உன் இரத்தத்துடன் துலங்கும் கோடாரிகளும்,

        உன் காயங்களில் ஒட்டியிருக்கும் சவுக்குகளும் ஒளிரும்படி

புராதன விளக்குகளைப் பற்ற வைக்க

        பழங்கற்களை உரசி

செத்துக் கிடக்கும் உங்கள் உதடுகளுக்காகப்

        பேச வந்திருக்கிறேன் நான்.

- சிலிக்குயில் பாப்லோ நெருடா

பிரசாந்த் பூசன் மீதான நீதிமன்ற அவதிப்பு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் ஒற்றை ரூபாய் அபராதம் விதித்துத் தன்னைத்தானே அவமதித்துக் கொண்டுள்ளது. நீதி நிர்வாகம் சட்டம் பத்திரிகை யாவும் ஆளும் வர்க்கத்தின்  அடக்குமுறைக் கருவிதான் என்ற தலைவர் லெனின் வார்த்தைகளை மீண்டும் மெய்ப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இருந்த போதிலும், அதிகாரங்களை எதிர்த்ததற்காக உண்மைகளைப் பேசத் துணிந்த பூசனைத் தண்டிக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியே. ஊழ், மறுபிறப்பு, கடவுள் நம்பிக்கை, சடங்கு சம்பிரதாயம் என 21ஆம் நூற்றாண்டிலும் பிற்போக்கு மூடநம்பிக்கைகளின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பிஜேபி ஆர்எஸ்எஸ்சின் அதிகாரம் வீசும் எலும்புத் துண்டுகளுக்குக் காத்திருக்கும் சுயநலக் கும்பலின் வேட்டைக்காடாக அரசு மற்றும் அரசுசார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் எண்ணற்றோர் மாறி வருகின்றனர்.

இந்தியாவின் பன்முக கலாசார மொழி அடையாளங்களை அழித்து ஒற்றை இந்து, இந்தி, இந்தியா சர்வாதிகார முகாமாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவின் பல்தேசிய இனங்களின் உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுக்கத் திட்டமிடும் ஆளும் வர்க்க நயவஞ்சகக் கும்பலால் பதவி பெற்ற நீதிபதிகளிடமிருந்து இந்திய மக்கள் எதை எதிர்பார்க்க முடியும்?

நீதிபதிகள் பற்றியும் நீதித்துறை பற்றியும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துகளுக்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதும் அதை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதும், மன்னிப்புக் கேட்குமாறு உச்ச நீதிமன்றம் கெஞ்சியதும், அவர் மறுத்த பின்பு மன்னிப்புக் கேட்கக் கால அவகாசம் வழங்கியதும், அவர் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று உறுதியாக இருந்த பின்னர் 1 ரூபாய் அபராதம் விதித்து, அதைக் கட்டத் தவறினால் 3 மாத சிறைத் தண்டனை என்று அறிவித்ததும்… இந்திய உச்ச நீதிமன்றத்தின் உயர் பதவிகளில் இருப்போரின் உண்மை முகங்களை மக்கள் அறிந்து கொள்ள இவ்வாறு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

மேல்முறையீடே விமர்சனம்தானே

எந்த வழக்கிலும் மேல்முறையீடு செய்வதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டின் போது பாதிக்கப்பட்ட வழக்காடி, வழக்கறிஞர் இருவரும் ”கீழமை நீதிமன்றம் ஆராயாமல் சீர்தூக்கிப் பார்க்காமல் முடிவெடுத்து விட்டதாகத்தான்” மேல்முறையீடு தாக்கல் செய்கிறார்கள்.  அது கீழமை நீதிமன்றத்தை, நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்வதாகத்தானே பொருள்?

விமர்சனத்தை விரும்பாத தனிமனிதனோ சமூக அமைப்புகளோ நாடோ ஜனநாயகத் தன்மையற்றுப் போவதோடு, அதில் ஒரு சர்வாதிகாரப் போக்கும் தழைக்கிறது. எனவே எல்லாவற்றையும் விமர்சிக்க இருக்கும் உரிமையை அரசோ, நீதிமன்றமோ தடை செய்வது ஜனநாயகத்திற்கும் மக்களுக்கும் நல்லதன்று.

