வினை... எதிர்வினை.. தொடர்வினை....

 

சங்கரராமன், ஸ்ரீ வைகுண்டம்

சிதம்பரம் கோவில் தெற்குவாசல் விசயத்தில் ஸ்டாலின் ராஜாங்கத்துக்கு பதில் எழுதியது சரிதான். ஆனால் தினமணியில் ஒருவர் பின் வருமாறு எழுதியிருக்கிறாரே அதை இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு, சிதம்பரம் நோட்டீஸ் போட்டு விநியோகித்துக் கொண்டிருக்கிறார்களே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

‘சிதம்பரம் கோவிலுக்கு இரண்டே வாசல்கள்தான். கிழக்கும் மேற்கும் மட்டும்தான். 1934 இல் கோவில் புனருத்தாரணப்பணிகள் நடந்தபோது ராஜாக் கள் தம்பிரான் வேலைகளின் தேவையை முன்னிட்டு தெற்கிலும் வடக்கிலும் சுவரை சற்று இடித்து வழி உண்டாக்கினார்கள். வேலை முடிந் ததும் அந்த வாசலை அடைத்து விட்டார்கள். அவ்வளவுதான். அதற்கும் நந்தனுக்கும் சம்பந்தம் கிடையாது.

நந்தன் வாழ்ந்த காலத்தில் சிதம்பரம் கோவில் சுற்றுச்சுவரே கிடையாது. சுற்றுச்சுவர் அவர் மறைந்த பின் 600 ஆண்டுகளுக்குப் பின் கட்டப்பட்டது. நந்தன் நடராசரை வழிபட்டதும் நந்தி விலகியதும் சிதம்பரத்தில் அல்ல. திருப்புன்கூரில். நந்தன் சிதம்பரத்துக்கு வரவே இல்லை. ஆகவே வாசல் பிரச்னையே இல்லை. அது வெறும் கற்பனை.

ஆசிரியர் குழு:

நந்தன் கொலையை மூடி மறைக்க அவன் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டதாகக் கதை விட்டவர்களாயிற்றே. தெற்குவாசல் என்று ஒன்றும் கிடையாது என்று ஓங்கி அடித்துவிட்டால் பிரச்னை முடிந்துபோச்சு என்று அவுத்து விடுகிறார்கள். 1934 இல் மராமத்துப் பணிகள் நடைபெற்ற தகவலைத் தவிர இதில் மற்றதெல் லாம் கதை. தெற்கே வாசலே இருந்ததில்லை என்றால் அடை பட்ட வாசலுக்கு நேராக நந்தி இருப்பது எதனால்? நடராசர் சந்நிதி தெற்கே பார்த்து இருப்பதும் அதற்கு நேரே நந்தி இருப்பதும் தெற்கு வாசல் இருந்தது என்பதற் கான ஆதாரங்களாகும். தவிர, மராமத்துக்காக இடிக்கப்பட்ட வழி என்றால் வடக்கு வாசல் ஏன் அடைக்கப்படவில்லை என்கிற கேள்வி எழுகிறதல்லவா?

நந்தன் இறைவனை வழிபட சற்றே விலகி யிரும் பிள்ளாய் என்று நந்திக்கு ஆணையிட்ட கதை நடந்த இடம் திருப்புன்கூர்தான் என்பது நமக்கும் தெரியும். அப்படித்தான் செம்மலர் கட்டுரையில் சோழ.நாகராஜன் எழுதியிருக்கிறார். ஓமக் குளத்தில் மூழ்கி அந்தணராக எழுந்தார் என்கிற பொய்யில் ஒரு கொலை மூடி மறைக்கப்பட்டதுபோல அவர் சிதம்பரத்துக்கு வரவே இல்லை என்பதன் மூலம் வாசல் பிரச்னையை முடிக்க நினைக்கிறார்கள்.

சரி.அப்படியே அந்தச் சுவருக்கும் தீண்டாமைக் கும் தொடர்பில்லை என்றால் அச்சுவரை இடிக்க என்ன தயக்கம்? பக்தர்களுக்கு இன்னும் ஒரு வாசல் கிடைக்கு மல்லவா? நாமும் வேற வேலையைப் பார்க்கலாம் அல்லவா?

