20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் மனிதனின் அறிவியல் வளர்ச்சி வியக்கத்தக்க அளவிற்கு இருந்ததை / இருப்பதை நாம் அறிவோம். அதன் பயனை நாம் முழுமையாக அனுபவிக்கிறோம். இருந்தாலும் பழமையிலிருந்து விடுபடத் தயங்குகிறோம்.

மின் விளக்கு எரியும் போது அகல்விளக்கை ஏற்றுகிறோம் நோயுற்ற மனிதனின் உயிரைக் காப்பது மருத்துவர்தான் என்பதை அறிந்தாலும், கடவுள் சிலைகளுக்குக் காணிக்கை செலுத்துகிறோம். இறந்தவர் உயிர் வாழ்வதில்லை என்ற உண்மை தெரிந்தும் ஆண்டு தோறும் தவசம் செய்கிறோம். பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன் மற்றொருவன் தாழ்ந்தவன் என்று போதிக்கும் மடமையை ஏற்கிறோம்.

1903 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வில்பர் ரைட் (Wilbur Wright) மற்றும் ஓர்வில் ரைட் (Orville Wright) சகோதரர்கள் பறக்கும் விமானத்தைக் கண்டுபிடித்தனர். அதற்குக் காரணம் நாம் வணங்கும் கடவுளா? மனிதனின் அறிவியல் வளர்ச்சியா?

1969 ஆம்ஆண்டு ஜுலைத் திங்கள் 21 ஆம் நாள் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத தொலைவில் இருக்கும் சந்திரனுக்கு (3 இலட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர்)  40,000 கி.மீ. வேகத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் 3 பேர் ராக்கெட்டில் பயணம் செய்து நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால்பதித்துத் திரும்பியதற்குக் காரணம் நாம் வணங்கும் கடவுளா? மனிதனின் அறிவியல் வளர்ச்சியா?

1978 ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள் 25 ஆம் நாள் பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்த லெஸ்லி, ஜான்பிரவுன் தம்பதியினருக்குச் செயற்கை முறையில் கருத்தரித்து பெண் குழந்தை பெற வழிவகை செய்தனர் மருத்துவர்கள் ஸ்டெப்டோ மற்றும் எட்வர்ட்ஸ் என்கின்ற மருத்துவர்கள். இதற்குக் காரணம் நாம் வணங்கும் கடவுளா? மனிதனின் அறிவியல் வளர்ச்சியா?

இவ்வளவிற்குப் பின்னும் கடவுள், மதம், சாதி என்ற மூடநம்பிக்கைகளில் மனிதன் மூழ்கிக் கிடப்பது நியாயமா? கடவுள்தான் மனிதர்களைச் சாதிகளாய்ப் படைத்தார் என்று கூறும் நயவஞ்சகத்தை நாம் நம்பலாமா?  இந்தியாவில் இந்து மதத்தில் மட்டும் சாதிகளைப் படைத்த பிரம்மா ஏன்? இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் சாதிகளைப் படைக்கவில்லை. பிரம்மா உலகத்துக்கே கடவுளா? அல்லது இந்தியாவுக்கு மட்டும் தானா?

உலக மக்கள் தொகை 706 கோடி அதில் இந்தியாவில் வாழும் மக்கள் 121.01 கோடி. இதில் இந்துக்கள் 97.41 கோடி இவர்கள் மட்டும் பல சாதிகளாய்ப் பிரிந்து வாழ்கின்றனர். உலகில் எங்காவது சாதி உண்டா? சாதிப் பார்த்துத் திருமணம் செய்வதுண்டா? அங்கு 99 விழுக்காடு காதல் திருமணங்களே. திருமணத்திற்கு மொழி, சாதி, மதம், இனம், நாடு என எந்தத் தடையும் இல்லை.  அவர்கள் மனிதர்களாக வாழ்கிறார்கள். மனித நேயத்துடன்வாழ்கிறார்கள். திருமணம் செய்தும் வாழ்கிறார்கள். திருமணம் செய்யாமலும் வாழ்கிறார்கள். விரும்பினால் சேர்ந்து வாழ்கிறார்கள். விரும்பாவிட்டால் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்களைத் தடைசெய்வதற்கோ துன்புறுத்துவதற்கோ "சாதி வெறிபிடித்த தலைவர்கள் அங்கு இல்லை''

