கேள்வி: காஷ்மீர் சிக்கல் எழுந்ததும், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசுகிறார்கள். கம்யூனிஸ்டுகளும் வேறு சிலரும் இந்திய அரசு இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக நடந்து கொள்கிறது என்கிறார்கள். கூட்டாட்சி மாண்புகளைப் பாதுகாப்போம் என்கிறார்கள். பன்மைத்துவத்தை அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது என்கிறார்கள். திராவிட இயக்கத்தினர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை அரைக் கூட்டாட்சி (quasi-federal Constitution) என்கிறார்கள். தமிழ்த் தேசியர்களோ தேசிய இனங்களின் உரிமை பறிக்கப்படுகிறது என்கிறார்கள். நீங்களும் உங்களுடைய பதிவில், காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே! தமிழ்நாடு தமிழருக்கே! என்கிறீர்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தை தேசிய இனங்களின் அடிமை சாசனம் என்கிறீர்கள். இவ்வளவும் இந்திய அரசமைப்புச் சட்டம் கொடுத்த பேச்சுரிமையில்தானே பேசுகிறீர்கள்? உங்கள் கருத்து என்ன? இந்தியா கூட்டாட்சியா? அரசமைப்புச் சட்டத்தில் என்ன இருக்கிறது அல்லது என்ன இல்லை? எதற்காக அதனை அடிமை சாசனம் என்கிறீர்கள்? தமிழ்நாடு தமிழருக்கே என்பது சாத்தியமா? அரசமைப்புச் சட்டம் அனுமதிக்குமா? (--- திராவிட செல்வன், தேனி)

பதில்: இந்திய அரசமைப்பினை மாண்புகளென்றும் மரபுகளென்றும் மானசிகமாக அணுகுவது மார்க்சியர்களுக்கு அழகன்று. அரசமைப்பு உருவாக்கத்தின் போது, அவையில் கூட்டாட்சிக் கொள்கை 'நோக்கமாக' இருந்து விவாதிக்கப்பட்டது என்பது உண்மைதான். இந்தக் காரணத்திற்காகவே இந்திய அரசமைப்பு கூட்டாட்சி அமைப்பு என்று ஏற்க இயலுமா? புறவய மெய்ம்மை என்னவென்று பார்க்க வேண்டாமா?

சோசலிசக் கொள்கைகள் கூட இந்திய அரசமைப்பின் இலக்குகளாகவும், உள்ளடக்கமாகவும் இடம்பெற்றிருப்பதாக அம்பேத்கர் கூறுகிறார். "இறைமையுள்ள சோசலிச மதச்சார்பற்ற சனநாயகக் குடியரசு" என்று அரசமைப்பின் முகப்புரையிலேயே கூட 'சோசலிசத்தைச் சேர்த்தும் விட்டார்கள். அதற்காக, இந்தியா சோசலிசக் கொள்கையுடைய தேசம் என்று கூற முடியுமா? அது மக்களை ஏய்ப்பதாகும்தானே? சோசலிசத்திற்கு அறிவியல் அடிப்படையில் பொருள்கொள்ளும் மார்க்சியர்கள் கூட்டாட்சிக்கு மட்டும் மானசிகமாகப் பொருள்கொள்ள முடியுமா?