பாலசுப்பிரமணியன், கொடுமுடி

வரலாற்றை நேர் செய்யப்போகிறோம் என்று பாபர் மசூதியை இடிக்கப்போன பா.ஜ.க. பரிவாரங்களுக்கும் சிதம்பரம் தெற்கு வாசலை இடிக்கப் புறப்பட்டிருக்கும் மார்க்சிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஆசிரியர் குழு:

முக்கியமான – அடிப்படையான வித்தியாசம் உண்டு. அவர்கள் 400 ஆண்டு காலம் மக்கள் வழிபட்டு வந்த மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள். ஆனால் மார்க்சிஸ்ட்டுகள் கோவிலை இடிக்கப் புறப்படவில்லை. இன்னும் அதிகமான மக்கள் வசதி யாகச் சென்று வழிபட கூடுதல் பாதைதான் திறக்கச் சொல்கிறார்கள். அவர்கள் ஆதிக்க உணர்வுடன் இடித்தார்கள். இவர்கள் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப் பட்ட மக்களின் மனக்காயங்களுக்கு மருந்திடுவதற்காகக் கதவைத் திறக்கச்சொல்கிறார்கள். இரண்டையும் துளியளவும் ஒப்பிட முடியாது.

வெங்கட்ராமன், அருப்புக்கோட்டை

தமிழ்ச்செல்வன் கட்டுரையில் சுமங்கலி கேபிள் அழகிரிக்குச் சொந்தம் என்பதாக எழுதியிருக்கிறார். அது சன் டிவிக்கு சொந்தமான தல்லவா?

ஆசிரியர் குழு: சுட்டிக்காட்டியதற்கு நன்றி. ராயல் கேபிள் விஷன்தான் அழகிரிக்குச் சொந்தமானது. சுமங்கலி சன் குழுமத்துக்கு உரியது. இப்போது சன் டைரக்ட் எனப் படும் டி.டி.ஹெச். விற்பனையில் கலைஞர் குழுமமும் இறங்குவதாகத் தெரிகிறது. ஆனால் ஏற்கனவே ஜீடிவிக்காரர்களும் (ஸ்டார் டிவிக்கு உரியது) இத்துறையில் இருந்தபோதும் சன் குழுமத்திடம் போட்டி போட முடியவில்லை. தமிழ்ச்செல்வன் கட்டுரையில் குறிப்பிட்ட பேரன்மார் படத் தயாரிப்புடன் இப்போது மோகன மூவிஸ் என்ற பெயரில் கலைஞரின் இன் னொரு மகன் மு.க. தமிழரசுவும் களத்தில் இறங்கி யிருக்கிறார்.

என் பேரன் நடிக்கக்கூடாதா என் மக்கள் சினிமா எடுக்கக்கூடாதா என்று சமீபத்தில் கலைஞர் குமுறியி ருக்கிறார். இந்தியா ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாடு. எந்த முதலாளியும் என்ன தொழிலும் செய்வதற்கு முழுச் சுதந்திரத்தையும் வழங்குவதுதானே இந்த ஜனநாயகத்துக்கு அடிப்படை. முதலாளிகளான கலைஞர் குடும்பத்தின் மக்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள் யார் வேண்டுமானாலும் தொழில் செய்யலாம். நாம் பேசுவது அவர் அண்ணாவைச் சந்திக்காமல் இருந்திருந்தால் என்ன பேசியிருப்பாரோ அதைத்தான் பேசிக் கவலைப்படுகிறோம்.

தமிழ்ச்செல்வன் கட்டுரையில் சொல்லப்பட்ட விசயங்களோடு கலைஞர் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவதையும் இணைத்துப் பார்த்தால் இன்னும் புதிய வெளிச்சம் கிடைக்கும்.

அதிலே ‘புரம்’

இதிலே ‘புறம்’

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கியுள்ள சமச்சீர்க் கல்வி 6-வது வகுப்பு தமிழ்ப் பாடநூலில் பல இடங்களிலும் வல்லின ‘ற’ வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இடையின ‘ர’ வைச் சேர்த்து ‘நாட்டுப்புரம்’ என்று அதிரடியாகத் திருத்தப்பட்டது தவறு என்பதை தமிழ் அறிஞர்களின் ஆதாரத்துடனும், அகராதியின் ஆதாரத்துடனும் சென்ற மாதம் செம் மலரில் எழுதிய கட்டுரையில் விளக்கியிருந்தேன்.

இக்கட்டுரையின் கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக ஆகஸ்ட் 9-ஆம் தேதியன்று பத்திரிகைகளில் வெளிவந்த தமிழக அரசின் செய்திக் குறிப்பில் ‘நாட்டுப்புறம்’ எனும் சொல் வல்லின ‘ற’ வுடன் ‘நாட்டுப்புறம்’ என்றே உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

எடுத்துக்காட்டாக,

“இராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா” என்கிற தலைப்பில் 9.8.10 தேதிய முரசொலியில் வெளிவந்துள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பில் உள்ள ஒரு வாக்கியம் இங்கே-

“இந்த விழாவின் முதல்நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகளை நகரின் பல பகுதிகளிலும் நடத்துவ தென்றும்”.

