உங்கள் சொந்த பலத்தை மட்டுமே நீங்கள் நம்பி இருந்தால், இந்துக்களின் கொடுங்கோன்மையை முறியடிக்க ஒருபோதும் முடியாது என்பதே என் முடிவாகும். நீங்கள் பலமற்றவர்கள் என்பதாலேயே ஒடுக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்பதில் எனக்குச் சிறிதளவும் அய்யமில்லை. நீங்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. இசுலாமியர்களும் உங்களைப் போன்று சிறுபான்மையினரே. ஆனால், இசுலாமியர்களுக்குத் துன்பம் விளைவிக்க எவரும் துணிவதில்லை.

ஒரு கிராமத்தில், இரண்டு இசுலாமியர்களின் வீடுகள் மட்டும் இருப்பினும் – அவர்களுக்கு இன்னல் விளைவிக்க ஒருவரும் துணிவதில்லை. ஆனால், உங்களுக்குப் பத்து வீடுகள் இருந்தும் – ஒட்டுமொத்தமாக அந்தக் கிராமமே உங்களுக்கு எதிரான அடக்குமுறையில் ஈடுபடுவது ஏன்? இதற்குத் தகுந்த பதிலை நீங்கள் கண்டாக வேண்டும். இதற்கு ஒரே பதில்தான் உண்டு என நான் கருதுகிறேன்.

ஒரு கிராமத்தில் வாழும் இரண்டு இசுலாமியர்களுக்குப் பின்னால், இந்தியாவின் அனைத்து இசுலாமியர்களின் பலமும் திரண்டு நிற்கின்றது என்பதை இந்துக்கள் மிக நன்றாகவே உணர்ந்துள்ளனர். எனவேதான், இசுலாமியர்களைத் தொட அவர்களுக்குத் துணிவில்லை. அந்த இரண்டு இசுலாமியக் குடும்பத்தினரும் அச்சமற்று சுதந்திரமாக வாழ்கின்றனர். ஏனெனில், இந்துக்கள் அவர்களுக்கு எதிராகக் கொடுமை விளைவிப்பர் என்றால் – பஞ்சாப் முதல் சென்னைவரையுள்ள  இசுலாமிய சமுதாயமே, என்ன விலை கொடுத்தும் பாதுகாப்பிற்குத் திரண்டு வரும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

அதே வேளை, உங்களுக்கு உதவ ஒருவரும் முன்வர மாட்டார்கள் என்பதும், எவ்விதப் பொருளுதவியும் உங்களுக்குக் கிடைக்காது என்பதும் இந்துக்களுக்குத் தெரியும். காவல் துறையும் சாதி இந்துக்களுக்குச் சார்பாகவே உள்ளது. இந்துக்களுக்கும், தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் எனில், அவர்கள் தமது கடமையைவிட தாங்கள் சார்ந்துள்ள சாதிக்கே அதிக நன்றியுடையவர்களாக இருக்கின்றனர். நீங்கள் உதவியற்று இருப்பதாலேயே இந்துக்கள் உங்களுக்கு எதிராக – அநீதியையும், கொடுமைகளையும் இழைக்கின்றனர்.

எனவே, பலமின்றி கொடுமையை சந்திப்பது இயலாத ஒன்றாகும். இரண்டு, கொடுமையைச் சந்திக்கப் போதிய பலத்தை நீங்கள் பெற்றிருக்கவில்லை. மூன்று, இவ்விதக் கொடுமைகளை முறியடிக்கத் தேவைப்படும் பலத்தை நீங்கள் வெளியிலிருந்து பெற்றாக வேண்டும். இதை எவ்வாறு பெறப்போகின்றீர்கள்? என்பது மிக முக்கியமான ஒரு கேள்வியாகும். ஒரு தலைச் சார்பின்றி நீங்கள் இது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

மதவெறியும், சாதியுமே இந்நாட்டு மக்களின் சிந்தனையையும், நீதிமுறையையும் ஆக்கிரமித்திருக்கின்ற விந்தையான நிலையை நான் உணர்கின்றேன். வறுமையிலும், துயரத்திலும், ஏழ்மைப் பிடியிலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவிக் கரம் கொடுப்பவர்கள் – அந்தந்தச் சாதி, மதத்திற்குட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். மனித இயலுக்குப் புறம்பான, தகாத செயலாக இது புலப்பட்டாலும், இந்த நாட்டில் இந்நிலையே நிலவி வருகின்றது என்பதை மறந்துவிட முடியாது.

இதிலிருந்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பிற சமூகத்தாரோடு நெருங்கிய உறவினை ஏற்படுத்திக் கொள்ளாமல், வேறு மதங்களில் சேராமல் உங்களால் வெளியார் பலத்தைப் பெற முடியாது. இதன் உண்மைப் பொருள் என்னவென்றால், உங்களின் தற்போøதைய மதத்தை விட்டு விலகி – வேறு சமூகத்தாரோடு நீங்கள் ஒன்றாகக் கலந்திட வேண்டும். அப்படியின்றி, எவ்வழியிலும், நீங்கள் பலமுள்ளவராக ஆக முடியாது. நீங்கள் பலமில்லாதவர்களாக இருக்கின்றவரை, நீங்களும், உங்கள் எதிர்காலச் சந்ததியினரும், பரிதாப நிலையிலான வாழ்வையே நடத்த வேண்டியிருக்கும்.

– 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற இயோலா மாநாட்டு பேருரையிலிருந்து...