nature protectionஉலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 ஏற்கெனவே சரிவில் இருந்த பொருளாதார நடவடிக்கைகளைப் பெருமளவில் முடக்கியுள்ளது. நிறுவனங்கள் இப்போது பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதித்துள்ளதால் இது போக்குவரத்தினால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்தியதுடன் மட்டுமல்லாமல், தகவல் தொடர்புகளிலும், தொழில்நுட்பத்திலும் புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. கோவிட்-19 பொதுப் போக்குவரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும் போக்கையும், தனிநபர்களின் போக்குவரத்துக்கான வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கவும் காரணமாகியுள்ளது.

இந்த நெருக்கடியில் அமெரிக்காவில் டிரம்பின் நிர்வாகம் கார் தொழிற்சாலைகளில் எரிபொருள்-சிக்கனத்திற்காகச் செயல்படுத்த வேண்டிய ஒழுங்குமுறைகளைத் திரும்பப் பெற்றுள்ளது, அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் சுற்றுச்சூழல் சட்டங்களை நடைமுறைப் படுத்துவதை நிறுத்தியுள்ளது.

கொரோனாவால் வனவிலங்குகளுக்கான வெளி பூமியில் மீட்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலர் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர். இதில் சில உண்மைகளும், பல பொய்யான தகவல்களும் பரவியிருந்த போதிலும், அவற்றின் பின்னே பசுமையுடனும், பல்லுயிர்களுடனும் பூமியின் இயற்கைச் சூழல், மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற மனித விருப்பமும் ஆர்வமும் மறைந்திருப்பதை மறுக்க முடியாது. ஆனால் இதே நேரத்தில் காடுகள் அழிக்கப்படுவதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதும் அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி, நிறுவனங்கள் பசும் ஆற்றல் தொழில் நுட்பங்களில் முதலீடு செய்வதைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தக் கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.

கோவிட்-19 சுற்றுச்சூழலில் நேர்நிறை, எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இவை தற்காலிகமானவையே என்றாலும், இதைக் கற்பதன் மூலம் வருங்காலத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான படிப்பினைகளை இதன் மூலம் நாம் பெற முடியும்.

தெளிந்த நீர் நிலைகள்:

சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் சாக்கடையாக்கப்பட்ட நீர் நிலைகள் பல ஆண்டுகளுக்குப் பின் சுவாசிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளன. நீர்வழிப் போக்குவரத்துகளும் குறைந்ததால் நீர் நிலைகளும் மாசு குறைந்து தெளிவடைந்துள்ளன சென்னையில் அடையார், கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள் முன்பை விட மாசு குறைந்துள்ளது. ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) நீர் கண்காணிப்புத் தரவுகளின் மூலம், கங்கை ஆற்றின் குறுக்கே உள்ள 36 நீர் கண்காணிப்பு பகுதிகளில் 27 இடங்களில் குளிப்பதற்கும், தாவரங்கள் வளர்வதற்கும் போதுமான அளவிற்கு தூய்மையடைந்திருப்பது தெரியவந்துள்ளது. 60 நாட்களில், யமுனை நதி சுமார் 33 சதவீதம் தூய்மையடைந்துள்ளது. ஆனால் இந்த நெருக்கடியிலும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளை கலக்கும் முறைகேடான நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளன.

தெளிந்த காற்று:

மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய கோவிட்-19தான் மூச்சுத் திணறிய காற்றை சுவாசிக்க வைத்துள்ளது. ஊரடங்கின் காரணமாக உலகளாவிய விமான போக்குவரத்து 60% குறைந்துள்ளது,தொழிற்சாலைகள் இயங்குவதும், சாலைப் போக்குவரத்தும் குறைந்துள்ளதன் காரணமாக வளிமண்டலத்தில் கரியமில வாயு (CO2), கார்பன் மோனாக்சைடு (CO), நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx) ,ஓசோன் (O3) உருவாக்கம் மற்றும் மாசுத் துகள்கள் (PM) ஆகியவற்றின் வெளியீடு குறைந்து காற்றின் தரம் மேம்பட்டது. குறிப்பாக உலகின் முக்கிய நகரங்களில் காற்றின் தர அளவு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வியத்தகு முறையில் மேம்பட்டுள்ளது. போக்குவரத்து மீட்கப்படும் போது இந்த வாயுக்களின் அளவு மீண்டும் அதிகரிக்க உள்ளதால் இது ஒரு தற்காலிகமான விளைவே ஆகும்.

