maruthu art

தேசத்தின் குரல்

இந்தியக் குடியரசு நாளை இந்திய வல்லரசின் படை வலிமையைப் பறைசாற்றும் நாளாகக் கொண்டாடுவதே இந்திய ஆட்சியாளர்களுக்கு வாடிக்கை. இந்த ஆண்டும் அப்படித்தான் நடந்தது.

கூடுதலாக இராமர் கோயில் வடிவமும் ஊர்வலத்தில் சேர்ந்து சென்ற காட்சி இந்திய இந்துத்துவ ஆட்சியாளர்களின் படையில் இராமருக்கும் முகன்மையான இடம் தரப்பட்டிருப்பதன் குறியீடாக அமைந்தது. துவக்குச் சூட்டால் பிளக்க முடியாத மக்களின் நெஞ்சை இராமபாணத்தால் பிளக்க முடியும் என்பது மோதி - அமித்சா கணக்கு.

அதே குடியரசு நாளில் அதே தில்லியின் எல்லைப் பகுதியில் அரசின் ஆய்தப்படைகளுக்கு அஞ்சாமலும் ”ஜெய் சிறிராம்!” கோசங்களால் மதிமயங்காமலும் இலட்சக்கணக்கான உழவர்கள் தம் உழவூர்திகளோடு திரண்டார்கள்.

ஐந்து மாத காலமாக அமைதியும் உறுதியும் குலையாமல் அறப் போராட்டம் நடத்தி வரும் உழவர்களைத் தடுக்கவும் வழிமறிக்கவும் துரத்தவும் இந்திய வல்லரசு செய்த முயற்சிகள் யாவும் தோற்றே போயின.

போராடும் உழவர்களை காலிஸ்தானிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும், தேச விரோதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் திகிலியர்கள் என்றும் ஆட்சியாளர்களும் அவர்தம் ஊதிகுழல்களும் செய்த அவதூறுகள் எடுபடவில்லை.

இந்தப் பின்னணியில்தான் குடியரசு நாளைப் பயன்படுத்தி உழவர் போராட்டத்தில் ஊடுருவிய காவிக்கும்பல் செங்கோட்டை வரை தங்குதடையில்லாமல் சென்று போராட்ட ஒற்றுமையையும் கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் வேலையைச் செய்துள்ளது என்பது இப்போது தெள்ளத் தெளிவாகி விட்டது.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டில் உள்ள தில்லிக் காவல்துறை எந்தக் கொலைபாதகத்துக்கும் அஞ்சாத இந்துத்துவ ஏவல்துறையே என்பதை குடியுரிமைப் போராட்டத்தின் போது உலகமே பார்த்தது.

மோதி பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காகி விட்டது. உழவுக்கும் உழவர்களுக்கும் பகையான சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உழவர்களின் போராட்ட உறுதியும் ஒற்றுமையும் மேலும் வலுப்பட்டுள்ளன.

நேரடியாகவே களமிறக்கப்பட்ட கைக்கூலிகளையும் உழவர்கள் விரட்டியடித்துத் தங்கள் களங்களை மீட்டுக் கொண்டு விட்டார்கள். ஒன்று, இந்திய அரசு தன் வேளாண் சட்டங்களை அடியோடு கைவிட்டு உழவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லது மோதி அமைச்சரவை பதவி விலக வேண்டும். இரண்டுமில்லாமல் உழவர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவிட மோதி அமித்சா கும்பல் சதித்திட்டம் தீட்டுமானால் விளைவுகள் அவர்களுக்கு ஏற்றவையாக இருக்கப் போவதில்லை என்பது உறுதி.

சுடுபடைக் கருவிகளை உழுபடைக் கருவிகள் வெற்றி கொண்டதாகவே வரலாறு குறித்துக் கொள்ளும்!

- தியாகு