பொதுப்படத் தேர்தல் சார்ந்த நடைமுறைகளையே பலரும் அரசியல் என்று கருதுகின்றனர். ஆனால் அது மட்டுமே அரசியல் இல்லை. அரசுகளின் இயங்குமுறை மட்டுமல்லாமல் அவற்றை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களையும் அரசியல் என்றே குறிப்பிடுகிறோம்.

வகுப்பு(வர்க்க)ப் போராட்ட எழுச்சியை வகுப்பு (வர்க்க) அரசியல் என்றும், புரட்சி நோக்கிய செயற்பாடுகளைப் புரட்சிமய அரசியல் என்றும், தேசம் தழுவிய முயற்சிகளைத் தேசிய அரசியல் என்றுமாகவெல்லாம் குறிப்பிடுகிறோம். போர் என்பது குருதி சிந்தும் அரசியல் என்றும், அரசியல் என்பது குருதி சிந்தாப் போர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு செயலுக்கும் பின்புலமாக அச் செயலுக்குரிய வகுப்பு (வர்க்க) அரசியல் இருக்கிறது என்று சொல்லப்படுவதைச் சரியாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

ஒரு மக்கள் குமுகம், குமுக, அரசியல், பொருளியல் அடிப்படைகளில் என்ன வகையில் எல்லாம் பாதிக்கப்படுகிறது என்றும், அது, அப் பாதுகாப்புகளி லிருந்து விடிவுபெற வேண்டுமானால் யார் யாரை எதிர்த்து எப்படியான வகையில் போராட வேண்டும் என்று கணிப்பதையுமே அம் மக்கள் குமுகத்துக்குரிய விடுதலை அரசியல் என்று கணக்கிட முடியும்.

அவ்வகையில், தமிழ்த்தேச அடையாளங்கள், தோற்றங்கள், செயற்பாடுகள் ஆகியவற்றை விரிவாக அறிவதையே தமிழ்த்தேச அரசியல் என்கிறோம்.

தமிழ்த்தேச அரசியல்

தமிழகத்தைப் பொருத்த அளவில் தமிழக மக்கள் குமுகம் என்னென்ன வகையில் யார் யாரிடமெல்லாம் அடிமைப்பட்டிருக்கிறது. அந்த அடிமை நிலைகளி லிருந்து எப்படி விடுதலை பெறுவது என்று அறிவதே தமிழ்த் தேச அரசியல்.

தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலை:

(அ) உலகில் உள்ள வல்லரசு நாடுகள் எல்லாம் எளிதே தமிழகத்தின் உள்ளே நுழைந்து தொழில்கள் தொடங்குகின்றன. அத் தொழில்கள் வழியே ஊதியத்தை மட்டுமல்லாமல், தமிழகக் கனிம வளங்களை, விளைச்சல்களை, உழைப்பை எல்லாம் கொள்ளையடித்துச் செல்கின்றன. அதனால் தமிழக மக்கள் எவரும் எளிதே தொழில் தொடங்கிட முடிவதில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்களே இங்குக் கொழுத்துத் திரிகின்றன.

அதேபோல் பன்னாட்டு வணிக நிறுவனங்களும் இங்குப் பெருமளவில் நுழைந்திருப்பதால் எளிய அளவில் வணிகம் செய்ய இயலாமல் தமிழக வணிகர்கள் நலிவடைகின்றனர்.

வேளாண்மைக்குரிய வீரிய வித்துகள், வேதியல் உரங்கள், பூச்சி மருந்துகள் எனத் தமிழக வேளாண்மையையும் பன்னாட்டு நிறுவனங்கள் பாழாக்கியதோடு, அவற்றின் தேவைகளுக்காகவே இங்குப் பயிர்கள், பழங்கள், மூலிகைகள் நடப்படுவதும், ஏற்றுமதியாவதுமாக உள்ளன.

