அரசியல் வகுப்பு: பாடக் குறிப்புகள்

1. அண்ணல் அம்பேத்கர் சாதியமைப்பைப் பற்றிச் சுடர்மிகு ஆய்வுகள் செய்தவர். சாதிகள் நிலவும் வரை இந்தியா தேசமாக முடியாது என்று பறைசாற்றியவர். ஆனால் அவர் கணக்கில் கொண்ட குமுகப் பொருளியல் ஏற்றத்தாழ்வுகளில் பொருளியல், குமுக. பாலியல் நிகரின்மைகள் இடம்பெற்றது போல் மொழிகளின் நிகர்மையின்மை இடம் பெறவில்லை.

மொழிகளுக்கிடையே நிகர்மையின்மை அல்லது ஏற்றத்தாழ்வு என்பதன் பொருள் மொழி பேசும் மக்களினங்களிடையே, அதாவது தேசிய இனங்களிடையே ஏற்றத்தாழ்வு ஆகும். மொழி ஒடுக்குமுறை கோலோச்சும் நாடு ஒருபோதும் தேசமாக முடியாது. ஆனால் அம்பேத்கர் இந்தியும் ஆங்கிலமும் வடமொழியும் திணிக்கப் படுவதைத் திணிப்பாகவே கருதியதாகத் தெரியவில்லை. அரசமைப்பின் 17ஆவது பகுதியில் அவருக்கு எவ்வித முரண்பாடும் எழவில்லை.

வடமொழி சமற்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்திய அரசில் மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் இந்தியே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பதும் அவர் கருத்தாக இருந்தது. அம்பேத்கரின் மொழிக் கொள்கை தவறானது என்றே நாம் முடிவுக்கு வர வேண்டியுள்ளது. மொழிக் கொள்கையை விலக்கி விட்டு அவரது சமூகநீதிக் கொள்கையைத் தமிழ்த்தேசியம் தனதாக்கிக் கொள்ள வேண்டும்.

2. இதே போல் தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கையும் இந்திய வல்லாண்மைக்கு எதிரான நிலைப்பாடும் சரியானவை என்றாலும் அவரது மொழிக் கொள்கை தவறானது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது.

தவறான மொழிக் கொள்கை மட்டுமன்று, 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பெரியார் எடுத்த அரசு - ஆதரவு நிலைப்பாடும் மோசமான தவறு ஆகும். இத்தனையையும் மீறித் தமிழ்த் தேசியத்தோடு அவரை உறவுபடுத்தும் காரணிகள் சாதியொழிப்பிலும் பெண்ணுரிமையிலும் அவர் கொண்டிருந்த மெய்யான ஈடுபாடும், இறுதி வரை இந்திய மேலாதிக்கத்தை ஏற்க மறுத்த அவரின் உறுதிப்பாடுமே ஆகும்.

3. தமிழ்நாட்டில் மொழித் திணிப்பு என்றாலே இந்தித் திணிப்பு என்று மட்டும்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. நம் மீது எந்த அயல்மொழி திணிக்கப்பட்டாலும் அது மொழித் திணிப்புதான் என்ற பார்வை நமக்குத் தேவை. நமக்கு மட்டுமன்று, ஒவ்வொரு மக்களினத்துக்கும் ஒரு சரியான மொழிக் கொள்கை தேவை.

இந்தி, ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழித் திணிப்புக்கு இந்திய அரசமைப்பின் 17ஆம் பகுதி சான்றாக உள்ளது. மொழித் திணிப்பை அறிந்தேற்கும் நண்பர்கள் சிலர் தேசிய ஒடுக்குமுறை நிலவுவதாக ஒப்புக் கொள்வதில்லை எனக் காண்கிறோம். மொழி என்பது தேசிய இனத்தின் ஒரு கூறு ஆகையால் மொழி ஒடுக்குமுறை என்பது தேசிய ஒடுக்குமுறையின் ஒரு கூறுதான். ஒரு மொழி ஒடுக்கப்படுகிறது என்றால் அம்மொழி பேசும் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று பொருள்.

