cuba army1921 ஏப்ரல் 27ஆம் நாள் ஹவானாவில் உள்ள மரியானோவின் பொசிடோஸில் பாஸ்டொரிடா நியுனெஸ் கோன்சலஸ் பிறந்தார். ஐந்து வயதிலேயே தன் தாயை இழந்து விட்டார். 1933 ஆகஸ்டில் நியுனெஸ், தன் பன்னிரண்டாவது வயதில், அதிபர் ஜெரார்டோ மச்சாடோவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தனது தந்தையுடன் பங்கேற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கியூப மக்கள் கட்சியின் (ஆர்த்தடாக்ஸ்) தலைவரான எட்வர்டோ சிபஸை சந்தித்துள்ளார்.

நியுனெஸ் ஆர்த்தடாக்ஸ் கட்சியில்  இணைந்து 1940களில் தீவிரமாக செயல்பட்டார். பின்னர் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்தார். மார்த்தியின் கொள்கைகளில் பற்றுறுதி மிக்கவரான நியுனெஸ், மார்த்தி பெண்கள் முன்னணியை நிறுவினார். ஜூலை 26 இயக்கத்தின் ஆபத்தான தலைமறைவு  வேலைகளை நியுனெஸ் மேற்கொண்டார். ஏப்ரல் 1958ல் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.

வேலைநிறுத்தம் தோல்வியடைந்த போது,​​ ​​லா பிளாட்டாவில் உள்ள கெரில்லாப் போராளிகளின் தலைமையகத்திற்கு அவர் பாதுகாப்புக்காக மாற்றப்பட்டார். அதன் பிறகு சியரா மேஸ்ட்ராவில் கிளர்ச்சிப் படையில் சேர்ந்தார். முகாம் சுத்தம் செய்தல், சீருடைகள் தைத்தல் போன்ற அனைத்துப் பணிகளும் செய்தார். போர்ச் செலவுகளுக்கான வரி திரட்டும் பணியும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவர் இரசீதுகளுடன்  ஆவணப்படுத்தி 4 மில்லியன் கியூப பெசோக்கள் திரட்டினார்.

புரட்சியின் வெற்றிக்குப் பிறகு 1959 பிப்ரவரியில் உருவாக்கப்பட்ட தேசிய சேமிப்பு மற்றும் வீட்டுவசதி அமைப்பின் இயக்குநராக நியுனெஸ் நியமிக்கப்பட்டார். அதன் மூலம் நாடு முழுவதும் குடிமக்களுக்கு வீடுகள்  கட்டித் தரும் பணியில் பெரும்பங்காற்றினார்.

விடுதலைப் போராட்டத்தில் புரட்சியின் வெற்றிக்காக ஆபத்து நிறைந்த அசாதாரணப் பணிகளைத் திறம்பட நிறைவேற்றியதன் காரணமாக, இராணுவத்தில் அவர் முதல் லெப்டினன்ட் பதவி வகித்தார். தன் இளமைக் காலத்தில் கொண்டிருந்த அதே உறுதியுடன் ஓய்வு பெறும் வரை மற்ற முக்கியப் பணிகளைத் தொடர்ந்தார். 2000ஆம் ஆண்டில், அவருக்குத் தேசிய தொழிலாளர் தலைவர் விருது வழங்கப்பட்டது.

2010 டிசம்பர் 26ஆம் நாள், மூளை இரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்டு இறுதிச் சாம்பல் கிழக்கு ஹவானாவில் உள்ள காமிலோ சியென்ஃபுகோஸ் ரெபார்டோ நுழைவாயிலில் உள்ள தேசிய தலைவர் ஹொசே மார்த்தியின் சிலையை சுற்றிலும் தூவப்பட்டது.

அசெலா தெ லாஸ் சந்தோஸ் தமயோ:

1929 செப்டம்பர் 10ஆம் நாளில் பிறந்தார் அசெலா தெ லாஸ் சந்தோஸ் தமயோ. அவர் வில்மா எஸ்பான் மற்றும் ஃபிராங்க் பயஸ் ஆகியோரின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.

சந்தோஸ் தமயோ, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டங்களில் கலந்து கொண்டார், 1952 மார்ச் 10ஆம் நாள் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்று சக போராளிகளுடன் கைது செய்யப்பட்டார். அவர் ஃபிராங்க் பயஸுடன் இணைந்து செயல்பட்டார். ஃபிராங்க் பயஸ் தலைமையில் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்த குழுவில் அவரும் இருந்தார். மன்கடா தாக்குதலில் இருந்து தப்பியவர்களுக்கு அனைத்து சாத்தியமான வழிகளிலும் உதவுவதற்கான புரட்சிக் குழுவுடன் இணைந்து செயல்பட்டார். சந்தோஸ் தமயோ 1954ஆம் ஆண்டு கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

