மதத்தின் பெயரால் இறுகக் கட்டப்பட்ட ஒரு சாதிய சமூகத்தில் பிறந்து சாதி தீண்டாமையை ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த அம்பேத்கர் எனும் மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் திரைப்படம் "டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.'' தன் இளமை வாழ்க்கை, படிப்பு, குடும்பம், அரசியல் என அனைத்திலும் இடையறாத போராட்ட வாழ்க்கையை அப்படியே நம் கண் முன்னே காட்டியுள்ளார் இயக்குனர் ஜாப்பர் படேல். இத்திரைப்படம் தமிழில் வெளியாவதற்குள் ஒரு பெரும் போராட்டமே நடந்திருக்கிறது. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகமும், மகாராஷ்டிர அரசும் இணைந்து தயாரிக்கப்பட்டு 2000ம் ஆண்டில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இன்னும் பிற மொழிகளிலும் வெளியிடப்பட்டது. திரைப்படம் வெளிவந்து 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தமிழில் கடந்த 3.12.2010 அன்று அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

தமிழக அரசு சார்பாக உருபாய் 10 லட்சம் நிதி அளிக்கப்பட்டது. மக்களின் வரவேற்பைப் பெறாத திரைப்படங் களைக் கூட திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரம் செய்தும் தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பியும் ஓட வைக்கிறார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வின் விடுதலைக்காக போராடிய அந்த வரலாற்று நாயகனின் திரைப்படம் பெரும்பாலான மாவட்டங்களில் திரையிடவே இல்லை. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் ஓரிரு திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டன.

மூன்று மணி நேரம் ஓடக்கூடிய ஒரு வரலாற்றை எந்தவித சோர்வும் இல்லாதவாறு அம்பேத்கர் பற்றி அறிய வருபவர்களுக்கு அளித்து இருக்கிறார் இயக்குனர். அந்தக் காலகட்டத்தில் இருந்த சூழலைப் போன்றே இடங்களை வடிவமைத்திருக்கும் கலை இயக்குனருக்கும், காட்சிகளை இசையின் மூலமாக உணர வைத்திருக்கும் இசையமைப்பாளருக்கும் நமது நன்றிகளை தெரிவித்தாக வேண்டும்.

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலைப் பதிவோடு தொடங்குகிறது. மழைக்காக ஒதுங்கும் இளைஞனை மனதில் "அம்பேத்கார்னு நினைப்பா' என கேட்டு அடித்து கொன்று கோவிலுக்கு வெளியே கிடப்பதும், குழந்தைகள் கையில் இந்தியக் கொடியுடன் "சாரோ சாகாங்கி அச்சா' என பதிவாக்கியிருக்கும் விதம் மிக ஆழமான அரசியலை நமக்கு காட்டுகிறது.

மன்னரின் உதவியோடு கல்வி மேற்படிப்பு முடித்து வந்து அரண்மனை தலைமைக் கணக்கராக பணிபுரிகிறார். எவ்வளவு உயர்ந்த சோப்பு போட்டுக் குளித்தாலும் தாழ்த்தப்பட்டவனின் தீட்டுப் போகாது என்பது அம்பேத்கரின் கீழ் பணிபுரியும் சாதி இந்துக்கள் நடந்து கொள்ளுகிற விதத்தை பார்க்கும்போது இந்துக்களின் மனநிலையை தெரிந்து கொள்ள முடிகிறது. இளம் வயது முதல் தான் அனுபவித்த சாதியக் கொடுமைகளில் இருந்து மீண்டுவர தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என எண்ணுகிறார்.

வட்டமேசை மாநாட்டில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக் கான பிரதிநிதித்துவம் போல் தாழ்த்தப்பட்டவர் களுக்கான பிரதிநிதித்துவம் இங்கிலாந்து அரசிடம் கோருகிறார். இதனை எதிர்க்கும் காந்தியுடன் கருத்து மோதல் உருவாவதும், பூனா ஒப்பந்தத் தை திரும்பப் பெறக் கோரி உண்ணாவிர தம் இருக்கும் காந்தியுடன் உரையாடல் அம்பேத்கரின் அன்றைய போராட்ட நிலையை அப்படியே பதிவாக்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் பூனா ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என அனைத்து தரப்பிலும் வற்புறுத்த காந்தியின் உயிரைக் காக்க வேண்டி திரும்பப் பெறுகிறார் அம்பேத்கர். இச் சம்பவத்தை ஒரு அறையில் அமர்ந்திருக்கும் காட்சியும் அவரின் ஆழமன வலியை நம்மால் திரையில் உணர முடிகிறது. இந்திய சட்ட அமைச்சரவையில் பங்கு கொண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குகிறார். இந்து மத சட்ட திருத்த மசோதாவை புறக்கணித்த பின்பு அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறார். இந்துவாக பிறந்து விட்டேன் இந்துவாக சாக மாட்டேன் என அறிவித்து புத்த மதத்தை தழுவுகிறார்.

பல இடங்களில் அம்பேத்கரின் கருத்துகளை அப்படியே பதிவு செய்திருக்கும் இயக்குநரின் உறுதி யைக் காண முடிகிறது. காந்தி ஒரு மகாத்மாவோ, துறவியோ அல்ல, சூழ்நிலைக்கேற்ப மாறும் அரசியல் வாதி என குறிப்பிட்ட சில வசனங்களில் கூறலாம். அவரின் வாழ்க்கை எவ்வளவு துயரங்கள் இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையில் அவரது மன உறுதியையும் ஆளுமையையும் நம்மை நெகிழ வைக்கின்றன.

பெரியார் பிறந்த மண்ணில் அவரின் வழி வந்தவர் எனக் கூறிக் கொள்ளும் தமிழினத் தலைவரின் அரசோ 10 லட்சம் நிதியோடு ஒதுங்கி விட்டது. இளைஞன் படத்தை அனைவரையும் பார்க்க உத்தர விடுபவர் அம்பேத்கர் திரைப்படத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை. பல்வேறு முற்போக்கு சக்திகளின் தொடர் முயற்சியால் இத்திரைப்படத்தை தமிழக மக்கள் காண முடிந்தது. அம்பேத்கர் காலகட்டத்தைச் சொல்லும் இத்திரைப்படத்தைக் காணும்போது "சாதி தீண்டாமைக் கொடுமைகளின் கோரம் மாற்றம் கொண்டுள்ளதே தவிர மாறிவிட வில்லை'' என்பது இப்படம் நமக்குச் சொல்லும் பாடம். திரைப்படத்தை காணும்போது நானும் அம்பேத்கர்தானு உரக்கச் சொல்ல வேண்டிய தேவை யையும் உணர்த்துகின்றது. இச் சமூகம் இன்று வரை சந்தித்துக் கொண்டு இருக்கும் வலியும் வேதனையும் நம் கண் முன்பு நிறுத்துகிறது. அம்பேத்கர் எனும் அறிவாயு தத்தை கையில் ஏந்துவோம்! சாதியற்ற சமூகம் படைப்போம்!