1991 ஆம் ஆண்டு மே திங்கள் 21 ஆம் நாள் தமிழக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற வருகை தந்த ராஜிவ் காந்தி, சிறீபெரும்புதூரில் தனு என்கின்ற மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் நடைபெற்றது. மத்திய புலனாய்வுத்துறை இந்த வழக்கை நடத்தியது.

1998 ஆம் ஆண்டு சனவரி திங்களில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி ப. நவநீதம் தீர்ப்பளித்தார்.

மரண தண்டனை பெற்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தாமஸ், வாத்வா மற்றும் சையத் சா முகம்மது சோத்வி ஆகியோர் 1999 ஆம் ஆண்டு மே திங்கள் 11 ஆம் நாள், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்தும், மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் மீதியுள்ள 19 பேர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தனர்.

மேலும் தங்களது தீர்ப்பில் "ராஜிவ் கொலை என்பது மற்ற கொலைகளைப் போல் ஒரு கொலையே தவிர, அரசையோ, மக்களையோ அச்சுறுத்திப் பீதி உண்டாக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாதக் குற்றம் அல்ல, எனவே இவ்வழக்கு தடா சட்டத்திற்கு பொருந்தாது'' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தடாச் சட்டத்தில் தொடரப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இல்லாமல், நேரிடையாக உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் தடா நீதி மன்றம், தடாச் சட்டத்திற்குப் பொருந்தாத வழக்கை ஏற்று நடத்தி குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்ததுதான்.

நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் உடனடியாக குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். இதில் நளினி மனுவை மட்டும் ஏற்று அவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தனர். மற்றவர்களின் மனுக்கள் பரிசீலனையில் வைக்கப்பட்டன.

2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 12 ஆம் நாள் அதாவது 11 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை நிராகரித்து, அவர்களுக்கு வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்தார்.

மரண தண்டனையை நிறைவேற்ற வேலூர் மத்திய சிறையில் அதற்கான பணிகள் நடைபெறுவதாகச் செய்திகள் வருகின்றன.

பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து அது தள்ளுபடி செய்யப்பட்ட 50 பேர்களின் கருணை மனுக்கள் இப்போதும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக, 2008 ஆம் ஆண்டு தகவல் அறியு ம் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.

தமிழகத்தில் கடைசியாக 1995 ஆம் ஆண்டு ஆட்டோ சங்கர் என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக எந்த மரண தண்டனையையும் தமிழகத்தில் நிறைவேற்றப்படவில்லை.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 18 ஆம் நாள் ஐக்கிய நாட்டு அவையில் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் வந்தபோது அந்தத் தீர்மானத்தை ஆதரித்து 106 நாடுகளும், தீர்மானத்தை எதிர்த்து 46 நாடுகளும் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்களிப்பில் கலந்கொள்ளவில்லை. இந்தியா நடுநிலை வகித்த நாடுகளில் ஒன்றாகும். உலகில் மிகப் பெரிய சனநாயக நாடு என்று அழைத்துக்கொள்ளும் இந்தியா, மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழாமல் தன்னை மூன்றாம் தர நாடுகளில் ஒன்றாக நிலை நாட்டிக் கொண்டது.

2005 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் பல ஆண்டு காலமாகத் தேங்கிக்கிடக்கும் மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை ஆய்வு செய்யக்கோரி உள்துறை அமைச்சர் திரு. சிவராஜ் பட்டீலுக்கு அவற்றை அனுப்பி வைத்தார் அவர் எழுதிய கடிதத்தில் “மரண தண்டனைக் கைதிகளைக் கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து, அவர்கள் வாழ வழிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். அவர்களுக்குக் கவுன்சிலிங் நடத்தி ஆன்மீக வழிகாட்டு நெறிகளைப் போதிக்க வேண்டும். எனவே அனைத்து மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால், இன்று இந்தியாவில் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர், தமிழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், தமிழர்களின் மூவர் உயிர்களைப் பறிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார் என்பதை அறிந்தது தமிழகமே ஒட்டுமொத்தமாகத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவிலும் மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் வீ.ஆர். கிருஷ்ணய்யர் தன்னுடைய கடிதத்தில் “வேலூர் சிறையில் தூக்குக்கொட்டடியிலிருந்து விடுத்த பேரறிவாளன் முறையீட்டு மடலை, சென்னையிலிருந்து என்னைக் காணவந்த தோழர் தியாகுவிடமிருந்து பெற்றுக்கொண்டேன். பேரறிவாளன் ஆன்மா உயர்வானது, விலைமதிப்பற்றது. அவரின் விழுமியங்கள் உன்னதமானவை. சிறையில் அடைபட்டிருப்பதாலேயே அவர் குற்றவாளியாகிவிடவில்லை. உண்மையில் அவர் தன் சக மனிதர்களின் மீட்சிக்காக உழைக்கிறார் மரண தண்டனைக்கு எதிரானது அவரது முறையீடு கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்திட மரண தண்டனை இனியும் செல்லுபடியாகாது என்ற கருத்தில் உடன்படுகிறேன். உயிர் அருமையானது. கடவுள் தந்தது, காந்தியடிகள் கூறியதுபோல் உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. இந்த நிலைப்பாட்டினை நான் ஆதரிக்கிறேன். வேறுபல நாடுகளைப் போல இந்தியாவும் மரண தண்டனையை ஒழித்துவிடும் என்று நம்புகிறேன்.''