2020இன் முதல் மூன்று மாதங்களில்,சென்ற ஆண்டை விட ஐரோப்பாவில் மட்டும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 67 மில்லியன் குறைந்ததாக சர்வதேச விமான நிலைய மன்றம் தெரிவித்துள்ளது. சீனப் புத்தாண்டுக்குப் பிறகு நான்கு வார காலப்பகுதியில் மட்டும் சீனாவின் கரியமில வாயு வெளியீடு சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது. கிழக்கு சீனாவில் நைட்ரஜன் ஆக்சைடுகளின் (NOx = NO + NO2) வெளியேற்றம் ஜனவரி 23 முதல் (வுஹான் ஊரடங்கு) பிப்ரவரி 9 வரை 50% குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிப்ரவரி 10லிருந்து பணியாளர்கள் வேலைக்குத் திரும்பியதால் பிப்ரவரி 10 முதல் மார்ச் 12 வரை நைட்ரஜன் ஆக்சைடுகளின் வெளியேற்றம் 26% அதிகரித்தது. வட இத்தாலியில் மார்ச் 17க்கு முன் நான்கு முதல் ஐந்து வாரங்களில் மாசுபடுத்தும் நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு வாரத்திற்கு 10 சதவீதம் குறைந்துள்ளது. ஸ்பெயினில் மார்ச் 17 அன்று பதிவான நைட்ரஜன் டை ஆக்சைடின் சராசரி அளவு முந்தைய வாரத்தை விட கிட்டத்தட்ட 75 சதவீதம் குறைவாக இருந்தது. நியூயார்க் நகரில், கார்பன் மோனாக்சைடின் அளவு, மார்ச் மாதம் சென்ற ஆண்டைவிட கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளது.

ஆனால் இந்தச் சரிவுகள் தற்காலிகமானவையே. தொற்றுநோயின் தாக்குதல் தணிந்தவுடன் போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீட்கப்படும் போது பசுங்குடில் வாயுக்களின் அளவு மீண்டும் அதிகரிக்கவே செய்யும். 2008ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியால் கரியமில வாயுவின் வெளியேற்றம் 1 சதவிகிதம் குறைந்தது, ஆனால் பொருளாதார நடவடிக்கைகள் மீட்கப்பட்டவுடன் அதற்கு முன்னர் காணப்பட்டதைக் காட்டிலும் இன்னும் அதிகமாகவே உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி குறித்த தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில் கோவிட்-19 காரணமாக இந்த ஆண்டு உலகளாவிய கரியமில வாயுவின் வெளியேற்றம் 0.2 முதல் 1.2% வரை குறையக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

புவி வெப்பமாதல்

புவியிலிருந்து வெளியேறும் அகச்சிவப்புக் கதிர்களைப் பசுங்குடில் வாயுக்கள் உறிஞ்சி வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன. இதனால் வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி கூடக் கூட புவியின் வெப்பமும் அதிகரிக்கிறது. தொழில்மயமாக்கலின் தொடக்கத்திலிருந்தே தொழிற்சாலை நடவடிக்கைகளாலும், அதிகரித்து வரும் போக்குவரத்தாலும் வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்து வருவதால் புவியின் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது, இதனால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டங்கள் உயர்கின்றன.

பசுங்குடில் வாயுக்கள்:

அகச்சிவப்புக் கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்ட வாயுக்கள் பசுங்குடில் வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன. கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்சைடு, குளோரோ ஃப்ளோரோ கார்பன்கள், பெர்ஃப்ளோரோ கார்பன்கள், சல்ஃபர் ஹெக்சா ஃப்லூரைடு, நைட்ரஜன் ட்ரை ஃப்ளூரைடு ஆகியவை ஆறு முக்கியமான பசுங்குடில் வாயுக்களாகும்.)

உச்சத்தில் கரியமில வாயு:

கோவிட்-19 நெருக்கடியின் விளைவாக இந்த ஆண்டு உலகளாவிய பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் வெறும் 8 சதவீதம் மட்டுமே குறையும் என சர்வதேச ஆற்றல் மையம் தெரிவித்துள்ளது. 1958ஆம் ஆண்டிலிருந்து ஹவாயில் உள்ள மௌனா லோவா ஆய்வகத்தில் கரியமில வாயுவின் அளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வோராண்டும் கரியமில வாயுவின் செறிவு உயர்ந்து கொண்டே வருகிறது.

