"காருவகி' ஒரு பெண்ணின் பெயர்த் தமிழில் இப்படியொரு  பெயரா? என்று கேட்கத் தோன்றும் ஆம், காருவகி என்பது தூய தமிழ்ப் பெயரே கார்+உவகி = காருவகி

"காருவகி' ஒரு வரலாற்றுப்புதினம் தமிழர்களின் வரலாறு பெரும்பாலும் மறைக்கப்பட்டது. அதுபோல் மாமன்னன் அசோகனின் வரலாறும் மறைக்கப்பட்டுள்ளது என்பதை இப்புதினம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கலிங்கப் போரை நாம் அறிவோம். இளவரசன் அசோகன் கலிங்க மன்னனின் உதவியுடன்தான் கலிங்கத்தில் போரிட்டான் என்பதையும் நாம் அறிவோம். ஆனால், இளவரசன் அசோகனுடன் எதிர்த்து போரிட்டது யார்? அவன் பெயர் என்ன? அவன் எந்த நாட்டைச் சார்ந்தவன்? வடநாடா? தமிழ்நாடா? எதுவும் தெரியாது. உண்மையில் கலிங்கப்போரில் இளவரசன் அசோகனுடன் போரிட்டது சோழமன்னன் இளஞ்சேட்சென்னி என்பதை இந்நூல் மூலம் அறிய முடிகிறது.

கலிங்கப் போர் நடைபெற்றதற்குக் காரணம் தமிழர்களின் வரலாற்றுச்சுவடிகள் வைத்திருந்த சத்திரத்தைக் கலிங்க நாட்டு மன்னன் தீயிட்டுக் கொளுத்தியதே ஆகும்.

கலிங்கப் போரில் அசோகன், வெற்றிப்பெற்றதாகவே நாம் இதுவரை அறிந்திருந்தோம். உண்மையில் கலிங்கப்போர் பாதியிலேயே ஒரு புலவனால் நிறுத்தப்பட்டது. சோழ மன்னன் இளஞ்சேட் சென்னியின் போர் யானையைப் புலவர் ஊன் பொதி பசுங்குடையார் தானமாக கேட்டுப்போரை நிறுத்தினார் என்ற புதிய செய்தியையும் இந்நூல் தருகிறது.

மௌரியப் பேரரசன் சந்திர குப்தனின் மகன் பிந்துசாரன், தனது இரண்டு மகன்களில் சுசிமனை ஆதரித்தும் அசோகனை வெறுத்தும் ஒதுக்கியத்திற்குக் காரணம் அசோகனின் தாய் நாவிதர் (மருத்துவர்) குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதும் அசோகன் கலப்பு மணத்தில் பிறந்தவன் என்பதையும், அசோகன் மனம் திறந்து பௌத்தத்தைத் தளுவியதற்குக் காரணம் கலிங்கப் போர் மட்டுமல்ல, அதற்குக் காரணமானவள் அவன் விரும்பிய தமிழ்ப் பெண் காருவகிதான் என்பதையும் இந்நூல் விளக்குகிறது.

மௌரிய சாம்ராஜ்யத்தைச் சூழ்ச்சியில் தன் வசப்படுத்திக் கொண்ட சாணக்கியன் நந்த வம்சத்தைப் பூண்டோடு அழித்ததோடு அசோகனின் வீரத்தைப் பயன்படுத்தி தமிழக மன்னர்களை வென்று "அகன்ற மகத சாம்ராஜ்யத்தை அமைத்து அதன்மூலம் பௌத்தத்தை அழித்துத் தமிழகத்தையே சிறைக் கூடமாக்கி பார்ப்பனியத்தைக் கோலோச்ச நினைத்த பார்ப்பன அறிஞனை தமிழ்ப்பெண் காருவகியிடம் தோற்று அரசியலைவிட்டே ஓடினான் என்ற உண்மை வரலாறும் இந்நூல் மூலம் அறியமுடிகிறது.

புத்தன் போதித்த "பௌத்தம்' ஞான விளக்கம் – பகுத்தறிவு பூர்வமானது; பகுத்தறிவையே மதம் என்று ஆக்கிவிட்டால் புத்தன் கடவுளாகி விடுகிறான்.

கடவுள் மறுப்பினரான புத்தரையே கடவுளாக்கி விடுகிறவர்களிடம் உண்மையை, உயர் பண்புகளை, மனித நேயத்தை எதிர்பார்க்க முடியுமா?

"காருவகி' ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய அரிய நூல் ஆசிரியர் இளவேனில் பாராட்டுக்குரியவர்.

 காருவகி
இளவேனில்
பக்கம் : 256
விலை ரூ.140/–
வெளியீடு : "கொற்றவை'
     கற்பகம் புத்தகாலயம், தியாகராயர் நகர்
     சென்னை – 17. பேசி : 24314347