ஆழ்கடல் மீன் பிடிப்புகள் முழுமையையும் பன்னாட்டு நிறுவனங்களே உடைமையாக்கித் தமிழக மீனவர்கள் வாழ்வையே நசுக்குகின்றன.

உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம் எனும் பெயர்களில் தகவல் தொழில் நுட்பம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கிப் பரவலாகத் தமிழகத்தையே அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

இவ்வகையில் எல்லாம் தமிழகம் தொழில் வழியிலும், வேளாண்மை நிலையிலும், கடலுரிமை நிலையிலும் தனித்து வளர்ந்து தன்னிறைவு கொள்ளாதபடி வல்லரசுகள் அனைத்து நிலையிலும் வல்லாளுமை செலுத்தித் தமிழகத்தை அடிமைப் படுத்தி வைத்திருக்கின்றன.

எனவே, அந்த வகையில் வல்லரசுகளின் கொள்ளையர்க்கும், தமிழக மக்களுக்கும் இடையில் இருக்கும் முரண்பட்ட அரசியலோ, முதன்மை நிலையில் ஓர் அடிப்படையானதாக இருக்கிறது.

(ஆ) பிரித்தானிய வல்லரசினால் உருவாக்கப்பட்ட இந்தியாவோ, தமக்குள் பல்வேறு தேசங்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

பன்னாட்டுக் கொள்ளைக்கு வழி அமைத்துத் தருவதோடு, இந்தியா வைதீகப் பார்ப்பனியக் கருத்துக்களையே தன் ஆளுமைக்குரிய கோட்பாடாக வகுத்துத் தமிழகத்தை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

தமக்குள் அடிமைப்படுத்தப்பட்டுள்ள தேசங்கள் எவற்றுக்குமான அடிப்படை உரிமைகளைக் கூட இந்திய அரசு மறுக்கவே செய்கிறது.

*             தமிழக மக்கள் தமிழ்த் தேசிய இனத்தினர் என அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது.

*             தமிழ்மொழி ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக நீதிமன்ற மொழியாக, கல்வி மொழியாக இருக்கவில்லை. அவ்வாறு உருவாக்குவதற்கு இந்திய அரசே தடையாக உள்ளது.

*             கல்விக்குரிய பாடத் திட்டங்களை இந்திய அரசே வகைப்படுத்தியிருக்கிறது. அதை அடியொட்டியே தமிழக அரசும் பாடத் திட்டங் களை வகுத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது.

*             தமக்குரிய சட்டத் தைத் தமிழக அர சால் உருவாக்கிக் கொள்ள முடியாது.

*             நீண்ட கடல் வளம் இருந்தும் துறைமுகத் துறை, வானூர்தித் துறை, நெடுஞ்சாலைத் துறை  எதுவும் உரிமையுடையதாயில்லை.

*             அஞ்சல் துறை, தொலைபேசி, தொலைக்காட்சி, பிற தொலைத் தொடர்புகள் துறை என எதையும் தமிழகம் உரிமையாக்கிக் கொள்ள இயலாது.

*             நிலத்தடிப் பொருள்கள், கனிமங்கள், ஆழ்கடல் மீன் பிடிப்பு, நில விளைச்சலுக்கான விலை நிர்ணய உரிமை என எந்த உரிமையும் தமிழக அரசிடம் இல்லை.

*             ஒரு செய்தித் தாளோ, இதழோ நடத்த இசைகிற உரிமை, திரைப்படத் தணிக்கை உரிமை, வெளிநாட்டுக் கடவுச் சீட்டுரிமை  என அனைத்தும் இந்திய அரசுக்கே உரிமையாய் இருக்கிறது.

*             உருவாக்கப் பொருள்களை வெளிநாடுகளுக்கு இந்திய அரசின் இசைவில்லாமல் தமிழகம் அனுப்ப முடியாது.

*             பணம் அச்சிடும் உரிமை, பாதுகாப்புத் துறைக்குரிய படைத்துறை உரிமை என எல்லாம் இந்திய அரசிடமே உள்ளன.