1958 மே மாதத்தில் வளிமண்டலத்தில் கரியமில வாயு ஒரு பில்லியனில் 318 பாகமாக இருந்தது. இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு பில்லியனில் 416.21 பாகமாக இருந்த கரியமில வாயு மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு பில்லியனில் 418.12 பாகமாக உயர்ந்துள்ளது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் கரியமில வாயுவின் அளவு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது, ஆனால் அதிகரிப்பதன் வேகம் குறைந்துள்ளது. மனித நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தேங்கியுள்ள கழிவுகளை உடனடியாக சில மாதங்களில் குறைக்க முடியாது என்பதையே இது குறிக்கிறது. உடனடியாக இன்னும் எந்தளவிற்கு மும்முரமாக சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை நாம் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தையும் இது சுட்டிக் காட்டுகிறது.

ஒவ்வோராண்டின் மே மாதத்தில் அளவிடப்படும் கரியமில வாயுவின் அளவின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இது எதனால் என்றால் ஆண்டு முழுவதும் கரியமில வாயுவின் அளவு நிலைகள் சுழற்சி முறையில் மாறுபடும். கோடைக் காலத்தில், அதிக நிலப்பரப்புக் கொண்ட வட அரைக்கோளத்தில் உள்ள தாவரங்களின் ஒளிச்சேர்க்கையினால் கரியமில வாயுவின் அளவு குறையும். இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் தாவரங்களின் இலைகள் விழுந்து சிதைவடையும் போது கரியமில வாயு வளிமண்டலத்தில் வெளியிடப்படுவதால் அதிகரிக்கும். இந்த சுழற்சி இறுதியில் மே மாதத்தில் வளிமண்டலக் கரியமில வாயுவின் அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது.

படிம எரிபொருள் பயன்பாட்டால் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு அதிகரிக்கும் போக்கை விஞ்ஞானி சார்லஸ் டேவிட் கீலிங் கண்டுபிடித்ததால் கரியமிலவாயுவின் இந்த மேல்நோக்கிய போக்கு கீலிங் வளைவு என்று அழைக்கப்படுகிறது. இந்த கீலிங் விளைவைத் தட்டையாக்க கரியமில வாயுவின் வெளியேற்றத்தை நிரந்தரமாக 50 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்று அதில் ஆய்வைத் தொடரும் கீலிங்கின் மகன் ரால்ப் கீலிங் தெரிவித்துள்ளார்,

பெருகும் திடக் கழிவுகள்:

மருத்துவக் கழிவுகள்:

கோவிட் தாக்குதலால், ஒற்றைப் பயன்பாட்டுக் கையுறைகள், முகக் கவசங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மருத்துவக் கழிவுகளின் அளவு பெருமளவில் அதிகரித்துள்ளது. சீனாவின் வுஹானில், தொற்றுநோயின் உச்சத்தில் மருத்துவக் கழிவுகளின் அளவு ஒரு நாளைக்கு 40 முதல் 240 டன் வரை உயர்ந்துள்ளதாக தென் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. மருத்துவக் கழிவுகள் சுகாதாரப் பணியாளர்களால் கிருமிநீக்கம் செய்யப்பட்டு பின்னர் நிலத்தின் அடியே புதைக்கப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. இவற்றின் மூலமும் சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளது.

 நெகிழிக் கழிவுகள்:

ஊரடங்கினால் மக்கள் வீட்டுக்குள்ளே முடக்கப்பட்டதால் இணைய வழி வர்த்தகம் பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால் விநியோகப் பொருட்களை பெட்டலப்படுத்த மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நெகிழிக் கழிவுகள் வெள்ளமெனப் பெருகியுள்ளன. அமேசான் இணைய வர்த்தக நிறுவனம் மட்டும் 100,000 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகள் பல இடங்களில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் கோவிட்-19இன் தாக்கம் நெகிழிகளின் பயன்பாட்டை மீண்டும் அதிகரித்துள்ளது. 2050ஆம் ஆண்டில் கடலில் மீனை விட நெகிழிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது. எனவே நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைக் கணிசமாக குறைக்கவேண்டும் என்பதும் இயற்கையன்னை நமக்கு விடுக்கும் உடனடி ஆணைகளில் ஒன்று.

