பிராத்தம் என்னும் பெரிய அரசுசாரா அமைப்பு ஒன்று மும்பையில் 1994 முதல் இயங்கி வருகிறது. இது மும்பைக் குடிசைவாழ்ப் பகுதி மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் நோக்கில் கல்வியாளர்கள் பலரும் சேர்ந்து தொடங்கியதாகும். இது 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான இந்தியக் கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்யும் பொருட்டு அசர் என்னும் ஏற்பாட்டை 2005இல் தொடங்கியது. இது ஒவ்வோர் ஆண்டும் இந்திய மாநிலங்களின் கிராமப்புறப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் தனது அறிக்கையை அணியப்படுத்தி நடுவண் அரசிடம் முன்வைக்கிறது. 2013ஆம் ஆண்டுக்கான அறிக்கையை நடுவண் அரசின் திட்டக்குழுத் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா 2014 சனவரி 15 அன்று வெளியிட்டார். இந்த அறிக்கை ஆண்டுக் கல்வித் தகுநிலை அறிக்கை (Annual Status of Education Report) எனப்படுகிறது. இதுதான் சுருக்கமாக அசர் (ASER) எனப்படுகிறது. மேலும் இந்தியில் அசர் என்றால் தாக்கம் என்று பொருள்.

அசர் கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த மாணவ மதிப்பீட்டை நடத்துகிறது. அசர் 2013இல் இந்தியாவின் 550 மாவட்டங்களில் 16,000 கிராமங்களில் 14,000க்கு மேற்பட்ட அரசுப் பள்ளிகளையும் ஆயிரக்கணக்கான தனியார்ப் பள்ளிகளையும் சேர்ந்த 6 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்களைச் சென்றடைந்துள்ளது. இது தவிர கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் வீட்டுக் கதவுகளைத் தட்டி மாணவர்களின் பெற்றோர்களிடம் கலந்துரையாடியுள்ளது. நமது தமிழகத்தைப் பொறுத்த வரை, 29 மாவட்டங்களில் 630 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 12,000 மாணவர்களைச் சென்றடைந்துள்ளது. எனவே ஏனோதானோவென்று இல்லாது பெரும் மாதிரி ஒன்றின் புள்ளி விவரங்களைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டதே அசரின் ஆய்வறிக்கை. எனவேதான் அசர் அறிக்கைகள் பெரும் நம்பகத்தன்மை கொண்டவையாக மதிக்கப்படுகின்றன.

படித்தல் அறிவு, கணித அறிவு ஆகிய இரண்டிலும் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்கிறது அசர். அது பிசா போன்று மாணவர்களின் அறிவியல் அறிவை மதிப்பீடு செய்வதில்லை. மேலும் மாணவர்களின் கல்வித் திட்டத்தைத் தாண்டி நடைமுறை சார்ந்த வினாக்கள் தொடுப்பதில்லை. மாணவர்களிடம் அவர்களின் பாடப் புத்தகங்களைப் படித்துக் காட்டச் சொல்கிறது, கணக்குப் பாடப் புத்தகங்களில் இடம்பெறும் எளிமையான கணக்குகளுக்கு விடை காணச் சொல்கிறது, அவ்வளவுதான்.

பிசா அமைப்பாவது பாடப் புத்தகங்கள் தாண்டி மாணவர்களின் படித்தல் அறிவைக் குடைந்து பார்த்ததால் நம் மாணவர்கள் திணறி விட்டார்கள் என நாம் தேற்றிக் கொள்ளலாம். ஆனால் மாணவர்களின் படித்தல் அறிவை அசர் எப்படி மதிப்பீடு செய்தது தெரியுமா? மாணவர்களிடம் வெறுமனே அவர்களின் தமிழ்ப் பாடப் புத்தகங்களையும் ஆங்கிலப் பாடப் புத்தகங்களையும் படித்துக் காட்டச் சொன்னது, அவ்வளவுதான்.

reading

2013இல் அசர் குழுவினர் நமது தமிழகக் கிராமங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார்ப் பள்ளிக்கூடங்களின் முதல் வகுப்பு மாணவர்களிடம் அவர்களின் தமிழ்ப் பாட நூல்களைப் படித்துக் காட்டச் சொன்னார்கள். இந்த நூல்களை 98% மாணவர்களால் படிக்க முடியவில்லை. பின்னர் அசர் குழுவினர் 2ஆம் வகுப்பு மாணவர்களிடம் இந்த முதல் வகுப்புப் பாட நூல்களை படிக்கச் சொன்னார்கள். இப்போது 90% மாணவர்கள் படிக்க முடியாது திணறினர். இப்படியே ஒவ்வொரு வகுப்பாக மேல் நோக்கிச் சென்ற குழுவினருக்கு மோசமான அனுபவமே ஏற்பட்டது. இந்த முதல் வகுப்புப் பாட நூல்களை 71% மூன்றாம் வகுப்பு மாணவர்களாலும், 48% நான்காம் வகுப்பு மாணவர்களாலும், 33% ஐந்தாம் வகுப்பு மாணவர்களாலும் படிக்க முடியவில்லை!

கணித மேதை ராமானுஜன் பிறந்த தமிழகம் கணித அறிவில் எப்படி எனப் பார்ப்போம். கணித அறிவை அசர் குழுவினர் 4 மட்டங்களாகப் பிரிக்கின்றனர். முதல் மட்டத்தில் 1 முதல் 9 வரையிலான எண்களை அடையாளம் காண வேண்டும். இரண்டாம் மட்டத்தில் 10 முதல் 99 வரையிலான எண்களை அடையாளம் காண வேண்டும். மூன்றாம் மட்டத்தில் ஈரிலக்க எண்களையேனும் கழித்துக் காட்ட வேண்டும் (எ.கா.: 45 - 27). நான்காம் மட்டத்தில் மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்துக் காட்ட வேண்டும் (எ.கா.: 365/3).

மேற்கண்ட ஒவ்வொரு மட்டத்திலும் 8ஆம் வகுப்பு மாணவர்களின் நிலை என்ன எனக் காண்போம். இந்த நான்கு மட்டங்களில் முதல் மட்டத்தை மட்டும் கடந்து மற்ற மட்டங்களில் தேற முடியாது போனவர்கள் 1.5 விழுக்காட்டினர் ஆவர், அதாவது இவர்களால் 10 முதல் 99 வரையிலான எண்களைக் கூட அடையாளம் காண முடியவில்லை. முதலிரு மட்டங்களைக் கடந்து 3ஆம், 4ஆம் மட்டங்களில் தேறாது போனவர்கள் 25 விழுக்காட்டினர் ஆவர், அதாவது இவர்களால் 1 முதல் 99 வரையிலான எண்களை அடையாளம் காண முடிகிறதே தவிர எளிய கழித்தல், வகுத்தல் கணக்குகளைக் கூட செய்ய முடியவில்லை. முதல் மூன்று மட்டங்களைக் கடந்தாலும் 4ஆம் மட்டத்தைத் தொட முடியாது திணறியவர்கள் 61 விழுக்காட்டினர், அதாவது இவர்களால் 1 முதல் 99 வரையிலான எண்களை அடையாளம் காண முடியும், ஈரிலக்க எண்களைக் கழித்துக் காட்ட முடியும், அவ்வளவுதான், ஆனால் எளிய வகுத்தலைக் கூட செய்ய முடியாது. தமிழகக் கிராமங்களில் 8ஆம் வகுப்பில் 61 விழுக்காட்டு மாணவர்களுக்கு எளிய வகுத்தல் கணக்கு கூட தெரியவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டது.

maths 600

மற்ற வகுப்புகளில் கணிதம் தொடர்பான சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

5ஆம் வகுப்பில் 45 விழுக்காட்டினருக்கு ஈரிலக்கக் கழித்தலோ மூவிலக்க வகுத்தலோ கூட தெரியவில்லை. 86 விழுக்காட்டினருக்கு வகுத்தல் தெரியவில்லை. அதாவது வெறும் 14% 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கே கழித்தலும் வகுத்தலும் நன்கு தெரிந்துள்ளது.

1 முதல் 9 வரையிலான எண்களைக்கூட அடையாளம் காண முடியாத மாணவர்களின் விழுக்காட்டுக் கணக்கைப் பாருங்கள்: 1ஆம் வகுப்பில் 42%, 2ஆம் வகுப்பில் 15%, 3ஆம் வகுப்பில் 4%.

4ஆம் வகுப்பில் 9% மாணவர்களாலும், 5ஆம் வகுப்பில் 6% மாணவர்களாலும் 1099 வரையிலான எண்களை அடையாளம் காண முடியவில்லை!