எந்தவோர் அரசமைப்பும் ஆளும்வர்க்க நலன்களை நேரடியாக வெளியிடுவதாகவோ, ஆளும்வர்க்க நலன்களை மட்டுமே வெளியிடுவதாகவோ அமைந்திடாது. கடந்தகாலப் போராட்ட வரலாற்றையும், சமூக விழிப்புநிலையையும் பொறுத்து, ஆளும்வர்க்க நலன்களுக்கு உட்பட்டு, பல்வேறு வர்க்கங்களின் நலன்களையும் வெளியிடுவதாகவே அமையும். இருப்பினும், இறுதி நோக்கில் ஆளும்வர்க்க நலன்களுக்குப் பயன்படுவதாகவும், ஆளும்வர்க்க நலன்களை உறுதிசெய்வதாகவுமே அமையும். அவ்வகையில் இந்திய அரசமைப்பின் கூட்டாட்சிச் சாயலும் கூட, பல்வேறு தேசிய இனங்கள் கட்டுண்டுள்ள மெய்மை எதிர்மறையாக வெளிப்படும் தவிர்க்கவியலாச் சுவடு தானே தவிர, சாயலே சாறமாகி விடாது. இந்திய அரசமைப்பு இறுதிநோக்கில் அப்பட்டமான இந்தி மேலாதிக்க, இந்திய வல்லாதிக்கச் செயல்திட்டமே ஆகும். இதை மறைத்து இந்திய அரசமைப்பு கூட்டாட்சித் தன்மையுடையது, கூட்டாட்சி மாண்புகள் கொண்டது, பன்முகத் தன்மையை ஏற்கிறது என்று சொல்லி, இந்தியக் கட்டமைப்பின் பண்பினையும், அரசமைப்பின் சாறத்தையும் மறைத்து தப்பெண்ணங்கள் விதைப்பது இந்திய ஆளும்வர்க்கத்திற்கு வால்பிடிப்பதே ஆகும்.

இந்திய அரசமைப்புதான் எனக்கு (நமக்கு) பேச்சுரிமை வழங்கியது என்கிறீர்கள். இது அதனளவில் முழு உண்மையன்று. எதுவொன்றையும் கடந்த கால வரலாற்றுத் தொடர்ச்சியாகப் பார்க்கத் தவறினால், நிகழ் காலத்தைப் புரிந்துகொள்ளவும் இயலாது, எதிர்கால நோக்கத்திற்குக் களம் அமைக்கவும் இயலாது. இந்திய அரசமைப்பு இயற்றப்படுவதற்கு முன் பேச்சுரிமை இருந்திருக்கவில்லையா? பிரித்தானிய ஆட்சியில் மாநாட்டு மேடைகளில் வாயைப் பொத்திக்கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்து விட்டு எழுந்து சென்றார்களா? என்று திருச்சி செல்வேந்திரன் அவர்கள் வேடிக்கையாகக் கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது. ஒருவேளை அரசமைப்பு பேச்சுரிமையை மறுத்தாலும் கூட, நாம் போர்த்திக்கொண்டு படுத்திருக்க மாட்டோம் என்று நம்புகிறேன்.

அகண்ட பாரதக் கனவு போல, இந்தியாவில் கூட்டாட்சி என்பது மாண்புகளாகவும் மரபுகளாகவும் இருக்கிறது என்று நம்புவதற்கும் பேசுவதற்கும் அரசியல் செய்வதற்கும் எவர்க்கும் உரிமை உண்டு! அது தமிழர்களின் தாலியறுக்கும் அரசியல் என்று சொல்வதற்கு நமக்கும் உரிமையுண்டு!

அரசமைப்பில் என்ன இருக்கிறது?

இந்திய அரசமைப்பு ஒரு "எழுதப்பட்ட அரசமைப்பு" ஆகும். அதாவது, எழுதப்பட்ட அரசமைப்பு என்பதும் எழுதப்படா அரசமைப்பு என்பதும் சட்டவியலில் அரசமைப்பு வகைகள் ஆகும். எழுதா அரசமைப்பு என்பது, பெருமளவில் வரலாற்று வழியில் பழக்கவழக்கங்களாகவும் மரபுகளாகவும் மானசிகமாகவும் நடைமுறையிலிருக்கும் சமூக விதிகள், வெவ்வேறு காலங்களில் நடைமுறைக்கு வந்த ஒப்பந்தங்கள் சாற்றுரைகள் சட்ட விதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பாகும். எழுதப்பட்ட அரசமைப்பு என்பது திட்டமிட்டு இயற்றப்பட்டு குறிப்பிட்ட நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் சட்டவிதிகளின் அமைப்பு ஆகும். இது தெளிவானது. ஆவணமாக இருப்பது. எழுதப்பட்ட இந்திய அரசமைப்பிற்கு மானசிக விளக்கம் கொடுப்பதெல்லாம் சுப்பிரமணியன் சுவாமிகளின் வேலை. நாம் அதைச் செய்ய வேண்டாம்.

