BEPSபொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) வரி அரிப்பு, இலாபக் கடத்தலைப் பின்வருமாறு வரையறுக்கிறது. பல்வேறு நாடுகளின் வரி அமைப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள் மற்றும் வேறுபாடுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதால் உள்நாட்டு வரி வருவாயின் அடிப்படை அரிக்கப்பட்டு, இலாபம் கடத்தப்படுவது (BEPS) அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. வளரும் நாடுகளின் பெருநிறுவன வரி வருவாய் இதனால் கணிசமாகக் குறைந்து போவதால் அந்நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. வரி அரிப்பு, இலாபக் கடத்தல் நடைமுறைகளால் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 100-240 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது, இது உலகளாவிய கார்ப்பரேட் வரி வருவாயில் 4-10%க்குச் சமமானதாகும். நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்படுகின்றன, எனவே வரி அரிப்பு, இலாபக் கடத்தலை சமாளிக்கவும் உள்நாட்டு மற்றும் சர்வதேச வரிமுறைகளில் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

வரி அரிப்பு, இலாபக் கடத்தல் என்பது சர்வதேச அளவில் வரி விதிகளில் உள்ள இடைவெளிகள் மற்றும் பொருத்தமின்மைகளைப் பயன்படுத்தி இலாபத்தைச் செயற்கையாக (பொருளாதார நடவடிக்கைகள் குறைவாக இருக்கும் இடங்களுக்கு) வரி குறைந்த அல்லது வரி இல்லாத இடங்களுக்குக் கடத்துவதன் மூலமும் வட்டி அல்லது உரிமக் கட்டணம் போன்ற வருவாயைக் குறைக்கும் கொடுப்பனவுகள் மூலமும் வரி வருவாயின் அடிப்படைகளை அழிக்கும் வரித் திட்டமிடல் உத்திகளைக் குறிக்கிறது. இவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்களில் சில சட்டவிரோதமானவை என்றாலும், பெரும்பாலானவற்றை அவ்வாறு கூற இயலாது சட்டமுறைகளில் உள்ள ஓட்டைகளை கரும் / சாம்பல் பகுதிகளைப் பயன்படுத்தி இந்த உத்திகள் கடைபிடிக்கப்படுகிறது. இது வரி அமைப்புகளின் நீதியையும், ஒருமைப்பாட்டையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, ஏனெனில் எல்லைகளுக்கு அப்பால் செயல்படும் நிறுவனங்கள் உள்நாட்டு மட்டத்தில் செயல்படும் நிறுவனங்களை விட ஆதாயங்களைப் பெற வரி அரிப்பு, லாப கடத்தலை பயன்படுத்தலாம். மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் வருமான வரியைச் சட்டப்பூர்வமாகத் ஏய்ப்பதை வரி செலுத்துவோர் பார்க்கும் போது, ​​அது அனைத்து வரி செலுத்துவோரின் தன்னார்வ வரி இணக்க நடைமுறையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

பொருளாதார ஒருங்கிணைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பையும், ஜி-20 அமைப்பையும் (OECD / G20) உள்ளடக்கிய கட்டமைப்பு வரி அரிப்பு, இலாபக் கடத்தலில் இணைந்து செயல்படுவதால், 141 நாடுகள், நீதி அமைப்புகள், வரி ஏய்ப்பை சமாளிக்கவும், சர்வதேச வரி விதிகளின் ஒத்திசைவை மேம்படுத்தவும், மிகவும் வெளிப்படையான வரிச் சூழலை உறுதிசெய்யவும், பொருளாதார இணையமயமாக்கலில் இருந்து எழும் வரி சவால்களை எதிர்கொள்ளவும் 15 நடவடிக்கைகளை செயல்படுத்துகின்றன என்று குறிப்பிடப்படும் போதும், பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றில் மண்ணைத் தூவி அவற்றைக் கண்துடைப்பு நாடகங்களாக்கி விட்டன இல்லை என்றால் வரி அரிப்பு, இலாபக் கடத்தல் என்பது ஒரு தொடர் நிகழ்வாகி இருக்க முடிந்திருக்காதே!