அசர் படித்தல் அறிவுச் சோதனையை அவரவர்கள் தாய்மொழியில் மட்டுமே எப்போதும் நடத்துகிறது. ஆனால் 2012 அசர் அறிக்கை மாணவர்களின் ஆங்கிலப் படித்தல் அறிவையும் சோதித்துப் பார்த்தது. தமிழர்கள் பெரிதும் மோகப்படும் ஆங்கிலத்தில் இந்த மாணவர்களின் தரம் எப்படி இருந்தது? தமிழ் மாணவர்களின் வாயில் ஆங்கிலம் தவழச் செய்வதே தங்களின் இலட்சியம் எனப் பல ஊடகங்களிலும் பீற்றிக் கொள்ளும் கல்வி முதலாளிகள் நடத்தும் பள்ளிகளின் மாணவர்களேனும் ஆங்கிலத்தில் பிளந்து கட்டினார்களா? 8ஆம் வகுப்பைச் சேர்ந்த 17% மாணவர்களால் ஆங்கிலத்தில் சிற்றெழுத்துக்களைக் கூட படிக்க முடியவில்லை. தமிழகக் கிராமப்புற மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இங்கிலீஷ் இலட்சணமும் இதுதான்! அரசுப் பள்ளிகளின் நிலையும் இதுதான்!

அடடா! தமிழ்நாட்டுக்கா இந்த அவல நிலை என வருத்தப்படுவோருக்கு ஒரு சிறு ஆறுதல் செய்தி. 40 ஆண்டுகளாய் பாரத கம்யூனிஸ்டு கட்சிகளின் 'புரட்சிகர' தோழர்களின் ஆட்சியில் ஊறித் திளைத்த மேற்கு வங்கமானாலும் சரி, லோகியா, அம்பேத்கர் வழிவந்தவர்கள் எனப் பீற்றிக் கொள்ளும் சமாஜ்வாதிகளும் பகுஜன்களும் மாறி மாறி ஆட்சி புரிந்து வரும் உத்திரப் பிரதேசமானாலும் சரி, இந்தியாவின் எழுத்தறிவு மிக்க மாநிலமென மார்தட்டிக் கொள்ளும் கேரளமானாலும் சரி, இந்தியாவிலேயே 'நம்பர் ஒன்' இடத்துக்குத் தமது மாநிலத்தைக் கொண்டு செல்லப் போராடும் மனிதர், இந்தியாவை மீட்க வந்த அவதார புருஷர் என்றெல்லாம் ஊடகங்களால் வானளாவப் போற்றப்படும் இந்துத்துவ வெறியரான நரேந்திர மோடியின் குசராத் ஆனாலும் சரி, உலகத் தமிழினத்தின் 'ஒரே' தலைவராலும், 'புரட்சி' தலைவராலும் தலைவியாலும் மாறி மாறி ஆளப்பட்டு வந்துள்ள திராவிடக் கட்சிகளின் தமிழ்நாடு ஆனாலும் சரி, ஏறத்தாழ எல்லா மாநிலங்களின் கல்வித் தரமும் ஒன்றுதான். இன்னும் சரியாகச் சொன்னால், கடந்த 60 ஆண்டுகளில் ஓராண்டு நிதிநிலை அறிக்கையில் கூட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து விழுக்காட்டையேனும் கல்விக்கு ஒதுக்காத இந்தியமும் காங்கிரசுமுமே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கல்விக் கேட்டுக்கு முழுப் பொறுப்பாகும்.

முன்பு அசர் 2011 அறிக்கையை கபில் சிபல் வெளியிட்ட போது துக்கம் தொண்டையை அடைக்கப் பேசினார். இந்திய மாநிலங்களின் இத்தகைய மோசமான கல்வித் தரத்தால் அவர் மனம் நொந்து விட்டாராம். இந்தக் கீறல் விழுந்த வசனத்தைத்தான் நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரை எல்லோரிடமும் கேட்டு வருகிறோமே! இந்தியாவை மீட்டெடுக்க பண்டித நேரு தொடங்கி, நேருவின் மகள் இந்திரா, இந்திராவின் மகன் ராசீவ், ராசீவின் மனைவி சோனியா, சோனியாவின் மகன் ராகுல் வரை தலைமுறைச் சபதம் போடாத நாளே கிடையாது, ஒப்பாரி வைக்காத கூட்டங்களே கிடையாது. அதே சபதம், அதே ஒப்பாரி, அதே இந்தியா! இந்த காங்கிரஸ் ஒப்பாரியில் கபிலும் சேர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறுகிறார், இந்தக் கல்விச் சீர்கேட்டுக்கு இந்திய அரசு பொறுப்பாகாதாம்! இதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமாம்!

ஒரு வரி மீதமில்லாமல் மாநிலங்களிடமிருந்து பறித்துக் கொள்கிறது இந்தியா, தமிழீழம், காசுமீரம், நாகலாந்து உள்ளிட்ட தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கித் தனது வல்லாதிக்கக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெரும் பகுதியைக் கொலைக் கருவிகள் செய்ய விரயம் செய்கிறது இந்தியா, நாட்டு வளர்ச்சியின் உயிர் மூச்சாகிய கல்விக்கு ஒரு சிறு தொகையையே மாநிலங்களிடம் விட்டு எறிகிறது. அந்தக் கல்விக்குச் செலவிடும் பணத்தையும் பெருமளவுக்கு ஒன்றுக்கும் உதவாத ஐஐடி (இந்தியத் தொழில்நுட்பப் பயிலகம்) போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்குகிறது. இந்தக் கல்வி அரண்மனைகளில் படித்து விட்டு அமெரிக்கா ஓடும் பார்ப்பனர்களுக்குச் செலவழிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியை இந்த மண்ணுக்காகப் பல்லாயிரம் ஆண்டுகளாய் உழைத்து வரும் பாட்டாளி வீட்டுப் பிள்ளைகளின் அடிப்படைக் கல்விக்குச் செலவிட்டிருந்தால் இந்தக் கல்விச் சீர்கேடு எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? தில்லி உச்சி முகர்ந்து கொஞ்சி வளர்க்கும் ஐஐடிகளின் இலட்சணம் என்ன தெரியுமா? உலகின் தலைசிறந்த முதல் 450 கல்லூரிகளில் இந்தியாவின் ஒரு ஐஐடி கூட இடம்பெறவில்லை! போதாக்குறைக்கு, கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து களவாடிப் பொதுப் பட்டியலுக்குள் எறிந்துவிட்டது. இவ்வாறு பல வகையிலும் தலைமுறை தலைமுறையாகக் கல்விக்கு இயன்ற சீர்கேட்டை எல்லாம் செய்துவிட்டுக் கடைசியில் மாநிலங்களின் தலையில் மிளகாய் அரைக்கிறது காங்கிரஸ்.

அசர் 2013 அறிக்கையின்படி, இந்திய மாநிலங்களுக்கு இடையில் மட்டுமல்ல, அரசு, தனியார்ப் பள்ளிகளுக்கு இடையிலும், தமிழ்வழி, ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு இடையிலும் கல்வித் தரத்தில் பெரிய வேறுபாடில்லை. இதைத்தான் பிசா அறிக்கையும் கூறியது எனக் கண்டோம். அதாவது இரு அறிக்கைகளும் அரசு, தனியார் பள்ளிகளுக்கிடையே, தமிழ்வழி, ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கிடையே கல்வித் தரத்தில் பெரிய வேறுபாடில்லை என்கின்றன. அப்படியானால் சமூகப் பண்பாட்டுப் பொருளியல் காரணிகளும் மொழிக் காரணிகளும் கல்வித் தரத்தில் தாக்கம் செலுத்துவதில்லையா? எனும் ஐயப்பாடு இங்கும் நமக்கு எழுகிறது. இந்தக் காரணிகள் உலக நாடுகளின் கல்வித் திட்டத்தில் எந்தளவுக்குத் தாக்கம் செலுத்தியுள்ளன என்பது குறித்து விரிவான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆய்ந்துள்ளது பிசா.

நாடுகள் தங்கள் கல்வித் திறனில் எந்தளவுக்குச் சாதித்துள்ளன என்பதைக் காட்டும் வகையில், ஒவ்வொரு நாட்டிலும் அரசு, தனியார்ப் பள்ளிகளின் மாணவர்கள் பெற்றுள்ள சராசரிப் புள்ளிகளைத் தனித் தனியே வழங்கியுள்ளது பிசா. இதே போல், ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் தாய்மொழியையே பயில் மொழியாகவும் (முதல் மொழியாகவும்), பயிற்று மொழியாகவும் கொண்ட மாணவர்கள் பெற்ற சராசரிப் புள்ளிகளையும், தங்கள் வீட்டின் மொழியல்லாத வேறொரு மொழியைப் பயில் மொழியாகவும், அந்த நாட்டின் மொழியைப் பயிற்று மொழியாகவும் கொண்ட மாணவர்கள் பெற்ற சராசரிப் புள்ளிகளையும் தனித் தனியே வழங்குகிறது பிசா. இத்தகைய புள்ளிகளை நமது தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கும் விரிவாக வழங்கியுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் நமது தமிழக மாணவர்களின் கல்வித் தகுநிலையை வர்க்க அடிப்படையிலும், பயிற்று மொழி அடிப்படையிலும் ஆய்வு செய்வதற்குத் துணைபுரிகின்றன.

