தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி அறிக்கை

சிங்களத் தேர்தலில் ராசபக்சே தோற்கடிக்கப்பட்டு மைத்திரிபாலா வெற்றி பெற்றுள்ளார். நேற்று மாலை நீதிபதி சிறிபாலன் முன்னிலையில் அதிபராகப் பதவியேற்றுள்ளார். தமிழர் பகுதிகளில் மைத்திரிபாலாவுக்கு பெரும்பான்மை வாக்குகள் விழுந்துள்ளன. ஆனால், அவரின் சொந்தத் தொகுதியில்கூட ராசபக்சேவுக்கு கிடைத்த வாக்குகளோடு ஒப்பிட்டால் மிகச் சொற்ப வாக்குகளே பெற்றுள்ளார். இதில் நாம் பெறுகிற எளிய முடிவு, சிங்கள மக்களின் பேரினவாத உளவியல் ஊழல், குடும்ப ஆட்சி அனைத்தையும் தாண்டி தமிழ் மக்களைக் கொன்று குவித்த ராசபக்சேவையே விரும்புகிறது.

இனப்படுகொலைக்கு ஆளான தமிழ் மக்கள், நீதி பெரும் போராட்டத்தின் அடுத்த கண்ணியைப் பிடிக்க வலுவில்லாத எதார்த்த நிலையில், தங்களுக்குக் கிடைத்த சனநாயக வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். போரை நடத்தியவனும் அவனுக்கு அடுத்த வரிசையில் நின்று போரை இயக்கியவனும் தமிழ் மக்கள் முன்னால் இரு வாய்ப்புகளாக நிறுத்தப்பட்டனர். முதலாமவனுக்கு எதிராக மக்கள் நிலை எடுத்துள்ளனர். ஆக, சாத்தானின் தோல்வியை தேவனின் வெற்றியாகக் கருதுவதற்கில்லை.

மக்களை விடுங்கள், தலைவர்கள் எப்படிச் செயல்பட்டிருக்க வேண்டும்? இனப்படுகொலைக்கு ஆளான ஒன்றரை இலட்சம் மக்களுக்கும் ஆயிரக்கணக்கான மாவீரர்களின் வீரச் சாவுக்கும் நீதி பெரும் போராட்டம் என்ன ஆனது? அதற்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன தொடர்பு? தேர்தலில் இது குறித்து யார் என்ன நிலை எடுத்தார்கள்? மைத்திரிபாலா, ராசபக்சேவிடம் இருந்து இதில் எந்த வகையில் மாறுபடுகிறார்? இந்தக் கேள்விகளுக்கு விடை மட்டுமல்ல இடமே இல்லாமல் செய்து விட்டதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திராக் கட்சிக்கும் மட்டு-மல்ல, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் பங்குண்டு.

நடைபெற்றுவரும் கட்டமைப்பியல் இனப்படுகொலை தொடராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் அப்படிச் செய்வார் புதிய அதிபர் என்று நம்புவதாகக் கூட்டமைப்-பினர் ஆருடம் சொல்கின்றனர். இதுமட்டுமல்ல, இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், மானுட விரோதக் குற்றங்கள் குறித்து ஆருடம் சொல்லக் கூட இவர்கள் தயாரில்லை.

நம்மைப் பொறுத்த வரை புலம் பெயர் தமிழர்க்கும், தாயகத் தமிழர்க்கும் சொல்ல விரும்புவது இதுதான். நம் அடிப்படைக் கோரிக்கைகளான கட்டமைப்பியல் இனக்கொலை தடுப்பு, தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, பொதுசன வாக்கெடுப்பு இவை மீது ஊன்றி நின்று அனைத்தையும் கணக்கெடுப்போம். அந்தக் கணக்கின்படி, மைத்திரிபாலா மற்றுமொரு ராசபக்சே என்பதை விரைவில் அறிவோம்.

நம் அடிப்படை கோரிக்கைகளுக்காகத் தாய்த் தமிழர்களும் புலம் பெயர் தமிழர்களும் எதிர்வரும் காலங்களில் ஓரணியில் நின்று களம் அமைப்போம்.

நம் கோரிக்கைகளின் வெற்றிதான் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும்!