Prabhir Burkhayasta 350தலைப்பு: காலனியாதிக்கத்தின் மூன்று மோதல்கள்

ஆசிரியர்: பிரபிர் புர்கயஸ்தா

தொழிற்புரட்சி நடந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அட்லாண்டிக் வர்த்தக முறை முக்கோண வர்த்தகம் என்றே அழைக்கப்பட்டது. ஏனெனில் அந்த வழியில்தான் அமெரிக்காவிலிருந்து துப்பாக்கிகள், பணியாளர் மற்றும் பொருட்களை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினர். ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகள் கப்பல்களில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டனர், மேலும் அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்கள் ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பெரும்பாலும் அடிமைகளை அடிமைக் கப்பல் தளங்களில் திரும்பக்கூட இடம் இல்லாதவாறு படுக்க வைத்து, கரண்டிகளை அடுக்கினாற்போல் அடைத்துக் கொண்டு சென்றனர். சில கப்பல்களில் அடிமைகளுக்கு 5.3 அடி உயரம், 4.4 அடி நீளம் என்ற அளவில் இடம் கிடைத்தது. இடையே அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. கொஞ்சம் காற்றைப் பெறுவதற்காக மேலே அழைத்து செல்லப்பட்டனர். இப்படிக் கொண்டு செல்லப்பட்டவர்களில் பலர் பயணத்தின் போதே இறந்து விட்டனர்.

அமெரிக்காவில் அடிமைகளை விவசாயத்தில் ஈடுபடுத்தியதால், 1791இல் 1.2 மில்லியன் பவுண்டு மதிப்புடையதாக இருந்த பருத்தி உற்பத்தி (அதே எண்ணிக்கையிலான அடிமைகளுடன்) 1859இல் 2.1 பில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது. 1830களில், பிரிட்டிஷ் நெசவுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான 80% பருத்தி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென் பகுதியிலிருந்தே பெறப்பட்டது

உலக மொத்தப் பொருளாக்க மதிப்பின் (GDP’) வரலாறு:

உலகத்தின் மொத்தப் பொருளாக்க மதிப்பின் (GDP) வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்த குரோனிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் ஆங்கஸ் மாடிசன் எழுதிய புத்தகத்தில் இது குறித்த தரவுகளைச் சிறந்த முறையில் வரைபடமாகக் காட்டியுள்ளார். இந்த வரைபடத்தில் இந்தியாவின் மொத்தப் பொருளாக்க மதிப்பு (GDP) செம்மஞ்சள் நிறத்திலும், சீனாவின் மொத்தப் பொருளாக்க மதிப்பு (GDP) இளஞ்சிவப்பு நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன. இதை உற்றுநோக்கினால் கிட்டத்தட்ட பொ.ஊ. (கிபி) 1700 வரை, நிச்சயமாக 1600 வரையிலும் உலகின் மொத்தப் பொருளாக்க மதிப்பில் 50% சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தே பெறப்பட்டுள்ளது. ஆனால் அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் உலகின் மொத்தப் பொருளாக்க மதிப்பில் இந்தியா, சீனாவின் பங்கு படிப்படியாகச் சரிவடைந்துள்ளதைக் காண முடியும். அதே நேரத்தில் மேற்கு ஐரோப்பாவின் பங்கீட்டு மதிப்பு உயர்ந்துள்ளதையும் காண முடியும்.

பொ.ஊ. (கிபி) 1700இலிருந்து 1820 வரை கூட இவ்விரு நாடுகளும் உலகின் மொத்தப் பொருளாக்க மதிப்பில் பெரும்பங்கு வகித்துள்ளன. இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் பெருமளவுப் பொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டன. இந்தியாவிலிருந்து நெசவு செய்த துணிமணிகள், வாசனைப் பொருட்களை வாங்குவதற்காகவே கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் நிறுவப்பட்டது. இந்தியாவிலிருந்து பெருமளவிலான பொருட்களை வர்த்தகம் செய்வதற்கான நிதியைக் கிழக்கிந்திய நிறுவனம் எங்கிருந்து பெற்றது எனப் பார்த்தோமானால், வங்காளம், பீஹார் போன்ற இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வசூலிக்கப்பட்ட நில வாடகையிலிருந்தே வர்த்தகத்திற்கான நிதி பெறப்பட்டது.

GDP census 600சீனாவிலிருந்து வர்த்தகம் செய்வற்கான நிதியை எங்கிருந்து பெறுவது என்பது முதலில் சிக்கலாக இருந்தது, சீனா மிகவும் பரந்ததாகவும், ஐக்கிய முடியரசிலிருந்து (UK) தொலைவிலும் இருந்ததால், அங்கிருந்து வணிகம் செய்வது பிரித்தானியருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. சீனாவிற்குப் பொருட்களை விற்பதன் மூலமே அங்கிருந்து பெருமளவுப் பொருட்களை வாங்குவதற்கான நிதியைத் திரட்ட முடியும். அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? அபின் விற்றார்கள். அபின் பிரிட்டனில் விளையவில்லை என்பதால் அது இந்தியாவிலிருந்தே பெறப்பட்டது. அந்த அபின் வணிகத்தில் யார் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் எனத் திரும்பிப் பார்த்தோமானால் இந்தியப் பெருமுதலாளிகளின் எழுதப்படாத வரலாறு தெரிய வரும்.

