1) தேசியம் என்றால் என்ன? தமிழ்த் தேசியம் என்றால் என்ன?

Lenin and stalinதேசியம் என்பதன் அடிப்பொருளைத் தோழர் பெ.ம. கருத்தில் கொள்ளவில்லை. தேச விடுதலை அல்லது இறையாண்மை கோருவதைத் தேசியத்தின் இன்றியமையாக் கூறாக அவர் வரையறுக்கிறார். தேசியம் எனபதன் அடிப்பொருள் நாம் என்கிற மனநிலையைக் குறிக்கும்; அது வளர்ந்து சென்று தேசிய விடுதலை என்னும் அரசியல் குறிக்கோளை வரித்துக் கொள்ளும் போது முழுமையடைந்து தேசியம் என்னும் அரசியல் கருத்தியலாக மலர்கிறது.

2) தேசியம்: கலைக்களஞ்சியங்களும் பேரகராதிகளும் வகுத்தளிக்கும் இலக்கணம்

தேசியம் என்பதை ஒற்றைப் பொருளுடையதாகப் பார்க்கிறார். நான் குறைந்தது இரட்டைப் பொருளுடையதாகப் பார்க்கிறேன். விக்கிபீடியா கலைக்களஞ்சியம், மரியம் வெப்ஸ்டர் அகரமுதலி, கொலம்பியா எலக்ட்ரானிக் கலைக் களஞ்சியம், ஸ்தான்ஃபோர்டு மெய்யியல் கலைக்களஞ்சியம், தி ஃபிரீ டிக்‌சனரி கலைக்களஞ்சியம், சோவியத்துப் பெருங்கலைக்களஞ்சியம் ஆகியவை தேசியம் என்ற சொல்லுக்குத் தரும் இலக்கண விளக்கங்கள் என் கருத்துக்கு ஆதரவாக உள்ளன.

3) தேசிய இனச் சிக்கலில் ஸ்டாலின் செய்த கோட்பாட்டுப் பங்களிப்பு

தேசம் என்பதற்குரிய இலக்கண வரையறை தொடர்பாக ஸ்டாலின் கூறுவதை பெ.ம. ஏற்றுக் கொள்கிறார், நானும் ஏற்றுக் கொள்கிறேன். இதை அப்படியே நீட்டி, தேசத்திலிருந்து தேசியத்தை வரவழைத்து, அதற்கும் ஸ்டாலினை சாட்சியாக்குவதுதான் சிக்கல். ஏனென்றால் தேசியம் என்பதற்கு பெ.ம. சொல்வது போன்ற வரையறையை ஸ்டாலின் ஒருபோதும் சொன்னதில்லை. பொதுப்பண்பாட்டில் விளையும் உளத்தியல் அமைவைத்தான் ஸ்டாலின் தேசியத் தன்மை என்கிறார். தேசம் இல்லாத தேசியம் இருக்கலாம். ஆனால் தேசியம் இல்லாத தேசம் இருக்க முடியாது.

4) ஆய்வின் பெயரால் அவதூறு

”சமூக வளர்ச்சி வரலாற்றில் மொழி, தேசிய இன உருவாக்கம், தேச உருவாக்கம் ஆகியவை வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை மார்க்சியம் உரியவாறு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” என்று பெம சொல்வதை நான் மறுக்கிறேன். தேச விடுதலைப் போராட்டம், தேசியத் தன்னுரிமை, (Self-Determination) ஆகியவற்றை எந்தெந்தக் கட்டத்தில் ஆதரிக்கலாம், எந்தெந்தக் கட்டங்களில் ஆதரிக்கக் கூடாது என்று இலெனின் சொன்னார்” என்று பெ.ம. சொல்வதற்குச் சான்று ஏதுமில்லை. இது அவதூறு என்கிறேன். மொழியும் மொழிவழித் தேசியமும் சமூக வளர்ச்சி வரலாற்றில் வகித்த பங்கினை மார்க்சியம் உரியவாறு கணக்கில் கொண்டது என்பதே உண்மை. தோழர் மணியரசன் ஆய்வு என்ற பெயரில் அவதூறு செய்கிறார்.

5) இந்தியத் தேசியம் பொய்யா?

இந்தியா சமூக அறிவியல்படி ஒரு தேசமாகாது என்று பெ.ம. சொல்வது சரியானது. ஆனால் இதையே இந்தியத் தேசியம் பொய் என்பதற்கான சான்றாக அவர் முன்வைப்பதில்தான் சிக்கலே உள்ளது. தேசத்துக்கும் தேசியத்துக்குமான இயங்கியல் உறவை அவர் கணக்கில் கொள்ளவே இல்லை. தமிழ்த் தேசியமே தமிழ்த் தேசத்துக்கு முற்பட்டதுதான். தேசமல்லாத தேசியத்துக்கு தென் ஆப்பிரிக்கத் தேசியம் ஓர் எடுத்துக்காட்டு. அரபுத் தேசியம், சிங்களத் தேசியம், தமிழீழத் தேசியம் எல்லாமே தேசத்துக்கு முற்பட்ட தேசியங்கள்தாம். இந்தியத் தேசியம் வரலாற்று வழியில் பிற்போக்கானது என்றும் அது பொய்த் தேசியம் என்றும் பெ.ம. சொல்வது தன்முரண்பாடாகும். இந்தியத் தேசியத்தில் முற்போக்கும் உண்டு பிற்போக்கும் உண்டு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் தமிழ் மக்களிடம் இந்தியத் தேசியம், தமிழ்த் தேசியம் ஆகிய இரு போக்குகளும் காணப்பட்டன.

(சோவியத் தேசியம் என்ற ஒன்று வரலாற்றில் இருந்ததுண்டா? எதிர்வகைத் தேசியம் என்ற ஒன்று இருக்க முடியுமா? தோழர் பெ.ம. கேட்கிறார். அடுத்த பகுதியில் மறுமொழி. ஆறாம் பகுதி அடுத்த இதழில் - தியாகு)