எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலே இருக்கிற விண்வெளிக்கோள்களை எல்லாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருதுகிற நாம், நம்மைச் சுற்றி இருக்கிற உயிரினங்களைப் பற்றிக்கூடப் பலநேரங்களில் அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.

உலகின் செய்திகள் பலவற்றை அறிந்துகொள்ள ஆசைப்படுகிற நாம், சில வேளைகளில் நம்மோடு இருக்கிற நமக்கு மிக அருகில் இருக்கிற உயிரினங்களைப் பற்றி அறிந்து வைத்து வைத்துக் கொள்வது இல்லை. மற்ற உயிரினங்கள் எல்லாம் நமக்கு அறிமுகம் ஆகவில்லை என்றாலும் எந்த ஒரு குழந்தைக்கும் கூட பல்லியைத் தெரியும். வீட்டில் இருக்கிற பல்லியை அறியாத குழந்தைகளோ பெரியவர்களோ இருக்க முடியாது. வீட்டில் நாய் வளர்க்கிறோம், பூனை வளர்க்கிறோம், மீன் வளர்க்கிறோம், ஆனால் பல்லிகளை நாம் வளர்ப்பதில்லை. அவை தானாகவே வளர்கின்றன. நம்முடைய வீட்டுச் சுவர்களில் எந்த நேரத்திலும் பல்லிகளை நாம் பார்க்க முடியும். பெரும்பாலும் பகலில் எங்கோ இண்டு இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கிற பல்லிகள், மாலைக்குப் பிறகு இரவு நேரத்திலே மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன. இந்த பல்லிகள் நம்மோடு இருக்கின்றன. நம்மோடு வாழ்கின்றன. ஆனால் அந்தப் பல்லிகளைப் பற்றி நாம் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம் என்பது நம் சிந்தனைக்குரியது.

நாம் பல்லிகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதெல்லாம் ஒரே ஒரு செய்திதான். அந்தச் செய்தியும் முற்றிலும் தவறானது என்று அறிவியல் அறிஞர்கள் இன்றைக்குக் கூறுகிறார்கள். பல்லி உணவில் விழுந்து விட்டால் அந்த உணவு விசமாய்ப் போய்விடும், நமக்கு வாந்தி வரும், குமட்டல் வரும், உடல் நலம்கெடும், இதுதான் நாம் அறிந்து வைத்திருக்கிற செய்தி. இந்தச் செய்தியும் உண்மையில்லை என்பது இன்னொரு பக்கம். நம்முடன் இருக்கிற ஒரு சின்ன உயிரினம் பற்றி நாம் அறியாமல் இருக்கிறோம். பல்லி என்பது மனிதர்களுக்கு எந்தவிதத்திலும் கேடு செய்யாத ஓர் உயிரினம்.

தியோடர் பாஸ்கரன் போன்ற சுற்றுச்சூழலிலே ஆர்வம் கொண்டவர்கள் பல்லியைக் குறித்து ஒரு நூலிலே எழுதியிருக்கிறார்கள்."இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' என்கிற புத்தகத்தில் பல்லியைப் பற்றி மட்டுமே ஒரு அத்தியாயத்தை அவர் எழுதியிருக்கிறார். அதில் இருக்கிற பல செய்திகள் நமக்கு, அடடா இத்தனை காலம் நம்மோடு இருக்கிற பல்லியைப் பற்றி இதுவரைக்கும் இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லையே என்கிற ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது. முதலில் அவர் சொல்கிற செய்தி, மனிதர்கள் தங்கள் தவறுகளுக்குப் பல்லிகளைப் பலியாக்கி இருக்கிறார்கள் என்பதுதான். பெரும்பான்மையாக, பல்லி விழுந்தால் அந்த உணவை உட்கொண்ட பிள்ளைகள் மயக்க மடைந்தார்கள் என்கிற செய்தி மதிய உணவுக் கூடங்களில் இருந்துதான் வருகிறது. ஆனால் பல்லிகளுக்கு நஞ்சு கிடையாது என்பதுதான் அறிவியல் உண்மை. எனவே, பல்லிகளை உண்பதால் கூட எந்தவித உடல்நலிவும் நமக்கு ஏற்பட்டுவிடாது. அதற்கு என்ன சான்று என்றால் பல்லியும், உடும்பும் ஒரே இனம்தான், சின்னச் சின்னதாகத் தொடங்கி பல்லியிலே இருந்து ஓணான், பச்சோந்தி – அப்படியே போனால் உடும்பு வரைக்கும் பல்லியினுடைய இனத்தைச் சேர்ந்தவைதான். உடும்புக் கறியே உண்பவர்கள் இருக்கிறார்கள். காட்டிலே இருந்த சந்தன வீரப்பனைப் பற்றிச் சொல்கிறபோது, அவர் விரும்பி உண்ட உணவு உடும்புக் கறி என்பார்கள். எனவே உடும்புக் கறியையே உண்கிறவர்கள் இருக்கிறபோது, பல்லி உணவில் விழுந்ததால் ஒரு மனிதன் இறந்து போய்விடுவான் என்பது எந்த விதத்திலும் உண்மையில்லை. மங்கோலிய இன மக்களுக்கு இன்றைக்கும் அதுபோன்ற ஊர்வனவற்றை உண்கிற பழக்கம் இருக்கிறது. பல்லி நஞ்சென்று சொன்னால் இந்நேரம் அத்தனைபேரும் அங்குச் செத்துப்போயிருக்க வேண்டும். பல்லியில் எந்த நஞ்சும் கிடையாது.