மார்வாடிகளும், பார்சிக்களுமே இந்தியாவில் விளைவிக்கப்பட்ட அபினைச் சேகரித்து, அதை சீனாவில் உள்ள பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு அனுப்பினர். மார்வாடி பிர்லா அபின் வணிகத்திலும், பணத்தை வட்டிக்குக் கடன் கொடுப்பதன் மூலமுமே மூலதனம் திரட்டியுள்ளார். பார்ஸி இனத்தைச் சேர்ந்த டாடாவிற்கு ஹாங்காங்கில் அலுவலகங்கள் இருந்தன. அந்நிறுவனங்களுக்கே இந்தியாவிலிருந்து பெறப்பட்ட அபின் அனுப்பப்பட்டது. அங்கிருந்து பிரிட்டிஷ் மேலாண்மைக் கிளைகளுக்கு அனுப்பப்பட்டது. அதிலிருந்து வங்கியும் உருவாக்கப்பட்டது. அபின் வர்த்தகத்திலிருந்து கிடைத்த நிதியிலிருந்தே ஹாங்காங்க் - ஷாங்காய் வங்கி நிறுவப்பட்டது. இந்தியப் பெருமுதலாளிகள் தங்களுக்கான ஆதி மூலதனத் திரட்டலை அபின் வணிகத்திலிருந்தே பெற்றனர்.

அபின் வணிகம் குறித்த இன்னொரு முக்கியச் செய்தி என்னவென்றால், இங்கிலாந்தில் அபின் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் பிரித்தானியர்கள் சீனாவுடன் தடையற்ற அபின் வணிகம் செய்ய மூன்று அபினிப் போர்களில் ஈடுபட்டனர். தடையற்ற வணிகம் என்ற பெயரில் இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட அபினை சீனாவில் விற்பனை செய்வதற்கான உரிமையைக் கோரி யுத்தம் செய்தனர். பிரிட்டிஷாரின் போலித்தனத்தைப் பற்றி நாம் இங்கு விரிவாகப் பரிசீலிக்கப் போவதில்லை. ஆனால் இந்த வர்த்தகம், வணிகத்தின் பின்னே திருட்டுகள், கொள்ளைகளின் வரலாறு உள்ளது.

ஆசியாவில் அது மாறுபட்டு இருந்தது. இங்கு மக்கள்தொகை அதிகமாக இருந்ததால் இவ்வளவு எண்ணிக்கையிலான மக்களைக் கொல்வது அணுகுண்டு போன்ற பேரழிவு ஆயுதங்கள் இல்லாத அந்தக் காலத்தில் எளிதன்று. மேலும் அவர்களுக்கு இங்கே உற்பத்தி செய்த பொருள்களும் இந்த நாடுகளின் சந்தையும் தேவைப்பட்டன, முதலில் இந்தியாவில் நெசவான துணிமணிகளைப் பெருமளவு வாங்கிய அவர்கள், பின்னர் இந்தியாவின் நெசவுத் தொழில்களையே ஒட்டுமொத்தமாக அழித்தனர். இதையே கார்ல் மார்க்ஸும் தன் நூலில் விவரித்துள்ளார். நெசவு இயந்திரங்களின் வருகையால் இந்தியாவில் பெருமளவு நெசவாளர்கள் இறந்தனர்.

இங்கிலாந்திலும் இயந்திரங்களால் வேலையிழப்பு ஏற்படுவதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அடிப்படையில் தான் தெற்காசியாவில் தொழிலகங்கள் அழிக்கப்பட்டன. இந்த நீண்ட கால நிகழ்வால் இந்தியா தொழில்நுட்ப அளவில் ‘பின்தங்கிய நாடாக' மாறியது. ஒரு காலத்தில் இங்கிருந்தே தரமான பொருட்கள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவர்கள் இந்திய வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தினர். இந்தியச் சந்தையில் பெருமளவு விற்று இலாபம் ஈட்டுவதற்காகவே உள்நாட்டுத் தொழிலகங்களை அழித்தனார். மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியின் வரலாற்றுப் பின்னணியில் அதன் காரணியாக தொழில் நுட்ப வளர்ச்சி மட்டுமே இருந்ததாக அவர்கள் வரலாற்றைச் சித்திரித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆசியர்களையும் ஆப்பிரிக்கர்களையும் சோம்பேறிகளாகவும் , ஒழுங்கற்றவர்களாகவும் கடினமாக உழைப்பதில் ஆர்வமில்லாதவர்களாகவும், மேற்கு ஐரோப்பாவைப் போல் அறிவியல் வளர்ச்சிக்கு அவர்கள் எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை என்பது போலவும் பலவாறு சித்திரித்துள்ளனர். இதற்கு மாறாக வேறு உண்மையான வரலாறு உள்ளது. அதில் வில்லன்களான முதலாளித்துவமும், ஏகாதிபத்தியத்துவமும் பூமியை எந்த நிலைக்குத் தள்ளியுள்ளனஎன்பதை விவரிப்பது காலனியாதிக்கத்தின் இரத்த வரலாறு.

