prisonersதமிழ்நாட்டில் வாழ்நாள் சிறைப்பட்டோர் (ஆயுள் கைதிகள்) விடுதலை என்பது தீராச் சிக்கலாகவே தொடர்கிறது. குறிப்பாக இராசீவ் கொலை வழக்கில் வாழ்நாள் சிறைப்பட்டு முப்பதாண்டுக்கு மேல் கழித்துள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், நளினி ஆகிய எழுவரையும் விடுதலை செய்ய மாநில அமைச்சரவையே முடிவெடுத்த பிறகும் தில்லி ஆட்சியாளர்கள் தமிழக ஆளுநரைப் பயன்படுத்தித் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். எழுவர் விடுதலையில் இனி எந்தச் சட்டச் சிக்கலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள உச்ச நீதிமன்றம்தான் இதில் நல்ல முடிவு சொல்ல வேண்டும். அல்லது இதையே உயர் நீதிமன்றமும் செய்யலாம். தமிழக அரசைப் பொறுத்த வரை எழுவர் விடுதலை என்ற முடிவில் உறுதியாகவே இருப்பதை உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக்கியுள்ளது.

ஆனால் முசுலிம் சிறைப்பட்டோர் விடுதலை தொடர்பாக நம்பிக்கையற்ற சூழலே நீடிக்கிறது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று நீண்ட காலமாகச் சிறையில் வாடிக்கிடக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்வோம் என்பதாகும். திரு முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களின் பரப்புரையிலும் இந்த வாக்குறுதி இடம் பெற்றது. திமுக கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடும் இதுவே. எதிர்க்கட்சிகளிலும் பாஜக தவிர எந்தக் கட்சியும் முசுலிம் சிறைப்பட்டோரின் விடுதலையை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு மட்டும் சிறைக்கதவு திறந்த பாடில்லை.

ஆட்சிக்கு வந்த பின் சட்டப் பேரவையிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீண்டகாலமாகச் சிறையில் இருப்பவர்கள் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார்.

எந்தவொரு சிறைப்பட்டவருக்கும் சட்த்துக்குப் புறம்பாக நாம் விடுதலை கேட்கவில்லை. ’நான் முதலமைச்சரானால் சிறைக்கதவைத் திறந்து விடுவேன்’ என்பது போன்ற வெற்றுவேட்டுப் பேச்சுகளிலும் நமக்கு நம்பிக்கை இல்லை.

சட்டம் ஒரு பக்கம், இந்திய அரசின் உள்நோக்கங்கொண்ட முட்டுக்கட்டைகள் மறு பக்கம், திட்டவட்டமான ஆணைகள் பிறப்பிக்க நீதிமன்றங்களின் தயக்கம் இன்னொரு பக்கம் …. இத்தனைக்கும் நடுவில்தான் மாநில அரசு இவ்வகையில் செயல்பட வேண்டியுள்ளது என்பதை அறிந்தேற்கிறோம்.

ஆனால் 15.11.2021இல் அரசு பிறப்பித்துள்ள அரசாணை எண் 488 / 2021 அரசின் நோக்கம் பற்றிய ஐயங்களைக் கிளறுவதாக உள்ளது. எப்படிப் பார்த்தாலும், வாழ்நாள் சிறைப்பட்டோர் உள்ளிட்ட நீண்ட காலச் சிறைப்பட்டோர் முன்-விடுதலை குறித்து அரசுக்கு ஒரு தெளிவான பார்வை இல்லை என்பதைக் காட்டுவதாக உள்ளது. ஏனென்றால் முன்விடுதலைக்கான வழிவகையிலிருந்து “பயங்கரவாத”ச் சிறையாளர்களையும், மதம் வகுப்பு தொடர்பான குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களையும் இந்த அரசாணை விலக்கி வைக்கிறது.

குற்றம் எதுவானாலும் பத்து இருபது ஆண்டுச் சிறையடைப்புக்குப் பிறகும் குற்றவாளியைத் திருத்தவே முடியாது என்றால் அது இந்தச் சிறையமைப்பின் குறையைத்தான் காட்டுகிறது.

