காலம் காலமாகத் தமிழ் இலக்கிய உலகில் பல அறிஞர்கள் தோன்றி வந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தமிழ் மொழியை வளம்பெறச் செய்துள்ளார்கள். அவர்களுள் டி.கே.சி. அவர்களின் பணி தனித்தன்மை வாய்ந்தது.

எழுபத்து நான்கு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்களை இப்போது வாசித்துப் பார்க்கும் போது அக்காலச் சூழலின் நிகழ்வுகள் நம் கண்முன்னே பிரதிபலிக்கிறது.

1881 இல் திருநெல்வேலி மாவட்டத்தில் தீத்தாரப்ப முதலியார் மீனம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ரசிகமணி என அழைக்கப்படும் டி.கே.சிதரம்பரநாத முதலியார். தமிழ்மேல் பற்றுக்கொண்டு திருக்குறள், பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற பல தமிழ் இலக்கியங்களைக் கற்று அவை குறித்து மாணவர்களிடம் போதித்துள்ளார். இவர் வழக்கறிஞராக பதிவு செய்திருந்தாலும் அப்பணியைத் தொடராமல் தமிழின் மீது பற்றுக் கொண்டு மொழிப் பணியை செவ்வனே செய்தவர். 1924ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இலக்கியச் சஙகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்புதான் பிற்காலத்தில் ‘வட்டத் தொட்டி’ எனப் பெயர் பெற்றது.

தமிழ்க்கவியையும், கம்பனையும் அவன் கவிதா மேன்மையையும் அனுபவிப்பதற்காகவே ஏற்பட்டது. இந்த வட்டத்தொட்டி டி.கே.சி.யின் வீட்டில் கூடிய கூட்டத்துக்குத்தான் நாளடைவில் வட்டத்தொட்டி என்ற பெயர் ஏற்பட்டது. அதன் அங்கத்தினர்கள் எல்லோரும் இலக்கியப் பணியிலே பெரிதும் ஈடுபட்டவர்கள். வட்டத்தொட்டியின் தலைவராக இருந்தவர் டி.கே.சி. ரசிகமணி அவர்களுக்கு எழுத்தைவிடப் பேச்சிலேதான் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகம். அவர்களின் எழுத்துப்பட்டியல் நீண்டாலும் அவர் பேசிய பேச்சுக்களுக்கு ஈடுகொடுக்க முடியாது. ஆனால் அவருடைய கடிதங்கள் அந்தக் குறையை நீக்கிவிடும்.

தனது ரசனையின் மூலம் தமிழ்க் கவிதையில் மறைந்து கிடந்த கருத்துக்களை வெளிப்படுத்தியவர் என்பதால் ரசிகமணி என அழைக்கப்பட்டார். தனது கடிதங்கள் வழி தமிழின் உன்னதங்களை உயிர்ப்புடன் உலவச் செய்தவர், ஐரோப்பிய நாடுகளில் சிறப்பாக ஃபிரான்சிலும், இங்கிலாந்திலும் கடிதங்கள் வாயிலாகவே இலக்கியத்தை வளர்த்து வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழில் டி.கே.சி. கடிதம் எழுதுவதைக் கைக்கொண்டபின்தான் கடித இலக்கியம் என்ற புதிய இலக்கிய வகைமை உருவாகி வளர்ந்தது. அவரின் கடிதங்கள் கலைத் தகுதி பெற்றவை.

இதய ஒலி, கம்பர் யார், உள்ளிட்ட நூல்களும், முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகிய பதிப்புகளும் டி.கே.சி.யின் சிறப்பு வாய்ந்த படைப்பாக்கங்கள். வட்டத் தொட்டி நாயகர், வளர்தமிழ் ஆர்வலர், ரசிகமணி, குற்றால முனிவர் என்பன இவரின் பல்வேறு பெயர்களாகும்.

டி.கே.சி.யின் கடிதங்கள் நேருக்கு நேர் நின்று பேசும் தன்மையின. யாருக்கு எழுதியுள்ளாரோ அந்த நபரைத் தன் கண்முன் நிறுத்தி ரசிகமணி அவரோடு இயல்பாக உரையாடுகிறார். உண்மையில் இவருடைய கடிதங்கள் அற்புதமாக அமைந்துள்ளன. டி.கே.சி.யின் ஆளுமையை அவரின் கடிதங்கள் காட்டுகின்றன.