முதலில் வர்க்க அடிப்படைச் சிக்கலைப் பார்த்து விட்டுப் பயிற்றுமொழிச் சிக்கலுக்குச் செல்வோம்.

தமிழகத்தில் காசு பறிக்கும் தனியார்ப் பள்ளிகளும் இலவசக் கல்வி வழங்கும் அரசுப் பள்ளிகளும் பிசாவிடம் வாங்கியுள்ள சராசரிப் புள்ளிகள் ஏறத்தாழ ஒன்றே. அப்படியானால் தமிழ்நாட்டில் காசு கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் கிடைக்கும் கல்விச் சரக்கின் தரத்தில் மாற்றமேதும் இல்லை.

ஏழைப் பெற்றோர்களுக்கு இந்த விவரம் தெரிந்தால் கல்வியை வாங்குவதற்கு அண்டா குண்டாவை அடகு வைத்து மீளாக் கடனில் மாட்டிக் கொண்டு வாடுவதற்குப் பதிலாக அரசுப் பள்ளிகளிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து விட்டு நிம்மதியாக இருக்கலாம். எனவே அவர்களுக்கு அறிவுரை வழங்குவதில் அர்த்தமுண்டு. ஆனால் தமிழ் பற்றி வீர வசனம் பேசிப் பதவி இன்பங்களைச் சுவைத்து வரும் அரசியல்வாதிகளும் பசையுள்ள நம் தமிழ்ப் பற்றாளர்களும் தமிழ்க் கவிஞர்களும் தங்கள் பிள்ளைகளைக் கவனமாக 'மம்மி டாடி' தனியார்ப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களே, இவர்களுக்கு என்ன அறிவுரையை வழங்குவதாம்?

குடிகார மருத்துவரிடம் போய் எவரேனும் சாராயத்தால் நேரும் உடல் பாதிப்புகள் பற்றி அறிவுரை கூற முடியுமா? தமிழ்வழிக் கல்வியின் அருமை பெருமைகள் பற்றி நன்கு தெரிந்த நமது தமிழ்ப் பற்றாளர்களுக்குத் தமிழ்வழிக் கல்வியின் அருமை பெருமைகள் தெரியாதா என்ன? அவர்கள் எல்லாம் தெரிந்தேதான் பிள்ளைகளை இங்கிலீஷ் மீடியத்துக்கு அனுப்புகிறார்கள்.

பெரும்பாலும் சாதிமறுப்பு வாழ்க்கை வாழும் அவர்களிடம், "ஏன் உங்கள் குழந்தைகளை ஆங்கிலவழிக் கல்வி அளிக்கும் தனியார்ப் பள்ளிகளுக்கு அனுப்புகிறீர்கள்?" எனக் கேட்டால், அவர்களிடம் வர்க்கச் சார்புக் கருத்துகள் வெளிப்படுகின்றன. "கண்ட கண்ட வீட்டுப் பிள்ளைகளும் படிக்கும் அரசுப் பள்ளிகளுக்கு எங்கள் பிள்ளைகளை எப்படி அனுப்புவது?" என்கிறார்கள். வேறு சிலர் "கெட்ட வார்த்தைகள் பேசும் அந்த வீட்டுப் பிள்ளைகளுடன் எங்கள் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைப்பது?" என்கிறார்கள். ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளிடம் பழகி 'ஷிட்' (மலம்) என்று ஆங்கிலத்தில் பேசினால் இவர்கள் பிள்ளைகளின் வாய் மணக்கும் போலிருக்கிறது.

தனியார்ப் பள்ளியோ, அரசுப் பள்ளியோ பிள்ளைகளுக்குக் கிடைக்கப் போகும் கல்விச் சரக்கின் தரம் என்னவோ ஒன்றுதான் என்ற உண்மையை இவர்கள் எப்படியோ தெரிந்து வைத்துள்ளனர் போலும். பிசா அறிக்கையும் இந்த உண்மையைத்தானே போட்டு உடைத்துள்ளது! அதற்காகப் பணம் காசு புரளும் நமது தமிழ்ப் பற்றாளர்கள் கல்வியில் காட்டும் இந்த வர்க்கச் சார்பு நிலையை எவரும் ஞாயப்படுத்த வேண்டியதில்லை.

ஆனால் இங்கு நாம் விடை காண வேண்டிய முக்கியக் கேள்வி ஒன்று உள்ளது.

வர்க்கச் சார்புள்ள இந்த இருவேறு கல்விமுறைகளிலும் கல்வித் தரம் ஒன்றே என பிசாவும் அசரும் கூறுகின்றனவே, இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? இந்தக் காரணத்தைப் படிப்பறிவில்லாத ஏழைப் பெற்றோர்களுக்கும் பசையுள்ள தமிழ்ப் பற்றாளர்களுக்கும் என்ன விளக்கம் கொடுத்துப் புரிய வைப்பது? பயிற்றுமொழி குறித்து அடுத்து நாம் செய்யவிருக்கும் ஆய்வு இந்த வினாக்களுக்குத் தெளிவான விடையை அளிக்கும்.

மாணவர்களின் வீட்டு மொழி, பயில் மொழி, பயிற்று மொழி தொடர்பான புள்ளி விவரங்களை அலசுமுன் பயில் மொழி என்றால் என்ன? பயிற்று மொழி என்றால் என்ன? எனக் காண்போம்.

உலகக் கல்வியியல் வரையறையின்படி, பயில் மொழி என்பது மொழிக் கல்விக்குரிய முதல் மொழியாகும். அதாவது ஒரு மாணவர் மூன்று நான்கு வயதில் முதல் முறையாக வகுப்பறையில் அடி எடுத்து வைக்கும் போது அவர் கட்டாயமாக எந்த மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறாரோ அதுவே அவரது பயில் மொழி அல்லது முதல் மொழி ஆகும். இந்த மொழியே அவர் எந்த உயர் கல்விக்குச் சென்றாலும் அவரது முதல் மொழியாகத் தொடரும். அந்த முதல் மொழி அறிவை அடிப்படையாகக் கொண்டு அவர் இன்னோர் மொழியைக் கற்றுக் கொள்ள முயல்வாரானால் அதுவே அவரது இரண்டாம் மொழி ஆகிறது. உலக நாடுகள் எங்கும் ஒரு மாணவர் கட்டாயமாகக் கற்றுக் கொள்ளும் அந்த முதல் மொழி அவரது தாய்மொழியே ஆகும், அதாவது அவரது சமூகத்தின் மொழியே ஆகும்.

இங்கு கட்டாயம் என்பதைத் திணிப்பு எனப் புரிந்து கொள்ளக் கூடாது. மனித வாழ்வைப் பொறுத்த வரை, இயற்கை வளங்களான நீரும் காற்றும் கட்டாயத் தேவை என எந்தப் பொருளில் கூறுகிறோமோ அதே பொருளில்தான் இங்கும் ஒரு மாணவர் அவருக்கு இயற்கையாக வாய்க்கப் பெற்றிருக்கும் அவரது தாய்மொழியையே முதல் மொழியாகப் பயில்வதென்பது அவரது கட்டாயத் தேவை எனக் கூறுகிறோம். இதன்படி அந்த மாணவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை, உலகக் கல்வியியலின் பொதுவான நடைமுறைப்படி குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை, தமது முதல் மொழியாகிய தாய்மொழியில் நல்ல தேர்ச்சி பெற்ற பிறகு அந்த மொழியை அடிப்படையாகக் கொண்டு, சரியாகச் சொன்னால் அந்த மொழியின் பெயர்ப்பாக இன்னோர் அயல்மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்குவார். இந்த இரண்டாவது மொழி அவரது விருப்ப மொழியாக இருக்கும். அதாவது தமது இரண்டாவது மொழி என்ன என்பதை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவர் இன்னும் எத்தனை மொழிகளைப் பயில முற்பட்டாலும், அம்மொழிகளைத் தமது தாய்மொழியாகிய முதல் மொழியின் பெயர்ப்பாகத்தான் கற்றுக் கொள்வார்.