இந்திய நாட்டின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதற்காக மோதியை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியுமா? எவ்விதமான விமர்சனமும் இன்றி மக்களை ஊமையாக்கப் பார்க்கிறதா இந்திய உச்ச நீதிமன்றம்?

மேலும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருப்பவர்களும் மனிதர்கள்தானே? அதனால்தானே செண்பகம்-எதிர்-சென்னை மாகாணம் என்ற வழக்கில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் நடத்தி இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர முடிந்தது.

இன்று எக்காலத்திலும் இல்லாத அளவில் பாசிச பிஜேபி அரசாங்கம் இந்தியாவின் ஏனைய அரசு உறுப்புகளான இராணுவம், தேர்தல் ஆணையம், சிபிஐ, வருமான வரித் துறை, பத்திரிகை, மீடியா என அனைத்துத் துறைகளையும் சுதந்திரமற்ற, ஜனநாயகமற்ற அமைப்புகளாக மாற்றுவதற்காகத் தனது கும்பலைக் கொண்டு நிரப்பி வருகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்னர் கவர்னர் பதவி உட்பட பல பேரங்கள் நடத்தப்படுகின்றன. அதன் மூலம் தனது நெடுநாளைய கனவான இந்து, இந்தி, இந்தியா என்ற கனவை நிறைவேற்றத் துடிக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் பாசிச பிஜேபி அரசின் நடவடிக்கைகள் நாட்டை அறிவிக்கபடாத அவசர நிலையில் வைத்திருக்கின்றன.

கருத்துக்கள் கூற முடியாத அளவில் அச்சத்தை உண்டாக்கிக் கருத்தியலாளர்களைக் கொலை செய்து ஏனையோரிடம் ஒரு அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. இஸ்லாமியர்கள் நாட்டின் இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்பட்டுள்ளனர். பாராளுமன்றம் பிஜேபியின் தொழுவம் ஆகி விட்டது. எந்தப் பெரிய முடிவுகள் மீதும் பாராளுமன்றத்தில் விவாதமின்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

நண்பர்களே இது சோதனைக் காலம்,

உங்கள் இதயத்தைப் பட்டறையில்

கொடுத்து சம்மட்டியால் அடித்து

கூர்தீட்டிக் கொள்ள உகந்த காலம்

இதையேதான் நமது எதிரிகள் நமக்கு

வரலாற்றின் சகல திசைகளிலிருந்தும்

தொடர்ந்து பரிசளித்தார்கள்                         

அதுதான் நமக்கு வேண்டும்  

அழுகையோ கண்ணீரோ பச்சாதாபமோ ஒருபோதும்

நம் இதயத்தை வலுவேற்றாது

மீண்டும் சொல்கிறேன் என் மூதாயின் தொல்மரபின் ;

வார்த்தைகள் ரத்தம் தோய்ந்ததேயானாலும் அதில் துலங்கும் ஒளி விடுதலையை போரிசையை முழங்குபவை

நடக்கட்டும் நமக்கு முன்னமே தெரிந்ததேயானாலும்

நமது மக்களிடம் எதிரியின் பகைப்புலத்தைப்

பறைசாற்றி முரசறைய நமக்குத் தெரியாது

ஏனெனில் நமது வித்து அன்பால் கிளைப்பது

அவனைப் பறைசாற்ற அவனால்தான் முடியும்

இனி நமக்கான காலம்;

அவனைஅவனே எவ்வளவு முடியுமோ அவ்வளவும் காட்டிவிட்டான்

ஆனாலும் அவன் உண்டாக்கத் துடித்த பயம் நம்மிடம் விளையாது

நாம் நம் ரத்தம் கண்ணீர் வியர்வை குழைத்து ஒரு வரலாற்றை

கட்டி எழுப்ப தயாராகத் தொடங்குவோம்

இனி வீசப்போவதோ புயல்.

- கு.பால்ராஜ்