இந்த உண்மை வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இதை ஏன் கூறுகிறேன் என்றால் வரலாறு திரிக்கப்படுவதைப் பற்றி அவர்களே அதிகம் பேசுகிறார்கள். தாங்களே உண்மை வரலாற்றை அளிப்பதாக சித்தரிக்கின்றனர். இங்கு நான் மீண்டும் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால் இவை யாவும் வரலாற்றுடன் முடியவில்லை,இன்றும் தொடர்கிறது.உதாரணமாக இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள், மேற்காசியாவில் தீவிரவாதத்தின் மீதான போர், உலகளாவிய தீவிரவாதத்தின் மீதான போர் என்று ஆர்ப்பரிக்கிறது. ஆனால் அதற்குப் பின்னே சிரியாவுக்கு எதிராக அல்கொய்தாவை ஆதரிப்பதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.இதைத் தான் அவர்கள் ரஷ்யாவிலும், ஆஃப்கானிஸ்தானிலும் ஆரம்பித்தார்கள். இவை அனைத்திதிற்கும் பின்னே, இஸ்லாமிய ஒடுக்குமுறையின் தலைமையகமான சௌதி அரேபியா உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் சௌதி அரேபியாவின் பெருங்கூட்டணி உள்ளது.இவ்வாறு வரலாறு திரிக்கப்படுவது வரலாற்றுடனோ, நேற்றுடனோ முடிவு பெறவில்லை. நிகழ்காலத்தில் இன்றும் தொடர்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தியாவைப் பொறுத்த வரை வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாகிய ஃபாஹியான், யுவான் சுவாங், மெகஸ்தனிஸ் வரலாற்றுக் குறிப்புகளைத் தந்துள்ளனர். நம்மிடமோ மதம் மற்றும் புனைவுகளின் கலவையாக ஒரு புனையப்பட்ட வரலாறாகவே இந்திய வரலாறு இருந்தது.

இந்தியாவின் பாரம்பரியத்தைக் கட்டுப்படுத்திய பிராமணர்கள் அறிவே அதிகாரத்தைப் பெறுவதற்கான கருவி என அறிந்திருந்தனர். ஆதலால் அறிவை ஒரு சாதியிடம், ஒரு குழுவிடம் மட்டும் மையப்படுத்தி இருந்திருந்தனர். வானவியல், காலநிலை, கணிதம் ஆகியவற்றை அவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர் மற்றவர்களுக்குக் கல்வியறிவைப் பெறுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

உலகில், ஜாதியமைப்பு காணப்படும் ஒரே நாடான இந்தியா எழுதப்பட்ட வரலாறு இல்லாமல் வாய்வழி அறிவு மரபைக் கொண்டதாகவும் இருப்பது எதேச்சையானது அல்ல. நம்மிடம் பல்வேறு ஆய்வு செய்யப்படாத வரலாற்று இலக்கியங்கள் உள்ளன. பிராகிருதத்திலும், ஜைன இலக்கியத்திலும் ஆய்வு செய்யப்பட வேண்டியவை ஏராளமாக உள்ளன. 

இந்துத்துவத்திற்கு இந்தியாவின் உண்மையான வரலாற்றைப் பற்றியோ, அதைப் பாதுகாக்க வேண்டியதைப் பற்றியோ எந்த அக்கறையும் கிடையாது. பிராகிருதத்திலோ, புத்த, சமண இலக்கியங்களில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. பிராகிருத, புத்த, சமண வரலாற்று இலக்கியங்களிலிருந்து இந்திய மக்களின் உண்மையான வரலாற்றை (அரசர்களைப் பற்றிய புனையப்பட்ட வரலாறு அல்ல) ஆய்ந்தறிவதே நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய பெரும்பணியாக நம் முன் உள்ளது.

மார்க்சியர்களாகிய நமக்கு மாறுபட்ட அறிவுப்புலம் உள்ளது. நாம் வரலாற்றை வேறுவிதமாகப் பார்க்கிறோம். 20-25 ஆண்டுகளுக்குள் வரலாற்றறிவில் பெரும் மாற்றம் பெறப்பட்டுள்ளது. தொல்லியல், மரபியல் எனப் பல்வேறு துறைகளின் எனப் புதியக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வரலாற்றில் பெருமாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.

இந்த வரலாறுகள் யாவும் அறுதியானவை அல்ல. நீங்கள் இளையவர்கள், இவை அனைத்தையும் ஆராய்ந்து அறியும் பணியை மேற்கொள்ள வேண்டும்.எப்படி எனக்குக் கற்பித்தவர்கள் கூறியதை அப்படியே நான் திரும்பக் கூறவில்லையோ அது போல நான் சொல்வதில் தவறிருந்தாலும் நீங்கள் திருத்த வேண்டும். அது உங்கள் வேலை...

(தொடரும்)