முள்ளிவாய்க்கால்

பதில் சொல்ல முடியாத

உங்களின் வினாக்களில்

பற்றி எரிகின்றன

எங்கள் வஞ்சகங்கள்

தளர்த்த முடியாத

மன இறுக்கத்தை

எமக்கான தண்டனையாக நினைத்து

சரி செய்துக் கொள்ள முடியவில்லை

நினைவை

குறுந்தகடு காட்சிகளாக

குவிக்கப்பட்ட உங்கள் சடலங்களிலிருந்து

நீங்க முடியாத குற்ற உணர்வுகளால்

உற்றுப்பார்க்கிறேன்

உம் இறந்த உடல்களில்

அசைகிறது உயிர்

எம் உயிர் உடல்களில்

நடக்கிறது பிணம்.

 (”அவதூறுகளின் காலம்” தொகுப்பிலிருந்து)

--------------

எம்மை அழைக்காதீர்

இனம் என்று உரைக்காதீர்

குருதி உறவுகளே

கொல்லப்படும் மானுடமே 

முள்கம்பி வேலிகளில்

முகம் புதைத்து அழுதபடி 

எம்மை நினைக்காதீர்

இனம் மொழி எனும் சொல்லை 

தேர்தல் மை போட்டு

தெரியாமல் அழித்துவிட்டு

வீரமும் நேர்மையும்

விலைபேசிக் கொடுத்துவிட்டு

துரோகமும் கபடமும்

பெற்றவர்கள் பிழைப்பதற்கு 

எம்மை அழைக்காதீர்

இனம் என்று உரைக்காதீர்

எரியும் உம் உயிர்களின்

இருதிசையும் பிரிந்து நின்று 

குளிர் காய்ந்து கொள்வதைத்தான்

கொள்கையெனச் சாற்றுகின்றோம்

எம்மை அழைக்காதீர்

இனம் என்று உரைக்காதீர்

காப்பாற்றக் கூறி

கதறுபவர் குரல்வளையைப்

பாதுகாப்புச் சட்டமிட்டு

மூச்சு முட்ட நெரிக்கின்றோம் 

வெள்ளைக்  கொடி பிடித்த 

வீரர்களைக் கொல்வதற்கு

ஆயுதங்கள் கொடுக்கின்றோம் 

ஆளனுப்பி வைக்கின்றோம்

எம்மை அழைக்காதீர்

இனமென்று உரைக்காதீர் 

உலகே எதிர்த்தாலும்

உணர்விழக்கா வல்லினமே 

உங்கள் உயிர்கலந்த உங்களின் குருதி

பெருக்கெடுத்துக் கலக்கும் மண்ணில்

உங்களைத் தவிர 

யார் விளையக்கூடும்

விதையொன்று போட்டால்

சுரையொன்றா முளைக்கும் 

எம்மை அழைக்காதீர்

இனமென்று உரைக்காதீர்

கொன்று குவித்தோரில்

குற்றுயிராய்க் கிடப்போரே

கரம்கேட்டு எழுவதற்குக்

கதறி அழுவோரே

தற்காலிகமாக அங்கே

ஈழம்தான் உமக்கில்லை 

எப்போதும் எமக்கிங்கே

ஈனமானம் எதுவுமில்லை 

குருதி உறவுகளே

கொல்லப்படும் வேலிகளில் 

முகம் புதைத்து அழுதபடி 

எம்மை அழைக்காதீர் 

இனமென்று உரைக்காதீர்

._________________________

துயரச்சாலை

அடுக்ககங்களை உருவாக்கி

அவற்றிற்கு

உயிரைப் பணயமிட்டு

தொங்கிக் கொண்டே

வண்ணந் தீட்டியவர்கள்

மேம்பாலங்கள் கட்டியவர்கள்

எலிகளைப்போல் பூமிக்குள் வளைகளிட்டு

பெருநகர விரைவு ரயில்

தடம் போட்டுத் தந்தவர்கள்

நீங்கள் வசதியாக உட்கார்ந்து

வாய்ப்பந்தல் போடும் 

அத்தனைக் கான்கிரேட் கூரைகளையும்

அந்தரத்தில் நின்றுழைத்து

அமைத்துக் கொடுத்தவர்கள்

சாலைகள் போட 

வேகாத வெயிலில்

வெந்து தணிந்தவர்கள்

சுமைவண்டி இழுத்தவர்கள்

முதுகெலும்பு வளைய வளைய

விதைத்தவர்கள்

நீரூற்றியவர்கள்

காவல் காத்தவர்கள்

அறுவடை செய்து

உங்கள் கிடங்குகளை

நிறைத்துவிட்டு

பஞ்சம் பிழைக்க

சொந்த தேசத்தில்

அகதிகளாய் பிரிந்தவர்கள்

இன்னும்கூட

அவர்கள் உங்களின்

நினைவிற்கு எட்டவில்லையெனில்

கனவுக்காட்சி போல்

மங்கலாக வேணும் 

மறக்கமுடியாத நினைவாக

அன்றொரு நாளில் 

வரிசை வரிசையாய் நின்று

உங்களுக்கு

வாக்குப் பிச்சை போட்டார்களே

அவர்களே தான்

தலைகொள்ளாச் சுமையோடு

பற்றியெரியும் பாதைகளில்

செருப்புக்கும் கதியற்று

நடந்து கொண்டிருக்கிறார்கள்

நிழலுக்கு நிழல் ஓடி

நின்றுத் தவிக்கும் பிள்ளைகளின்

தாகத்திலும் பசியிலும்

நீண்டுக்கொண்டே இருக்கும்

பெருந்துயரச் சாலையை

எப்படியும் கடந்து விடலாமென

நடந்து கொண்டேயிருக்கிறார்கள்

பாதி வழியில்

தண்டவாளத்தில் நசுங்கியவர்கள்

விபத்தில் நொறுங்கியவர்கள்

ஜீவனில்லாமல்

செத்துப் போனவர்களுக்கெல்லாம்

என்ன கனவுகள்

இருந்திருக்கக்கூடும்

செத்தாலும் 

சொந்த ஊரில் போய்

சாகவேண்டும் 

என்பதைத் தவிர...

_________________

பசி

கட்டுப்பாடற்றவர்கள

என்னவந்தாலும்

இவர்களைத் திருத்தவே முடியாதென

தடைசெய்யப்பட்ட

சாலைகளில் வந்து நிற்கும்

ஏழைகள் பற்றி

இழித்துப்பேசும்

உங்களுக்கு

உத்திரவாதமிருக்கிறது

மூன்றுவேளை உணவிற்கு

ஒருநாளாவது போராடிப் பாருங்கள்

பசியுணர்வோடு

அவர்கள் எவ்வளவு

பொறுமைக் காத்திருக்கிறார்கள்

என்பது புரியும்.