கூட்டாட்சிக்கான இலக்கணத்தையும், கூட்டாட்சிக் கோட்பாட்டின் விளக்கங்களையும் சற்று விரிவாகவும் உதாரணங்களுடனும் பார்த்தால்தான், இந்திய அரசமைப்பில் என்ன இருக்கிறது, என்னவாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலும். அரசமைப்பியல் வல்லுநர் கே.சி. வியர் கூட்டாட்சி அமைப்புக்கான இலக்கணமாகக் கூறுவது "மைய அரசும் மாநில அரசுகளும் தங்களுக்குள் ஒத்துழைப்புடனும் சுதந்திரமாகவும் இயங்கும் வகையில் அதிகாரங்களைப் பிரித்துக்கொள்ளும் ஆட்சிமுறை" என்பதாகும். கே.சி. வியர்தான் இந்திய அரசமைப்பை quasi-federal Constitution என்று முதன்முதலில் கருத்துரைத்தவரும் ஆவார். Quasi-federal Constitution என்பதன் பொருள் அரைக் கூட்டாட்சி அரசமைப்பு என்பதன்று. கூட்டாட்சிச் சாயலுடைய அரசமைப்பு என்பதே ஆகும்.

ஒரு நல்ல கூட்டாட்சி அரசமைப்பு என்பது, ஒன்றிய அரசை விட அதாவது மைய அரசை விட மாநில அரசுகளுக்குச் சாதகமானதாக அமைய வேண்டும். கூட்டாட்சி அமைப்பில் மைய அரசும், மாநில அரசுகள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனியானதொரு அரசமைப்பைக் கொண்டிருக்கும். குடிமக்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களாக இருப்பர். அதாவது கூட்டரசின் குடியுரிமையும் தங்களது மாநில அரசின் குடியுரிமையும் பெற்றிருப்பர். மாநில அரசாங்கம் தனது குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கும் அதிகாரம் கூட்டாட்சி அரசமைப்பிலேயே உறுதிசெய்யப்பட்டிருக்கும். அமெரிக்க ஐக்கிய நாடுகள்தான் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. சற்றொப்ப இதே வடிவில் சுவிட்சர்லாந்தும் ஆஸ்திரேலியாவும் ஒன்றுக்கும் மேற்பட்ட குடியுரிமை முறையும், அரசமைப்புடைய மாநிலங்களும் கொண்ட கூட்டாட்சி அமைப்புகளாகும். (சோசலிசக் கூட்டாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த சோவியத் அரசமைப்பு இதன் உயர்ந்த வகையாக இருந்தது)

இந்தியாவில் நிலைமை என்ன? இந்திய அரசமைப்பில், ஒரு மாநிலம் தனக்கெனத் தனியானதொரு அரசமைப்புடன் இயங்க அனுமதியுண்டா? இல்லை! இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவுடன் இணைந்த ஜம்மு-காசுமீரத்தின் அரசமைப்பையும் கூட. படிப்படியாக இந்திய அரசு தனது மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி விழுங்கிவிட்டது. மணிப்பூரின் அரசமைப்பைத் துடைத்தெறிந்து விட்டுத்தான், மணிப்பூர் இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது.

