முஸ்கான், ரித்திக் ஆகிய குழந்தைகள் கடத்திக் கொல்லப்பட்டது கண்டு கோவை நகரமே பேரதிர்ச்சியிலும் பெரும் துயரத்திலும் மூழ்கியது. தங்கள் குழந்தைகளை மாற்றார் வாகனங்களில் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய நிலையிலிருந்த பெற்றோர் துடித்துப்போனதோடு பெரும் பீதியும் அடைந்தனர்.

எல்லாதரப்பு மக்கள் அடைந்த வேதனையும், துயரமும் கொலையாளிகள் மீதான கடுங்கோபமாக மாறியது. கொலைகாரர்கள் கொல்லப்பட வேண்டும், தூக்கிலிடப்பட வேண்டும் என்று பலர் ஆவேசக்குரல் எழுப்பினர். அண்மையில் கொடுந்துயரங்களை அனுபவித்த ஒரிரு சிறுபான்மையினர் கூட இக்கோரிக்கையை எழுப்புவதில் முன்னணியில் நின்றனர்.

மாநகரக் கமிஷனர் தன் கைகள் சட்டத்தால் கட்டப்பட்டிருப்பதாகப் பேட்டியளித்தார். குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. ஜெயின் சமூகம் தீபாவளி கொண்டாடவில்லை.

குழந்தைகள் கொல்லப்பட்ட 9-வது நாள் போலீஸ் கொலையாளிகளை நீதிமன்ற அனுமதிபெற்று தன் காவலில் எடுத்தது. 10-வது நாள் காலை சம்பவ இடத்திற்கு அவர்களைக் கொண்டு செல்லும்போது மோகன்ராஜ் தப்பியோட முயன்று இரு காவலர்களைச் சுட்டதாகவும், தற்காப்பிற்காக காவலர்கள் சுட்டதில் மோகன்ராஜ் உயிரிழந்தாகவும் கூறப்பட்டது.

ஓட்டுமொத்த கோவை மக்களும், ஜெயின் சமூகம் இந்தச் சம்பவத்தை வரவேற்பதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தன. கடுங்கோபத்திலும் சகிக்க முடியாத வேதனையிலுமிருந்த கோவை மற்றும் ஜெயின் சமூக மக்கள் கொலைகாரர்களுக்கு உடனே தண்டனை கிடைத்து விட்டது என்று நிம்மதியடைந்தனர்.  

ஓரிருவர் செய்யும் தவறால் அந்தக் குறிப்பிட்ட பிரிவு முழுவதையும் சந்தேகத்தோடு பார்க்கும் சமூக குணத்தால் தங்கள் நேர்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திலுள்ள ஓட்டுனர்கள் காவல்துறையின் செயல்களைப் பாராட்டி மூலைக்கு மூலை சுவரொட்டிகள் ஒட்டினர். இதைப்பின்பு எல்லாப் பிரிவு மக்களும் பின் தொடர்ந்தனர்.

இப்படி கோவை நகரம் முழுவதும் தங்களுக்கு ஆதரவான மனநிலையில் இருந்ததாக சித்தரிக்கப்பட்ட நேரத்தில் மனித உரிமை அமைப்புகள் மற்றும் முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்த சில வழக்குரைஞர்கள் இது ஒரு போலி மோதல், தண்டனையளிக்க காவலர்களுக்கு அதிகாரம் இல்லை, முழுமையான பகிரங்கமான விசாரணைக்குப் பின்பே குற்றச்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், இப்படி போலீசார் தன்னிச்சையாகத் தண்டனை அளிக்கத் தொடங்கினால் அது படுமோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் எனக் கூறி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

உடனே தாங்கள் போலீஸின் செயலை ஆதரிப்பதாக சிலர் சுவரொட்டிகள் ஒட்டினர். பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் என்ற பெயரில் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த வழக்குரைஞர்களை இழிவுபடுத்தி துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. அவற்றில் சம்மந்தப்பட்ட மனித உரிமை வழக்குரைஞர்களின் தொலைபேசி எண்களும் தரப்பட்டிருந்தன.

உணர்ச்சிவயப்பட்ட மக்களின் கோபத்திலும், வேதனையிலும் பங்கு கொள்ளும் அதே நேரத்தில் சில கேள்விகளை முன் வைப்பது ஜனநாயகக் கடமை என்று கருதுகிறோம்.