கல்கி, ராஜாஜி, தேசிகவிநாயகம் பிள்ளை, மற்றும் பல நண்பர்கள் உட்பட ரசிகமணி டி.கே.சி இருபத்து ஏழு பேருக்கு கடிதங்கள் எழுதியுள்ளார். கடிதம் எழுதுவதில் இருக்கும் ஆனந்தமும், சுகமும் தனி என்கிறார் டி.கே.சி. கடிதங்கள் எழுதுவதைப் பல ஆண்டு காலமாக மிகுந்த உவப்புடன் செய்து வந்தவர்.

எல்லாக் கடிதங்களும் எழுத்தாளுமைகள் பற்றியதாக, இலக்கியச் செய்திகளைச் சொல்வதாக உள்ளன. தனிப்பட்டவர்களுக்கு அவ்வப்போது எழுதப் பெற்றவை டி.கே.சி.யின் கடிதங்கள். வெறும் நலம் விசாரிப்புடன் நின்றுவிடாது, இலக்கிய நிகழ்வுகளையும், விமர்சனங்களையும், விளக்கங்களையும் உணர்ச்சிகளையும் வெளிக்கொணரும் இக்கடிதங்களில் இலக்கிய ரசனை ஊடாடிக் கொண்டிருக்கும்.

தம் வாழ்நாளில் கடைசி நான்கு ஆண்டுகளை வீட்டினுள்ளேயே டி.கே.சி. கழிக்க நேர்ந்தது. அந்த நாட்களில் நண்பர்களோடும், தமது ரசிகர்களோடும் உரையாடிக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு கடிதங்களே நல்ல சாதனமாக அமைந்தது. இலக்கியத் தகுதி பெறுவதற்கும், கடிதக்கலை என்னும் சிறப்பை அடைவதற்கும் இவரின் கடிதங்கள் அடித்தளம் அமைத்தன என்று சொல்லலாம்.

ஒரு நிலையில் மூச்சுவிடுவது எவ்வளவு அவசியமோ கடிதம் எழுதுவதும் அவ்வளவு அவசியமாக டி.கே.சி.க்கு ஆகிவிட்டது. அவரே ஒரு கடிதத்தில் நாளுக்கு நாள் என்னபடுகிறது என்றால் “ஆகாரம், காற்று , தண்ணீர் இவைகளைப் போலவே கடிதங்களும் இன்றியமையாத காரியம் என்பதாக” என்று மகராஜன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் சொல்லியிருக்கிறார்.

தனிமையில் இருக்கும்போதும் உறக்கம் வராதபோதும், காலை 3.30 மணிக்கு கூட கடிதம் எழுதி மனநிறைவு பெற்றுள்ளதாக டி.கே.சி., மகராஜன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கம்பராமாயணத்தின் மீது அளவில்லா பற்றுடையவர். எந்த ஊருக்குச் சென்றாலும் மக்கள் விருப்பத்தோடு டி.கே.சி. அவர்களை அழைத்து கம்பராமாயணத்தை வாசிக்கச் செய்கிறார்கள். அவரும் அப்படியே ஒரு நாளைக்கு முப்பது நாற்பது பாடல்கள் வரை வாசித்துவிடுகிறார். வந்த காரியம் முடிந்து புறப்பட்டாலும், அவரை தினமும் வாசித்துக் கொண்டே இருங்கள் நாங்கள் அதை அனுபவிக்கிறோம் என இலக்கிய ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதற்கு டி.கே.சி அவர்கள் பெருமிதத்தோடு “கம்பரை படிக்க ஜென்மம் காணாதே என்கிறார்”, அதைத் தொடாமல் இருந்தவர்களை எல்லாம் கம்பரைப் பற்றிக் கேட்கச் செய்துவிட்டேன் என மகிழ்ச்சியடைகிறார். இவ்வளவு பேரும் கம்பரில் ஈடுபட்ட பிறகு கம்பரை அழித்துவிட முடியாது எளிதில்| என கம்பீரமாக மகராஜன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கம்பருக்கு நான் செய்த சேவைகளில் எல்லாம் பெரிய சேவை “அவரை அனுபவித்த சேவைதான்” என்று பாஸ்கர தொண்டைமானுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டி.கே.சிக்குக் கம்பர் கவிதையிலும் தமிழ் மொழியிலும் இருந்த பக்தியானது வெறித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. கம்பராமயணத்தின் மீது கொண்ட உள்ளுணர்வையும், மொழி நுணுக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டது. டி.கே.சி. மரணப் படுக்கையில் இருந்தபோது மகராஜன் அவர்களை அழைத்து,