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை உண்டா? "இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களைக்கொண்ட ஒன்றியம்" என்று நாளை ரஜினிகாந்த் கூறினாலும் வியப்பதற்கில்லை. தமிழர்களின் நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக 'இந்த உண்மை' சில கல்லுளிமங்கன்களைத் தவிர அனைவராலும் அறிந்தேற்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய அரசமைப்பு இந்தியாவில் உள்ள மக்களினங்களை தேசங்களாகவோ தேசிய இனங்களாகவோ கூட ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவர் எந்தத் தேசிய இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியர் என்ற குடியுரிமையே வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள், இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கரைக்கப்பட்டு இந்திய வல்லாதிக்கம் உருப்பெறவும் வலுப்பெறவுமே இந்திய அரசமைப்பு துணைசெய்கிறது.

கூட்டாட்சி அமைப்பில் ஒரு மாநிலத்தின் எல்லையை மைய அரசால் திருத்தியமைக்க இயலாது. மாநில அரசின் அதிகாரங்களில் அதற்கு இடமில்லை. இந்தியாவில் ஒரு மாநில அரசு தனது மாநிலத் தகுநிலையையோ, தனது சட்டமன்றதையோ, தனது அரசையோ கூட காப்பாற்றிக்கொள்ள இயலாது. காசுமீரச் சிக்கலில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவிலுள்ள மாநில அரசுகள், அமெரிக்கா போன்ற கூட்டாட்சி அமைப்பில் இருக்கும் மாநில அரசுகளைப் போன்ற அரசுகளல்ல. அரசுகள் என்ற மெய்யான பொருளில் இவை அரசுகளேயன்று. அதாவது, இவற்றுக்கு இறைமை (இறையாண்மை) கிடையாது. மைய அரசு மறுத்தால், தமிழ்நாடு என்ற பெயரைக் கூட தமிழக அரசால் காப்பாற்றிக்கொள்ள இயலாது. தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 'மைய அரசு ஏற்பளித்ததால்தான்' தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது, தொடர்ந்து வழங்கியும் வருகிறது என்பதைக் கருத்தில் கொள்க! கச்சத்தீவிற்கானாலும் கதிராமங்கலத்திற்கானாலும் தமிழக அரசு தீர்மானம் மட்டுமே நிறைவேற்ற முடியும். மைய அரசு மனது வைத்தால்தான் எதுவும் சட்டமாகும்.

மாநிலப் பட்டியலில் அதிகாரங்கள் உள்ளனவே? என்று கேட்கலாம். மாநில அரசுகளின் அதிகாரங்கள் என்று இறுதியாக எதுவும் இல்லை! மைய அரசின் அதிகாரப் பட்டியல் துறைகளிலும், மாநில அரசின் அதிகாரப் பட்டியல் துறைகளிலும், மைய மாநில அரசுகளுக்கு இடையிலான பொது அதிகாரப் பட்டியல் துறைகளிலும், இவையல்லாத எஞ்சிய அதிகாரங்களிலும் மைய அரசின் அதிகாரமே இறுதியானது ஆகும். மாநிலப் பட்டியலில் உள்ள சொற்பத் துறைகளைக் கூட மைய அரசினால் எளிமையாக கைப்பற்றிக்கொள்ள இயலும். மாநிலங்களவைக்கு அந்த அதிகாரம் உண்டு.

கல்வி நமக்கோர் அண்மைய உதாரணம். மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறை பொதுப் பட்டியலுக்கு எளிமையாக மாற்றப்பட்டது. பொதுப்பட்டியலில் உள்ள துறையில் மைய அரசு சட்டம் இயற்றினால், மாநில அரசு இயற்றும் சட்டம் செல்லாது. எனவே நீட் தேர்வை நம்மால் சட்ட வழியில் விரட்ட முடியவில்லை. மைய அரசு ஒடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால், இத்துணைச் சிரமப்பட வேண்டியதில்லை. மாநிலப் பட்டியலிலேயே இருந்தாலும் கூட ஆளுநர் ஒப்புதலளிக்கவில்லை எனில் சட்டமன்றத்தில் இயற்றப்படுவது சட்டம் ஆகாது! மாநிலப் பட்டியலாக இருந்தாலும், இறுதி அதிகாரம் மைய அரசிற்கே என்பது நமக்குப் புரிகிறதுதானே? இதில் கூட்டாட்சி எங்கே இருக்கிறது?