1. ஒரு குற்றம் நிகழும்பட்சத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 90 நாட்கள் கால அவகாசம் சட்டம் அளிக்கிறது. குற்றத்தை விசாரிக்கவும், சரிபார்க்கவும் ஆவணப்படுத்தவும் இத்தனை நாட்கள் தேவை என்று நீண்ட அனுபவத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும். தன் தரப்பு நியாயங்கள் சமர்ப்பிக்க அவருக்கு வாய்ப்பளித்த பின்னர் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.

நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பது மட்டுமல்ல இந்த விதிகளின் நோக்கம். குற்றம் செய்தவர்கள் எவரும் தப்பிவிடக்கூடாது என்பதும்தான் இந்த விதிகள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம்  

எனவே 10 நாட்களில் குற்றவாளிகளைப் பிடித்த போலீஸ் தாங்களே நீதிபதியாகவும் மாறி தண்டனையளித்தது சட்டத்தையும், நீதியையும் மறுக்கும் செயல். ஒரு வெளிப்படையான பொது விசாரணை நடத்தப்பட்டிருந்தால் மக்கள் இன்னும் தங்களுக்கான பாடங்களையும், படிப்பினைகளையும் பெற்றிருக்க முடியும், மிகுந்த உணர்வுப்பூர்வுமாக நடத்தப்பட்ட இந்த விசாரணையும் அதன் முடிவும் அந்த அனுபவங்கள் மக்களுக்குக் கிடைக்காமல் செய்துவிட்டன.

2. கோவை நகரில் இதுதான் முதல் என்கவுண்டர் கொலை. ஆனால் கோவை நகரம் மரியாதைக்கு மட்டுமல்ல உணர்வுப்பூர்வமாக வெடித்துச் சிதறுவதற்கும் பெயர் பெற்றது. இத்தகைய ஒரு நகரில் போலி என்கவுண்டர் என்பது படுமோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

3. எல்லா எதிர்ப்புக் குரல்களையும் நசுக்கி விட வேண்டும் என்கிற போலீஸின் விருப்பம் ஜனநாயக விரோதமானது. மனித உரிமைவாதிகள் குற்றவாளிகளின் செயலை ஆதரிக்கிறார்கள் என்று போலீஸ் செய்துவரும் பிரச்சாரம் கண்டிக்கத்தக்கது.  

மனித உரிமைவாதிகள் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதை என்றுமே எதிர்த்ததில்லை. சட்டப்பூர்வமான விசாரணை நடத்தப்படாமல் அவசரகதியில் போலீஸ் தன்னிச்சையாகத் தண்டனை அளிப்பதைத்தான் தவறு என்கிறார்கள்.

 மேலவளவு கொலை வழக்கு போன்ற பல நூறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கூட போலீஸ் தயங்கியபோது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி குற்றவாளிகளுக்கு மனித உரிமை ஆர்வலர்களும், வழக்குரைஞர்களும் தண்டனை பெற்றுத் தந்துள்ளனர்.

 அவர்களின் உண்மையான நோக்கத்தை இருட்டடிப்புச் செய்துவிட்டு அவர்கள் ஏதோ குற்றவாளிகளுக்கு ஆதரவாளர்கள் போலச் சித்தரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

 வீரப்பன் வேட்டை என்கிற பெயரில் நூற்றுக்கணக்கான ஆதிவாசிகள் போலி மோதல்களில் கொல்லப்பட்டதை அரசே இன்று ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வழி தேடி வருகிறது. அந்தச் சம்பவங்கள் இந்தக் கோவை நகரத்திற்கு 100 கிலோ மீட்டர் சுற்றுப்புறங்களிலேயே நடந்தன.

ஓவ்வொரு மோதல் சாவையும் ஒரு கொலை வழக்காகக் கருதி விசாரணை செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது.