என்று குறிப்பிட்டுள்ளார். அதே போன்று 2006 ஆம் ஆண்டு முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதியரசர் ஹெச்.சுரேஷ் தனது கடிதத்தில் “திருமதி. கிராம் ஸ்டெயின்சிடம் அவருடைய கணவரையும் இரு குழந்தைகளையும் மதவெறியர்கள் கொலை செய்துவிட்டதாக தெரிவித்தபோது “கடவுள் அவர்களை மன்னிப்பாராக'' என்று அந்த அம்மையார் கூறியதை நினைவு கூறுகிறேன். அவரது உயர்ந்த உள்ளம் அத்தகையது. திருமதி. சோனியா காந்தியும் “குற்றம் நாட்டப்பட்ட இவர்கள் தூக்கிடப்படுவதை நான் விரும்பவில்லை'' என்று திட்டவட்டமாய்க் கூறி இருப்பதாகத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் தமது கருணை அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்தக் கருணை அதிகாரத்தின் வாயிலாக மன்னிப்புப் பெற்று விடுதலை பெறுவதற்கான அனைத்துக் தகுதியும் பேரறிவாளனுக்கு உண்டு.'' என்று கூறியுள்ளார்.

கொலை குற்றம் சுமத்தப்படுபவர்களில் 90 விழுக்காடு உணர்ச்சி வசப்பட்டு தவறு செய்து பின்பு வருந்துபவர்களாகவே உள்ளனர். குறிப்பாக தன்னுடைய மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தாள் என்பதால் கொலை செய்வதும், சொத்துத் தகராறில் அண்ணனைத் தம்பி கொலை செய்வதும், சாதித் தகராறில் ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்வதும் வழக்கமாக நடைபெறுகிறது. மீதம் உள்ள 10 விழுக்காடு திட்டம் போட்டு கொலை செய்கின்றனர். இவர்கள் தந்திரமாக தப்பித்து விடுகின்றனர். உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்பவர்களே பெரும்பாலும் தண்டிக்கப்படுகின்றனர்.

அவர்கள் திருந்திவாழ வழிசெய்வதற்கு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. எனவே உணர்ச்சிவசப்பட்டு செய்யும் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் திருந்திவாழ வழிவகை செய்யும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு மாறாக கையை வெட்டியவனுக்குக் கையை வெட்டுவதும், காலை வெட்டியவனுக்குக் காலை வெட்டுவதும் சொலை செய்தவரைக் கொலை செய்வதும் தீர்வு ஆகாது. தண்டனை என்பது திருந்தி வாழ்வதற்குத் தானே தவிர தீர்த்துவிடுவது அல்ல.

அப்படி என்றால் கொலைகாரனுக்கும் நீதிமன்றங்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். எனவே தான் உலகத்தில் பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன.

மேலும் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அனைத்தும் நியாயமானதாக இருக்க முடியாது. தீர்ப்புகள் நியாயமானது என்றால் பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் திருத்தி 4 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனையை உறுதி செய்தது ஏன்?

உச்சநீதிமன்றத்துக்கு மேலே மேலும் ஒரு நீதிமன்றம் இருந்தால், இவர்கள் மேல் முறையீடு செய்து விடுதலை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஏனென்றால் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேறு பலருக்கும் தொடர்பு உண்டா? என்று கண்டுபிடிப்பதற்கு அமைக்கப்பட்ட சந்திரசாமிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக இன்னும் அவர் விசாரிக்கப்படவில்லை. விசாரிக்கப்பட்டால் தீர்ப்புகள் மாறும்.

மேலும் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் கீழே குறிப்பிட்டுள்ள காரணங்களால் நாளை விடுதலை பெற வாய்ப்புண்டு.