சந்தோஸ் தமயோ 1956 நவம்பர் 30ஆம் நாள் சாண்டியாகோவில் நடந்த எழுச்சியில் பங்கேற்றார். பிறகு சியரா மேஸ்ட்ராவில் கெரில்லாப் போராளிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1958 ஆகஸ்டில் தளபதி ரவுல் காஸ்ட்ரோ தலைமையிலான பிராங்க் பயஸ் இரண்டாம் கிழக்கு முன்னணிப்படையில் சேர்ந்தார். முதல் கிழக்கு முன்னணிப் படைக்குத் தேவையான ஆயுதங்கள், சீருடைகள் மற்றும் மருந்துகளை வழங்கினார். 1958ஆம் ஆண்டில் (ஜனவரி-ஆகஸ்ட்), புரட்சிகரப் பெண்கள் குழுவுடன் சேர்ந்து, மியாமிக்கும் கியூபாவிற்கும் இடையில் தொடர்ச்சியான பயணங்களை மேற்கொண்டு ஆடைகளில் மறைத்து ஆயுதங்கள் கடத்தினார்.

கல்விப் பணி:

இரண்டாம் கிழக்கு முன்னணியில் கல்வித் துறையை இயக்கும் பொறுப்பும் சந்தோஸ் தமயோவுக்கு வழங்கப்பட்டது. பாத்திஸ்டாவின் கொடுங்கோன்மையால் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பதிலும் முதல் தேசிய எழுத்தறிவுப் பிரசாரத்திலும் சந்தோஸ் தமயோ முக்கியப் பங்காற்றியுள்ளார். அவரது தலைமையில் குழந்தைகளுக்காக 400க்கும் மேற்பட்ட பள்ளிகள்  உருவாக்கப்பட்டன பல்வேறு முகாம்களில் உள்ள போராளிகளின் எழுத்தறிவுக்காகவும் குழுக்கள் உருவாக்கப்பட்டன. புரட்சி வெற்றி பெறும் வரை அவர் கிழக்கு மாகாணக் கல்விக் கண்காணிப்பாளராகச் செயல்பட்டார்.

புரட்சியின் வெற்றிக்குப் பிறகு அவர் முக்கியமான நிர்வாக பொறுப்புகளில் ஈடுபட்டார். கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனராகவும், மத்தியக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். 1960ஆம் ஆண்டில் கியூப மகளிர் கூட்டமைப்பையும் அதன் தேசியச் செயலகத்தையும் உருவாக்குவதில் வில்மாவுடன் இணைந்து பணியாற்றினார்,  அதன் அமைப்பாளராகவும் பின்னர் 1966ஆம் ஆண்டு வரை பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். அதன் பிறகு புரட்சிகர ஆயுதப்படைகளின் அமைச்சகத்தின் காமிலோ சீன்ஃபுகோஸ் இராணுவப் பள்ளியின் தலைவராகவும், கல்வி இயக்குநரகத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். சந்தோஸ் தமயோ தளபதியாகப் பதவி உயர்வும் பெற்றார்.

1970ஆம் ஆண்டில் சந்தோஸ் தமயோ கல்வி அமைச்சகத்தின் அமைச்சராகவும், ஆசிரியர் பயிற்சித் துறையின் பொது இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். அவர் புரட்சிகர இராணுவப் படையின் வரலாற்று அலுவலகத்தின் ஆய்வாளராகவும் பணியாற்றினார். கியூபப் புரட்சிப் போராளிகள் அமைப்பின் தேசியத் தலைமையகத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டார்.

கியூபாவின் புரட்சிகரக் கல்வியமைப்பின் நிறுவனராக முக்கியப் பங்காற்றியுள்ளார். 2018 ஜனவரி 15ஆம் நாள் கியூபாவின் கல்வியாளர் கூட்டமைப்பு சந்தோஸ் தமயோவுக்கு தேசியக் கல்வியியல் விருது அளித்து சிறப்பித்தது. கியூபாவின் நாயகியாக போற்றப்படும் அவர் அனா பெடன் கோர்ட் விருது, மரியானா கிராஜலஸ் விருது உட்பட பல்வேறு விருதுகளால்  சிறப்பிக்கப்பட்டார்.

கியூபாவின் சிறந்த கல்வியாளராகவும் புரட்சியாளராகவும், செயல்பட்ட அவர் 2020 ஜனவரி 23ஆம் நாள் தனது 90ஆம் வயதில் ஹவானாவில் காலமானார். அவரது விருப்பத்திற்கு இணங்க, அவரது உடல் தகனம் செய்யப்பட்டு சாண்டியாகோவில் உள்ள ஃபிராங்க் பயஸ் இரண்டாம் முன்னணிக்கான கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

கியூபப் புரட்சிக்காக அயராது பாடுபட்டுத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த வீராங்கனைகளான நியுனெஸ் கோன்சலஸையும், சந்தோஸ் தமயோவையும் என்றென்றும் போற்றிடுவோம்.

(தொடரும்)

- சமந்தா