ஐகார ஒளகார வடிவங்கள் குகைத்தலக் கல்வெட்டுக்களில் காணப்படாமையால் அவை பிற்சேர்க்கை என்பாருமுளர். தமிழில் குறில் ஐந்து எனவே நெடிலும் ஐந்தாகவே இருக்கவேண்டும் என்றும், தொல்காப்பியத்தில் காணப்படும் ஐகார ஒளகார நூற்பாக்கள் இடைச்செருகல் எனக் கொள்வாருமுண்டு.

ஓர் ஒலிக்கு ஒரு வடிவம் கண்டவர் தமிழர். அவ்வாறான எழுத்து ஏதேனுமொன்றிற்கு அவ்வெழுத்து வருநிலையால், நிற்குமிடத்தால் ஒலிப்புக் குறைவோ ஒலிப்பு நீட்டமோ ஏற்படுமாயின் அத்தகு இடங்களையெல்லாம் நுண்ணிதின் ஆய்ந்து குற்றியலுகரமென்றும், குற்றியலிகரமென்றும், உயிரளபெடை, ஒற்றளபெடையென்றும் பெயரும் குறியீடும் அமைத்தனர். ஆய்த, மகர, ஐகார, ஒளகாரக் குறுக்கங்களையும் குறிப்பிட்டுக் கூறினர்.

“அவை தாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன”

என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதால் குற்றியலிகரம் ஒரு புள்ளியிட்டும், குற்றியலுகரம் இருபுள்ளியிட்டும் எழுதப்பட்டிருக்கலாம். கல்வெட்டுக்களில் குற்றியலுகரம் புள்ளியிட்டு வெட்டப்பட்டதையும் காணமுடிகிறது. எனவே தமிழில் ஓர் ஒலிக்கு ஒரு குறியீடு என்பதே அடிப்படை நெறியாகும்.

ஐ-அய், ஒள-அவ் இவற்றிற்கிடையே நுட்பமான ஒலி வேறுபாடு உள்ளதை உணராமல், ஐ, ஒள தேவையில்லையென்றும் அவை அயற்சரக்கு என்றும் வாளா கூறி நிற்கின்றனர்.

அன்னையையா - அன்னய்யய்யா
மகனையாகி - மகனய்யாகி
எழுதாமையையும் -  எழுதாமய்யய்யும்
செவ்வை நன்மொழி -  செவ்வய் நன்மொழி
ஐது -  அய்து

இவற்றை ஒலித்துப் பார்த்து ஒலி வேறுபாட்டை உணரலாகும்.

ஐகாரத்திற்கு மாற்றாக ‘அய்’ வருமிடங்களில் எழுத்திசைவு பெரும்பாலும் ஏற்படினும் ஒலியமைதியில்லை. ஐராவதம் - அயிராவதம் என்று எழுதப்படும் போது எழுத்திசைவும் இல்லாமை பெறப்படும். இகரப் பேறு வந்ததும் உணரப்படும் (ஐராவதம் - அய்ராவதம் - அயிராவதம்). ஒளகாரத்திற்கு மாறாக ‘அவ்’ வருமிடங்களில் வருமொழியில் வகரம் வரும்போது ஒலியமைதி இல்லாவிடினும் எழுத்திசைவு உள்ளது. பிற இடங்களில் எல்லாம் எழுத்திசைவு பெறாத நிலைதான் காணப்படுகிறது.

கௌதமன் - கவ்தமன் என்றுதான் எழுதப்பட வேண்டும். மாறாகக் கவுதமன் என்று எழுதப்படுகிறது. உகரப்பேறு எவ்வாறு வந்தது என்பதற்கான விளக்கம் தரப்படுவதில்லை. மேலும் அலகிடுவதிலும் சிக்கல் நேரும். கௌதமன் கூவிளமாகக் கவுதமனோ கருவிளமாகிவிடும். தளை தட்டும்.

தமிழ் ஒலிப்பு முறை சீர்மையானது. எழுத்துக் கூட்டே சொல்லாக விளங்கும் தனித்தன்மை உடையது. ஆங்கிலத்தைப் போல எழுத்துத் தனியலி வேறாகவும் கூட்டுச் சொல்லொலி வேறாகவும் தமிழின் அமைப்பு முறை இல்லை. ஓர் எழுத்திற்குப் பலவொலிகளும், ஓர் ஒலிக்குப் பலவெழுத்துக்களும் ஆங்கிலத்தைப் போல் தமிழில் அமையவில்லை. 26 எழுத்துக்களைகொண்டே 45 ஆங்கிலப் பேச்சொலிகளை அவர்கள் கையாளுகின்றனர். அவ்வாறான இடர்ப்பாடு தமிழர்க்கு அறவே அமையவில்லை. வடமொழி போல் தமிழில் கூட்டெழுத்து முறையும் கூட்டொலிப்பாடுகளும் இல்லை.

