புது வகை கொரோனா அல்லது கோவிட் - 19 என்னும் கொள்ளை நோயின் தாக்கம் இன்று உலகை உலுக்கிக் கொண்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் உலகில் 26,37,314 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,83,559 பேர் மரணமுற்றுள்ளனர். இந்தியத் துணைக் கண்டத்தில் 16,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 686 பேர் இறந்துள்ளனர்.

இது உலகப்போர்; ஆனால் மறைமுகமான, அறிவிக்கப்படாத போர். கண்ணுக்குத் தெரியாத பகை கட்டுக்கடங்காத களத்தில் நிற்கிறது. "நம்முடைய நுரையீரல்களைக் கவ்விக் கொள்ளக் காத்திருக்கின்ற, கண்ணுக்குப் புலப்படாத, செத்துப் போகாத, ஆனால் உயிரும் இல்லாத சின்னஞ்சிறிய உறிஞ்சு குமிழ்கள்" கொண்ட நுண்ணுயிரி என்று வர்ணிக்கிறார் எழுத்தாளர் அருந்ததி ராய்.

மேற்குலக ஊடகங்கள் நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை போரின் முன் களப்பகுதி (Frontline Zone) என்றே வர்ணிக்கின்றன. உயிர்காப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரை முன்கள வீரர்கள் (Frontline Warriors) என்றே அழைக்கின்றன.

கொரோனா எதிர்ப்புப் போரில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. தங்களின் உயிரைத் துச்சமென மதித்து மக்களைக் காக்கப் போராடிக் கொண்டுள்ளனர். அதில் எண்ணற்ற மருத்துவர்கள் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மருத்துவர்கள் தங்கள் விலைமதிப்பில்லா உயிரை ஈகம் செய்துள்ளனர். உலகம் முழுவதும் இதுதான் நிலை இத்தாலியில் 6,200 பேர் ஸ்பெயினில் 6,500 பேர் சீனாவில் 3,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் சில இடங்களில் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களில் 50% பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவிட் - 19 நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 நாடுகளில் 22,073 சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக நல்வாழ்வு அமைப்பு (WHO) கூறியுள்ளது (Business Standard, Apr -12).

உலகம் முழுவதும் நடைபெறும் கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தை இரண்டு வகையாக பிரித்து விடலாம். பொது சுகாதாரக் கட்டமைப்பினை வலுவாக வைத்துள்ள மக்கள் சீனம், கியூபா மற்றும் சில ஐரோப்பிய மக்கள்நல அரசுகள் (Welfare States) ஒரு வகையாகவும் மருத்துவத் துறை முற்றிலும் தனியார்மயமாக்கப்பட்ட அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகள் மற்றொரு வகையாகவும் போராடி வருகின்றன.

பொது சுகாதாரத் துறையை வலுவாக வைத்துள்ள நாடுகள் கொரோனா எதிர்ப்புப் போரில் அதிக சேதம் இல்லாமல் மீண்டு விட்டன. அதேநேரம் மருத்துவத்தைத் தனியார்மயம் ஆக்கியுள்ள நாடுகள் அதிக உயிர்ச் சேதத்தைச் சந்தித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் 8,00,926, இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 40,073. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளிலும் நோய் தொற்றும் உயிர்ப் பலியும் மிகுந்துள்ளன.

மருத்துவத் துறையைத் தனியார்மயம் ஆக்கிய நாடுகளிலும் கூட ஜெர்மனி, தென் கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகள் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணியைத் திறம்படக் கையாண்டு வருகின்றன. அதற்கு அந்த நாடுகளின் நிர்வாகத் திறன் என்பதையும் தாண்டி அவை மக்கள் நலன் மீது காட்டிய அக்கறையும் அதற்கு இணக்கமான முறையில் அந்த அரசுகளிடம் நிலவிவரும் மக்கள் நலன் குறித்த கொள்கைகளுமே எனத்தகும்.