2021 அக்டோபர் 31 அன்று ஜி-20 கூட்டமைப்பு ஒரு புதிய உலகளாவிய குறைந்தபட்சப் பெருநிறுவன வரிக்கு ஒப்புதல் அளித்தது, இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பெருநிறுவனங்கள் மீதான வரிவிதிப்புக்கு இரண்டு "அடிப்படைகள்" உள்ளன. அடிப்படை 1இன் கீழ், அரசாங்கங்கள் 10 விழுக்காட்டிற்கு மேலான இலாப வரம்புகளுக்கு வரி விதிக்க முடியும். அடிப்படை 2இன் கீழ், உலகளாவியக் குறைந்தபட்ச வரி விகிதம் 15 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களின் சட்டப்பூர்வ வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட 15 விழுக்காடு உலகளாவிய குறைந்தபட்சப் பெருநிறுவன வரியானது, வரிப் புகலிடங்களில் காணப்படுவது போல் மிகவும் குறைவாக உள்ளதால் வரி அரிப்பையும், இலாபக் கடத்தலையும் இதன் மூலம் முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்பதே எதார்த்தமான உண்மை. மேலும் இது இலாபம் பணக்கார நாடுகளிடம் இருப்பதை உறுதி செய்வதற்கான உட்பிரிவுகளால் நிறைந்துள்ளது என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய வரி விதிகளை அமைக்கும் பொருளாதார ஒருங்கிணைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பின் (OECD) நாடுகளே உலகளாவிய வரி மோசடியில் மூன்றில் இரண்டு பங்குக்குக் காரணம் என்று கூறுகிறது வரி நீதிக்கான வலையமைப்பு.

ஐக்கிய முடியரசில் உள்ள வரி நீதிக்கான வலையமைப்பு (Tax Justice network) அனைவரின் தேவைகளுக்கும் சம மதிப்பளிக்கும் ஒரு நியாயமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு நம் வரியமைப்புகளும், நிதியமைப்புகளும் மிகவும் சக்தி வாய்ந்த கருவிகள் என்று கருதுகிறது. வரியமைப்பில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை வலியுறுத்திப் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு வரி ஏய்ப்பு, இலாபக் கடத்தல் குறித்துப் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறது.

இலாபக் கடத்தல் என்பது பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த வரி செலுத்தப் பயன்படுத்தும் ஒரு நுட்பமாகும், இது ஒரு பன்னாட்டு நிறுவனம் உற்பத்தி செய்யும் அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளை விற்கும் நாட்டில் கிடைக்கும் இலாபத்தை வரிப் புகலிடத்திற்குக் கடத்துவதைப் பகுதியாகக் கொண்டுள்ளது. இலாபத்தை ஒரு வரிப் புகலிடத்திற்கு மாற்றுவதன் மூலம், பன்னாட்டு நிறுவனம், அது பொருட்கள், சேவைகளை உற்பத்தி செய்யும் / விற்கும் நாடுகளில் அதன் இலாபத்தின் மதிப்பைக் குறைத்து காட்டுகிறது, அதனால் அந்த நாடுகளில் குறைந்த வரியே செலுத்துகிறது அல்லது வரியே செலுத்துவதில்லை. வரிப் புகலிடத்திற்கு மாற்றப்படும் இலாபம், அங்கு மிகக் குறைந்த நிறுவன வரி உள்ளதா அல்லது கார்ப்பரேட் வரி இல்லையா என்பதைப் பொறுத்து மிகக் குறைந்த விகிதத்திலேயே வரி விதிக்கப்படுகிறது.