1) ராஜிவ்காந்தி படுகொலைக்கு நிதி உதவி செய்தது சந்திரசுவாமிதான் என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு இருக்கும் சில இந்திய அரசியல்வாதிகளின் முகமுடி கிழிக்கப்படும்.

2) பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் புலனாய்வு அதிகாரி கூறியதுபோல், கொலை நடந்தபிறகு சிவராசனும் சுபாவும் ஆட்டோவில் வெளியேறும்போது அவர்களுடன் மூன்றாவது ஒருவரும் பயணித்திருக்கிறார். அவர் யார் என்று இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை.

3) மனித வெடிகுண்டு தனு தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டை செய்து தந்தவர் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

எனவே, ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை இன்னும் முழுமையாக முடியவில்லை. பேரறிவாளன் தான் குற்றமற்றவர் என்பதற்கான பல ஆதாரங்களை முன்வைத்திருக்கிறார். முன்னாள் நீதிபதிகள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். விளையாட்டுப் பொருளுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரண பொருளான 9 வோல்ட் மின்சக்தி (பேட்டரி) இரண்டு வாங்கி கொடுத்ததையே அவர் செய்த குற்றம் என அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவை சர்வ சாதாரணமாக எந்தப் பெட்டிக்கடைகளிலும் கிடைக்கும் அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்துகின்ற பொருளாகும்.

அறிஞர் பெருமக்கள் கூறியதுபோல் மனித உயிர்கள் விலைமதிக்க முடியாதது. உயிரைக் கொடுக்க முடியாதவர்கள் உயிரைப் பறிப்பதற்கு என்ன உரிமை உண்டு.

சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்று தண்டிக்கப்பட்டு தூக்கு மேடையில் நின்று கொண்டிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே உண்டு. நம் வீட்டுப் பிள்ளைகள் தவறுதலாகத் தூக்கு மேடையில் நிற்பதாக கருதுவோம்.

தமிழக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும், மனிதநேயப் பற்றாளர்களும் ஒன்றாகக் கூடி மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். மூவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிடவேண்டும்.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்து “ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்றும், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்ள வேண்டும்'' என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

தூக்குமேடையில் நின்று கொண்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்து செய்தும் இனிமேல் மரண தண்டனையே வேண்டாம் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றிட சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழக முதல்வரை சந்தித்து தீர்மானம் நிறைவேற்றித் தந்திட முன்வரவேண்டும் என்று கோருகிறோம்.

நமது நாட்டில் மரண தண்டனையை ஒழிப்பதற்குத் தமிழ்நாடு சட்டப் பேரவை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தது என வரலாற்றில் இடம் பெறட்டும்.

மடியட்டும் மரண தண்டனை.

****

“ராஜுவ் கொலை சதியில் ஈடுபட்ட பெரும்புள்ளிகளின் தொடர்புகள் குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு உளவு நிறுவனங்களின் நிபுணர்களை உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்பு ஏஜென்சி "எம்.டி.எம்.ஏ.' அமைக்கப்பட்டது. இந்த ஏஜென்சி யார் யாரைக் குற்றம் சாட்டுகிறதோ அவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள். அந்த முதலைகளை முதலில் கழுவில் ஏற்றிவிட்டு அதன்பிறகு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தண்டனை கொடுப்பது தான் நியாயமாக இருக்கும். எனவே, “அதுவரை இவர்கள் மீதான தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் படியேறப் போகிறேன்.''

– மோகன்ராஜ், முன்னாள் சி.பி.அய். இன்ஸ்பெக்டர்

***

மரண தண்டனை குறித்து டாக்டர் அம்பேத்கர்

“மரண தண்டனை மேல்முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்கலாம் என்பதற்கு மாறாக, மரண தண்டனையை முழுவதுமாக ஒழித்து விடுவதை நான் ஆதரிக்கிறேன் (கேளுங்கள், கேளுங்கள்). இந்த முடிவைப் பின்பற்றுவதே சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனால் பல முரண்பாடுகள் முடிவிற்குக் கொண்டு வரப்படும்.

“நமது நாடு அகிம்சையில் நம்பிக்கை கொண்ட நாடு, அகிம்சை நமது நாட்டின் பழம்பெரும் பண்பாடு. மக்கள் தற்போது தங்களின் வாழ்வியல் நெறியாக இதனைப் பின்பற்றாமல் இருந்தால்கூட, அகிம்சையை ஒரு நியாயத் தீர்ப்பாக மக்கள் முடிந்தவரை பின்பற்ற வேண்டும் என விரும்புகின்றனர். இந்த உண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில், நாம் இந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சரியான பணி – மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான்.''

– "பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 13, பக்கம் 639