இந்திக்கும் தமிழுக்கும் நிகர்மை இல்லை என்றால் இந்திக்காரர்களுக்கும் தமிழர்களுக்கும் நிகர்மை இல்லை என்று பொருள். தமிழுக்கு எதிரான பாகுபாடு என்றால் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு என்று பொருள். இந்தி பேசும் மக்களை இந்தித் தேசிய இனமாகக் கருதினால் அதனை ஒடுக்கும் தேசிய இனமாகக் கருதுவதில் பிழையில்லை. இது அம்மக்கள் மீதும் இருக்கிற பிற ஒடுக்குமுறைகளை மறுப்பதாகாது.

4. ஒவ்வொரு மக்களினம் அல்லது தேசிய இனத்தின் மொழியும் அம்மக்களின் எல்லா நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆட்சி மொழியாக மட்டுமல்ல கல்வி மொழியாகவும் நீதி மொழியாகவும் வணிக மொழியாகவும் எல்லா வகையிலும் அம்மக்களின் தேசிய மொழி இடம்பெற வேண்டும், சான்றாக, இந்தி படித்தால் என்ன? என்று ஆட்சியாளர்கள் கேட்கிறார்களே தவிர, வங்க மொழி படித்தால் என்ன, அசாமிய மொழி படித்தால் என்ன என்றெல்லாம் கேட்பதில்லை.

இந்தி ஆட்சி மொழியாக இருப்பதால்தான் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. தமிழ் வாழ வேண்டுமானால் தமிழ் ஆள வேண்டும். தமிழ் தமிழரை ஆள வேண்டும், வேறு யாரையும் அல்ல. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதன் பொருள் இதுவே.

இன்னொரு மொழியைக் கற்பதற்கு நம் இந்த மொழிக் கொள்கை தடை போடுவதில்லை. இன்னும் ஒரு மொழி என்ன, தேவைப்பட்டால் பல மொழிகள் கற்கலாம். ஆனால் தமிழே பயிற்று மொழியாகவும் முதல் பயில் மொழியாகவும், அதாவது கல்வி மொழியாக இருக்க வேண்டும்.

5. மொழி ஒடுக்குமுறை என்பது ஒரு பிறழ்வாக இல்லாமல் இந்த அமைப்பின் அடிப்படைக் கூறாகவே இருக்கிறது. பிறழ்வு என்றால் இந்த அமைப்புக்குள்ளேயே சரிசெய்து விடலாம். அமைப்பையே மாற்றினால்தான் முடியும் என்பதால்தான் விடுதலை தீர்வாகிறது. இந்தித் திணிப்பு என்பது பிறழ்வன்று. அதனால்தான் அதனைத் திருத்த முடியவில்லை.

இந்தித் திணிப்பு இல்லாத இந்தியா இருக்க முடியாது. இந்தித் திணிப்பு ஒழிய இந்தியக் கட்டமைப்பு ஒழிய வேண்டும். அமைப்பின் எழுத்து வடிவமாக உள்ள அரசமைப்புச் சட்டத்தில் பல நல்ல நோக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தாலும் அவற்றைப் பெரிதும் செயலாக்க முடியாது. அவை சில வரலாற்றுப் பதிவுகள், அவ்வளவுதான்! வேறு சில பிரிவுகள் கட்டாயமானவை, அவற்றைச் சான்றாகக் கொண்டுதான் இந்த அரசமைப்பின் ஒடுக்குமுறைத் தன்மையை மெய்ப்பிக்கிறோம்.

இது தேசிய இனங்களின் அடிமைமுறி என்று வரையறுக்கிறோம். ஒடுக்குமுறையை நீக்கும் படியான திருத்தங்கள் செய்வதற்கோ இந்த அரசமைப்பை வேறு அரசமைப்பால் மாற்றீடு செய்வதற்கோ வாய்ப்பே இல்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டுதான் விடுதலை ஒன்றே வழி என்கிறோம்.

6. தேசிய ஒடுக்குமுறையில் மொழி ஒடுக்குமுறை முகன்மையான ஒரு கூறு, ஆனால் வேறு கூறுகளும் உள்ளன. மொழி போலவே, ஆட்சிப் புலம், பண்பாடு, பொருளியல் வாழ்வு… இந்தக் கூறுகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டால் தேசிய ஒடுக்குமுறையை இனங்காணலாம். இந்த எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் அரணாக இருப்பது அரசியல் ஒடுக்குமுறை. அரசியல் ஒடுக்குமுறைக்கு ஒரே தீர்வு அரசியல் விடுதலைதான்.