இஃதன்னியில், உலக நடைமுறையின்படி ஒரு நாட்டின் சமூக மொழியைத் தமது வீட்டு மொழியாகக் கொண்டிராத மாணவர்களும் அந்த நாட்டின் சமூக மொழியையே தனது பயில்/முதல் மொழியாக ஏற்றுக் கொண்டுதான் கல்வியகங்களில் படித்தாக வேண்டும். அதாவது ஒரு மாணவருக்கு அவரது வீட்டில் பேசும் மொழி ஒன்றாகவும் அவரைச் சுற்றி வாழும் சமூகத்தின் மொழி வேறொன்றாகவும் இருந்தால் கூட கல்வியகங்களில் அவரது பயில்/முதல் மொழி என்பது சமூகத்தின் மொழியே! அந்த மாணவர் இரண்டாம் மொழியாக வேண்டுமானால் தனது வீட்டு மொழியை விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

உலகக் கல்வியியல் வரையறையின்படி பயிற்று மொழி என்பது ஒரு மாணவர் தமது கல்வியகத்தில் அறிவியல், கணிதவியல், புவியியல், வணிகவியல், பொருளியல் என அனைத்து அறிவுத் துறைகளையும் எந்த மொழியின் வாயிலாகக் கற்றுக் கொள்கிறாரோ அதுவே அவரது பயிற்று மொழி ஆகும். உலக நாடுகள் அனைத்திலும் அனைத்து மாணவர்களுக்கும் வீட்டு மொழியும், அதாவது முதல் மொழியும், பயிற்று மொழியும் ஒன்றே. இந்த நாடுகளில் வீட்டில் ஒரு மொழி பேசி பள்ளிகளில் வேறொரு மொழியில் பயிலும் மாணவர்களும் உண்டு.

பிசா குழுவினர் மாணவர்களிடம் தேர்வுத் தாளைக் கொடுக்குமுன் ஒரு வினாத் தொடுக்கிறார்கள். நாங்கள் நடத்தும் தேர்வின் மொழிதான் உங்கள் முதல் (வீட்டு) மொழியா? பிசா மதிப்பீடு செய்த அனைத்து நாட்டு மாணவர்களும் மிகப் பெரும்பாலும் தங்களின் முதல் மொழியும் தேர்வு மொழியும் ஒன்றே என விடையிறுத்தனர். மிகச் சில மாணவர்களே தங்களின் முதல் மொழி வேறு, தேர்வு மொழி வேறு எனக் கூறினர். அதாவது அந்த மாணவர்கள் தங்கள் முதல் மொழியில் அந்தத் தேர்வுகளை எழுதவில்லை எனப் பொருள். ஒரு நாட்டின் முழுப் பரப்பில் சிறுபான்மை மொழி இனத்தினராக இருந்தாலும் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் பெரும்பான்மை மொழியினராக வாழ்வோரின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இப்படிப்பட்ட விதிவிலக்கான சூழல் நிலவுகிறது. இந்த மாணவர்களின் விழுக்காடு என்ன எனச் சில நாடுகளில் காண்போம்: ருஷ்யக் கூட்டரசில் 10%. பின்லாந்து, மெக்சிகோ, அர்ஜென்டைனா, பிரேசில், துருக்கி, பிரான்சு ஆகிய நாடுகளில் 5%; சீனத்தில் 1.5%; இத்தகைய சின்னஞ்சிறு மாணவர் தொகையை விலக்கிப் பார்த்தால், பிசா பட்டியலில் அடங்கிய அனைத்து நாடுகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் முதல் மொழியும் தேர்வு மொழியும் ஒன்றே! முதல் மொழியும் பயிற்று மொழியும் ஒன்றே - ஒரே ஒரு நாட்டைத் தவிர, அதுதான் இந்தியா!

இந்தியாவில் தமிழ்நாட்டின் கதையைப் பார்ப்போம். பிசா குழுவினர் தாங்கள் வீட்டு மதிப்பீடு செய்த தமிழக மாணவர்களிடம், ‘நாங்கள் நடத்தும் தேர்வு மொழியும் உங்களின் முதல் மொழியும் ஒன்றா?’ எனக் கேட்டனர். அப்போதும் 68% மாணவர்கள்தாம் ‘ஆமாம்’ என்று விடையளித்தனர். அப்படியானால் 32% தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் பிசா தேர்வு எழுதவில்லை எனப் பொருள். உலகில் காணவியலாத இந்த வேடிக்கைச் சூழலைப் புரிந்து கொள்வது கடினம்.

ஆனால் இதை விடவும் வேடிக்கையான கதையாடல்கள் கூட தமிழகத்தில் உலா வருகின்றன. நமது தமிழ்நாட்டில் சீனாவைப் பாருங்கள், ஜப்பானைப் பாருங்கள், அவர்கள் எல்லாம் ஆங்கிலம் படிக்கத் தொடங்கி விட்டார்கள், இங்கு தமிழ்நாட்டில்தான் சில தமிழ் வெறியர்கள் தமிழ் தமிழெனக் கூப்பாடு போடுகிறார்கள் என்று இந்து, துக்ளக் போன்ற பார்ப்பன ஏடுகளும், பல புத்திஜீவிகளும் கதையளந்து வருகிறார்கள். அவர்களுக்கு நாம் இங்கு வழங்கியிருக்கும் முதல் மொழி, பயிற்று மொழி விளக்கமும், மேலே கண்ட பிசாவின் புள்ளி விவரமும் சரியான பதிலடியாக இருக்கும். அந்த நாடுகளில் எல்லாம் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்திருப்பது உண்மைதான். ஆனால் தமிழகம் போல் முதல் மொழியாக இல்லை, பயிற்று மொழியாகவும் இல்லை, ஆங்கிலத்தை ஓர் இரண்டாவது விருப்ப மொழியாக, அதுவும் 6ஆவது, 7ஆவது வகுப்பிலிருந்து படித்து வருகிறார்கள், அவ்வளவுதான். உலகக் கல்வி பற்றிய இந்தப் பேருண்மைகளை மறைத்து விட்டுத்தான் இங்கு பலர் நமது தொடையில் கயிறு திரிக்கிறார்கள்.

உலகக் கல்வியியல் வரையறையின்படி, ஒரு மாணவரின் முதல் மொழி என்பது அவரது தாய்மொழி என்றும், எனவே அதுவே அவரது கட்டாய மொழி என்றும் கண்டோம். அதேபோது ஒரு மாணவரின் இரண்டாம் மொழி என்பது அவரது முதல் மொழியைப் பெயர்த்துக் கற்றுக் கொள்ளும் அயல் மொழி என்றும், எனவே அது அவர் விரும்பித் தேர்ந்தெடுக்கும் மொழி என்றும் கண்டோம். ஆனால் தமிழகத்தின் கல்வி நடைமுறை எப்படி உள்ளது?

பயில்மொழியைப் பொறுத்த வரை, தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதல் மொழி தமிழ் என்பது விருப்ப மொழியாகவும் இரண்டாம் மொழி ஆங்கிலம் என்பது கட்டாய மொழியாகவும் இருந்து வந்தது. தமிழ் மொழி முதல் மொழி என்று பேருக்கு உயர்த்திக் கூறப்பட்டாலும் விருப்பப் பாடமாகவும், ஆங்கில மொழி இரண்டாம் மொழி என்று பேருக்குத் தாழ்த்திக் கூறப்பட்டாலும் கட்டாயப் பாடமாகவும் இருந்து வந்த நிலை என்பது வேடிக்கையானதே. ஆனால் இன்று பத்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் இரண்டுமே கட்டாயப் பாடங்கள் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது முதல் மொழி தமிழைப் பன்னிரண்டாம் வகுப்பு வரை கட்டாயமாக்குவதும், அனைத்து வகுப்புகளிலும் இரண்டாம் மொழி ஆங்கிலத்தைப் பல மொழிகளுக்கு இடையே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு விருப்ப மொழியாக்குவதுமே பயில்மொழிக் கொள்கையில் ஒரு தெளிவான இலக்கணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இதற்குப் புறம்பாகத் தாய்மொழி தமிழ், அயல்மொழி ஆங்கிலம் இரண்டையுமே கட்டாயப் பயில்மொழிகளாகச் சமத்தகுநிலையில் வைப்பது மொழிக் கல்வி இலக்கணத்துக்கே முரணாக அமைந்து விடும்.

பயிற்று மொழியைப் பொறுத்த வரை, முதல் மொழியே பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்ற கல்வியியல் வரையறையைக் கண்டோம். இவ்வகையில் தமிழகக் கல்விக் கொள்கையில் குழப்பமே நிலவுகிறது. தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் முதல் மொழியாகத் தமிழ் கட்டாயமாக இருந்தாலும், பல பள்ளிகளில் ஆங்கிலமே பயிற்று மொழியாகக் கோலோச்சுகிறது. பிசா இப்படிக் குழப்பமான கல்விக் கொள்கை கொண்ட மாணவர்களிடம் தேர்வு நடத்தி, அவர்களுக்குரிய சராசரிப் புள்ளிகளையும் வழங்கியது.