 கரிமக்கழிவுகள்:

ஊரடங்கினால் விவசாயம், உணவுப்பொருட்கள் மற்றும் இதர அழியக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் சந்தைகள் முடங்கியுள்ளதாலும், ஏற்றுமதி குறைந்துள்ளதாலும் அதிக அளவில் கரிமக் கழிவுகள் உருவாகியுள்ளன. கரிமக் கழிவுகள் சிதையும் போது அவற்றிலிருந்து மீத்தேன் வாயு உருவாகி வளி மண்டல மீத்தேனின் அளவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மீத்தேன் அபாயம்:

கார்பன் டை ஆக்சைடுக்குப் பிறகு, மனிதனால் தூண்டப்படும் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் இரண்டாவது மிக முக்கியமான பசுமைக்குடில் வாயு மீத்தேன் ஆகும். மீத்தேனின் வளிமண்டல செறிவு இது வரையில்லாத அளவிற்கு 2019ல் ஆம் ஆண்டில் - ஒரு பில்லியனுக்கு 1,875 பாகங்கள் (பிபிபி அதிகமாக உயர்ந்துள்ளது (2018 ஆம் ஆண்டில் 1,866 பிபிபி) என அமெரிக்காவின் தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) கணக்கிட்டுள்ளது. மீத்தேன் ஒரு சக்திவாய்ந்த பசுங்குடில் வாயு – அதன் புவி வெப்பமயமாக்கும் திறன் கரியமில வாயுவை விட 25 மடங்கு அதிகமாகும்.

2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், 2013 மற்றும் 2018 க்கு இடையில் மீத்தேன் வெளியீடு அதற்கு முந்தைய ஐந்தாண்டு காலத்தை விட 50 சதவீதம் அதிகம் என்று NOAA விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பாரிஸ் ஒப்பந்தத்தின் வெப்பநிலை இலக்குகளை அடைவதற்கு மீத்தேன் வெளியீடு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யப்படும் இடங்களில் ஏற்படும் கசிவுகள், காற்றில் மீத்தேனின் அளவு அதிகரிக்க ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. புதைபடிவ எரிபொருள் துறையில் ஏற்படும் மீத்தேன் கசிவுகள் குறைந்தது 40 சதவிகிதம் குறைத்து மதிப்பிடப்படுவதாக “நேச்சர்” ஆய்விதழ் அறிக்கை கூறுகிறது. டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் இத்தகைய மாசுபடுத்தும் கசிவுகளைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் திரும்பப் பெற்றுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் வருவாய் குறைந்து வருவதால் கசிவுகளைக் குறைப்பதற்கான எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கைகளை அது தடுக்கக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி அமைப்பின் (ஐ.இ.ஏ) அறிக்கை எச்சரித்துள்ளது. இதனால் எரிவாயுக் குழாய்களின் கசிவுகளால் மீத்தேன் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

காலநிலை மாற்றத்தில் ஏற்படவிருக்கும் அபாயகரமான விளைவுகளைத் தவிர்க்கப் பசுங்குடில் வெப்ப வாயுக்களின் அளவை 2050க்குள் பூஜ்ஜியத்தை அடைந்திட செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கோவிட்-19 தாக்குதல் காலநிலை மாற்றத்தை கட்டுக்குள் வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தள்ளிப் போட்டுள்ளது. கோவிட்-19 தாக்குதலின் உப விளைவாக சுற்றுச்சூழலில் நேர்நிறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், கோடிக்கணக்கான மக்களின் வேலைகளைப் பறித்து, அவர்களின் வாழ்வை அச்சுறுத்தித்தான் இத்தகைய சுற்றுச்சூழல் மாற்றத்தை உருவாக்க வேண்டுமா? நலிவடைந்து வரும் பொதுச் சுகாதார சேவை, காடுகளையும் பல்லுயிர்களின் வாழிடங்களையும் அழித்தல், அதிகரித்து வரும் முறையற்ற நகரமயமாக்கல் ஆகிய அனைத்துமே கோவிட்-19 போன்ற தொற்றுநோய்கள் மீண்டும் ஏற்படுவதற்கு ஏதுவான சூழலையே ஏற்படுத்தியுள்ளன.

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வோம். இதே அரசியல் பொருளாதார அமைப்புகள் தொடர்ந்தால், ஒவ்வொரு தற்காலிகச் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகக்கும் கோடிக்கணக்கான நிரந்தர இழப்புகளை சந்திக்க நேரிடும். தனிநபர்களின் பழக்கங்களிலும், தேர்வுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம்தான். ஆனால் அதன் மூலம் மட்டும் சுற்றுச்சூழலில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்து விட முடியாது. அரசியலமைப்பிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். சூழலியல் தாக்கத்தின் விளைவறிந்து திட்டமிடும் பொருளாதார அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும். அரசியலமைப்பு மாற்றத்துடன், இணைந்த சமூக மாற்றத்தின் மூலமே நாம் சூழலியல் மேம்பாட்டை உருவாக்க முடியும். எனவே நிரந்தரமாக சூழலியல் மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டுமானால், இலாபத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்படும் இந்த முறையற்ற முதலாளித்துவ அரசியல் பொருளாதார அமைப்புக்கு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும்.