கூட்டாட்சி அமைப்பு குறித்து நமது ஆசான் எங்கெல்சின் கருத்தையும் பார்த்து விடுவோம். தனியொரு அரசிலிருந்து கூட்டரசு வேறுபடும் இரண்டு விடயங்களை எங்கெல்ஸ் இங்கே குறிப்பிடுகிறார். "முதலாவதாக, கூட்டரசைச் சேர்ந்த உறுப்பு அரசு ஒவ்வொன்றும், அதாவது மாநிலம் ஒவ்வொன்றும், அதற்குரிய குடிமை மற்றும் குற்றவியல் சட்ட அமைப்பும் நீதிமன்ற அமைப்பும் உடையதாயிருக்கும். இரண்டாவதாக, மக்களவையுடன் கூடவே, பெரியதாயினும் சிறியதாயினும் ஒவ்வொரு மாநிலமும் தனியொன்றாக வாக்களிக்கும் கூட்டரசு அவையையும் உடையதாயிருக்கும்" என்கிறார்.

இதிலுள்ள சட்ட மற்றும் நீதிமன்ற அமைப்புகள் குறித்து பின்னால் பார்ப்போம். இங்கு நாம் பார்த்துக்கொண்டிருப்பது இரண்டாவது கருத்தைத் தான். ஒரு மாநிலம் சிறியதாயினும் பெரியதாயினும் தனியொன்றாக வாக்களிக்கும் கூட்டரசு அவை பெற்றிருக்க வேண்டும் என்கிறார் எங்கெல்ஸ். அதுவே மேலவை அல்லது மாநிலங்களவை ஆகும். அதாவது, மாநிலங்களுக்கிடையில் நிலப்பரப்பின் அளவிலும், மக்கள்தொகை அளவிலும் எத்துனை வேறுபாடுகள் இருப்பினும், ஒவ்வொரு மாநிலமும் மாநிலங்களவையில் சம எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைப் பெற்றிருப்பதே கூட்டாட்சிக் கொள்கை ஆகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள செனட் எனப்படும் மேலவையில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சமமாக இரண்டு பிரதிநிதிகளே இடம்பெறுகின்றனர்.

இந்திய மாநிலங்களவையின் நிலை என்ன? மணிப்பூர், மேகாலயா, மிசரோம், நாகாலாந்து, திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு பிரதிநிதியை மட்டுமே மாநிலங்களவைக்கு அனுப்ப முடிகிறது. பெரும அளவில் உத்திரப்பிரதேசத்திலிருந்து 31 பிரதிநிகள் இடம்பெறுகிறார்கள். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டுமே 12 பேர். மாநிலங்ளவைப் பிரதிநிதிகளே இல்லாத ஒன்றியப் பிரதேசங்களும் உண்டு. இவர்கள் சமைத்திருக்கும் அரசமைப்பில் தேசிய இனங்களுக்கிடையில் உப்புப் புளிக்கேனும் சனநாயகம் உண்டா? இதைக் கூட்டாட்சி என்று சொல்ல இயலுமா?