பொது சுகாதாரத் துறையை தனியார்மயம் ஆக்கிய நாடுகள் தற்போது அதில் இரு முனைகளில் திணறி வருகின்றன. ஒன்று மக்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பது; இரண்டு நோய்த்தொற்றை எதிர்த்துப் போரிடும் சுகாதாரப் பணியாளர்களை நோயிலிருந்தும் பிற சிக்கல்களிலிருந்தும் பாதுகாப்பது. இவை இரண்டிலுமே இந்த நாடுகள் கடும் தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்துள்ளன. இதன் விளைவாகப் பெருமளவிலான மக்களை இழந்தது மட்டுமின்றி போரின் முன்களப் படைவீரர்களான திறன் வாய்ந்த மருத்துவர்களையும் அவை பலிகொடுத்து வருகின்றன. தற்போது இந்த படிப்பினையிலிருந்து கற்றுக் கொண்டதன் விளைவாக ஸ்பெயின் நாடு மருத்துவத்தைப் பொதுத்துறையாக மாற்றியுள்ளது. அயர்லாந்து கொரோனா தடுப்புக் காலம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

இந்தப் பின்புலத்தில்தான் இந்திய மற்றும் தமிழகச் சூழல்களை பார்க்க வேண்டியுள்ளது. இந்தியத் துணைக்கண்டத்தில் கொரோனா பெருந்தொற்றானது அதிகாரபூர்வமாக இரண்டாம் நிலையில் உள்ளது, அது எந்த நேரத்திலும் சமூகப் பரவல் நிலையை அடையலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கெடுவாய்ப்பாக இந்த நேரத்தில் இந்திய தலைமையமைச்சராக இந்துத்துவ கொடுநெறி வெறி பிடித்த நரேந்திர மோதி பதவியில் உள்ளார். இது சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. மதவெறி, பதவிவெறி, தன்முனைப்பு ஆகியவற்றின் ஆளுருவமாக இருப்பதால் இந்தப் பெருஞ்சிக்கலையும் கூட அவர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையாளுகிறார்.

இந்தியா முழுமையும் எந்தவிதத் திட்டமிடலும் இன்றி ஊரடங்கு அறிவித்துள்ளார். இதன் காரணமாகப் பல இலட்சக்கணக்கான உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை எளிய அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பெருந்தொற்றையும் கூட முதலாளிகளின் கொள்ளை இலாப நலனுக்குத் திருப்பி விடப் பார்க்கிறார். கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றத் ’தலைமையமைச்சர் நலம்’ (PM CARES) என்ற புது உத்தியைக் கடைபிடிக்கிறார். மாநிலங்களுக்கு மிகக்குறைந்த நிதி ஒதுக்கி மாநிலங்களின் வயிற்றில் அடிக்கிறார். இவை எல்லாவற்றையும் விட எரிகிற வீட்டில் பிடுங்கி எடுத்து செல்வது போல மாநிலங்களுக்கிருந்த சுகாதார உரிமைகளைப் பறித்து வருகிறார். நா. உ. (MP)க்களின் நிதியை ஜனநாயக விரோதமாக அவர்களின் அனுமதி இன்றியே பறித்துள்ளார். இதன்மூலம் மக்கட்பகராளிகளின் உரிமையில் தலையிடுகிறார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 30 நாட்களுக்கு மேலான பிறகும் சொல்வித்தைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இதை தட்டிக்கேட்க வக்கற்ற நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி போன்றோர் உள்ளனர்.

சுகாதாரக் கட்டமைப்பிலும் கூட இந்தியா முழுமையிலும் ஒரே நிலையில் இல்லை. பீகாரிலும், குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் அவை நேர்கோட்டில் அமையவில்லை. பீகார் போன்ற பகுதிகள் பொதுசுகாதார கட்டமைப்பில் பின்தங்கியிருக்கும் போது தமிழகம் ஒப்பீட்டளவில் இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக அமைந்துள்ளது. அதற்குத் தமிழகத்தின் சமூகநீதி அடித்தளம் ஒரு காரணமாகும். நோய்ப் பரவலிலும் கூட பல்வேறு மாநிலங்களும் பல்வேறு தன்மையில் இருக்கின்றன. மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்றவை மிக மோசமான பாதிப்பை எட்டியுள்ளன. எனவே நோய் தீர்க்கும் தன்மை கூட இந்தியா முழுமையும் ஒரே முறையில் அமையப் போவதில்லை.

