நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் டாக்டர் சி.நடேசனார். இவர் 1875 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் பிறந்தார். இவரின் முன்னோர் சென்னையை அடுத்த பொன்னேரி, சின்னபுங்கனேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தொடக்கக் கல்வியைத் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட பள்ளியில் தொடங்கியதால், உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் தெலுங்கு மொழியையே விருப்பப் பாடமாகப் படித்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவராகச் சிறந்து விளங்கினார்.

சாதி பார்த்து மருத்துவம் பார்க்கும் காலத்தில் இவர் உயர்சாதி, தாழ்ந்த சாதி என்ற வேறுபாடுகளின்றி அனைவருக்கும் சிகிச்சை தந்தார். குறிப்பாகச் சென்னையில் வாழ்ந்து வந்த வறியோர், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் ஏழைத் தொழிலாளர்களுக்கு இரவு பகல் பாராது சேவை செய்தார்.

டாக்டர் நடேசனார் தாம் பிறந்த திராவிட சமுதாயம் சமூக நிலையிலும் அரசியல் நிலையிலும் பொருளாதார நிலையிலும் மிக மிகத் தாழ்ந்த நிலையில் இருப்பதைக் கண்டார். இந்த அவல நிலையைப் போக்க வேண்டும் என்று உறுதி மேற்கொண்டார்.

1912 ஆம் ஆண்டு “சென்னை திராவிடர் சங்கம்” (Mச்ஞீணூச்ண் ஈணூச்திடிஞீச்ணூ அண்ண்ணிஞிடிச்tடிணிண) தோற்றுவித்தார். இந்த திராவிடர் சங்கம்தான் பார்ப்பனரல்லாத தலைமைப் பாதுகாவல் இடமாகத் திகழ்ந்தது. இச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் கூட்டங்களில் ம. சிங்காரவேலர், பேராசிரியர் இலட்சுமி நரசு, எல்.டி. சாமிக்கண்ணு பிள்ளை, மற்றும் திரு.வி.க. போன்றோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

இங்கிலாந்து பார்லிமெண்டு கூட்டு செலக்ட் கமிட்டியினர். திராவிடர்களின் நலன்களைப் பற்றி உரையாட ஒரு பிரதிநிதியை அனுப்பும்படி இச்சங்கத்தைக் கேட்டுக் கொண்டனர். டாக்டர் நடேசனார் சர்.கே.வி. ரெட்டி அவர்களைச் சங்கத்தின் பிரதிநிதியாக அனுப்பிவைத்தார். அவர் மூலம் ஆங்கிலேயர்கள் திராவிடர்களின் நிலை இந்தியாவில் என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.

திராவிட சமுதாயத்தைச் சார்ந்த ஏழை மாணவர்கள் உயர்கல்வியைப் படிக்க சென்னை வரும்போது தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்தனர். காரணம் சென்னையில் பெரும்பாலான உணவு விடுதிகளில் பார்ப்பனரல்லாதோருக்குத் தங்குவதற்கோ, உட்கார்ந்து உணவு உட்கொள்வதற்கோ அனுமதி இல்லை. டாக்டர் நடேசனார் திராவிட மாணவர்கள் தங்கிப் படிக்க “திராவிடர் இல்லம்” என்ற பெயரில் ஒரு விடுதியைச் சென்னையில் தொடங்கினார். ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும் உணவு வழங்கினார். வசதியுள்ள மாணவர்கள் பணம் கொடுத்து உணவு உண்டனர்.

ஆண்டுதோறும் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறும் திராவிட மாணவ பட்டதாரிகளுக்கு விருந்தளித்துப் பாராட்டி வழி அனுப்புவார். அதோடு திராவிட உணர்ச்சியையும் வீரத்தையும் அவர்களுக்கு ஊட்டிப் பார்ப்பனர்களோடு போட்டியிட்டு முன்னுக்கு வரவேண்டும் என வலியுறுத்துவார்.

காங்கிரசுக் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் போன்றோர் காங்கிரசுக் கட்சியில் தென்னாட்டுப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் வடநாட்டாரின் ஆதிக்கத்துக்கு ஒன்று சேர்ந்து தென்னிந்திய திராவிடர்களுக்கு அநீதி இழைத்து வருவதைக் கண்டு வெகுண்டெழுந்து காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகி, பார்ப்பனரல்லாதோரின் நலனுக்காகப் பாடுபட முடிவு செய்ததை அறிந்த டாக்டர் நடேசனார், அவர்களை அணுகி திராவிடர்களின் உயர்வுக்காகப் பாடுபட ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் மூலம் செயல்படலாம் என்று அவர்களின் ஒப்புதலை பெற்றார்.