பிறகு எப்படி பல்லி உணவிலே விழுந்தால் அந்த பிள்ளைகளுக்கெல்லாம் வாந்தியும், மயக்கமும் வருகிறது என்றால், கெட்டுப்போன உணவை அதாவது நஞ்சாகிவிட்ட உணவை (புட்பாய்சன்) உட்கொள்வதால் அந்நிலை ஏற்படுகிறது. மனிதர்கள் தங்கள் தவற்றை மறைப்பதற்காக, அவற்றை பல்லிகளின் மிது சாட்டி விடுகிறார்கள் என்பதுதான் தியோடர் பாஸ்கரன் வைக்கிற வாதம். ஆனால் அடிக்கடி நாம் செய்திகளில் பார்க்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு புதுவையிலே ஒரு பெண் கொல்லப்பட்டாள். அவளுடைய கணவன் திட்டமிட்டுத் தன்னுடைய மனைவியைக் கொன்றுவிட்டு, அவள் உண்ட உணவிலே ஒரு பல்லியையும் பிடித்துப்போட்டுவிட்டு, பல்லி விழுந்த உணவை உண்டதால் இறந்துபோனாள் என்று சொல்லிவிட்டான். பிறகு காவல் துறை ஆராய்ச்சி செய்துபார்த்ததில் அந்தப் பெண்ணின் உடம்பில் சயனைடு கலந்திருந்ததைக் கண்டுபிடித்தார்கள். அந்தப் பெண்ணின் மரணத்திற்கும் பல்லிக்கும் எந்தவிதத்திலும் தொடர்பு கிடையாது. அந்தப் பெண் இறந்ததற்கு சயனைடு உட்கொண்டதுதான் காரணம். அந்தசயனைடை அவளுடைய கணவன் கொடுத்திருக்கலாம் அல்லது அந்தப் பெண்ணே உட்கொண்டிருக்கலாம். எப்படியிருந்தாலும் அவளின் மரணத்திற்கும் பல்லிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்பது பின்னாலே கண்டுபிடிக்கப்பட்டது.இப்படிப் பலருக்கும் நேர்ந்திருக்கிறது.

ஒரு பெண் மோர் குடிக்கும்போது அந்த மோர்குவளையிலே கடைசியில் ஒரு சின்ன பல்லியைப் பார்த்துவிட்டு வாந்தி எடுத்திருக்கிறாள். அந்த வாந்தி என்பது பயத்தின் வெளிப்பாடாகும். பிறகு மருத்துவரிடம் போகிறபோது, அதனால் எந்தக் கேடும் இல்லை என்று அவர் சொல்லி அனுப்பியதையும் நாம் நாளேடுகளில் படித்திருக்கிறோம். எனவே பல்லியைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை. அது இயல்பாக வளர்கிறது. நாம் அதற்கு உணவு வைக்கவில்லை. நாம் வளர்க்கவில்லை. அதுவாகவே இயல்பாக தனக்கான இரையைத் தேடிக்கொள்கிறது.

