தாய்த் தமிழ் மழலையர் தோட்டம்
தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளி
வெங்கடாபுரம் ஆலமரம் அருகில், அம்பத்தூர், சென்னை-600 0053.

எமது தாய்த் தமிழ் கல்விப் பணியும் தாய்த் தமிழ்ப் பள்ளியும் தொடங்கி கால் நூற்றாண்டு நிறைவடையப் போகிறது. எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு நடுவில் இத்துணைக் காலமும் இம்முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுக்கத் துணை நின்ற அனைவரையும் தாய்த் தமிழ் கல்விப் பணியின் சார்பில் நன்றியுடன் வணங்குகிறேன். குறிப்பாகச் சொன்னால், எமது கல்விப் பணியில் நம்பிக்கை வைத்துத் தம் குழந்தைகளை எம் பொறுப்பில் ஒப்படைத்து படிப்பும் பண்பும் கற்கச் செய்த பெற்றோரைப் போற்றுவது என் கடமை. எம்மிடம் கல்வி பயின்ற குழந்தைகள் கல்வியிலும் வாழ்விலும் உயர்ந்து நிற்பது கண்டு பணிவுடன் பெருமை கொள்கிறோம்.

அதே போது எம் பணி மேலும் முன்னேறிச் செல்ல வேண்டிய தேவையை உணர்ந் துள்ளோம். எமது பள்ளியை முன்னோடியாகக் கொண்டு தொடங்கப் பெற்ற சில பள்ளிகள் எம்மை விடவும் சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது கண்டு மகிழ்கிறோம்.

இந்த வகையில் திண்டிவனத்தில் பேராசிரியர் திரு பிரபா கல்விமணி அவர்கள் தலைமையில் 14 ஆண்டுகளாக இயங்கி வரும் தாய்த் தமிழ்த் தொடக்கப் பள்ளி குழந்தைகளிடம் கட்டணம் பெறாமல் இலவயக் கல்வி வழங்கி வருவது பெருமைக்குரிய செய்தி. தமிழ் அன்பர்கள், கல்வியுரிமை ஆர்வலர்கள் மனமுவந்து செய்யும் உதவிகொண்டு அவர்கள் இதனைச் சாதித்துள்ளார்கள்.

எமது அம்பத்தூர் தாய்த் தமிழ்ப் பள்ளியிலும் இலவயக் கல்வி நோக்கிய முயற்சிகளை இந்த ஆண்டு தொடங்குகிறோம். முதல் கட்டமாகத் தாய்த் தமிழ் மழலையர் தோட்டத்தில் பூக்கள், பிஞ்சுகளாக இந்தக் கல்வியாண்டில் சேர்க்கப்படும் குழந்தைகளிடம் சேர்க்கைக் கட்டணமோ மாதக் கட்டணமோ பெறுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். அவர்களுக்கு முழுக்க முழுக்க இலவயக் கல்விதான். இவ்வகையில் 50 பேருக்கு மட்டும் இடந்தரப்படும், சமூகப் பொருளியல் நோக்கில் நலிவுற்றவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

இரண்டாவதாக, தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியில் இனி எந்த வகுப்புக்கும் சேர்க்கைக் கட்டணம் கிடையாது. மாதக் கட்டணம் மட்டுமே பெறப்படும்.

அன்பான தமிழ் மக்களே! எமது இந்தப் புதிய முயற்சிக்கு எல்லா வகையிலும் ஊக்கமளிக்க வேண்டுகிறோம். எமது கல்விப் பணியை உங்கள் துணையோடும் பங்கேற்போடும் மேலும் விரிவாக, மேலும் செறிவாக வளர்த்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன்...

தியாகு,
தாளாளர்