான இந்திய உரைகளிலும் அப்படியே வெளிப்படுகிறது."

பிரியா மூர்ஜனியும் அவரது குழுவினரும் 2013 ஆய்வுத்தாளை எந்தப் பயன்பாட்டுக்காக முன்வைத்தனர் என்பதை எல்லாம் தாண்டி ஒன்று மட்டும் தெளிவாகிறது. அந்தத் தாள் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோரின் வெண்கல ஊழிப் புலப்பெயர்வுக் கருத்துடன் முழுக்க இசைந்து செல்வதாகவும், ஏன், அக்கருத்தையே வலுவாக உணர்த்துவதாகவும் அத்தாளின் ஆசிரியர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். இத்தாளின் ஆசிரியருக்கு எழுதிய மின்ம அஞ்சலில் மூர்ஜனி இதைத்தான் குறிப்பிட்டார். சுமார் 4,000 ஆண்டு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து ஆண்கள் மூலம் வலுவான மரபணுப் பாய்வுகள் நடைபெற்றதாகப் பேராசிரியர் ரிச்சர்ட்ஸ் மற்றும் அவரது குழுவினரின் அண்மைய ஆய்வுத் தாள் வந்தடைந்த முடிவுகள் பற்றிய ஒரு வினாவுக்கு மூர்ஜனி பதிலளிக்கையில், "அவர்களின் முடிவுகள் பரந்தளவில் எங்களின் மாதிரியமைப்புடன் ஒத்துப் போயின" என்றார். அவர் இன்னும் கூறினார், புது ஆய்வினைச் செய்துள்ள ஆசிரியர்களுக்கு 2013இல் ஆய்வுத்தாள் வெளியிட்ட போது எங்களிடம் இல்லாத தொன்மையான மேற்கு ஐரோப்பியப் பதங்கள் (samples) கிடைத்தன. இந்தப் பதங்கள் அவர்களுக்குத் தெற்காசியாவில் வட இந்திய மூதாதையரின் மூலங்கள் பற்றிய கூடுதல் தகவல்அளித்தன.

ஆக, ஒன்றை அடுத்து ஒன்று என, இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோரின் வெண்கல ஊழிப் புலப்பெயர்வுக்கு எதிராக முன்பு முன்வைக்கப்பட்ட மரபணுவியல் வாதுரைகள் ஒவ்வொன்றாகப் பொய்ப்பிக்கப்பட்டு விட்டன. ஒவ்வொன்றையும் மீண்டும் நினைவூட்டிக் கொள்வோம்:

  1. முதல் வாதுரை என்னவென்றால், கடந்த சுமார் 12,500 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் புறத்திருந்து மரபணுப் பாய்வுகள் ஏதும் பெரிதாக நடைபெறவில்லை. ஏனென்றால் இதற்கான அறிகுறி எதையும் மைட்டோகாண்ட்ரிய-டிஎன்ஏ தரவுகள் தெரிவிக்கவில்லை. இந்த வாதுரை தவறெனக் கண்டறியப்பட்டது. ஏனென்றால் கடந்த 4,000 முதல் 5,000 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் புறத்திலிருந்து மரபணுப் பாய்வுகள், குறிப்பாக, இன்றைய இந்திய ஆண் மரபுவழியில் சுமார் 17.5 விழுக்காட்டினரைக் கொண்ட R1a பாய்வுகள் பெருமளவுக்கு நடக்கவே செய்ததை ஒய்-டிஎன்ஏ காட்டியது. மைட்டோகாண்ட்ரிய-டிஎன்ஏ மாறுபட்டு நடந்து கொண்டதற்கு வெண்கல ஊழிப் புலப்பெயர்வுகள் தீவிரப் பாலினச் சார்புடையதாக இருந்ததே காரணம்.
  1. இரண்டாவது வாதுரை என்னவென்றால், R1a மரபுவழிகள் வேறெந்தப் பகுதியைக் காட்டிலும் இந்தியாவில் இன்னுமதிக வேற்றுமையைக் காட்டிய காரணத்தால், அது இந்தியாவில் தோன்றி புறத்தே பரவிச் சென்றிருக்க வேண்டும். இது தவறென மெய்ப்பிக்கட்டு விட்டது. ஏனென்றால் R1a ஒற்றைக்குழு பற்றி உலகளவில் மிகப் பெரிதாக ஆய்வு நடத்தப்பட்டு, வெளியிடப்பட்ட ஆய்வுத்தாள் காட்டியபடி, இந்தியாவில் R1a மரபுவழிகள் அனைத்தும் R1a-Z93 –இன் வெறும் மூன்று துணைக் கிளைகளுக்குள்ளேயே அடங்கி விடுகின்றன; மேலும் அவற்றின் அகவை வெறும் 4,000 முதல் 4,5000 ஆண்டு மட்டுமே.
  1. மூன்றாவது வாதுரை என்னவென்றால், இந்தியாவில் வாழ்ந்த வட இந்திய மூதாதையர், தென்னிந்திய மூதாதையர் ஆகிய இரு தொன்மைக் குழுவினருமே வெளியிலிருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்ததாகக் கருதப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோருக்கு வெகு முன்பாக, அதாவது பல பத்தாயிரம் ஆண்டு முன்பாகக் குடியேறியவர்கள் ஆவர். எடுத்த எடுப்பிலேயே இது தவறான வாதுரையாக இருந்தது. ஏனென்றால் இந்தக் கோட்பாட்டு உருவாக்கத்தை முன்வைத்த அந்த மூல ஆய்வுத்தாளே தந்த எச்சரிக்கையின்படி, வட இந்திய மூதாதையர் எனப்படுவோர் பற்பல புலப்பெயர்வுகளின் கலப்பு ஆவர், இவற்றில் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோரின் புலப்பெயர்வும் அடங்கக் கூடும்.              

(அடுத்த இதழில் நிறைவுறும்)

- நலங்கிள்ளி