உலகிலுள்ள மாந்தரெல்லாம் ஒருதாயின் பிள்ளை;
“உயர்ந்தவர்கள்'' “தாழ்ந்தவர்கள்'' பிறப்பினாலே இல்லை!
ஊருக்காய் உண்மைக்காய் உழைத்தவர்கள் சொல்லை
உணரவில்லை; நினைக்கவில்லை; அதனாலே தொல்லை!

ஆதியிலே நாமெல்லாம் குரங்கு ஜாதிதான்
மீதியெல்லாம் பாதியிலே வந்த ஒன்றுதான்!
ஜாதி என்ற சொல்கூடத் தமிழிலே இல்லை
சரியில்லா ஒன்றுக்காய் ஏனோ தொல்லை? (ஆதி)

உழைப்பில்லா ஒருவராலே உயர முடியுமா?
உயர்ந்தஜாதி என்பதாலே சோறு கிடைக்குமா?
ஆளைப்பார்த்து ஜாதியினைச் சொல்ல முடியுமா?
அறிந்துகொள்ள உலகத்திலே கருவி கிடைக்குமா? (ஆதி)

நீதிநூலை நமக்குத் தந்த வள்ளுவன் யாரு?
நெடுங்கவிதை எழுதித்தந்த இளங்கோ யாரு?
போதிமரப் புத்தனுக்கு ஜாதி இருக்குதா?
பொங்குதமிழ்க் கம்பனுக்கு ஜாதி இருக்குதா?  (ஆதி)

ஆறறிவு மனிதர்நமக்கு ஜாதி வேண்டுமா?
அரசியலில் இலக்கியத்தில் பங்கு வேண்டுமா?
அய்ந்தறிவு மிருகமெல்லாம் நம்மைப் பார்க்குது
அறிவுகெட்ட மனிதரென்று காறித் துப்புது!  (ஆதி)