rajiv case convicts

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் பெப்ரவரி 18 நாளிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூக்குத் தண்டனையிலிருந்து மீட்டோம். அடுத்து அவர்களோடு, நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகியோரையும் சேர்த்து எழுவரையும் விடுதலை செய்வதென்று தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதே. ஆனால் இந்திய அரசு அடாவடித்தனமாக உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. சனவரி 21, பெப்ரவரி 18 தீர்ப்புகள் வாயிலாகக் கொலைத் தண்டனைக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் சிறப்பான தீர்ப்புகள் வழங்கிய உச்ச நீதிமன்றம் தமிழர் எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதை உறுதி செய்யும் என்று எதிர்பார்த்திருந்தோம்.

வழக்கை அரசமைப்புச் சட்ட முழு ஆயத்துக்கு அனுப்பி வைக்கும் முடிவு ஏமாற்றமளிப்பதாக அமைந்து விட்டது. இதனால் 23 ஆண்டுகளைக் கடந்து சிறையிலிருப்போர் விடுதலை மேலும் கால வரம்பற்றுத் தள்ளிப் போயிருக்கிறது. அரசமைப்புச் சட்ட முழு ஆயத் தீர்ப்பு வரும் போது அதுவும் எழுவர் விடுதலைக்கு ஆதரவாகவே அமையும் என்று உறுதியாக நம்புகிறோம்.

ஆனால் அதுவரை காத்திராமல் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் படி தமிழக ஆளுனரைக் கொண்டு தமிழக அரசே அவர்களை விடுதலை செய்யலாம். அல்லது நீண்ட காப்பு விடுப்பில் வெளியே விடலாம். பிணை விடுதலை அல்லது காலவரையற்ற காப்பு விடுப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தையும் அணுகலாம். இதற்கு முற்காட்டுகள் உண்டு. தமிழர் எழுவர் விடுதலைக்காக இன்னும் எவ்வளவு காலம் எம் தமிழ்க் குடும்பம் காத்துக் கிடப்பது?