“உங்களிடம் ஒரு வரம் கேட்கிறேன், நீங்கள் ஒன்றைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும், தமிழர்களையும் சொல்ல வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எதைச்சொல்ல வேண்டும்? டி.கே.சி. என்று ஒருவன் இருந்தான், அவன் சொல்வான், உலகத்திலேயே தமிழைப் போன்ற உயர்ந்த மொழி வேறு ஒன்றும் இல்லை உலகத்திலேயே கம்பனைப் போன்ற உயர்ந்த கவிஞன் வேறு ஒருவரும் இல்லை என்று சொல்லுவான்.” இதைத் தமிழர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும். 500 ஆண்டுகள் (அ) 1000 ஆண்டுகள் கழித்தாவது உலகமெல்லாம் இதை ஒப்புக்கொள்ளும் என்று சொன்னார் என மகராஜன் குறிப்பிடுகிறார். அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையை 25.01.2010ல் எழுதப்பட்ட கடிதம் இப்படி எடுத்துச் சொல்கிறது.

மற்றொரு கடிதத்தில் குறிப்பிடும்போது வருகிற வழியில் “விருதுநகர், மதுரை, திண்டுக்கல், முதலிய ஸ்டேஷன்களில் இளைஞர்கள் ஆட்டோகிராஃப் பெற நோட்புத்தகங்களையோ, புதுப் புத்தகங்களையோ கொண்டு வந்து என் பெயரை எழுதச் சொன்னார்கள் என் அனுபவத்தை எழுதிக் கொடுத்தேன்,

                தமிழனுக்குத்

                                தமிழே

                                                துணை !

என்பதைத் தான் எழுதினேன்”. தமிழனுக்குத் தமிழே துணை – ஏதோ படோடோபச் சொல் என்று கூட எண்ணிவிடலாம். இது உண்மைதான் என்பதை அறிந்து கொள்வதற்கு (26.01.1950) இன்று ஒரு நல்ல சந்தர்ப்பம் என குறிப்பிடும்போது, ஒன்று நினைவுக்கு வருகிறது,

தமிழுக்கு கதி இரண்டு என்பார்கள் (கம்பராமாயணம், திருக்குறள்) அவற்றை நோக்கும்போது டி.கே.சி. அவர்கள் மூன்றே வார்த்தையில் தமிழனுக்குத் தழிழே துணை என்று பதிவுசெய்தது போற்றத்தக்கது.

ஒருமுறை டி.கே.சி. அவர்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு ரிடையர்டு போஸ்டல் டிபார்ட்மெண்ட் ஆபீஸர் இவரோடு பயணிக்கிறார். அவர் தன்னோடு பயணம் செய்பவர்; ரசிகமணி டி.கே.சி. தான் என்பதை அடையாளம் கண்டு கொண்டார்.

டி.கே.சியிடம் அவர் சொல்கிறார்   “வடமொழியிலேயே வால்மீகி ராமாயணத்தை மூன்று தனதுக்கு மேலாகப் படித்தேன். கடமை என்று எண்ணிப் படித்தேன். அது என்னை ஒருவிதத்திலும் மாற்றிவிடவில்லை. ஆனால் கல்கியில் வந்த கம்பராமாயணத்தை வாசிக்க ஆரம்பித்த பிறகு வேறு மனுஷனாய் ஆகிவிட்டேன். பக்தனாகவே ஆகிவிட்டேன். உங்களுக்கு என் நன்றியைச் செலுத்திக் கொள்கிறேன்” என்று கம்பராமயணத்தின் மூலம் தன் வாழ்வுநிலை மாறியுள்ளதை விவரிக்கிறார்.

வயதான ஒருவர் தன் அனுபவத்தை நேருக்கு நேராக டி.கே.சி. அவர்களிடம் பகிர்ந்துகொண்ட இந்நிகழ்வு அந்த இரயில் பெட்டியில் பயணித்த சக பயணிகளின் இதயத்தையும் உருக்கிவிட்டதாக அமைந்தது என இந்நிகழ்வுகளை அனுபவித்த டி.கே.சி. இதனை மகராஜனிடம் கடிதம் மூலம் பகிர்நது கொண்டபோது தன் உள்ளத்தில் அளவற்ற மகிழ்ச்சியும் ஊக்கமும் உண்டானதாக விவரிக்கிறார்.

கவிதை, கலை, பண்பாடு, கல்வி, சமயம், வாழ்க்கை இப்படிப் பல துறைகளிலும் முத்திரைப் பதித்தவர். இவரது கடிதங்களில் இந்த உண்மைகள் என்றும் மிளிர்ந்து கொண்டிருக்கும்.