எனவே ஐகார ஒளகாரங்கள் அய் அவ் ஒலியமைப்பினோடு மாறுபட்ட ஒலி நுட்பம் கொண்டவை என்பதே சாலும். அவை நெட்டொலி கொண்ட நெடிலாகவும் அல்லாமல் குற்றொலி கொண்ட குறிலாகவும் ஆகாமல் இடையலி கொண்ட ‘நொதுமல்’ என்று கொள்ளலும் தகும்.

வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்,
ஐ ஒள என்பன குறில் நெடில் நடுஆம்
இவற்றின் ஒன்றொன்று ஒன்றரை மாத்திரை
இவை நெடில்தாம் என்று இயம்புநர் சிலரே”
என்று குறிப்பிடுகின்றார்.

அவரே மேலும் அய் அவ் என்ற குறியீடுகளால் பெரும்பயன் யாதுமில்லை என்று கூறவும் செய்கிறார்.

இப்போதுள்ள இகர ஈகார உகர ஊகாரங்கள் கையால் எழுத எளியவை இனியவை. இவற்றில் மாற்றம் வேண்டுமென்று பலரும் வாதிடுகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக எழுத்துச் சீரமைப்புக் குழு கீழ்க்கண்ட குறியீடுகளைப் பரிந்துரைத்துள்ளது.
இ ஈ -
உ ஊ -
இகர ஈகாரக் குறியீடுகளை கி கீ என அவ்வெழுத்துக்களின் மேலாகச் சிறு இடைவெளிவிட்டுக் குறியீடுகளை அமைப்பது குழப்பத்தைத் தவிர்க்கும். இதே முறையை உகர ஊகாரங்களுக்கும் பயன்படுத்தலாம்.

உகர ஊகார உயிர்மெய் வடிவங்கள் ஆறு வகையான வரிவடிவ அமைப்பைக் கொண்டவை.

டு - டூ
மு - மூ
ரு - ரூ
ழு - ழூ
ளு - ளூ

இந்த அமைப்பில் கு விற்கு நெடிலாக ‘கு’ என்று அமைப்பதே முறையாக இருக்க ‘கு, ரு’ குழப்பத்தைத் தவிர்க்கவே ‘கூ’ வடிவம் அமைத்தனர் என்பதை நுணுகிக் காணவேண்டும். ஈகாரத்தை இ என்று எழுதாமையையும் இங்குக் கருதவேண்டும். இந்த மூன்று வடிவங்களும் இகுரு மயக்கத்தை உண்டாக்க வல்லன. எனவே இவற்றை ஈ கூ ரு என்றெழுதினர். ளு ளூ, ளு என்று எழுதப்பட்டதும் உண்டு.

ஙு ஙூ
சு சூ (சூ)
பு பூ
யு யூ
வு வூ
ஞு ஞூ
ணு ணூ
து தூ
நு நூ
லு லூ
று றூ
னு னூ

இப்போதுள்ள குறியீடுகளை அப்படியே எழுத்தின் வரி வடிவோடு இடைவிட்டு அச்சில் பொறிக்கச் செய்தால் எழுதும் எழுத்திற்கும் அச்சில் வரும் எழுத்திற்கும் பெருத்த வேறுபாடு இராது. ஆனால் அச்சில் வரும் எழுத்துக்களின் வடிவங்கள் அழகுற அமையா.

மெய்ப்புள்ளிகளை மேலே தள்ளி வைக்க முயல்வது தமிழ்ப் பூவையரைப் புருவ நடுவில் பொட்டு வைக்காமல் கொஞ்சம் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்வதைப் போன்றது. வேள்விக்குடிப்பட்டயத்தில் எழுத்தின் ஓரத்தில் தள்ளி வைக்கப்பட்ட புள்ளிகள் தாம் பையப்பைய நகர்ந்து இன்று வைக்கப்படும் நடுநிலைக்கு வந்துள்ளன என்பதையும் கருதிப் பார்க்க வேண்டும். இத்தகைய மாற்றங்களை ஏற்றுக்கொள்வது படிநிலை வளர்ச்சியில் செம்மைப்பட்டுச் செழித்த வடிவமைப்பைச் சீர்குலைக்கும் முயற்சிகளேயாம்.

தமிழக அரசு அறிவித்த எழுத்துச் சீர்திருத்த ஆணைக்கு முன்பிருந்த நடைமுறைப்படி ஒன்பான் உயிர்களைக் கையை எடுக்காமல் எழுதியும், கையை எடுத்து ஒன்றிற்குப் புள்ளி வைத்தும், (ஈ) இரண்டிற்குக் குறியீட்டைக் குறிக்கும் நிலையும் (ஊ, ஒள) இருந்து வந்தது. இப்போதும் அவ்வாறே உயிரைப் பொறுத்தவரையில் மாற்றமில்லை.