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அங்கு உண்டு. இன வேறுபாடு அவர்கள் பார்த்ததுண்டு. கறுப்பு இன மக்களை அடிமைகளாக நடத்தியதுண்டு. கொடுமைகள் செய்ததுண்டு. ஆனால் இன்று என்ன நிலை? "அடிமைமுறை'' ஒழிக்கப்பட்டு விட்டது. கறுப்பு இன மக்கள் விடுதலை பெற்றுவிட்டனர். வெள்ளையர்களும் கறுப்பு இன மக்களும் திருமண உறவு வைத்துக்கொள்கின்றனர்.

தென் ஆப்பிரிக்கா நாட்டின் அதிபராகக் கறுப்பு இனத்தைச் சேர்ந்த நெல்சன் மண்டேலே தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராகக் கறுப்பு இனத்தைச்சேர்ந்த கோபி அண்ணன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அமெரிக்காவில் 44 ஆவது குடியரசுத் தலைவராகக் கறுப்பு இனத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

எனவே, உலக மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, மனிதர்களாக அறிவுப் பாதையில் நடைபோடுகின்றனர். அவர்களிடையே கடவுள் நம்பிக்கை குறைந்து வருகிறது. உலகில் கடவுள் நம்பிக்கை குறைந்து வருகின்ற முதல் 10 நாடுகளின் பட்டியலைப் பாருங்கள்.

1.    பிரான்சு    33 %  மக்கள்

2.    பெல்ஜியம் 27 % மக்கள்

3.    நெதர்லாந்து     25 % மக்கள்

4.    ஜெர்மனி   23 % மக்கள்

5.    சுவீடன்         23 % மக்கள்

6.    இங்கிலாந்து     20 % மக்கள்

7.    அங்கேரி   19 % மக்கள்

8.    டென்மார்க்      18 % மக்கள்

9.    ஸ்பெயின் 18 % மக்கள்

10.   நார்வே          17 % மக்கள்

ஆனால், நம் நாட்டில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவே. மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் சாதி வேற்றுமைகளுக்கு எதிராகவும் சித்தர்கள் முதல் பெரியார் வரை பல தலைவர்கள் தோன்றித் தொண்டாற்றி மறைந்துள்ளனர். ஆனால், நம்மிடையே மூடநம்பிக்கைகளும், சாதியும் இன்றும் தொடர்கிறது.

இந்திய அரசியல் சட்டம் எல்லோரும் சமம் என்கிறது. பிரிவு 17 தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கிறது இருப்பினும் சில சுயநலவாதிகள் சாதியைத் தக்கவைத்துக் கொள்ள சாதிவெறியைத் தூண்டித் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

தமிழகத்தில் வடக்கே வன்னியர்களும், தெற்கே தேவர்களும் மேற்கே கவுண்டர்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடர்ந்து அவர்களை முன்னேறவிடாமல் சொல்லொண்ணாத் துயரத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

நாடு விடுதலை பெற்று 65 ஆண்டுகள் கடந்தும் தீண்டத்தகாத மக்கள் இன்னும் விடியலைக் காணவில்லையே! ஏன்? அவர்களுக்கு விடுதலை என்பது கானல் நீரோ?

இந்நிலை தொடர்ந்தால் தீண்டத்தகாத மக்கள் சமத்துவத்தை அடைந்திட, உரிமைகளைப் பெற்றிட, விடுதலையை வென்றிட மதம் மாறுவதுதான் ஒரே வழி என அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி முடிவெடுக்கும் நாள் விரைவில் வரும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திட வேண்டும்.