surajit mazumdarநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (13)

ஆசிரியர்: சுராஜித் மஸூம்தார்

[சுராஜித் மஸூம்தார் அவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அரசியல் பொருளாதாரம், இந்தியத் தொழில்மயமாக்கம், இந்திய கார்ப்பரேட் துறை, உலகமயமாக்கம் ஆகியவை இவரது ஆய்வுப் புலங்கள் ஆகும்.]

தலைப்பு: மூலதனம் குறித்த மார்க்சிய பகுப்பாய்வு

முதலாளித்துவத்திற்கு முன்பிலிருந்தே மூலதனம் இருந்து வருகிறது. வரலாற்று அடிப்படையில் வணிக மூலதனமும், வட்டி மூலதனமும் தொழில்துறை மூலதனத்துக்கு முந்தையவை. மூலதனம் என்பது சமூக உறவாகவும் தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் மதிப்பாகவும் உள்ளது.

வர்த்தக மூலதனச் செயல்பாட்டின் சுற்றை  ப-ச-பI என்று குறிப்பிடலாம். ஒரே சரக்கை அதன் மதிப்பை விடக் குறைவாக விற்பதிலிருந்து தொடங்கும் இச்சுற்று அதன் மதிப்பைவிட அதிகமாக விற்பதில் முடிவடைகிறது.

எளிய சரக்குற்பத்தி என்பது முதலாளித்துவச் சரக்குற்பத்தியிலிருந்து வேறுபடுகிறது. எளிய சரக்குற்பத்தியானது நுகர்வையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலாளித்துவச் சரக்குற்பத்தியானது மதிப்பைப் பெருக்கி இலாபம் பெறுவதற்காகவே செய்யப்படுகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழில்துறை மூலதனம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தனிச் சொத்துடைமை, மூலதனம், சரக்குற்பத்தி இவை அனைத்துமே முதலாளித்துவத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. சொத்துடையோர் ஒரு புறமாகவும், உடைமையற்றோர் / உடைமை பறிக்கப்பட்டோர் மறு புறமாகவும் சமூகம் பிரிக்கப்பட்டு சொத்துடைமையின் மீது வர்க்க முற்றுரிமை உருவாக்கப்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்திக்கு முதலாளியின் மூலதனம் தேவைப்படுகிறது. உழைப்புச் சக்தி சரக்காக்கப்படுகிறது. முதலாளித்துவச் சரக்குற்பத்திச் செயல்முறையானது வர்க்கங்களைத் தெளிவாகப் பிரிவினையடையச் செய்கிறது. முதலாளி மூலதனத்தின் முகவராகிறார். முதலாளி என்ன செய்ய வேண்டும் என்பதை மூலதனமே முடிவு செய்கிறது.

முதலாளித்துவ மூலதனத்தின் சுற்றை ப-பI எனக் கொள்வோமானால் ப- அளவுள்ள பணம் இச்சுற்றின் மூலம் பI அளவிற்கு அதிகரிக்கிறது. இதை விரிவாக ப-ச-சI-பI எனக் குறிப்பிடலாம். உற்பத்தியின் இயங்குமுறையின் விளைவாக மதிப்பு பெருக்கம் அடைகிறது.

சரக்குகளின் வர்த்தகம் சுற்றோட்டத் துறையைச் சார்ந்தது. ஆகவே உபரிமதிப்பானது வர்த்தகத்தின் மூலம் சுற்றோட்டத்திலிருந்து பெறப்படுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஒரு வணிக முதலாளி 120 ரூபாய் மதிப்புடைய பொருளை 115 ரூபாய்க்கு வாங்கி 120 ரூபாய்க்கு விற்றால் அவருக்கு 5 ரூபாய் இலாபம். ஆனால் சரக்குகள் அதன் உற்பத்தி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டால் வணிக மூலதனத்தால் உபரிமதிப்பைப் பெற முடியாது. வணிகருடைய செயல்பாடு எந்த உபரிமதிப்பையும் உருவாக்குவதில்லை.

உபரிமதிப்பானது உண்மையில் உற்பத்திச் செயல்முறையின் போதுதான் பெறப்படுகிறது. சுற்றோட்டத்தின் போது உபரிமதிப்பு உருவாக்கப்படுவதில்லை, உபரிமதிப்பு ஈடேற்றம் மட்டுமே பெறுகிறது. அதாவது சரக்கு வடிவில் இருந்த மதிப்பானது பண வடிவத்தில் ஈடேற்றம் பெறுகிறது.

தொழில்துறை மூலதனம் மட்டுமே புதிய மதிப்பை உருவாக்கும் உற்பத்திச் செயல்முறையில் நேரடியாக ஈடுபடுகிறது. வணிக மூலதனம் என்பது சரக்குகளின் சுற்றோட்டத்தில் பயன்படுத்தப்படும் மூலதனம். உற்பத்திச் செயல்பாட்டில் வணிக மூலதனம் எந்த நேரடியான பங்கையும் வகிக்காது. வர்த்தகத் துறையில் உபரிமதிப்பு எதுவும் உருவாக்கப்படுவதில்லை.