 இதில் “நாட்டுப்புற”த்தைக் காணலாம். அது எப்போதும்போல் எழுத்து மாற்றமின்றிச் சரியாக வந்துள்ளது.

மேலும், அந்தச் செய்திக் குறிப்பின் சாரமாக பத்திரிகை கூறும் ஆரம்பபத்தியில்கூட நாட்டுப்புறம் நாட்டுப்புறமாகவே உள்ளது. பாடப்புத்தகத்தில் உள்ள திருத்தப்பட்ட நாட்டுப்புரம் அரசுச் செய்திக் குறிப்பில் இல்லை.

காலங்காலமாக எழுத்திலும் பேச்சிலும் இருந்து வரும் குறிப்பிட்ட ஒரு பெயர்ச்சொல் அரசுக் கட்டுப் பாட்டில் உள்ள பாடநூல் கழகத்தின் பாடநூலில் ஒரு விதமாகவும், அரசு வெளியிடும் செய்திக்குறிப்பில் மற்றொரு விதமாகவும் இருப்பது விந்தைதான்!

இந்த நாட்டுப்புரம் - மாணவர்க்கு

இந்த நாட்டுப்புறம் - மற்றவர்க்கு

என்று இந்த முரணைப் புரிந்து கொள்வதா?

தொடர்புடையவர்கள்தான் இதற்குப் பதில் கூற வேண்டும்.

ஆறாம் வகுப்பு மாணவனுக்கு ஒரு சந்தேகம். தமிழாசிரியரிடம் கேட்கிறான் :

“ஐயா...நாட்டுப்புறத்துக்கு இனி இடையின ‘ர’ போடணும்னா, கிராமப்புறத்துக்கு இடையினமா, வல்லினமா... ?”

ஆசிரியர் பதில் : “நாட்டுப்புரம்னு திருத்தின கல்வி நிபுணர்களைக் கேட்டுச் சொல்கிறேன்...”

- தி.வரதராசன்

இன்னும் சிலநாடுகள்

ஆகஸ்ட் மாத இதழில் தி. வரதராசன் அவர்களின் “ நாட்டுப்புறமா-புரமா?” என்ற கட்டுரை ‘நாடு’ என்ற சொல் குறித்து ஆழமாக விவாதிக்கிறது. “தமிழ்நாட்டில் சில நாடுகள் உண்டு. அவை செட்டிநாடு, மேலாண்மறைநாடு, வருசநாடு, ஒரத்தநாடு... கேரளத்தில் வயநாடு, குட்டநாடு” எனக் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் கொங்குநாட்டுப் பகுதியில் (இதுவும் நாடுதான்!) குலால இன மக்கள் தங் களின் உட்பிரிவுகளை (குலம்) 24 நாடுகளாகவே பிரித்து வைத்துள்ளனர்:

 1. பூந்துறை நாடு, 2. தென்கரை நாடு, 3. காங்காய நாடு, 4. பொங்கலூர் நாடு, 5. ஆரை நாடு, 6. வாரக்க நாடு, 7. திருவாவினன்குடி நாடு, 8. மணநாடு, 9. தலைய நாடு, 10. தட்டைய நாடு, 11. பூலாணி நாடு, 12. அரைய நாடு, 13. ஒடுவங்க நாடு, 14. வடகரை நாடு, 15. கிழங்கு நாடு, 16. நல்லிருந்த நாடு, 17. வாழவந்தி நாடு, 18. அண்ட நாடு, 19. வெங்கல நாடு, 20. காவடிக்கா நாடு, 21. ஆன மலை நாடு, 22. ராசிபுர நாடு, 23. காஞ்சிகோயில் நாடு, 24. குறுப்ப நாடு.

ஒவ்வொரு நாடும் எந்தெந்த ஊர்களை உள்ளடக்கியது என்றும் கூறுகின்றன. ஒரே நாட்டைச் சேர்ந்தவர் களிடையே பெண் கொடுக்கல், வாங்கல் கிடையாது. அவர்கள் பங்காளிகள் என்றே அழைக்கின்றனர். இதில் 3 நாடுகளைச் சேர்ந்தவர்களைப் பட்டகாரர்கள் என்று அழைக்கின்றனர். 24 நாடுகளும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. இது தனியாக ஆராயப்பட வேண்டியது.

- இரா. ஈசுவரன், திருப்பூர்.

Pin It