எனவே

1. இந்த மோதல் சாவையும் அதன் பின்னணியையும் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

2. மனித உரிமை ஆர்வலர்கள் மீது நடக்கும் சேறடிக்கும் வேலை நிறுத்தப்பட வேண்டும்.

i). அவசரகதியில் நடத்தப்படும் ஒரு போலி மோதல் கொலை சூப்பர் காப்களை ஏற்படுத்தவே உதவும். குற்றத்தை வேரோடு களைய உதவாது.

ii). என்கவுண்டர் அந்த நேரத்தில் ஒரு நிம்மதியையும் ஆசுவாசத்தையும், போலிப் பாதுகாப்புணர்வையும் அளித்தாலும் அது முழுமையானது அல்ல.

iii). முழுமையான வெளிப்படையான விசாரணையும் தீர்ப்புமே குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் உதவும்.

iv). மோதல் சாவுகள் படுமோசமான உரிமை மீறல்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு சில மீடியாக்களால் கட்டமைக்கப்படும் இப்பிரச்சாரங்களால் நாளை யாருக்கு வேண்டுமானாலும் இந்த கதி நேரிடலாம்.

v). காவல் துறை குற்றவாளி என்று சித்தரிக்கும் ஒருவரை கொலை செய்வது சரியானது என்ற மனநிலை வளரும்போது, காவல்துறை கொலை செய்வதற்காகவே ஒருவரை குற்றவாளி என்று சித்தரிக்க முடியும் என்ற நிலை எதிர்காலத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே மோதல் சாவுகளில் பல முறை இவ்வாறு நிகழ்ந்தும் உள்ளது. பல விமர்சனங்கள் இருந்தபோதும் ஜனநாயகப்பூர்வமான நீதிமன்ற விசாரணை என்பதும்தான் சமூகத்திற்கு பாதுகாப்பானது.

எனவே ஒவ்வொரு மோதல் சாவுகளுக்குப் பின்னால் ஒரு முறையான நியாயமான விசாரணை மேற்கொண்டு சட்ட மீறல் புரிந்தோரை சட்டத்தின் முன் நிறுத்த அரசு முன் வர வேண்டும் என்று வேண்டுகிறோம்.

 எண் பெயர் மற்றும் முகவரி கையொப்பம்

1. ஞானபாரதி வழக்குரைஞர், எழுத்தாளர்

2. பா.பா.மோகன், வழக்குரைஞர், இந்திய கம்னியூஸ்ட் கட்சி

3. பாமரன், எழுத்தாளர்

4. பா.பா.ரமணி, செயலாளர், கலை இலக்கியப் பெருமன்றம்; கோவை

5. ச.பாலமுருகன், எழுத்தாளர், மாநில செயலர் மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு பாண்டிச்சேரி

6. இரா.முருகவேள், எழுத்தாளர், மக்கள் சிவில் உரிமை கழகம்

7. வெங்கடேசன், வழக்குரைஞர்

8. லட்சுமணன், கவிஞர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

9. ரமேஷ், மருத்துவர், ஆய்வாளர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

10 நிக்கோலஸ், மண்டல சட்ட ஆலேசகர், மக்கள் கண்காணிப்பகம்

11 கலையரசன், வழக்குரைஞர், தமிழக மக்கள் உரிமைக் கழகம்

12. ரமேஷ், ஆவணப் பட இயக்குனர்

13. விஜயக்குமார், மொழிபெயர்ப்பாளர் பதிப்பாளர், தமிழோசை பதிப்பாளர்

14. கார்க்கி, வழக்குரைஞர், ஒருங்கிணைப்பாளர், சமத்துவ முன்னணி

15. அபுபக்கர், வழக்கரைஞர், மக்கள் சிவில் உரிமை கழகம்

16. மு.ஆனந்தன், கவிஞர், மாவட்ட செயலாளர், அகில இந்திய வழக்குரைஞர், கோவை

17. கமலக்கண்ணன், பொறுப்பாளர், கோயமுத்தூர் சினிமா கிளப்

18. சவிதா, கோயமுத்தூர் சினிமா கிளப்

19. தனலட்சுமி, கோணங்கள், மக்கள் சிவில் உரிமை கழகம்

20. தீபன், ஹலோ எப்.எம்

21 சிவசாமி தமிழன், இளைஞர் அணி அமைப்பாளர் தமிழர் தேசிய இயக்கம்

22. விடியல் சிவா, பதிப்பாளர், விடியல் பதிப்பகம்

23. ‘கீற்று’ நந்தன், சென்னை

Pin It