எங்கெல்சின் கூட்டரசுக் கருத்தில் முதற்கூறு, மாநில அரசுகள் ஒவ்வொன்றும் அதற்குரிய 'குடிமை மற்றும் குற்றவியல் சட்ட அமைப்பையும் நீதித்துறை அமைப்பையும் பெற்றிருக்கும்' என்பது. இந்திய அரசமைப்பில் இதுவும் இல்லை. இந்திய நீதித்துறை ஒரே கட்டமைப்பாகத்தான் இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் ஒரே குற்றவியல், குடியியல் சட்ட அமைப்புதான். இவை மட்டுமன்று. அரசமைப்பில் நெருக்கடிநிலை பிறப்பிக்க வழிவகை செய்யப்பட்டிருப்பதும், I.A.S., I.P.S போன்ற ஆட்சித்துறை அதிகாரிகளை ஒன்றியப் பொதுப் பணிக் கழகமே தேர்வு செய்வதும், இவற்றில் புதிய பணியிடங்களை உருவாக்கும் அதிகாரம் மாநிலங்களவைக்கு அளிக்கப்பட்டிருப்பதும், மைய அரசுக்கு மாநில அரசுகளைக் கலைக்கும் அதிகாரம் வழங்கும் 356ஆவது உறுப்பும், இந்திய அளவிலான தேர்தல் ஆணையம் என்பதும், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பதவிகளும் கூட்டாட்சிக்கு முரணானவையே ஆகும். சாறமாகச் சொன்னால் இந்திய அரசமைப்பே கூட்டாட்சிக்கும், தேசிய இனங்களுக்கிடையிலான சனநாயகத்திற்கும் விரோதமானது ஆகும்.

பிற தேசிய இனங்களின் மீதான இந்தியத்தின் ஒடுக்குமுறையும், இந்தித் திணிப்பும், இந்தி மேலாதிக்கமும் ஆட்சியாளர்களின் எண்ணங்கள் தொடர்பானவை மட்டுமன்று. இந்திய அரசமைப்பே இத்தன்மையிலானதுதான் என்பதே உண்மை. காட்டாக, இந்தியா இந்தியை இந்தி பேசாத பிற தேசிய இனங்களின் மீது அரசமைப்பின் வழியாகவே திணிக்கிறது! ஆம், இந்திய அரசமைப்பின் 17ஆவது பகுதி இந்திதான் இந்தியா முழுமைக்கும் ஆட்சி மொழி என்கிறது! இப்பகுதியின் பிற உறுப்புகள் சகல வழிகளிலும் இந்தியைத் திணிப்பதற்கு வழிசெய்கிறது. இந்தி பேசாத பிற தேசிய இனங்களின் 'சிறும அளவிலான' 'அடிப்படை' உரிமைக்கே எதிரானது இந்த 17ஆம் பகுதி. இந்தப் பகுதியைத் திருத்துவதாலேயே இந்தி மேலாதிக்கமோ, இந்திய வல்லாதிக்கமோ ஒழிந்து விடப்போவதில்லை என்றாலும் திருத்த முடிந்ததா? இந்த 17ஆம் பகுதியைத் தான் தி.மு.க தீயிட்டுக் கொளுத்திப் போராடியது. இந்த 17ஆம் பகுதிக்கு எதிராகத்தான் தமிழர்கள் மகத்தான மொழிப்போர் நடத்தினார்கள். இந்த 17ஆம் பகுதிக்கு எதிராகத்தான் தமிழ் ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பாட்டாளிகள் என்று 500க்கு மேற்பட்டவர்கள் தீக்குளித்தும் குண்டடிபட்டும் செத்தார்கள். ஆனால் இன்று வரை இந்த 17ஆவது பகுதியின் காற்புள்ளியோ அரைப்புள்ளியோ கூட மாற்றப்படவில்லையே!

இவ்வளவு ஏன்... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க, பெரும்பான்மை எதுவும் தேவையில்லை. குடியரசுத் தலைவர் இசைவுடன் ஆளுநர் அதிகாரம் கொடுத்தால் போதும். தமிழன்னை மீது இந்தியப் பேய் அடித்திருக்கும் இந்த சுள்ளாணியைப் பிடுங்க முடிந்ததா? முடியவில்லையே! ஒரு தேசிய இனம் தனது சட்டமன்றத்தில் ஒருமனதாக முடிவெடுப்பதைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத ஒரு கட்டமைப்பைக் கூட்டாட்சி என்று கூற இயலுமா? மருந்துக்கேனும் இதில் கூட்டாட்சித் தன்மை உண்டா? சனநாயகம் உண்டா?