மெய் பதினெட்டிற்கும் ஆய்தத்திற்கும் எழுது கையை எடுத்துப் புள்ளி வைத்தும் உயிர்மெய்யில் 79 எழுத்துக்களைக் கையெடுக்காமலும் 24 எழுத்துக்களைக் கையெடுத்தும் 113 எழுத்துக்களுக்குத் தனியே குறியீட்டையும் எழுத வேண்டியிருந்தது. மொத்தத்தில் 88 எழுத்துக்களைக் கையை எடுக்காமலும் 24 எழுத்துக்களைக் கையை எடுத்தும் 20 புள்ளிகளையும் 115 குறியீடுகளையும் எழுதி வந்த நிலை அரசாணைக்குப் பின் குறியீடுகளை எழுதுவதில் 13 கூடி 128 எண்ணிக்கையாகவும், கையை எடுக்காமல் எழுதுவதில் 13 குறைந்து 75 எண்ணிக்கையாகவும் ஆகிவிட்டது. இகர ஈகார உகர ஊகார மாற்றங்களை ஏற்றுக்கொள்வதானால் குறியீடு களைத் தனியே எழுதும் நிலையில் 72 எண்ணிக்கை கூடிவிடும். இதனால் கையெழுத்துப் பணிகளுக்குக் காலமும் உழைப்பும் மிகுதிப்பட்டுவிடும் என்பதும் இங்குக் கருதத்தக்கது.

தமிழ் வரிவடிவ வரலாற்றில் அவ்வப்போது செய்யப்பட்ட சிறுசிறு மாற்றங்களைத் தமிழ் கூறு நல்லுலகம் தெளிவையே அடிப்படையாகக் கொண்டு ஏற்று வந்தள்ளது. எழுது முறையின் எளிமைக்கும், எழுத்துக்களின் அழகு நிலைப்பாட்டிற்கும் எந்த வகையிலும் ஊறு நேரா வண்ணம் காத்து வந்திருப்பது கண்கூடு.

‘ந’ வடிவம் ‘ந’ வடிவமாகவும் எழுதப்படுகிறது. ரகரமும் உயிர்மெய் ஆகாரக் குறியீடான காலும் () ஓலைச்சுவடி, செப்பேடு, கல்வெட்டுக்களில் ஒரே முறையில் எழுதப்படுவதுண்டு. இந்த ரகர வடிவமைப்பு கிரந்த எழுத்தின் திரிபே.

ர்ரிரீ ஆகியன ர்ரிரீ என்று அச்சில் வருவதைக் காணலாம். இந்த மூன்று வடிவங்களும் அப்படியே நிலைத்துத் தம் கால் வடிவங்களை மாற்றிக் கொள்ளாமையும் குறிப்பிடத்தக்கது.

கிகீ, சிசீ, திதீ என்று இடுப்பிலிருந்து விசிறி எழுந்த இகர ஈகாரக் குறியீடுகள் நிலைமாறிக் குத்துக் கோட்டின் மேல் (கி கீ சி சீ தி தீ) குறுகி நின்றதும் அச்சுப்பயன்.

வார்ப்பச்சுப்பொறி (‘லனோடைப்’) எனப்படும் அச்சுக் கோப்பானில் ஞூ, ணூ, தூ, நூ, லூ, றூ, னூ ஆகிய வடிவங்களை அடிக்கும்போது அவற்றின் கால்கள் ஒடிந்து விழக்கண்ட செய்தித்தாள்கள் அவற்றை ஞு£, ணு£, து£ என்று தனித்தனியே அச்சடித்து வெளிப்படுத்தின. அவ்வாறான இடர்ப்பாடு ஒளிப்பட அச்சுக்கோப்பு பயின்று வரும் இந்நாளில் இல்லை.

எ எ என்றும் ஒ ஒ என்றும் எழுதப்பட்டு வந்ததை எஏ, ஒஓ என்று முறையே கீழ்க்கோடும் சுழியும் தந்து மாற்றம் செய்தவர் வீரமாமுனிவர் என்பர். அவ்வாறு ஏகாரத்திற்குக் கோடிழுக்கும் வழக்கம் அவர்க்கு முற்பட்ட சாசன வழக்கமாக இருந்திருக்கிறது என்று மு. இராகவையங்கார் கூறியுள்ளார்.

இவ்வாறெல்லாம் அவ்வப்போது சிறுசிறு மாற்றங்களை ஏற்றுக்கொண்ட தமிழக மக்கள் முற்றிலும் மாறுபட்ட வடிவ அமைப்புக்களைத் தெளிவு அடிப்படையில் அமையாத மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவர் என்பது ‘அய், அவ்’ விற்கு ஏற்பட்ட எதிர்ப்பிலிருந்தே தெரிய வரும்.

கற்க எளிமை, கணிப்பொறி, தட்டச்சு முதலிய கருவிப் பொருத்தம் காணும் எழுத்துச் சீர்மையால் ஏற்படப்போகும் பயன்கள் என்று கூறப்படுவன அனைத்தும், ஏட்டளவில் பேச்சளவில் நிற்பனவேயன்றி நடைமுறையில் கையாளப்பட்டு அதன் வன்மை மென்மைக் கூறுகள் அறுதியிடப்படாதவை.                    (தொடரும்)