உலகத்திலே இருக்கிற எல்லா பல்லிகளும் இப்படித்தானா என்றுகேட்டால், இல்லை இல்லை, அளவில் இவற்றைவிட மிகப்பெரிய பல்லிகள் உலகத்தில் இருக்கின்றன. மிகச் சிறிய அளவில் இருந்து மிகப்பெரிய அளவுவரையான பல்லிகள் உலகத்தில் இருக்கின்றன. குறிப்பாக இந்தோனேசியாவில் இருக்கிற ஹாங்கோ ட்ராகான் என்கிற அந்தப் பல்லிதான் உலகத்திலேயே மிகப்பெரியது என்று சொல்லுகிறார்கள். நம் வீட்டுப் பல்லி, வீட்டில் பூச்சியையும், கரப்பான் பூச்சியையும் சாப்பிடுகிறது. இந்தோனேசியாவில் இருக்கிற அந்தப் பல்லி முயலையும், மான் குட்டியையும் சாப்பிடுகிறது. ஒரு மானையே சாப்பிடுகின்ற அளவுக்குப் பெரிய பல்லிகளும் இருக்கின்றன என்பது நமக்கு வியப்பைத் தருகிற ஒரு செய்தியாக இருக்கிறது. இந்தப் பல்லிகளைப் பாதுகாப்பதற்காக உலகத்திலே ஒரு சங்கம் இருக்கிறது என்பதும் நமக்கு வேடிக்கையாக இருக்கிறது. பல்லிகளைப் பற்றியே கவலைப்படாமல் நாம் இருக்கிறோம்.ஆனால் பல்லிகளைப் பற்றிக் கவலைப்பட்டு, பல்லிகளைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக, அவைகளும் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டு மென்பதற்காக, அமெரிக்காவில் குளோபல் எக்கோ அசோசியேசன் என்கிற ஒரு அமைப்பு இருக்கிறது என்கிற தகவலையும்தியோடர் பாஸ்கரன் நமக்குத் தருகிறார். எஞுஞிடுணி என்பதுதான் பல்லிகளுக்கான ஆங்கிலப் பெயர். ஃடித்ச்ணூஞீ என்பது மிகப்பெரிய ஓணான்களுக்கான பெயர்.

எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலே இருக்கிற விண்வெளிக் கோள்களை எல்லாம் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று கருதுகிற நாம், நம்மைச் சுற்றி இருக்கிற உயிரினங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். பல்லியைப் பற்றிய இன்னொரு செய்தி, பல்லியை வெளவால் கூடச் சில நேரங்களில் சாப்பிட்டுவிடுகிறது. பல்லியை வாலைப் பிடித்துத் தூக்கினால் யாரும் அதனைக் கொல்ல முடியாது. காரணம் அதனுடைய வால் உடனே அறுபட்டுப் போகும் என்பதுதான். வால் அறுபட்டுப் போவதனாலே பல்லிக்கு எந்தக்கேடும் இல்லை. அதனுடைய உடல் அமைப்பில் இயல்பாக அது மூடிக்கொள்ளும். இரத்த ஓட்டம் சீர்படும். மறுபடியும் வால் முளைத்துவிடும் என்பது பல்லிக்கு அமைந்திருக்கிற சிறப்புத் தன்மை.

நம்முடைய பழைய இலக்கியங்களிலே கூட "நாராய் நாராய்' என்று தொடங்குகிற சத்திமுத்தப் புலவரின் பாட்டு நம் எல்லோருக்கும் நினைவிருக்கும். அந்தப் பாட்டில், "நனைசுவர்க்கூரை கனைகுரல் பல்லி' என்று ஒருவரி வருகிறது. பல்லியைப் பற்றி இலக்கியங்கள் எல்லாம் பேசியிருக்கின்றன. நாமும்அது பற்றித் தெரிந்து கொள்வதற்குத் தியோடர் பாஸ்கரின் இந்தக் கட்டுரை நமக்கு உதவுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை எல்லாம் தவற விட்டுவிடுகிற பலர், பல்லி விழுந்தால் பலன் என்ன என்னும் பஞ்சாங்கத்தை மட்டும் சரியாகத் தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள்.