தமிழகப் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மூன்று படிநிலைகளை கொண்டது. பொது சுகாதாரத்துறையில் மருத்துவம், ஊரகப் பணிகள் நலத்துறை, மருத்துவக் கல்வித் துறை இவை மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன கொரோனா தடுப்புப் பணியில் பொது சுகாதாரத் துறையின் பங்கு முதன்மை வாய்ந்தது. பொது சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகப் பொது சுகாதாரத் துறை பலமாக இருப்பினும் அதை செயல்படுத்த வேண்டிய பொறுப்பில் அரசுதான் உள்ளது. ஆனால், நிர்வாகத் திறனற்ற, மக்கள்நலனில் கிஞ்சித்தும் அக்கறையற்ற அரசாக எடப்பாடி அரசு இருப்பதால் மக்களின் உயிர்காப்புப் போரில் சிக்கல் எழுந்துள்ளது.

போர்க் களத்தில் ஒரு வீரனுக்குப் படைக்கலன் எவ்வளவு அவசியமோ அதே அளவு மருத்துவருக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம். கொரோனா தடுப்புப் பணியில் பணி புரியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு (PPE KITS) பாதுகாப்பு உடைகள், N95 முககவசம், மூன்றடக்கு முகக்கவசம் சுகாதாரமான உணவு, தங்குவதற்கு இருப்பிடம் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது தவிர பணிநேரம் முடிந்த பின்பு அவர் தனித்திருக்கத் தேவையான பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழக முதல்வர், சுகாதார அமைச்சர், சுகாதாரத்துறை செயலர் மூவரும் இந்தப் பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு பதிலாக தொடர் பொய்யுரைப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு வைத்துள்ளதாகவும் இவை தவிர புதிதாக வாங்க ஆணை பிறப்பித்துள்ளதாகவும் கூறி வருகின்றனர். பிபிஇ மட்டுமே 2 லட்சம் எண்ணிக்கையில் கையிருப்பு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் கூறுகிறார். அவ்வாறாயின் தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி மருத்துவப் பணியாளர்களுக்கு அவை வழங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் போதிய உபகரணங்கள் வழங்கவில்லை என்று மருத்துவர்கள் குற்றஞ்சாட்டினர். எழும்பூர் மருத்துவமனையில் மருத்துவர்கள் தாமே முகக்கவசம் வாங்கிகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன் எதிரொலியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

உலக நல்வாழ்வு அமைப்பு வகுத்துக் கொடுத்துள்ள நெறிமுறைகளுக்கு மாறாக ஆறு மணி நேரத்திற்கு பதில் 12 மணி நேரம் வரை மிகக் கடுமையாக வேலை செய்ய மருத்துவப் பணியாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவ்வாறு பணி செய்யும் போது அவர்களுக்குத் தேவையான சுகாதாரமான உணவு, தங்குமிட வசதிகள் ஆகியவற்றை அரசு வழங்க மறுக்கிறது.

இவற்றைக் கண்டித்து கோவை மருத்துவமனையிலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் போராட்டக் குரல் எழுப்பினர். இப்படி இவர்கள் குரலெழுப்பும் போதெல்லாம் தனது கையாலாகாத்தனத்தை மூடிமறைக்க பழனிச்சாமி அரசு பொய் சொல்வது, அதில் அம்பலப்படும் போது அம்பலப்படுத்துபவர்களை மிரட்டி அச்சுறுத்துவது, பழிவாங்குவது என்று கீழ்த்தரமான வழிமுறைகளைக் கையாள்கிறது. மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் இவற்றுக்குப் பணிய மறுத்தால் சில சில்லறை அறிவிப்புகளை வெளியிடுவது என்ற அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறது.

தமிழக அரசின் பொறுப்பற்ற அலட்சியத்தால் தமிழகத்தில் இதுவரை 21 சுகாதாரப் பணியாளர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களில் 19 பேர் மருத்துவர்கள். தடுப்புப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்களிலேயே ஒரு பிரிவினருக்கு வேறு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ஒரு வார்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அரசு நேரடியாக பாதுகாப்பு உடை வழங்குவதை ஏற்றுக்கொள்கிறது அதேநேரம் வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதில் சிக்கல் என்னவெனில் ஒரு நாட்டில் உள்ள மருத்துவர்களுக்கு இணையான பணி இவர்களுக்கும் உள்ளது. இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் நோயாளிகளை கண்டறிவதில் இவர்களுக்கு ஒரு முகாமையான பங்கு உள்ளது எனினும் கூட இவர்களின் பாதிப்புகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறு தமிழக அரசின் பொறுப்பற்ற அலட்சியத்தால் தமிழகத்தில் 29 சுகாதாரப் பணியாளர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் இவர்களில் 19 பேர் மருத்துவர்கள்.