தமிழையே முதல் மொழியாகக் கொண்ட இந்த மாணவர்களிடையே தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டவர்களுக்கும் ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்டவர்களுக்கும் வேறுபாடு இருப்பதாக பிசா தேர்வு காட்டியதா? இல்லை என பிசா கூறக் கண்டோம். அங்கேயே கூறியது போல் அதற்கான காரணத்தை இப்போது ஆயப் புறப்படுவோம்.

நாம் கண்ட இவ்விரு வகைப்பட்ட மாணவர்கள் பெற்ற சராசரிப் புள்ளிகளைத் தனித் தனியே பிரித்துக் கொடுத்துள்ளது பிசா. இவ்விரு வகைப்பட்ட சராசரிப் புள்ளிகளுக்கு இடையே பெரிய இடைவெளி இல்லை. அதாவது மாணவர்கள் தமிழ்வழியில் படித்தாலும் ஆங்கிலவழியில் படித்தாலும், பெரிய வேறுபாடேதும் இல்லை என்பதைப் புள்ளி விவர அடிப்படையில் தெளிவாக மெய்ப்பித்துள்ளது பிசா.

அப்படியானால் தாய்மொழிக் கல்விக்கும் அயல்மொழிக் கல்விக்கும் இடையே பெரிய வேறுபாடேதும் இல்லையா? தாய்மொழிக் கல்வியில் படிக்கும் மாணவர்களால்தான் அயல்மொழிக் கல்வி மாணவர்களை விட நல்ல முறையில் படித்து முன்னேற முடியுமெனக் காலங்காலமாகத் தமிழகக் கல்வியாளர்களும் தமிழ்ப் பற்றாளர்களும் கூறி வருவது அபத்தமா? நமது தமிழ்ப் பற்றாளர்கள் வர்க்கச் சார்புடன் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு அனுப்புவது ஒரு வழியில் நியாயந்தானா? இந்தச் சிக்கலை இன்னுங்கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.

ஒரு பள்ளிக்கூடம் நல்ல பள்ளிக்கூடம் என்றால், அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் மாணவர்கள், குறிப்பாகத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கும்மாளம் போட்டுக் கொண்டு வகுப்பறைகளில் நுழைய வேண்டும். பள்ளிக்கூடம் முடிந்ததும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியேற வேண்டும். ஏனென்றால் அங்குதான் அந்தச் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடுவதற்கு அவர்கள் வயதையத்த நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழக நிலவரம் என்ன? பள்ளிக்குச் செல்ல பிள்ளைகள் அடம்பிடிக்க, அவர்களைப் பெற்றோர் அடித்து உதைத்து அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. பள்ளி இறுதி மணி அடித்ததும் சிறைக் கதவு உடைக்கப்பட்டு வெளியேறும் கைதிகளைப் போல் பிள்ளைகள் மகிழ்ச்சிக் களிப்பில் ஆடிப் பாடிக் கொண்டு வெளியே ஓடி வருகிறார்கள், இதற்கு என்ன காரணம்?

ஆசிரியர்கள் மாணவர்களிடம் "அங்கே பார்க்காதே", "அவனைத் தொடாதே", "அவளுடன் பேசாதே" எனக் கூறி அவர்களின் இயல்பான நகைப்புப் பேச்சுக்களைக் குலைக்கிறார்கள். இவர்களும் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடுவதில்லை. அப்படிப் பேசினால் மாணவர்கள் அமெரிக்கா போய்க் கணினி வேலை செய்து பணத்தைக் குவிக்க முடியாதாம். இந்த ஆசிரியர்கள் அதனால்தானோ என்னவோ மாணவர்களைக் கணினி போன்றே கையாள்கிறார்கள். தங்களுக்குத் தெரிந்த கருத்துகளை மாணவர்களின் மூளைகளில் அப்படியே பதிவேற்றம் செய்கிறார்கள். பிறகு மாணவர்களிடம் அந்தக் கருத்துகளைப் பதிவிறக்கம் செய்யச் சொல்கிறார்கள். அந்தச் சின்னஞ்சிறார்கள் இவர்கள் சாவி கொடுத்துப் பேசும் நெட்டுருப் பொம்மைகளாகிப் போகிறார்கள்.

school girlஒரு முறை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கல்வியாளரும் எழுத்தாளருமான ஆயிஷா நடராஜன் கூறினார். ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தொலைக்காட்சியில் நடிகர் விஜய் தோன்றினால் அப்படியே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்களே, இப்படி அவர்கள் ஏன் ஆசிரியர்களைப் பார்ப்பதில்லை? கண்டிப்பு என்ற பெயரில் இறுகிப் போன ஆசிரிய முகங்களை அல்லவா மாணவர்கள் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? இத்தகைய ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு என்ன கவர்ச்சி இருக்க முடியும்? அதற்கு ஆசிரியர்களும் விஜயாக மாற வேண்டும் என்கிறார் நடராஜன். அவர் கூறுவதை நிறைவேற்றுவதற்கு நமக்குள்ள வழி என்ன? ஆசிரியர்கள் ஆடிப் பாடியும், கோணங்கித்தனங்கள் செய்தும் மாணவர்களைக் கட்டிப் போட வேண்டும். இப்போது தங்களைக் கண் கொட்டாது ரசித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் எழுத்துகளையும் எண்களையும் அழகாக அறிமுகப்படுத்த வேண்டும். இவ்விதம் பெறப்படும் அறிவை அன்றாட நடைமுறைகளுடன் ஒப்புநோக்கக் கற்றுத் தர வேண்டும்.

மாணவர்கள் மேல் வகுப்புக்குச் செல்லச் செல்ல அவர்களிடம் நண்பர்களாகப் பழகி அறிவுசார் விவாதங்கள் நடத்த வேண்டும். அந்த விவாதங்களினூடாக மொழிக்கும் வாழ்வியலுக்குமான உறவை, எண்ணுக்கும் அறிவியலுக்குமான உறவை மாணவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். இதுதான் உண்மையான படைப்புச் சிந்தனையை மாணவர்களிடம் இயற்கையாகத் தூண்டி வருங்காலத்தில் அவர்களை உண்மையான படைப்பாளிகளாக்கும், பெரும் அறிவியலர்களாக்கும்.

இப்படி ஆட்டம் பாட்டம் போட்டு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்றுத் தந்து, நட்பார்ந்த விவாதங்கள் நடத்தி அவர்களின் அறிவூற்றை இயல்பாகச் சுரக்கச் செய்கிற ஓர் ஆசிரியப் பண்பாட்டை, கல்விப் பண்பாட்டை நாம் வளர்த்தெடுக்க வேண்டுமானால் அது தாய்மொழிக் கல்வியில் மட்டுமே கைகூடும். அப்போது அங்கு பதிவேற்றக் கல்விமுறைக்கும் வழியிருக்காது, ஆங்கிலவழிப் பயிற்றுவிப்புக்கும் வழியிருக்காது.

பிசாவின் சராசரிப் புள்ளிகள் தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கும் ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களுக்கும் ஏறத்தாழ ஒன்றாக இருப்பதற்கான காரணம் இப்போது புரிகிறது அல்லவா? படைப்பாற்றலற்ற நெட்டுருக் கல்வி எனும் போது இரு கல்வி முறைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லாமல் போகிறது. எனவேதான் பிசா வினவும் நடைமுறை சார்ந்த வினாக்களுக்கு இரு வகை மாணவர்களுமே திணறிப் போனார்கள். தமிழ்வழிக் கல்வி மாணவர்களால் இந்தத் தேர்வு முறையில் பெரிதாக சாதிக்க முடியாது போகிறது. இதனை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு நல்ல எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