அப்படியானால், வணிகரின் இலாபம் எங்கிருந்து வருகிறது? தொழில்துறை முதலாளியே தனது சரக்குகளை ஈடேற்றம் பெறச் செய்ய வேண்டுமானால், அவர் தனது மூலதனத்தின் ஒரு பகுதியை வர்த்தகச் செயல்பாடுகளுக்குச் செலவிட வேண்டியிருக்கும். இதைச் செய்ய அவர் மூலதனத்தின் அளவை மேலும் அதிகரிக்க வேண்டும், அல்லது அதே அளவு மூலதனத்துடன் செயல்பட உற்பத்தியின் அளவைக் குறைக்க வேண்டும்.

இரண்டுமே அவரது இலாபத்தைக் குறைக்கும், நேரமும் விரயமாகும். அதற்கு பதில் தொழில்துறை முதலாளி, வர்த்தகத்தை மட்டுமே பிரத்யேகத் தொழிலாகக் கொண்ட வணிக முதலாளியிடம் சரக்குகளை விற்றுப் பணமாக ஈடேற்றம் செய்யும் பணியை ஒப்படைக்கிறார்.

இலாபம் என்பதே வர்த்தகத்தில் சரக்குகளின் விலையைக் கூட்டி அதிக விலைக்கு விற்பதன் மூலம் பெறப்படுவது போன்ற ஒரு தவறான தோற்றம் உருவாகிறது. இதற்கு நேர்மாறாக முதலாளி சரக்குகளை உற்பத்தி விலையை விட குறைந்த விலையில் விற்பதன் மூலம் தனது இலாபத்தின் ஒரு பகுதியை வணிகருக்கு அளிக்கிறார். வணிக மூலதனம் தொழில்துறை மூலதனத்தின் சுற்றோட்டத்திற்கு உதவுகிறது. முதலாளிகள் பெற்ற ஊதியமற்ற உபரிமதிப்பின் ஒரு பகுதி வணிக இலாபமாகிறது.

இவ்வாறு உற்பத்தியும், விற்பனையும் (சுற்றோட்டமும்) தனித் துறைகளாகப் பிரிகின்றன. சரக்குகளின் சுற்றோட்டச் செயல்பாட்டில் வணிக மூலதனம் அதன் தனித்திறனால் சுற்றோட்டத்திற்கு ஆகும் நேரத்தையும் செலவையும் குறைக்க உதவுகிறது. வணிக மூலதனம், பல தொழில்துறை முதலாளிகளின் சரக்குகளை ஈடேற்றம் செய்வதற்கு உதவுவதால், இதன் மூலம் உற்பத்தியில் இருந்து சுற்றோட்டத்திற்குத் திருப்பப்படும் சமூக மூலதனத்தின் ஒரு பகுதியைக் குறைக்க உதவுகிறது.

தொழில்துறை முதலாளியின் மூலதனம் புரள்வதற்கு ஆகும் நேரமும் குறைவதால் அவரது இலாபத்தை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. இதுவே தொழில்துறை முதலாளி பெற்ற உபரி மதிப்பின் ஒரு பகுதியானது வணிகருக்கு செல்ல காரணமாகிறது. இது வணிக முதலாளியின் இலாபத்தை உருவாக்குகிறது. வணிகர்களின் இலாபம் என்பது உபரி மதிப்பின் ஒரு பகுதியே ஆகும்.

இவ்வாறு முதலாளித்துவ உற்பத்திமுறையில் வணிக மூலதனம் தனிப்பகுதியாகிறது. உபரிமதிப்பின் உற்பத்தியும், அது ஈடேற்றம் அடைவதும் தனித்தனித் துறைகளாகத் தெளிவாகப் பிரிகிறது. தொழில்துறை முதலாளி மதிப்பை விடக் குறைந்த விலைக்கு விற்கிறார். வணிக முதலாளி சரக்குகளை அவற்றின் மதிப்பை விடக் குறைந்த விலைக்கு வாங்குகிறார். வணிக மூலதனத்தின் மூலம் உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் இடைத்தரகராக வணிகர் செயல்படுவதால் உழைப்புச் சுரண்டல் மறைக்கப்படுகிறது.

அடுத்த மட்டத்தில் தொழில்துறை முதலாளி வர்க்கம், மூலதனத்தை மேலாண்மை செய்யும் வேலையைக் கைவிட்டு அதைப் பிறரிடம் ஒப்படைக்கிறது. முதலாளித்துவத்தில் உழைப்பாளர் சரக்காக்கப்படுவதுடன் மூலதனமும் சரக்காக்கப்படுகிறது. மூலதனம் கடன் வாங்கிப் பெறப்பட்டால் அதில் ஒரு பகுதியானது வட்டியாகச் செலுத்தப்படுகிறது. இவ்வாறு மூலதனம் என்பதும் சரக்காகிறது. அதிலிருந்து வட்டி மூலதனம் உருவாகிறது.