1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம்நாள் சென்னை விக்டோரியா பொது அரங்கில் சர்.பி. தியாகராயர், டி.எம். நாயர், சி. நடேசனார் மற்றும் 30 முக்கிய தலைவர்கள் ஒன்று கூடித் “தென் இந்திய நல உரிமைச் சங்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட ஜஸ்டிஸ் (ஒதண்tடிஞிஞு) என்ற ஆங்கில ஏட்டின் பெயரையே இக்கட்சியின் பெயராக மக்கள் அழைத்தனர். (நீதிக் கட்சி)

டாக்டர் நடேசனார் 1920, 1923, 1926 மற்றும் 1931 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டப் பேரவையில் திராவிட சமுதாயத்தவர்களுக்காகக் குரல் கொடுத்துப் பல தீர்மானங்களை நிறைவேற்றித் தந்தார்.

சென்னை மத்திய செக்ரட்டேரியேட்டில் (தலைமை செயலகம்) பார்ப்பனரல்லாதார் மிக மிகக் குறைந்த அளவில் வேலை பார்த்து வந்தனர். பார்ப்பனர்களுக்கும் பர்ப்பனரல்லாதாருக்குமிடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவதற்காக வரும் 3 ஆண்டுகளுக்குப் பார்ப்பனரல்லாத சமூகத்திலிருந்தே அதிகாரிகள் மற்றும் எழுத்தர் வேலைகளுக்கு நியமிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தித் தீர்மானத்தை நிறைவேற்றினார். அதன் காரணமாகவே சென்னை தலைமை செயலகத்தில் பார்ப்பனரல்லாதோர் நுழையவும் செல்வாக்கு பெறவும் முடிந்தது.

அரசு பதவிகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு அந்தந்த இலாகாவினரே ஆட்களை நேர்முகமாக நியமித்து வந்தனர். இந்த முறையில் பெரிதும் பயன்பெற்றவர்கள் பார்ப்பனர்களே. 1922 ஆம் ஆண்டு பார்ப்பன பார்ப்பனரல்லாதார் சமூகத்தினருக்கு அவர்களின் விகிதாச்சாரப்படி உத்தியோகப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நடேசனார் வாதாடியதின் விளைவாகவே முதலில் ஸ்டாப் செலக்ஷன் போர்டும் (குtச்ஞூஞூ குஞுடூஞுஞிtடிணிண ஆணிச்ணூஞீ) பின்னர் பப்ளிக் சர்வீஸ் கமிஷனும் (கதஞடூடிஞி குஞுணூதிடிஞிஞு இணிட்ட்டிண்ண்டிணிண) உருவாக்கப்பட்டன. எனவே பார்ப்பனரல்லாத மக்கள் அரசு பதவிகளில் நுழையப் பெரிதும் காரணமாக இருந்தவர் டாக்டர் நடேசனார் என்பதும் அதற்குக் காரணமாக இருந்தது நீதிக்கட்சி ஆட்சியேயாகும்.

டாக்டர் நடேசனார் காலத்தில் சட்ட இலாகா (உயர்நீதி மன்றம்) முழுவதும் பார்ப்பன மயமாகவே இருந்து வந்தது. சட்டமன்றத் தீர்மானங்களை அவர்கள் புறக்கணித்து வந்தனர். இதனை கண்டித்துச் சட்டமன்றத்தில் நடேசனார் உரையாற்றும் போது “இந்த மாகாண சர்க்கார் இயற்றும் சட்ட திட்டங்களின்படியும் உத்தரவுகளின் படியும் தான் உயர்நீதி மன்றம் உத்தியோக நியமனங்களைச் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் இதனைப் பொருட்படுத்துவதில்லை. எனவே, உயர்நீதிமன்றம் கோரும் மான்ய தொகை ரூ.5.45 இலட்சத்தை அனுமதிக்கக்கூடாது நம் சட்ட சபையையும் சர்க்காரையும் மதிக்காது நடந்து வரும் சட்ட இலாகா ஒழியட்டும்” என்று தனது கருத்தை ஆவேசமாக பதிவு செய்தார்.

1922 ஆம் ஆண்டு “இந்து மத ஸ்தாபன பரிபாலன மசோதா' சட்ட சபையில் பனகல் அரசால் கொண்டுவரப்பட்டது. அம்மசோதாவை ஆதரித்து நடேசனார் உரையாற்றினார் அவர் தனது உரையில் “இம்மசோதாவை நான் முழு மூச்சுடன் ஆதரிக்கிறேன். அறநிலையங்களில் முடங்கிக் கிடக்கும் செல்வத்தை நல்ல முறையில் செலவு செய்தல் வேண்டும். பன்னெடுங்காலமாகவே இத்தகைய ஏற்பாடு வரவேண்டுமென மக்களிடையே எண்ணமிருந்து வந்தது. ஆனால் மதவிசயத்தில் தலையிடுவதில்லை என வேதாந்தம் பேசி ஆங்கிலேயர் ஆட்சி தட்டிக் கழித்து வந்தது. மன்னர்கள் கோயில்களுக்கு வேலி வேலியாக விளை நிலங்களை எழுதி வைத்தார்கள். பொன், வைரம், வைடூரியம், என்று ஆபரணங்களைக் கோயில் விக்கிரகங்களுக்கு அடுக்கடுக்காய்ச் சாத்தினார்கள். அவ்வளவையும் கோயில் குருக்கள் தங்கள் சொத்துக்களாகப் பாவித்து அனுபவித்து வருகிறார்கள். கோயில்களின் சொத்து தண்ணீராய்ச் செலவழிக்கப்படுகிறது.”

