அண்மைக் காலமாகத் தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணங்களும் அதை எதிர்த்து ஆதிக்கச் சாதிவெறிப் போக்குகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு, உடைமைகள் சேதமடைதல், குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்படுதல் போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

இதுபோன்ற நிகழ்வுகளில் தொடர்புடைய (திருமணம் செய்து கொள்ளும்) இருவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை விடவும் அவர்கள் சார்ந்த சமூகத்தினர் அளவுக்கு அதிகமான அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.

திருமணம் என்பது ஒரு பெண் தனக்குப் பொருத்தமான இணையைத் தேர்ந்தெடுப்பது அல்லது ஓர் ஆண் தனக்குப் பொருத்தமான இணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது. குடும்பமாக வாழ்க்கை நடத்துவது என்பது ஏன் சாதி வெறியர்களுக்கு வெறுப்புக்குள்ளாக்குகிறது, ஆத்திரமூட்டுகிறது, தடுக்கத் தூண்டுகிறது.

ஏனென்றால் இந்தச் சமூகம் சாதியச் சமூகமாக இருக்கிறது என்பதால்தான். சாதியம் குடும்பத்தை அதன் நடு அச்சான பெண்களைக் கொண்டே செயல்படுகிறது. ஆரியப் பார்ப்பனர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும், தங்களை உயர்த்திப் பிற சமூகங்களை இழிவு செய்யவும் உருவாக்கிய வருணப் பிரிவுகளைப் பெண்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமே பாதுகாக்க முடியும் என்று நம்புகின்றனர்.

எனவேதான் வருணக் கலப்பு ஏற்பட்டு விடாமல் தடுக்க வருணாச்சிரம தருமங்களை வகுத்தனர். அவற்றைத் தெய்வங்களோடு தொடர்புபடுத்தினர். இறைவனால் படைக்கப்பட்டது அதை ஏற்க வேண்டும் என அச்சுறுத்தினர். அதற்கு ஆதரவாகவே சாத்திரங்களையும் புராணங்களையும் புனைந்து எழுதினர்.

சாதிகளுக்குள் கலப்பு ஏற்பட்டு விடாமல் தடுக்க பெண்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டியது கட்டாயம் என்று அவர்கள் முடிவு செய்தினர். அந்த முடிவுதான் பெண்ணினத்தின் முதுகெலும்பை முறித்துப் பெண்களை முடக்கிப் போட்டது.

பெண் என்பவள் பருவம் அடைந்து தற்சிந்தனை பெற்றபின் திருமணம் செய்து கொண்டால் தனக்கு விருப்பமான ஒருவரைச் சாதிகளுக்கு அப்பாற்பட்டு தேடுவாள். எனவே குழந்தைப் பருவத்திலேயே அவளது சாதிக்குள்ளாகவே ஒரு சிறுவனுக்கு மண முடித்து வைக்கப்பட்டாள். ஆக, இத்திருமணத்தில் பெண்ணின் உரிமை விருப்பம் பறிக்கப்படுகிறது.

பெண்ணுக்குக் கல்வி கொடுத்தால் அவள் சிந்தனை வளர்ச்சி பெற்று ஏன் என்ன என்று ஆராய்வாள். மரபை உடைத்துப் பிற சாதி, மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டு விடுவாள் என்றெண்ணி அவளது கல்வி பறிக்கப்பட்டது.

பெண்கள் கல்வி கற்று வெளியே வேலைகளுக்குச் சென்றால் பிற சாதி, மத ஆண்களோடு பழக வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் வேலைக்குச் செல்ல விடாமல் முடக்கப்பட்டாள்.

இவையெல்லாம் கடந்த காலத்தில் நடந்தவை எனலாம். இப்போதெல்லாம் இதுபோன்ற நிலை இல்லை எனத் தருக்கமிடுவோரும் உண்டு. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. இன்றைக்குச் சமத்துவமும், அறிவியல் வளர்ச்சியும், தேவைகளும் பெருகி உலகம் சுருங்கி வரும் இவ்வேளையில் சாதிய வருணக் கோட்பாடுகளின் பிடி சிறிது தளர்ந்து வருவது உண்மையே.

பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் சாதி, மத மறுப்புத் திருமணங்களை அங்கீகரிக்க மறுத்தவர் களைக் கடுமையாகச் சாடினார். "இந்துக்கள் வகுத்துள்ள எட்டுவகை திருமணங்களில் காந்தருவ திருமணமானது எந்த தேசம், எந்த மொழி, எந்தச் சாதியோராயிருப்பினும் ஆணும் பெண்ணும் இசைந்து கூடிக் கொள்வார்களேயானால் ஒரு திருமணம் என்று வகுத்திருக்கிறார்கள்..''

அவ்வாறிருக்க தாலி கட்டாவிட்டால் திருமண மில்லை என்றும், ஓர் இந்துவானவன் மற்றொரு மத பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது என்றும் கூறுவது எந்த மகாத்மாக்களால் இயற்றிய சட்டமோ விளங்கவில்லை.

இத் தேசத்திலுள்ளோர் குணமும் செயலும் மாறிய போதிலும், ஐயர், முதலி, நாயுடு, செட்டி என்னும் ஒவ்வொரு பெயர்களீற்றிலும், தொடர் மொழிகளைச் சேர்த்துள்ள வரையில் சட்டங்களும் மாறாதுபோதும்' (1908, தமிழன்) என்று சாடினார்.

அயோத்திதாசருக்குப் பின்னால் வந்த பகுத்தறிவாளர் பெரியார் அவர்கள் சாதி மறுப்பு, மத மறுப்பு, தாலி மறுப்பு திருமணங்களையும் விதவைத் திருமணங்களையும் துணிந்து நடத்தி வைத்து தமிழகத்தில் பெரும் இயக்கமாகவே எடுத்து நடத்தினார். அதன் மூலம் சமூக மாற்றத்திற்கு வித்திட்டார். அவரது காலத்தில் உயர் கல்வி பெற்ற பல சிந்தனையாளர்கள் அவருக்குத் துணை நின்றனர்.

திருமணம் மற்றும் குடும்பம் பற்றிய ஒன்றிய நாடுகள் அவையின் வரையறை ஒரே கூரையில் பாதுகாக்கப்படும் இதயங்களின் இணைப்பு ஒரு குடும்பம். அன்பு, பரிவு, பாதுகாப்புணர்வு, ஒற்றுமை ஆகியவற்றின் நிலைக்களம் குடும்பம்' என்கிறது. இது நேர்மையான துல்லியமான வரையறை. ஆனால் இந்துத்துவக் கோட்பாட்டின்படி குடும்பம் என்பது ஆணின் ஆளுகையின் கீழ் பெண் அவளிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, அவனுக்காகவே வாழ வேண்டிய நிபந்தனையுடன் கூடிய வாழ்விடம். சாதி மறுப்பு, தன் மதிப்புக் கொண்ட காதல் திருமணங்கள் இந்துத்துவ சாதிய, பெண்ணடிமைக் கோட்பாட்டை அதன் அடித்தளத்தையே தகர்க்கிறது.

ஆகவேதான் இந்துத்துவக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்க எண்ணும் சாதி இந்துக்களால் இதுபோன்ற சாதி மறுப்புத் திருமணங்கள் எதிர்க்கப்படுகின்றன.

இந்துத்துவம் எனும் மதவெறிக் கோட்பாடு இன்று அரசியல் கோட்பாடாக மதவெறி ஆட்சியாளர்களால் மாற்றப்படுகிறது. மதவெறி ஆட்சியாளர்கள் சாதிவெறியர்களையும் தமக்குத் துணையாகச் சேர்த்துக் கொண்டு அவ்வெறிக் கோட்பாட்டை இந்நாட்டின் கோட்பாடாக அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர். குறிப்பாக இந்நாட்டை இந்து நாடாக அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆகவேதான் சாதி, மதச் சிக்கல்கள் அரசியல் சிக்கல்களாக மாற்றப்படுகின்றன. சாதி, மதமற்ற சமத்துவத்தை நிலைநிறுத்த முயல்கின்ற நாம் சாதி, மத மறுப்புத் திருமணங்களை ஆதரிப்பதும், இத்திருமணங்களை அங்கீகரிக்கக் கோரி அரசை வலியுறுத்திப் போராடுவதும் உடனடித் தேவையாகும்.