உலகின் புதிய நாட்டை உருவாக்கி சாதனை படைத்த சூடானிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

கடந்த 09-01-2011 முதல் 15-01-2011 வரை நடந்த வாக்குப்பதிவில் 98% பேர் தனிநாட்டுக்கான வாக்கை செலுத்தியிருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

sudan_350ஆப்ரிக்காவின் பெரிய நாடு சூடான். வடக்கில் முசுலிம் மதத்தினர் பெரும்பான்மையாகவும் தெற்கில் கிருத்துவ மதத்தினரும் வாழ்கின்றனர்.

ஆங்கிலேயர் தன் வசதிக்காக தெற்கு, வடக்கு சூடானை இணைத்து ஆட்சி புரிந்து விட்டு, போகும்போது வடக்கு சூடானிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வெளியேறினர். அப்போதே தென் சூடானிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஆளுமை இன்மையால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. ஏனெனில் இரு சூடானுக்கும் மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் வேறுபட்டது.

அதன்பின் நடந்தது முப்பது வருட உள்நாட்டு யுத்தம்.... லட்சக்கணக்கான மக்கள் பலிகடா ஆயினர்.

இங்கிலாந்து நாட்டின் காலனியாதிக்கத்தில் சூடான் இருந்தது சுமார் 57 ஆண்டுகள். 400 மொழிகளுக்கு மேல் பேசப்பட்டு வந்தாலும் பெரும்பான்மையானோர் பேசுவது அரபி மற்றும் ஆங்கிலம் மட்டுமே. சூடான் விடுதலை பெற்றது 01- சனவரி 1956.

கடைசியாக 2002 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தையின் முடிவாக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த உடன்பாடு ஏற்பட்டது.

ஐ.நா.வின் சிறப்புக் குழுவினரால் இந்த வாக்கெடுப்பு சனவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது கடைசி வெற்றி அறிவிப்புக்காக காத்திருகின்றனர்.

தென் சூடானின் சுதந்திர அறிவிப்பு வெளியிடும் நாள் 14-பிப்ரவரி- 2011. அன்று உலகின் புதிய நாடாக உலா வரப்போகிறது தென்  சூடான்.

வாழ்த்துகள் தென் சூடான்

Pin It