இதுதவிர மருத்துவர்கள் சந்திக்கின்ற மிக முக்கியமான சிக்கல்களில் ஒன்று ஆள் பற்றாக்குறை. குறைந்த ஆட்களைக் கொண்டு அதிகப் பணிகள் செய்வதால் மிகையான பணிச்சுமை ஏற்படுகிறது. இது மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு மன அழுத்தமும் உடல்நலக் குறைவும் ஏற்படச் செய்கிறது. தற்போது கூடுதலாக மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் பணியமர்த்துவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் மருத்துவர்களுடன் ஓரளவு இணக்கமாக அரசு நடந்து கொண்டாலும் கூட இதற்கு முன்பு மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட போது, மிக மோசமான ஒரு கொடுங்கோலரசு போல் நடந்து கொண்டு போராட்டத்தை அடக்கியது. இதன் தொடர்ச்சியாகவே மருத்துவர் சங்கத் தலைவர் நரசிம்மன் இறந்து போனதாக மருத்துவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்,

தொழிற்சாலைகளில் உற்பத்தி நடைபெற வேண்டுமானால் பணிச்சூழல் சுமுகமாக இருப்பது அவசியம். இதனால்தான் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்யும் போது அமைதியான பணிச் சூழலை ஏற்படுத்த தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களுடனும் மூன்றாம் தரப்பாக அரசுடனும் அமர்ந்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்துகிறது தொழிலாளர் நல வாரியம் மூலம் இதை மேற்கொள்கிறது.

ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் விஷயத்தில் அரசு தானே ஒரு முதலாளியாக மாறி பணிச் சூழலைக் கெடுத்து விடுகிறது மருத்துவப் பணியாளர்கள் இந்த நேரத்தில் தங்கள் பணியைச் செயலூக்கத்துடன் செய்ய வேண்டுமெனில அவர்கள் மீதுள்ள சுமைகள் அகற்றப்பட வேண்டும். குறிப்பாகக் கடந்த காலத்தில் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்குதல் நடவடிக்கைகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும். அரசு மருத்துவர்கள் போராட்டத்தை ஒட்டிப் பழிவாங்கும் நடவடிக்கையாக 118 மருத்துவர்கள் இட மாறுதல் செய்யப்பட்டதைக் கைவிட வேண்டும்.

இதுவரை அரசு அப்படி ஒரு கண்ணியமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றே காட்டி வருகிறது. பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் ஒருசிலர் இப்போது மரணமடைந்தும் விட்டனர். அவர்கள் இறுதி நிகழ்வு கண்ணியமான முறையில் நடைபெறவும் அரசு போதிய அக்கறை செலுத்தவில்லை இதன் விளைவாக மருத்துவர்களின் இறந்த உடல்களைப் பல மணி நேரம் நல்லடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அது மட்டுமின்றி இந்த மருத்துவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியைத் தவறாகப் புரிந்து கொண்ட பொதுமக்கள் அதனைத் தடுத்து நிறுத்தியதுடன், மருத்துவர்களின் உறவினர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.

உலகு தழுவிய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி, கொரோனா எதிர்ப்புப் போரில் தளபதிகளாக, போர்வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர். எனவே அவர்களைப் பாதுகாப்பது இந்த போரைப் வெற்றிகரமாக நடத்த அவசியமானது. ஒருவேளை அவர்களில் ஒருவரை நாம் இழக்க நேரிட்டால் அந்த இடத்தில் வேறொருவரைப் பணியமர்த்த முடியாது இந்த அடிப்படை உண்மையை அரசும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்குப் புரிந்து கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை அரசு களைய முன்வர வேண்டும். அவ்வாறு இல்லாமல் அலட்சியத்துடனும் பொறுப்பற்ற தன்மையுடனும் நடந்து கொண்டால் தமிழ்ச் சமூகமும், ஏன், மொத்த மனித குலமும் பேரழிவை சந்திக்கும்.