ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, இந்தோ னேசியா ஆகிய நாடுகளில் தகவல்தொழில் நுட்ப வேலைகளுக்கான வாய்ப்பு மிகப் பெரும் அளவில் வளர்ந்துள்ளது. இது ஒரு ஆபத்தான வளர்ச்சி. அதே நேரத்தில் வளர்ந்த நாடுகளில் வேலையின்மைச் சிக்கல் கூடிக்கொண்டிருக்கிறது.

இது தொடர்பான ஒரு புள்ளி விவரத்தைப் பார்ப்போம்.

அமெரிக்கா 9.6 %/ இங்கிலாந்து 7.8 %/ஜெர்மனி 7.6%/ ஜப்பான் 5.2%

மேற்கண்ட அட்டவணையின்படி, வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் வேலையின்மை விழுக்காடு கடந்த 3 ஆண்டுகளில் பெருமளவில் உயர்ந்துள்ளன. இதே கால கட்டத்தில் இந்தியா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து முதலிய நாடுகளில் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்பு, வருமான விழுக்காடு மிகவும் உயர்ந்துள்ளன. ஆகஸ்ட் 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வேலையின்மை 4.6 விழுக்காடாக இருந்தது. ஆனால் கடந்த மாதம் (ஆகஸ்ட் 2010 இல்) இது 9.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதற்கு முதன்மைக் காரணம் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி. வீட்டு விலை மதிப்பின் கடுமையான உயர்வு அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணம். இதன் விளைவாக அமெரிக்க நிறுவனங்கள் கீழ்க்காணும் முயற்சிகளை மேற்கொண்டன :

1.சிக்கன நடவடிக்கை

2. ஆட்குறைப்பு

3.வேலையை வெளிநாட்டவர்க்குக் குறைந்த ஊதியத்திற்குக் கொடுத்தல்

இதன் விளைவால் சில ஆசிய நாடுகள் பெருமளவு பயனடைந்தன.

ஒரு தகவல் தொழில்நுட்ப வேலைக்கு அமெரிக்காவில் சராசரியாக 45 முதல் 65 அமெரிக்க டாலர் ஒரு மணிநேரத்திற்கு ஊதியமாக அளிக்கப் படுகின்றது. இதே வேலைக்கு இந்தியாவில் சுமார் 10 அமெரிக்க டாலர் ஒரு மணிநேரத்திற்கு ஊதியமாக அளிக்கப்படுகின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ஓர் ஆண்டிற்கு 10 இலட்சம் ரூபாயாகும்.

அமெரிக்க நிறுவனங்களின் கணக்கின் படி, அமெரிக்காவில் ஒரு நபருக்கு அளிக்கப்படும் ஊதியம், இந்தியாவில் 5 நபருக்கு வழங்கப் படுகின்றது. இந்தியா மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா முதலிய நாடுகளும் மிக அதிக அளவு பயன்அடைந்துள்ளன.

இதன் விளைவே அமெரிக்க நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஆட்குறைப்பை வழக்கப்படுத்தியுள்ளன.

இதற்குப் பதிலாக வளரும் நாடுகளில் ஆட்களைப் புதிதாக நியமனம் செய்கின்றனர். இதுவே அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வேலையின் மையின் விழுக்காடு உயர்விற்குக் காரணம். வளரும் ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வளர்ந்த நாடுகளின் மேற்பார்வையிலே ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார நிலை சீரடைய இன்னும் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாகும். இதே நேரத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வளரும் ஆசிய நாடுகளின் சரிவும் தொடங்கும் என்பது முற்றிலும் கசப்பான உண்மை.

இதன் விளைவாக,

1. வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படும் வேலையின் எண்ணிக்கை குறையும்.

2. வளரும் ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வீட்டு விலை மதிப்பு கடுமையாக உயரும்.

இதில் முதல் காரணி 20 விழுக்காடே பொருளாதார சரிவிற்கு வழி வகுக்கும். ஆனால் இதன் விளைவால் ஏற்படும் வேலையின்மை விழுக்காடு உயர்வால் வீட்டு விலை மதிப்பு குறையத் தொடங்கும். வீட்டு விலை மதிப்பு குறையத் தொடங்குவதே பொருளாதாரச் சீர்குலைவிற்கு முதன்மைக் காரணம்.

வீட்டு விலை மதிப்பும், தங்கம் விலை மதிப்பும் எப்போதும் உயர்ந்து கொண்டேதான் இருக்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் இதில் ஓரளவிற்கே உண்மை உள்ளது.

வீடு மற்றும் தங்கத்தின் விலை மதிப்பு அந்த நாட்டின் பணவீக்க விழுக்காட்டிற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இல்லையேல் வீடு மற்றும் தங்கத்தின் விலை குறையத் தொடங்கும். இதன் விளைவை ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டுவிட்டன.

வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளின் பாதையில் பின்நோக்கிச் செல்கின்றன என்பதுதான் வரலாறாகும்.

- கதிர், கலிஃபோர்னியா

Pin It