பெரும்பாலான மனிதர்கள் வலக்கைப் பழக்கமுடையவர்கள். உயிரியலின்படி, மனிதர்கள் தங்கள் வலக்கையால் வேலைகளைச் செய்யும்படித் தூண்டப்படுகிறார்கள். எளிய வேலைகளைச் செய்கையில் வலக்கைப் பழக்கம் என்பது ஓர் இயற்கை வலிமை என்னும் உண்மை நமக்குப் புலப்படுவதில்லை. வேலைகளின் கடினப்பாடு கூடக் கூட நமக்கு வலக்கை வலிமை புலப்படத் தொடங்குகிறது. தரையிலிருக்கும் புத்தகத்தை மேசையில் எடுத்து வைத்தல், கதவுத் தாழ்ப்பாளைத் திறத்தல், தலை சீவுதல் போன்ற எளிய காரியங்களைச் செய்யும் போது நமக்கு இடக்கை, வலக்கை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவுத் திறனுடன் வேலை செய்கின்றன. அப்போது நமக்கு வலக்கையின் உண்மை வலிமை தெரிவதில்லை. ஆனால் கணினிச் சுண்டெலியை இயக்குதல், திருகாணிகளை இறுக்குதல் போன்ற இன்னும் சற்றுக் கடினமான வேலைகளுக்குச் செல்லும் போது இடக்கை கொஞ்சம் திணறுகிறது. அப்போதும் வலக்கை அதே திறனுடன் வேலை செய்கிறது. துப்பாக்கி சுடுதல், எழுதுதல், கேரம் விளையாடுதல், கில்லி விளையாடுதல், ஓவியம் தீட்டுதல், தப்படித்தல், அறுவை சிகிச்சை செய்தல், சிற்பம் செதுக்குதல் என இன்னும் இன்னும் கடினப்பாடும் துல்லியப்பாடும் நிறைந்த வேலைகளுக்குச் செல்லச் செல்ல இடக்கை கிட்டத்தட்ட செயலற்றுப் போகிறது. ஆனால் வலக்கையோ மென்மேலும் அதிகத் துல்லியத்துடனும் வேகத்துடனும் திறனுடனும் நேர்த்தியாக வேலை செய்கிறது. ஒன்றுக்கும் உதவாத வேலைகளைச் செய்யும் போது நல்ல திறனாளி போன்று நம்மை ஏமாற்றும் இடக்கை நுணுக்கமான வேலைகளைச் செய்யும்போது மாட்டிக் கொண்டு முழிக்கிறது அல்லவா? அதே போல் ஒன்றுக்கும் உதவாத வேலைகளைச் செய்யும் போது இடக்கையத்த ஏதுமறியாத் திறனாளி போன்று நம்மை ஏமாற்றும் வலக்கை நுணுக்கமான வேலைகளைச் செய்யும் போது மாபெரும் படைப்பாளியாகி நம்மை வியக்க வைக்கிறது அல்லவா? ஆக, இயற்கைக் கைத்திறன்கள் கொஞ்சி விளையாடும் இடத்தில் வலக்கைக்கு இடக்கை என்றுமே மாற்றீடு ஆக முடியாது. (இயற்கையாக இடக்கைப் பழக்கம் உள்ளவர்கள் வலக்கையை இடக்கை என்றும் இடக்கையை வலக்கை என்றும் மாற்றிப் படித்துக் கொள்ளலாம்.)

இந்த உருவகம் அப்படியே நமது பயிற்றுமொழிக் குழப்பத்துக்கும் விடையளிக்கிறது. ஒன்றுக்கும் உதவாத நெட்டுருக் கல்வி எனும் போது ஆங்கிலவழிப் பயிற்றுவிப்புக்கும் தமிழ்வழிப் பயிற்றுவிப்புக்கும் பெரிய வேறுபாடு தெரிவதில்லை. ஆனால் நாம் மேலே கண்டவாறு மாணவர்களிடம் நகைப்புற, நட்புறப் பழகி படைப்பறிவைச் சுரக்கச் செய்யும் கல்வி நோக்கிச் செல்லச் செல்ல ஆங்கிலவழிப் பயிற்றுவிப்பு கதிகலங்கித் திணறத் தொடங்கும். ஆங்கிலவழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்பர். அவர்களால் எப்படி நகைச்சுவை பொங்க மாணவர்களிடம் கலந்துரையாட முடியும்? அங்கு அந்த ஆசிரியர்களுக்குத் தமிழன்னை மட்டுமே கைகொடுப்பாள்.

ஒரு தாயால் குழந்தையை ஆங்கிலத்தில் கொஞ்ச முடியுமா? அன்புக் கணவன் இறந்து கிடக்கையில் மனைவியால் ஆங்கிலத்தில் ஒப்பாரி வைக்க முடியுமா? பீறிட்டுக் கிளம்பும் இயற்கை உணர்வின் இடத்தைத் தாய்மொழி தவிர வேறெந்த மொழியாலும் நிரப்ப முடியாது. இதுவே பட்டறிவு உண்மை எனும் போது, உணர்வு நிலையை வெளிப்படுத்துவதற்குக் கூட ஆங்கில மொழி உதவாது எனும்போது, உணர்வு நிலை கடந்து படைப்பாற்றல் அறிவியலின் உச்ச நிலையை அடைவதற்கு ஆங்கிலம் எப்படி உதவ முடியும்? ஆங்கு தாய்த் தமிழ் தவிர வேறொரு மொழியை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்? ஆனால் இயற்கைவழி அறிவுக்குப் புறம்பான நெட்டுருக் கல்வி முறையில்தான் தமிழ்வழிக்கும் ஆங்கிலவழிக்கும் வேறுபாடு இல்லாது போகிறது.

சுருங்கச் சொன்னால், நுணுக்கத் திறனற்ற எளிய வேலை எனும் போது இடக்கைக்குச் சமமாக இயங்குவது போன்று தோற்றமளிக்கும் வலக்கை எவ்வாறு உயர்திற வேலை நோக்கிச் செல்லும் போது இடக்கையைப் புறந்தள்ளி பெரும் வல்லமையுடன் திகழ்கிறதோ அவ்வாறே உயிர்ப்பற்ற நெட்டுருப் போட்டுப் படிக்கும் பள்ளிச் சூழலில் ஆங்கிலவழிக் கல்விக்குச் சமமாக இருப்பது போல் தோற்றமளிக்கும் தமிழ்வழிக் கல்விக்கு அறிவூற்று பொங்கும் உயிர்ப்பான படைப்பாற்றலைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளிச் சூழல் வாய்க்குமானால், அது ஆங்கிலவழியைப் புறந்தள்ளித் தனக்கேயுரிய கல்வி அரியணையில் கட்டாயம் அமரும்.

தமிழகப் புறச்சூழலில் பன்னாட்டுக் குழுமங்கள் ஆனாலும், தனியார்க் குழுமங்கள் ஆனாலும், அரசுத்துறை ஆனாலும், அவை அனைத்தும் வேலைவாய்ப்பு என வரும் போது ஆங்கிலத்தை முன்னிறுத்துகின்றன.

இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் பன்னாட்டுக் குழுமம் எதற்கும் படைப்பாற்றல் மிக்க ஊழியர்கள் தேவையில்லை. அவற்றுக்குத் தாங்கள் இட்ட பணியைச் செவ்வனே செய்து முடிக்க டெக்னோக்ரேட்டுகள் என்ற பெயரில் நல்ல தொழில்நுட்பக் கூலிகள் தேவை, அவ்வளவுதான்.

இந்தியாவின் தனியார்க் குழுமங்களுக்கு, குறிப்பாக இப்போது புதிதாகப் பெருகி வரும் மென்பொருள் குழுமங்களுக்கு அறிவியல் வயப்பட்டுத் தனித்துச் சிந்திக்கும் பேரறிவாளர்கள் தேவையில்லை. அவற்றுக்குப் பன்னாட்டுக் குழுமங்களிடம் ஒப்புக் கொண்ட வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு நல்ல அறிவுக் கூலிகள் தேவை, அவ்வளவுதான். இந்தியர்களால் படைப்பாற்றல் மிக்க ஒரு மென்பொருள் பண்டத்தை ஒருபோதும் உற்பத்தி செய்ய முடியாது என்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் இயக்குனர் நந்தன் நிலேகனி. அனைவரும் பீற்றிக் கொள்வது போல் பெங்களூர் ஒன்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கு இல்லை, உள்ளபடியே அது பன்னாட்டுக் குழுமங்களுக்குத் தேவையான மென்பொருள் பண்டங்களை உற்பத்தி செய்து தரும் கூலிப் பள்ளத்தாக்கு (coolie valley) மட்டுமே என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த ஒரு மென்பொருள் குழுமத்தின் இயக்குநராகிய ஜி. வி. தசரதி. இந்த மென்பொருள் குழுமங்களின் 'அறிவு' சாகசங்கள் பற்றிப் பேசுவதற்கு ஒரு தனிக் கட்டுரையே எழுத வேண்டும்.

இந்திய அதிகார வர்க்கம் மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாது அவர்களை அடக்கி ஒடுக்குவதில் கவனம் செலுத்தும் நிறுவனமாக இயங்குகிறபடியால், அதற்குங்கூட தனது பணியிடங்களில் வேலை செய்வதற்கு நாட்டை வளர்ச்சிப் போக்கில் கொண்டுசெல்லும் முற்போக்குப் பணியாளர்கள் தேவையில்லை. அது நிறைவேற்றும் மக்கள் விரோதப் பணிகளைக் கேள்வி கேட்காது நிறைவேற்றித் தருவதற்கு நல்ல ஆட்டு மந்தைக் கூலிகள் தேவை, அவ்வளவுதான்.