இந்திய அரசமைப்பு இயற்றப்பட்ட பேரவையிலேயே சனநாயப் பிரநிதித்துவம் இருந்திருக்கவில்லையே. அரசமைப்புப் பேரவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் அன்றைய மாகாணச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். இந்தச் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்? 1935 (பிரித்தானிய) இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் வரிசெலுத்தும் நிலவுடைமையாளர்கள் மட்டுமே வாக்களிக்கும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இஃதல்லாமல், அரசமைப்பு அவையில் இருந்த 93 பேர் சமஸ்தானங்களால் நியமிக்கப்பட்டவர்கள்!. "இந்திய மக்களாகிய நாம், ...இந்த அரசமைப்புச் சட்டத்தை இயற்றி நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்" என்ற அரசமைப்பின் முகப்புரை வாசகத்திற்கு ஏதேனும் பொருளுண்டா? அரசமைப்பு உருவாக்கத்தில், இந்தியா என்ற கட்டமைப்பில் இணைக்கப்பட்ட மக்களினங்களின், தேசிய இனங்களின் பிரதிநித்துவம் இருந்ததா? அவர்களின் ஒப்புதல் கேட்கப்பட்டதா? இல்லையெனில், இதைக் கூட்டாட்சி என்று அழைக்க இயலுமா?.

இந்திய அரசமைப்பில் 'ஒன்றியம்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'கூட்டரசு' சொல்லைச் சேர்க்க முன்மொழியப்பட்ட போது அம்பேத்கர் அதை மறுத்தார். இந்தியா ஒரு கூட்டரசாக இருக்கப் போகிறது என்றாலும், அரசமைப்பில் 'கூட்டரசு' என்று குறிப்பிட இயலாது என்றார். ஏனென்றால் "இது மாநிலங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலான கூட்டரசன்று. எனவே இந்தக் கூட்டரசிலிருந்து எந்த அரசும் பிரிந்து செல்ல முடியாது. ... இந்தக் கூட்டரசை அழிக்க முடியாது என்பதால் ஒன்றியம் என்றழைக்கப்படுகிறது" என்றார் அம்பேத்கர்.

அதாவது, அரசுகளின் விருப்பத்தின் அடிப்படையில் கட்டப்படாத அமைப்போ, அரசுகளுக்கிடையில் அதிகாரங்கள் திட்டவட்டமாகப் பங்கிட்டுக் கொள்ளப்படாத அமைப்போ கூட்டாட்சி அமைப்பாகாது. அதே போல, அரசுகள் பிரிந்துசெல்லும் உரிமையை மறுக்கும் அமைப்பை ஒற்றையாட்சி அமைப்பென்றே துணிந்து சொல்லலாம். எனவேதான் "இந்திய அரசமைப்பு முழுக் கூட்டாட்சியுமன்று, அரைக் கூட்டாட்சியுமன்று! கூட்டாட்சிச் சாயல்கொண்ட ஒற்றையாட்சி அமைப்பு என்கிறோம்!"

இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று தோழர் தமிழரசன் கூறியது சத்திய வார்த்தைகள் இல்லையா? இந்தச் சிறை, இந்தியச் சிறை என்றைக்காவது நம்மை விடுவிக்குமா? 'விடுவிக்காது' என்றுதானே அம்பேத்கரும் சொல்கிறார்! அது தானே நமது பட்டறிவும் கூட!

இந்திய அரசமைப்பு தேசிய இனங்களின் 'அடிமை முறி' என்று இந்தப் பொருளில் தான் கூறுகிறோம்! தமிழ்நாடு தமிழருக்கே என்பதை 'புரட்சி' முழக்கமாகத் தான் வைக்கிறோம்!

- மதியவன் இரும்பொறை