இலாபத்தைக் கடத்துவதற்கு பொதுவாகக் கையாளப்படும் முறையானது, ஒரு பன்னாட்டு நிறுவனம் மற்ற நாடுகளில் உள்ள துணை நிறுவனங்களிடமிருந்து கட்டணச் செலவுகளை வசூலிக்க வரிப் புகலிடத்தில் உள்ள துணைநிறுவனத்தைப் பயன்படுத்துவதாகும். உதாரணமாக, பாரடைஸ் பேப்பர்ஸ் ஊழலில், நைக் நிறுவனம் தனது இலாபத்தின் பெரும் பகுதியை - பூஜ்ஜிய வரி நிலவும் இடமான – பெர்முடாவில் தங்கள் அறிவுசார் சொத்துகளை (அதாவது, லோகோ, பிராண்டிங், ஷூ டிசைன்கள்) பதிவு செய்வதன் மூலம் அந்நாட்டுக்குக் கொண்டுசெல்வதை பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்தனர். பெர்முடாவில் உள்ள நைக்கின் துணை நிறுவனம், அறிவுசார் சொத்துரிமையைப் பயன்படுத்துவதற்காக உலகின் பிற பகுதிகளில் உள்ள நைக் துணை நிறுவனங்களிடமிருந்து அதிக உரிமக் கட்டணத்தை வசூலித்தது. இது நைக் காலணிகளை விற்கும் நாடுகளில் குறைவான வரியைச் செலுத்தவும், வரி செலுத்தப்படாத வரி புகலிடத்தில் இலாபத்தை பில்லியன்களில் ஈட்டவும் வழிசெய்தது.

பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வோராண்டும் $1.38 டிரில்லியன் அளவு இலாபத்தை வரிப் புகலிடங்களுக்குக் கடத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதனால் நாடுகளுக்கு ஒவ்வோராண்டும், கார்ப்பரேட் வரி வருவாயில் $245 பில்லியன் இழப்பு ஏற்படுகிறது.

இலாப இடமாற்றத்தை சமாளிப்பதற்கு மிகவும் பயனுள்ள எளிய வழிகளில் ஒன்று, பன்னாட்டு நிறுவனங்களை அவை செயல்படும் ஒவ்வொரு நாட்டிற்குமான அறிக்கைகளையும் வெளியிடச் செய்ய வேண்டும்.

வரி ஏய்ப்பு சட்டப்பூர்வமானதா? வரி ஏய்ப்பிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? இல்லை, வரி தவிர்ப்பை "சட்டப்பூர்வமானது" என்று அழைக்க முடியாது, ஏனெனில் "வரி தவிர்ப்பு" என்று அழைக்கப்படும் பல செயல்பாடுகள் சட்டப்பூர்வ அமைப்பின் சாம்பல் பகுதியைச் சேரும். "வரி தவிர்ப்பு" என்பது பெரும்பாலும் "சட்டப்பூர்வமாக" வரி குறைவாகச் செலுத்துவதற்கான வழிமுறைகளைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது அதாவது ஒரு நபர் அல்லது நிறுவனம் செலுத்த வேண்டியதை விடக் குறைவாக வரி செலுத்தும் வகையில் அவர்களின் நிதி விவகாரங்களைக் கட்டமைக்கும் போது நடக்கும். (சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்துதல் போன்றவை), அதே நேரத்தில் "வரி ஏய்ப்பு" என்பது சட்டவிரோத வழிகளையும் குறிக்கும். எவ்வாறாயினும், நிஜ உலகில், இந்த சட்டபூர்வ-சட்டவிரோத வேறுபாடு பெரும்பாலும் காணாமல் போய் விடுகிறது.

"தவிர்த்தல்" என்று அழைக்கப்படும் பலவற்றை "சட்டப்பூர்வமாக" என்று அழைக்க முடியாது, ஏனெனில் அது சட்டத்தின் கரும் / சாம்பல் பகுதியில் உள்ளது: நீதிமன்றத்தில் வழக்காடும் போது தான், சட்டத்தின் எந்தப் பக்கத்தில் அச்செயல்பாடு வருகிறது என்பதை ஒருவரால் நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியும். பல வரிக் கட்டமைப்புகள், செல்வந்தர்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களால் அமைக்கப்பட்டவையாக இருந்தாலும், அவை மிகவும் சிக்கலான எல்லை கடந்த ஏற்பாடுகள் ஆகும்.