7. இந்தியாவில் தமிழ்த் தேசத்துக்கோ பிற தேசங்களுக்கோ ஆட்சிப்புலக் கட்டுக்கோப்பும் எல்லைகளின் மீறவொண்ணாமையும் கிடையாது. இது புலம்சார் ஒடுக்குமுறை. எல்லா மாநிலங்களும் சேர்ந்து முயன்றாலும் இந்திய ஒன்றியத்தைக் கலைக்க முடியாது.

ஆனால் நாடாளுமன்றத்தில் வந்துள்ள உறுப்பினர்களின் எளிய பெரும்பான்மையுடன் தீர்மானம் இயற்றினாலே மாநிலத்தைக் கலைக்க முடியும். கலைக்கவும், எல்லைகளை மாற்றவும் பெயரை மாற்றவும் எல்லா அதிகாரமும் தில்லிக்குத்தான். சிக்கிமை இந்தியாவுடன் இணைத்துக் கொண்டார்கள். கச்சத்தீவை இலங்கைக்கு எடுத்துக் கொடுத்தார்கள், சம்மு காசுமீரத்தைக் கலைத்து விட்டார்கள். இவையும் புலம்சார் ஒடுக்குமுறைக்குச் சான்றுகள்.

8. பார்ப்பனியப் பண்பாட்டுத் திணிப்பின் அடையாளமாகத்தான் சமற்கிருதத் திணிப்பு முயற்சிகள் நடக்கின்றன. இந்தியத் தேசியக் கல்விக் கொள்கை என்பது மொழி ஒடுக்குமுறை மட்டுமன்று, அது பண்பாட்டு ஒடுக்குமுறையும் ஆகும்.

9. பொருளியல் ஒடுக்குமுறை என்பதன் ஒரு கூறு இயற்கைச் செல்வங்கள் மீதான இறையாண்மை மறுக்கப்படுவதாகும். பொருளியல் ஆக்கத்துக்கும் பகிர்வுக்குமான கொள்கை வகுக்கும் உரிமை இல்லையென்றால் அதுவும் ஒடுக்குமுறைதான். காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட ஆற்றுநீர் உரிமை மறுக்கப்படுவதும் பொருளியல் ஒடுக்குமுறையின் ஒரு கூறுதான்.

10. மொழி ஒடுக்குமுறைக்குப் பின்னால் வகுப்பு (வர்க்க) ஒடுக்குமுறையும் சமூக ஒடுக்குமுறையும் ஒளிந்திருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதே போல் தேசிய விடுதலை என்பதிலும் வகுப்பு நலனும் ஒடுக்குண்ட சமூக வகுப்பு நலனும் அடங்கியிருப்பதைத் தெரிந்து கொண்டு முன்செல்வோம்.

11. மொழிச் சிக்கலில் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற பண்டித சவகர்லால் நேருவின் உறுதிமொழி ஒரு மோசடி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அது இந்தியை மற்றவர்கள் ஏற்கச் செய்வதற்கான தூண்டில் புழுவாக ஆங்கிலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.

தமிழ் முதலான பிற மொழிகளுக்கு என்றுமே இடம் இல்லாமற்செய்து விடுகிறது. இந்தியை எதிர்த்துப் போராடிய திமுக நேரு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டது பெரும்பிழையாகும்.

12. இந்தித் திணிப்பு என்பது ஏதோ ஓர் அரசாங்கத்தின் அல்லது அமைச்சரின் முடிவு அல்ல. அது இந்திய அரசமைப்புவழிப்பட்ட திணிப்பு ஆகும், இந்தத் திணிப்பை மொழித் தளத்திலோ பண்பாட்டுத் தளத்திலோ மட்டும் தடுத்து விட முடியாது. அரசியல் தளத்தில் ஒடுக்குமுறையை எதிர்த்து விடுதலைக்காகப் போராடுவதுதான் நம்முன்னுள்ள வழி.

படிக்க வேண்டிய நூல்கள்:

1) தியாகு: முடியவில்லை மொழிப்போர்!
2) தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்: கொள்கை அறிக்கை.
3) இந்திய அரசமைப்புச் சட்டம், பகுதி 17.

- தியாகு