இந்திய நாட்டில் காணப்படும் கோயில்களும், மடங்களும் அன்னச்சாவடிகளும் நம் மக்களைச் சோம்பேறிகளாகவும், திருடர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் மாற்றச் செய்ததே தவிர, நற்பண்புடையவர்களாகச் செய்யவில்லை. இத்தகைய பொதுவுடைமை கேட்கும் மசோதாவை யாவரும் சட்டமாக்க உதவ வேண்டுவது அவசியமாகும்”. எனத் தனது எண்ணத்தைப் பதிவு செய்தார். தீர்மானம் பார்ப்பனர்களின் எதிர்ப்பையும் மீறி சட்டமாகியது.

இந்தியாவிலேயே தொழிற்சங்க முறை அடிப்படையில் முதன் முதலில் “சென்னை தொழிலாளர் சங்கம்” பின்னி மில் தொழிலாளர்களுக்காகத் திரு. வி.க. அவர்களால் 1918 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்கம் தொடங்குவதற்கு டாக்டர் சி. நடேசனார், திரு.வி.க.வுக்குத் துணையாக இருந்தார். அதோடு பக்கிங்காம் மில் (ஆஞி Mடிடூடூ) கதவடைப்பு மற்றும் அதனால் ஆதிதிராவிடர்களுக்கும் மற்ற சாதயினருக்கும் ஏற்பட்ட பகைமை, வீடுகளுக்குத் தீ வைத்தல், ஒருவரையொருவர் கொலை செய்தல், துப்பாக்கியால் சுடுதல் போன்ற நிகழ்வுகள் நடந்த நேரத்தில் டாக்டர் நடேசனார் தன்னந்தனியாக பெரம்பூர் புளியந்தோப்பு பகுதிகளில் தொழிலாளர்கள் இடையே அமைதியை நிலைநாட்டப் பாடுபட்டார்.

டாக்டர் டி.எம். நாயர் இறந்தவுடன் சர்.பி.தியாகராயருடன், தியாகராயர் இறந்தவுடன் தனியாகவும் கட்சியைப் புகழ்பட நடத்தி வந்த பெருமை நடேசனாரையே சாரும்.

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை 17.12.1920 அன்று பொறுப்பேற்றது. சர்.பி. தியாகராயர் முதலமைச்சராக பொறுப்பேற்க மறுத்ததால் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சாராகவும் பி. இராமராய நிங்கர் (பனகல் அரசர்) மற்றும் ரெட்டி நாயுடு ஆகியோர் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர். தமிழர்களுக்கு இடமில்லை.

இரண்டாவது அமைச்சரவை 31.10.1923 அன்று பொறுப்பேற்றது பனகல் அரசர் முதலமைச்சராகவும், சர்.ஏ.பி. பாத்ரோ மற்றும் டி.என். சிவஞானம் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இம்முறை ஒரு தமிழருக்கு இடம் தரப்பட்டது. திராவிட இயக்கத்திற்கு வித்திட்ட டாக்டர் சி. நடேசனார் போன்ற அரசியல் முதிர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்புத் தராமல் அரசியலில் அனுபவம் பெறாத ஒருவருக்கு இடம் தரப்பட்டது. நீதிக்கட்சி தலைவர்களுக்கு இடையே தமிழர் – தெலுங்கர் என்ற வேற்றுமை பூதõகாரமாகவே இருந்து வந்தது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

நீண்டகாலம் சென்னை நகர சபை அங்கத்தினராக இருந்து “நகரத் தந்தை' எனப் பலராலும் புகழத்தக்க வகையில் வாழ்ந்த டாக்டர் நடேசனார் நகர சபை மேயராக பொறுப்பேற்க விரும்பி மூன்று முறை போட்டியிட்டார். முதல் இரண்டு முறை ஏ. இராசாமி முதலியார் அவரை எதிர்த்து வீழ்த்தினார் மூன்றாம்முறை முத்தைய செட்டியார் என்ற இளைஞர் அவரை எதிர்த்து நின்று பணத்தை வாரி இறைத்துத் தோல்வி அடையச் செய்தார்.

தொண்டு செய்வதே தனது முழு நேர பணியாகக் காலம் முழுவதும் உழைத்த திராவிட இயக்கத்தின் தந்தை டாக்டர் சி.நடேசனார் 1937 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18 ஆம் நாள் தனது 62 ஆவது வயதில் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.

தந்தை பெரியார் 1938 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியைத் தூக்கி நிறுத்தினார்.

தனக்கென வாழாது பிறருக்காகவே வாழ்ந்து, மனித சமுதாயத்தை மேன்மையடையச் செய்த பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய டாக்டர் வி. நடேசனாரின் தூய தொண்டு பொதுப்பணியில் ஈடுபடும் அனைவருக்கும் வழிகாட்டியாக அமையும்.

வாழ்க நடேசனார் புகழ்.