Cauvery 400உழவர் அரண் அறிக்கை:

நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய நாளில் திறக்கப்பட்டது என்ற நமது மகிழ்ச்சி நிலைக்கவில்லை.

முடியுமானால் தமிழ்நாட்டுக்குக் காவிரியில் சொட்டுநீரும் விடாமலிருப்பதுதான் கர்நாடகத்தின் வஞ்சக எண்ணம். இந்திய ஒன்றிய அரசின் துணையோடு இந்த எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள அதன் அண்மைய முயற்சிதான் காவிரியின் குறுக்கே  மேக்கேதாட்டுவில் அணைகட்டுவது.

அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு வழக்குப்பதிவு செய்து மேக்கேதாட்டு அணைகட்டும் முயற்சிக்குத் தடை விதித்ததோடு, அணைகட்டும் முன்னேற்பாடுகள் நடக்கின்றனவா என்பதைக் கண்டறிந்து அறிக்கை அளிக்க ஆய்வுக் குழுவும் அமைத்திருந்தது. இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறை அனுமதி பெறாமல் அணைகட்டும் முயற்சியில் ஈடுபடலாகாது என்றும் ஆணையிட்டிருந்தது. கர்நாடக அரசும் தமிழ்நாடு அரசும் வருகிற சூலை 7ஆம் நாள் தங்கள் தரப்பை விளக்குவதற்கும் நாள் குறித்திருந்தது.

தென்மண்டல அமர்வின் இந்த ஆணையை எதிர்த்துக் கர்நாடக அரசு அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தில்  முறையீடு செய்தது. தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு நீதியர் ஏகே கோயல் தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமலே சென்ற சூன் 18ஆம் நாள்  கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். தென்மண்டல அமர்வின் தடை இதனால் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.

இப்போதும் கர்நாடகம் மேக்கேதாட்டு அணைகட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உடனே அணைகட்டுவோம் என்று அறிவித்து விட்டார். இன்னும் நடுவணரசின் சுற்றுச்சூழல் வனத்துறை அனுமதி வழங்கவில்லை என்பது பற்றி அவர் கவலைப்படவில்லை. ஒன்றிய அரசு இப்போதும் கர்நாடகத்தின் அடாவடித்தனங்களுக்குத் துணைநிற்கும் என்பது அவர் நம்பிக்கை. 

கடந்த கால வரலாற்றிலிருந்து பாடம் பெற்றுத் தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். இப்போதாவது விழித்துக் கொள்ளத் தவறினால் தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரி பறிபோய் விடும் ஆபத்து உள்ளது. ஒரு நொடியும் தாமதியாமல் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உழவர் அரண் வலியுறுத்துகிறது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டும் முயற்சியை முறியடித்துக் காவிரி உரிமையை மீட்கும் போராட்டத்திற்கு அணிதிரளுமாறு தமிழக உழவர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் அறைகூவி அழைக்கின்றோம்!

அருண் மாசிலாமணி,  அமைப்பாளர், உழவர் அரண்