மூலதனத்தை சொந்தமாகக் கொண்டுள்ள முதலாளி, தொழில்துறை முதலாளியிடமிருந்து வேறுபடுகிறார். ஒரு தொழில்துறை முதலாளியால் பலரிடமிருந்தும் மூலதனத்தைத் திரட்ட முடியும். 1,000 பேரிடமிருந்து 10 ரூபாய் கடனாகப் பெறப்படும் போது 10,000 ரூ திரட்டப்படுகிறது. தனித்து இருக்கும் போது மூலதனமாகச் செயல்பட முடியாத அளவிற்கு சிறு அளவாக இருக்கும் பணம், ஒன்றாகச் சேரும் போது மூலதனமாகச் செயல்பட முடிகிறது. இது மூலதனம் மையப்படுத்தப்படுவதற்கு உதவுகிறது.

தொழில்துறை முதலாளி மூலதனத்தை மையப்படுத்துகிறார். வங்கிகளின் மூலம் மூலதனம் மையப்படுத்தப்படுகிறது. தொழில்துறை முதலாளியின் வருவாயில் ஒரு பகுதியை வட்டி மூலதனம் உரிமை கோருகிறது. ஒரு துண்டு காகிதத்தைக் கூட சரக்காக்க முடிகிறது. உபரிமதிப்புக்கு நேரடியாகத் தொடர்பில்லாத உரிமை கோரல்களும் சரக்காக்கப்படுகின்றன. பணத்தின் மூலம் மேலும் அதிகப் பணம் ஈட்டப்படுகிறது. உபரிமதிப்பு எங்கிருந்து வருகிறது என்பது ஒரு கட்டத்தில் புதிராகிப் போகிறது.

தொழில்துறை முதலாளிக்கு  மூலதனத்துடனான நேரடித் தொடர்பு விலக்கப்படுகிறது. அதனால் அவர் தனது மூலதனத்தை அபாயத்திற்கு உட்படுத்துவதில்லை. நமது மூலதனத்தை அபாயத்திற்கு உட்படுத்துகிறார். மூலதனத்திற்குச் சொந்தமாக இருப்பவர் இப்பொழுது ஒரு முதலாளி அல்ல. சமூக சொத்து முதலாளித்துவக் கூட்டுடைமையாக உள்ளது. இவ்வாறு தனியுடைமை கூட்டுடைமையாகிறது. அதைச் சமூகமயமாக்க வேண்டியதே எஞ்சியுள்ளது.

சமூக மூலதனத்தின் சராசரி இலாபமானது முதலாளிகளுக்கு இடையேயான போட்டி வாயிலாக நிர்ணயிக்கப்படுகிறது. தொழில்துறை முதலாளிகள் தொழில்துறையில் உருவாக்கப்பட்ட இலாபம் முழுவதையும் பெறுவதில்லை. அவர்கள் முதலீடு செய்த மூலதன அளவுக்குப் பொருத்தமான விகிதத்தில் சராசரி இலாபம் பெறுகின்றனர்.

போட்டியின் மூலம் சராசரிப் பொது இலாப வீதம் நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தின் மொத்த உபரிமதிப்பில் / இலாபத்தில் ஒரு பகுதி வணிக மூலதனத்தின் இலாபமாக வணிகர்களிடமும், மற்றொரு பகுதி வட்டி பெறும் மூலதனத்தின் இலாபமாக நிதிமுதலாளிகளிடமும் சேருகிறது. அதன் இன்னொரு பகுதி நில வாடகையாகி நில முதலாளியைச் சேருகிறது. இவ்வாறு உபரிமதிப்பானது தொழிலக முதலாளி, வணிக முதலாளி, வட்டி பெறும் நிதி முதலாளி, நில முதலாளி ஆகிய நான்கு வகையான முதலாளிகளுக்கும் பிரித்தளிக்கப்படுகிறது.

முதலாளித்துவத்தில் வெளித்தோற்றத்தில் பார்த்தால் உழைப்பாளிக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவது போல் தெரிகிறது. உபரிமதிப்பு மூலதனத்திலிருந்துதான் உருவாவது போன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது. வணிக மூலதனமும், வட்டி மூலதனமும் இந்த மாயத் தோற்றத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

வட்டி மூலதனம் உபரிமதிப்பு உருவாக்கத்தை மாய்மாலமாக்குகிறது. மூலதனப் பெருக்கத்தின் உண்மையான தோற்றுவாய், தொழில்துறை முதலாளிகளின் இலாப வடிவத்தில் மறைக்கப்பட்டுள்ளதைக் காட்டிலும் வணிகர்களின் இலாப வடிவத்திலும், நிதி முதலாளி பெறும் வட்டி வடிவத்திலும் மேலும் அதிகமாக மர்மமாக்கப்பட்டுள்ளது.

(தொடரும்)

- சமந்தா