தாம் அனுபவித்ததை தாம் கண்ட உண்மையை ஒத்து உணரும் அன்பர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். அந்த அன்பர்கள் அதில் ஈடுபட்டு அனுபவிப்பதைப் பார்த்து அவர்கள் ஒரு நிறைவும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.

இவரின் கடிதங்கள் சாகா வரம் பெற்ற இலக்கியங்களாகத் திகழ்கின்றன. ஆவைகள் டி.கே.சி. யார் என்று தழிழ்ச் சமுதாயத்துக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

கல்கி அவர்களுக்கும் கடிதங்கள் எழுதியுள்ளார். கல்கி என்றால் ஒரு வாரப் பத்திரிக்கை என்கிறார்கள். ஆனால் கல்கி என்றால் ஒரு தத்துவம் என்கிறார் டி.கே.சி. கல்கி என்கிற தத்துவம் (அன்று) தமிழ்நாட்டில் இல்லாவிட்டால் தமிழ்மொழி வளர்ச்சியே இல்லை என்கிறார். தமிழ்நாட்டின் பத்திரிக்கை உலகிலும், எழுத்தாளர் உலகிலும் முன்னணியில் நின்றவர் கல்கி. இவரின் சேவையை டி.கே.சி. அவர்கள் மதித்திருக்கிறார்.

“தாங்கள் தமிழ் உலகத்திற்கு வந்த பிறகு பாராட்டும், புகழும் தமிழுக்குத் திரும்பிவிட்டன” என்கிறார் டி.கே.சி. ராஜாஜி அவர்கள் முத்தொள்ளாயிரப் பாடல்களை வாசிக்க வாசிக்க அனுபவித்து கடிதம் எழுதிக் கொண்டே இருக்கிறார்;. “மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. ராஜாஜியும் தாங்களும் என் புஸ்தகம் உபயோகமான புஸ்தகம் என்று சொல்லுகிறீர்கள்,” அதுபோதும் என்று தனது பதிப்புகள் குறித்து கல்கி அவர்களுக்கு டி.கே.சி. எழுதிய கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

கங்கைக்கும் யமுனைக்கும் எவ்வளவோ தனித்தனியான சிறப்புகள் இருந்தாலும் இரண்டும் சேர்ந்து கலந்து பார்க்கின்றபோது அதற்கு ஏதோ இல்லாத மகத்துவம் ஏற்படுகிறது. அவ்வாறுதான் ராஜாஜியும், டி.கே.சியும் எவ்வளவோ பெருமையுற்றார்கள். தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் ஒருவர் என்றால் மற்றொருவர் இலக்கியத் தலைவர், இரண்டுபேரும் சேர்ந்ததால் அரசியல், இலக்கியம், கலைஞானம் என்பதெல்லாம் இணைந்து ஒன்றாகிவிடுகிறது.

ராஜாஜி, டி.கே.சியை எப்படி மதிக்கிறார் என்பதற்குக் “கலை விஷயமாக டி.கே.சி. சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் நான் சொல்லுவதாகவே நீங்கள் ஒப்புக்கொள்ளலாம்” என்று தேவக்கோட்டை தமிழிசை மாநாட்டிற்குத் திருச்சி சிறையிலிருந்து தந்தி அடிக்கிறார் டி.கே.சி.யின் பெருமையை அறிந்து கொள்ள இது ஒன்றே போதும்.

டி.கே.சி. அவர்கள் கவிமணியின் ஆசிய ஜோதியை வாசித்துவிட்டு “தாங்களும் தமிழுமாகச் சேர்ந்து எவ்வளவோ ஆறுதலைத் தருகிறீர்கள் என்கிறார்”. கல்கி, ராஜாஜி இருந்தால் ரொம்பவும் அனுபவிப்பார்கள். தமிழ் உணர்ச்சி இருக்கும்வரை தங்கள் பாட்டு நிற்கும் என கவிமணிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகமணி வாழ்க்கையின் உயரிய பண்புகளை மற்றவர்களுக்கு எழுதியுள்ள கடிதங்களில் விரவி இருப்பதை நாம் படித்து உணரலாம்.

“கலையில் எல்லாம் உயரிய கலை அன்பை அனுபவிக்கிற கலைதான். இந்தக் கலையில் ரசிகமணி தான் நான்” என்கிறார் டி.கே.சி.

ரசிகமணி டி.கே.சியின் கடிதங்களில் காணப்படும் கருத்துக்கள் அனைத்தும் நம் வாழ்நாளுக்கு மிகவும் பயன்படக்கூடியதாகவும், கருத்தாழம் மிக்கவையாகவும் உள்ளன எனக் கூறினால் அது மிகையாகாது.

Pin It