இந்த அடிப்படையில்தான் மத்திய, மாநில அரசுகள் பன்னாட்டுக் குழுமங்களைக் கூவி அழைக்கின்றன. இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் இந்தியாவில் நன்கு ஆங்கிலம் தெரிந்த பெரும் பட்டாளம் இருப்பதால் இங்கு நீங்கள் நன்னம்பிக்கையுடன் கடை விரிக்கலாம் என வெளிப்படையாக அழைக்கிறார். இங்கு நமது முதல்வராகிய 'இரும்புப் பெண்மணி' ஜெயலலிதா 'விஷன் 2023' என்னும் அறிக்கையை வெளியிட்டார். அதாவது 2023இல் தமிழகம் எப்படி இருக்கப் போகிறது எனக் கனவு காண்கிறாராம். வேறென்ன? அந்த ஆண்டுக்குள் தமிழகம் முழுவதையும் பன்னாட்டு பகாசுரக் குழுமங்களுக்குப் பங்கு போட்டு விற்று விட வேண்டும் என்பதே அந்தப் பெருங்கனவு. இதற்காக அவர்களை அழைக்கும் ஜெயலலிதாவும் இங்கு தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் நன்கு கற்றுத் தேர்ந்த பெரும் உழைப்புப் பட்டாளம் இருப்பதாகப் பீற்றிக் கொள்கிறார். மன்மோகனுக்கு எதிராக ஜெயலலிதா எப்போதும் மல்லுக்கு நின்றாலும் இருவருக்கும் இலட்சியம் என்னவோ ஆங்கில இந்தியாவை உருவாக்குவதுதான்!

ஆகவே பன்னாட்டுக் குழுமங்களுக்கும் தனியார்க் குழுமங்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் ஆங்கிலத்தில் நெட்டுருப் போட்டு படித்த அறிவுக்கூலிப் பட்டாளம் தேவைப்படுகிறது. இதன் தொடர்விளைவாக, இந்தப் பட்டாளத்தில் எப்பாடுபட்டேனும் ஒரு கூலியாகி விட வேண்டுமென்ற தன்னலப் போட்டி நமது தமிழ்ப் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் பெருகி வருகிறது. இதன் தொடர்விளைவாக, இத்தகைய இயந்திரத்தனமான கூலிப் பட்டாளத்தை உருவாக்கித் தரும் தொழிற்கூடங்களாக நமது கல்விக்கூடங்கள் உருப்பெற்று வருகின்றன. இதன் தொடர்விளைவாகவே தமிழன்னையைக் கொன்று புதைத்து உருவாகும் கல்லறைகளின் மேல் புதுப் புது ஆங்கிலவழி வணிகக் கூடங்கள் புற்றீசல்கள் போல் பெருகி வருகின்றன. ஆக, இந்தத் தொடர்விளைவுகளைப் பிணைக்கும் நச்சுச் சங்கிலியாக ஆங்கிலம் திகழ்கிறது. இந்த நச்சுச் சங்கிலியை வெட்டும் கோடலி தமிழாகத்தான் இருக்க முடியும்.

"நீங்கள் ஏன் திரைப் பாடல்கள் எழுதுவதில்லை" என ஒரு முறை கவிஞர் அப்துல் ரகுமானிடம் கேட்ட போது, "அம்மி கொத்த சிற்பி எதற்கு?" என்றார். பன்னாட்டுக் குழுமங்களிடமும் தனியார்க் குழுமங்களிடமும் அறிவு அடிமைகளாய்ப் பணியாற்றுவதற்கு அந்தப் பன்னாட்டு ஆண்டைகளின் ஆங்கிலமே போதுமானது, நமது செம்மொழித் தமிழ் தேவையில்லை.

"நாம் மட்டும் அந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் கற்றுத் தேறியிருக்கா விட்டால் இன்று நம்மால் அனைத்துத் துறைகளிலும் இவ்வளவு சாதனைகள் புரிந்திருக்க முடியுமா?" என இன்று பல சமூகநீதிச் சிந்தனையர்களும் கேட்கிறார்கள். ஒடுக்குண்ட மக்கள் ஆங்கிலத்தில் படித்தால்தான் அவர்களால் பன்னாட்டு, தனியார்க் குழுமங்களின் வேலைவாய்ப்புகளைக் கைப்பற்ற முடியுமெனப் பல தலித்தியச் சிந்தனையர்களும் இன்று கூறி வருகின்றனர்.

தமிழ்வழிக் கல்வி மூலமாக நிகழ்த்தக் கூடிய அதே சாதனைகளை ஆங்கிலவழிக் கல்வி மூலமாகவும் சாதித்துக் காட்ட முடியுமானால் தாய்மொழிக் கல்விக்கான தேவையே இல்லை என்னும் முடிவுக்குப் பல சமூகநீதிச் சிந்தனையர்களும் வந்து சேர்கிறார்கள். ஆனால் இவர்கள் சாதனைகள் எனக் கருதுவது உள்ளபடியே சாதனைகள்தாமா? பிசா, அசர் அறிக்கைகள் நமது ஒடுக்குண்ட மக்களின் கல்வித் தரத்தை உலகின் அதல பாதாளத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளனவே, இனியும் அவற்றைச் சாதனைகள் என எவரும் கூற முடியுமா?

நாம் மேலே கண்ட ஒரு முக்கிய வினாவுக்கு விடை கண்டால் இதற்கும் விடை கிடைக்கும். அது துல்லியமான விடையாகவும் இருக்கும். சமூகப் பொருளியல் பண்பாட்டுக் காரணிகளுக்கும் கல்வித் தரத்துக்கும் இடையில் தமிழகத்தில் வேறுபாடேதும் இல்லை என பிசா அறிக்கை கூறுகிறதே, அப்படியானால் கல்வி வேறுபாட்டை ஒழிப்பதில் உலகத் தரத்துக்குத் தமிழகம் முன்னேறி விட்டதா? என நாம் கேட்டிருந்தோம். உலகக் கல்வித் தர வரிசைப் பட்டியலில் முதலிடங்களில் காணப்படும் நாடுகள் இந்த வேறுபாட்டை ஒழித்து முன்னேறியுள்ளது என பிசா சொல்வதில் தருக்கமுள்ளது. ஆனால் உலகத் தரவரிசைப் பட்டியலில் கடைசியில் இருக்கும் தமிழகத்தில் இந்த வேறுபாடே இல்லை என பிசா சொல்கிறதே, இதில் என்ன ஏரணம் இருக்க முடியும்?

அந்த உலக நாடுகள் கல்வியில் கடைப்பிடிக்கும் சனநாயகம் அனைத்து வர்க்க மாணவர்களின் கல்வியைச் சமப்படுத்தியுள்ளது. அப்படியானால் சாதியத் தமிழகமும் கல்வியைச் சமப்படுத்தியுள்ளதா? இங்குதான் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அந்த நாடுகள் தரமிக்க ஒரு கல்வியை மாணவர்களிடம் சமப்படுத்தியுள்ளன. ஆனால் இங்கு தமிழகத்தில் தரமற்ற கல்வி மாணவர்களிடையே சமப்படுத்தப்பட்டுள்ளது. வருணாசிரமத்தின், பார்ப்பனியத்தின் கோர முகம் இங்குதான் வெளிப்படுகிறது. பார்ப்பனியம் பிறப்பின் அடிப்படையில் அறிவை முடிவு செய்கிறது. ஒரு பார்ப்பனர் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தாலும் பிறப்பின் அடிப்படையில் மேலான இடத்துக்குச் செல்கிறார். ஒரு தாழ்த்தப்பட்டவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் பிறப்பின் அடிப்படையில் கீழான இடத்துக்குச் செல்கிறார். இயல்பிலேயே கல்வித் தரப்படுத்தல்களுக்குப் புறம்பான பார்ப்பனியம் என்ன செய்கிறது? அது தவிர்க்கவியலாது தனது கல்வித் தரமின்மையையே மொத்தச் சமூகத்தின் உயர் கல்வித் தரமாக முன்னிறுத்துகிறது. அதனையே கல்வித் தரத்தின் அடிப்படை அளவுகோலாக்குகிறது.