ஒரு செயல்பாடு சட்டப்பூர்வமானதா இல்லையா என்பது நீதிமன்றத்தில் வழக்காடும் வரை பெரும்பாலும் தெளிவாகத் தெரிவதில்லை, மேலும் "தவிர்த்தல்" என்று அழைக்கப்படும் பெரும்பாலான செயல்பாடுகள் இறுதியில் ஏய்ப்பு நடவடிக்கைகளாக உள்ளன. இது சட்டப்பூர்வமாக செலுத்தப்பட வேண்டிய வரிப்பணத்தை தனதாக்கிக் கொள்வதைக் குறிக்கிறது. இவை கவனிக்கப்படவோ அல்லது வெற்றிகரமாக வழக்காடப்படவோ இல்லை என்பதே அதன் பொருள். இது "ஆபத்தை அகழ்ந்து எடுத்தல்" என்று விவரிக்கப்பட்டுள்ளது - அங்கு தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் வேண்டுமென்றே சட்டத்தின் எல்லைகளைத் தாண்டுகின்றன, மேலும் அதிலிருந்து விடுபட முடியும் என நம்பிக்கை பெறுகின்றன. 2013ஆம் ஆண்டில், பிக் ஃபோர் கணக்கியல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி, அரசுக் கண்காணிப்புக் குழுவான இங்கிலாந்தின் பொதுக் கணக்குக் குழுவிடம், வாடிக்கையாளர்களுக்கு, வரித் திட்டங்களை, அதாவது வரி "தவிர்ப்பு" கட்டமைப்புகளை, அவற்றின் மூலம் நீதிமன்ற சவாலில் இருந்து தப்பிக்க 25 விழுக்காடு வாய்ப்பு மட்டுமே இருக்கும் எனக் கருதப்பட்டாலும் கூட, விற்போம் என்று சாட்சியமளித்தார்.

குறைந்த வருவாய் உடைய நாடுகளில் இப்பிரச்சனை மிகவும் மோசமாக உள்ளது, அங்கு நீதிமன்றங்கள் மற்றும் வரி அதிகாரிகள் நிறுவனங்களுக்கு சாதகமான சில முடிவுகளை அடைய நிறுவனங்கள் அல்லது செல்வந்தர்களின் அழுத்தத்திற்கு ஆளாக நேரிடலாம்.

வரித் தவிர்ப்பு, வரி மோசடி நடவடிக்கைகள் சமூகத்திற்கான பொதுச் சேவைகளையும், உள்நாட்டுத் தொழில்களையும், எளிய மக்களையும் பாதிக்கும் விதத்தில் நாடுகளின் வரிவருவாயில் பல பில்லியன்களை குறைக்கின்றன.

இந்த காரணங்களுக்காக "வரி தவிர்ப்பு" என்ற வார்த்தையை அரிதாகவே பயன்படுத்துகிறோம், அதற்கு பதிலாக "வரி மோசடி" என்ற சொல்லையேப் பயன்படுத்துகிறோம் என்கிறது வரி நீதிக்கான வலையமைப்பு.

செயல்பாட்டின் சட்டப்பூர்வமான தன்மைக்கு பதிலாக சமூகத்திற்கு அதனால் ஏற்படும் இழப்பை சுட்டிக் காட்டுவதற்காக, "வரி மோசடி" என்ற சொல் சில நேரங்களில் "வரி தவிர்ப்பு" மற்றும் "வரி ஏய்ப்பு" என்பதற்கு பதிலாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்களால் பயன்படுத்தப்படுகிறது.

"வரி மோசடி" என்ற வார்த்தையானது, "வரி தவிர்ப்பு" என்பது சட்டப்பூர்வமானது என்ற தவறான புரிதலிலிருந்து விலகி, அதற்குப் பதிலாக, சட்டங்கள் மற்றும் நிதி வழிமுறைகளை தவறாகப் பயன்படுத்துவதன் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் கவனத்தை செலுத்த வைக்கிறது.

வரி ஏய்ப்பு சட்டப்பூர்வமானதா இல்லையா, வரி ஏய்ப்பு முறையானதா? என்ற கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்ல வேண்டுமானால், இல்லை, வரி ஏய்ப்பு முறையானது அல்ல என்று கூறி அதற்கான இரண்டு காரணங்களை முன்வைக்கிறது வரி நீதிக்கான வலையமைப்பு. முதலாவதாக, ஏய்த்தல் என்று அடிக்கடி அழைக்கப்படுவது மேலே விளக்கப்பட்டதன் படி 'சட்டப்பூர்வமானது' அல்ல. இரண்டாவதாக, “சட்டப்பூர்வமானது” என்பது உண்மையில் சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. (அந்தக் காலத்தில் நிறவெறி சட்டபூர்வமானதாக இருந்துள்ளது.)

சமந்தா