குற்றத் தீர்ப்பு வழங்கும் போது குற்றத்தைப் பார், குற்றவாளியைப் பார்க்காதே! தண்டனையின் அளவைத் தீர்மானிக்கும் போது குற்றத்தையும் குற்றவாளியையும் பார்! தண்டனை கழித்து விடுதலை செய்வது பற்றி முடிவெடுக்கும் போது குற்றத்தைப் பார்க்காதே, குற்றவாளியை மட்டும் பார்! – இது சீர்திருத்த ஒறுத்தலியலின் அடிப்படையாகும். இராசீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தாமஸ், காத்ரி, வாத்வா ஆகிய மூன்று நீதியரும் தத்தமது தீர்ப்பில் இந்தக் கருத்தை வலியுறுத்தக் காணலாம்.

ஒருவர் ஒரு முறை பயங்கரவாதக் குற்றம் அல்லது மதவாதக் குற்றம் புரிந்தால் என்றுமே அவ்வகைக் குற்றவாளியாகத்தான் இருப்பார் என்பது ஏரணப் பொருத்தமற்றது. அது உண்மையும் அன்று. ஒவ்வொரு புனிதனுக்கும் ஒரு கடந்த காலம் உண்டு, ஒவ்வொரு பாவிக்கும் ஓர் எதிர்காலமும் உண்டு என்ற செய்தியை நீதியர் கிருஷ்ணய்யர் பல முறை எடுத்துக்காட்டியுள்ளார்.

எவர் ஒருவரையும் விடுமையின் நம்பிக்கையொளிக் கீற்று தொலைவில் கூட தெரியாமல் சிறையிருளில் அடைத்து வைப்பதுதான் சிறையில் இறுகிய குற்றவாளிகளைப் பயிர் செய்யும் வழி எனலாம். .

முசுலிம் சிறைப்பட்டோரில் எவரை எவ்வளவு காலம் கழித்து விடுதலை செய்தாலும், மோதியின் மதவெறி ஆட்சி முட்டுக்கட்டை போடும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த முட்டுக்கட்டைகளை சட்டப்படி வெல்வதற்கான வழிமுறைகளில் மாநில அரசு முதலடி கூட எடுத்து வைக்கமாலிருப்பது ஏன்? என்பதற்கு விளக்கம் தேவை.

விடுதலை வேண்டும் முசுலிம் சிறைப்பட்டோர் 37 பேரில் 21 பேர் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் என்பதைத் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதிய 29.11.2011 மடல் சுட்டிக் காட்டுகிறது. எஞ்சிய 16 பேர் மீது ”பய்ங்கரவாத”க் குற்றச்சாட்டு இருப்பதால் இவர்களின் விடுதலைக்கு அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 உதவாது என்பதுதான் சட்டநிலை. இதன் பொருள் இவர்களை விடுதலையே செய்ய முடியாது என்பதன்று. அதற்குக் குற்ற நடைமுறைச் சட்டத்தின் 432 – 435 பிரிவுகளைப் பயன்படுத்த வேண்டும். அமைச்சரவையில் முடிவெடுத்து அதற்கு இந்திய அரசின் கலந்தாய்வு கோரி எழுத வேண்டும். இந்திய அரசின் இசைவு பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும்,

முதலில் குறிப்பிட்ட 21 பேரைப் பொறுத்த வரை அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். எழுவர் விடுதலைக்குச் செய்தது போல் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி அவரின் ஒப்பம் பெற்று 21 பேரையும் விடுதலை செய்ய முடியும்.

தமிழக அரசு அமைச்சரவைத் தீர்மானங்கள் இயற்றியவுடனே முஸ்லிம் சிறைப்பட்டோருக்குக் கதவு திறந்து விடும் என்ற மயக்கம் நமக்கில்லை. ஆனால் இவ்வளவு காலமாகியும் தமிழக அரசு முதலடி கூட எடுத்து வைக்கவில்லை என்பது மட்டுமல்ல, விடுதலைக் கோரிக்கையை முன்வைக்கிறவர்கள் அரசிடம் இந்த முதலடியைக் கூட கோராமலிருப்பதும் கூட நாம் கவலையோடு குறித்துக் கொள்ள வேண்டிய செய்திகள்.

- தியாகு