இந்த அளவுகோலை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பனர்களால் பிறப்பின் அடிப்படையிலான தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு தங்களைப் பெரிய மேதைகள் போலக் காட்டிக் கொள்ள முடிகிறது, எத்தகைய ஆழ் சிந்தனையுமற்று நுனிப்புல் மேயும் திறனையே தங்களின் கூர்த்த அறிவு போல் படம் காட்ட முடிகிறது, வேதக் காலந்தொட்டு சமற்கிருத சுலோகங்களை நெட்டுருப் போட்டு ஒப்புவித்துப் பெற்ற அறிவை மட்டும் வைத்துக் கொண்டு மாமேதைகள் போல் வலம் வர முடிகிறது. எனவேதான் பார்ப்பனர்களால் இந்த அளவுகோலையே வேலைத்திறனுக்கு அடிப்படையாக வைக்கும் பன்னாட்டுக் குழுமங்களிலும் தனியார்க் குழுமங்களிலும் வெற்றிகரமாக நுழைந்து அனைத்து உயரிடங்களையும் கைப்பற்றிக் கொள்ள முடிகிறது. இந்தத் தொழில்நுட்பக் கூலி வேலைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் மேனாமினுக்கிச் சாதனைகளையே தங்கள் வாழ்நாள் சாதனைகளாகக் காட்டிக் கொள்ள முடிகிறது.

ஏதோ சிறிதளவு கல்வித் தரத்தைச் சமப்படுத்த முயன்ற சமச்சீர்க் கல்வித் திட்டத்தைக் கூட வர விடாது தடுப்பதற்கு அதிமுக ஜெயலலிதா, இந்து ராம், துக்ளக் சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, பாஜக இல. கணேசன் என அனைத்துப் பார்ப்பனியச் சக்திகளும் வரிந்து கட்டிக் கொண்டு நின்றதைக் கண் முன் கண்டோம் அல்லவா? சமக் கல்வித் தரம் என்னும் சொல்லாடலே பார்ப்பனியச் சக்திகளுக்கு வேம்பாய்க் கசப்பதைத்தான் இந்நிகழ்வு நமக்குத் தெளிவாய் உணர்த்துகிறது.

முதலில் குழப்பம் ஏற்படுவதாகத் தெரிந்த பிசாவின் புள்ளிவிவரங்கள் உள்ளபடியே இப்போது உண்மையான தமிழ்க் கல்விச் சூழலைப் புரிந்து கொள்ள உதவியுள்ளன. ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களும் தமிழ்வழிக் கல்வி மாணவர்களும் ஒரே தரத்தில் இருப்பதற்கான காரணம் இப்போது நமக்கு இன்னுந்தெளிவாக விளங்கி விட்டது. எல்லாவற்றையும் விட, எது உண்மைச் சாதனை என விடை காணப் புறப்பட்ட நமக்கு இப்போது பிசா புள்ளி விவரங்கள் சரியான புரிதலையே அளித்துள்ளன.

பன்னாட்டு, தனியார்க் குழுமங்களில் பார்ப்பனர்கள் தன்னல வெறியுடன் கைப்பறிக் கொண்ட வேலைகளை ஒடுக்குண்ட மக்கள் துரத்திப் பிடிப்பது எப்படிச் சாதனையாக இருக்க முடியும்? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளில் பிறந்து இடஒதுக்கீட்டால் இன்று உயர்குடியாக்கம் பெற்றுள்ள மேட்டுக்குடிகளும், சாதி மறுத்தாலும் வர்க்கம் மறுக்காத போலித் தமிழ்ப் பற்றாளர்களும் இன்று நவீனப் பார்ப்பனர்களாக உருவெடுத்துப் பார்ப்பனர்களின் மேனாமினுக்கிச் சாதனைகளைச் செய்து காட்டுவதற்குக் களமிறங்கியிருப்பதும், பார்ப்பனியத்தின் பொய்யான கல்வித் தரத்தில் மயங்கி விழுந்து கிடப்பதும் உண்மையே!

"அங்கே போகாதே!’, "அவனிடம் பேசாதே" என்பதே ஒவ்வொரு பார்ப்பனக் குடும்பத்திலும் அன்றாடம் ஒலிக்கும் காயத்திரி மந்திரம். பார்ப்பனப் பெற்றோர் இந்த மந்திரத்தை ஓதித் தங்கள் பிள்ளைகளைக் கல்விச் சூதாட்டத்தில் நெட்டித் தள்ளுகிறார்கள். இத்தகைய சூழ்நிலை வாய்க்கப் பெறவில்லை என்றாலும் செல்வச் செழிப்பில் முன்னேறி விட்ட பிற சாதிப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கிடுக்கிப் பிடி போட்டுப் படிக்க வைக்கும் நாமக்கல் பள்ளித் தொழுவங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். கல்விச் சூதாட்டத்தில் பல வெற்றிகளைக் குவித்து வந்துள்ள பார்ப்பனக் குடும்பங்களின் சூழலைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே பிறசாதிச் செல்வந்தப் பெற்றோர்களுக்கு நாமக்கல் பிராய்லர் பள்ளிகள் உருவாக்கித் தருகின்றன.

ஆனால் சமூகநீதியில் மெய்ந்நம்பிக்கை வைத்துள்ள எவரும் இந்தக் கல்விச் சூதாட்டத்தையே அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான கல்வித் தரமாக்குவது எப்படி நியாயம்? இது வருணாசிரமம் வலியுறுத்தும் குறுங்குழுச் சாதனைக்கு வழிவகுக்குமேயன்றி மொத்தச் சமூகச் சாதனைக்கு ஒருபோதும் வழிவகுக்காது.

பார்ப்பனர்களின் 'சாதனைகளுக்கு' அடிப்படையாகத் திகழ்கிற ஒரு கல்வித் தரத்தையே ஒடுக்குண்ட மக்களுக்குமான அளவுகோலாகவும் ஏற்றுக் கொள்ளும் பிழைப் பார்வைதான் இன்று ஒடுக்குண்ட மக்களையும் பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் இந்தத் தரங்கெட்டக் கல்விச் சகதியில் கொண்டு போய்ப் புதைத்து விட்டது. தரங்கெட்ட இந்தக் கல்விக்கூடங்களில் இடஒதுக்கீடு கேட்பதை மட்டுமே ஒற்றைச் சமூகநீதிக் கொள்கையாகப் பின்பற்றுவதும், சாதியம் காக்கும் ஆங்கிவழிக் கல்வியை ஒழித்துக் கட்டிச் சமத்துவம் படைத்துக் காட்டும் மாற்றுக் கல்வித் திட்டமாகிய ஒரு சனநாயகக் கல்வித் திட்டம் குறித்துச் சிந்திக்காததுமே இன்று ஒடுக்குண்ட மக்களையும் பார்ப்பனர்களைப் போன்று அறிவுக் குருடர்களாக்கி விட்டன.

இயற்கையாக நல்ல தமிழ் பேசி இயற்கை சார்ந்த படைப்பாற்றல் மிக்க உன்னத வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒடுக்குண்ட உழைக்கும் மக்களுக்குப் பார்ப்பனர்களின் ஆங்கிலவழி நெட்டுருக் கல்வி முறை ஒரு படித்தரமாக ஒருபோதும் இருக்க முடியாது. மாறாக, அவர்களின் இயற்கை சார்ந்த படைப்புச் சிந்தனைக்கேற்ற ஒரு மாற்றுக் கல்வித் தரத்தையும், ஒரு முற்போக்குக் கல்விக் கொள்கையையும் அளவுகோலாக முன்னிறுத்தினால் மட்டுமே நம்மால் அறிவியல் நோக்குடைய பள்ளி மாணவர்களை உருவாக்கிக் காட்ட முடியும். அத்தகைய உலகத்தரமான தமிழ்ப் பிள்ளைகளை உருவாக்கித் தரும் அறிவுப் பட்டறைகளாகத் தமிழ்வழிப் பள்ளிக் கூடங்கள் மட்டுமே திகழ முடியும்.

எனவே தமிழகச் சமூகநீதிப் போராளிகள் வெறுமனே தமிழ்வழிக் கல்விக்காக மட்டும் போராடுவது தமிழைக் கல்வி அரியணையில் கொண்டுபோய்ச் சேர்க்காது. மாணவர்களிடம் இயற்கைவழியில் அறிவைக் கொண்டு போய்ச் சேர்க்கிற ஒரு கல்வித் திட்டத்தை, ஆசிரியர்களிடம் சனநாயக வழியில் அறிவு புகட்டுகிற ஒரு கல்விப் பண்பாட்டை நாம் தமிழகத்தில் நிறுவிக் காட்டி விட்டால் போதும், பிறகு எண்ணும் எழுத்தும் தமிழ்வழியில் வேண்டும் என்பதற்காகத் தனித்துப் போராடும் தேவை அருகி விடும். அப்போது பிசா உள்ளிட்ட உலகின் எந்தக் கல்வி அறிக்கையும் காலங்காலமாய்ப் பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட நம் மாணவர்களின் பார்ப்பனர்கள் உள்ளிட்ட நம் தமிழர்களின் கல்வித் தரத்தை உலகின் அறிவுக் கொடுமுடியில் கொண்டுபோய் நிற்க வைக்கும்.