 ஆக தமிழகம் ஓர் அடிமை அரசாகவே இந்தியா விடம் சிக்குண்டு கிடக்கிறது. தன் உரிமைகளுக்காகப் போராடும் நோக்கமின்றி இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் இடைப்பட்ட அரசியல் முரண் முக்கியமான அடிப்படை முரணமாக இருக்கிறது.

(இ) தமிழகத்தின் நிலவுடைமை அமைப்பு முற்றும் முழுமையான நிலவுடைமை அமைப்பினதாக இல்லை. நிலவுடைமையாளர்கள் தாங்களே தங்கள் நிலங்களில் என்ன விளைவிக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதில்லை. பன்னாடுகளின் தேவைகளுக் காகவே இங்குப் பயிரிடப்படுகின்றனர்.

தாங்கள் விளைவித்த விளைச்சலுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்வதில்லை. இந்திய அரசும் தரகு முதலாளிகளுமே விலை நிர்ணயம் செய்கின்றன.

நிலத்தின் வழியான வரவு படிப்படியாகக் குறைந்த நிலையில் நிலத்தின் இருப்பையும் நிலவுடைமை யாளர்கள் படிப்படியாக இழக்கின்றனர். நிலத்தைச் சார்ந்து மட்டுமே அவர்களின் அதிகாரம் இருப்பது மாறி, அவர்கள் பிற தொழில் சார்ந்தவர்களாகவும், தங்கள் மரபு நிலை அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்கின்றனர்.

சமூகத்தில் புரையோடிக் கிடக்கிற சாதி அவர்களின் ஆளுமைக்குப் பக்க வலுவாக இருக்கிறது.

அப்படியாகப் பிற ஆளுமைகளுக்கு ஆட்பட்டிருப் பினும் அரைநிலை ஆளுமையில் உள்ள அந்நிலவுடைமையாளர்க்கும் ஏழை உழவர்களுக்கும் இடையில் முரண்கள் முக்கியமானதாக இருக்கின்றன.

(ஈ) அரை நிலையில் உள்ள நிலவுடைமை யாளர்கள் சாதி ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பதிலிருந்து அவர்களின் ஆதிக்கச் சாதியப் போக்கு தொடர்ந்து நீடித்தே வருகிறது.

அடிமைப்பட்டிருக்கும் அடிநிலைச் சாதியர் சாதிய அடக்குமுறையிலிருந்து விடிவு காண இயலாது இருக்கின்றனர்.

எனவே ஆதிக்கச் சாதியர்க்கும் அடிமை நிலைச் சாதியர்க்கும் இடைப்பட்ட முரண்பாடுகளும் முக்கியமான முரண்பாடுகளாகவே இருக்கின்றன.

(உ) பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதில் பங்குத் தொகை பெற்றுக் கொழுத்துக் கொண்டிருக்கும் தரகு முதலாளிகளுக்கும், எளிய மூலதனத்தில் தொழில் தொடங்கி பெரிய அளவில் விற்பனைச் சந்தையைப் பெற இயலாமல் தரகு முதலாளிகளாலும் அரசாலும் நசுக்குண்டிருக்கும் தமிழ்த் தேச முதலாளிகளுக்கும் இடைப்பட்ட முரண்பகையும் முக்கியமான அடிப்படையானதாக இருக்கிறது.

(ஊ) பொதுப்பட முதலாளிய அமைப்பே சுரண்டல் அமைப்பாக, ஆளுமை அமைப்பாக இருக்க, அத்தகைய அமைப்பைத் தூக்கி எறிந்து விட்டு, உழைக்கும் மக்களுக்கான குடியாட்சி அமைப்பை நிறுவும் நோக்கம் கொண்டிருக்கும் தொழிலாளர் வகுப்பும் முதலாளியத்திற்கும் இடைப்பட்ட முரண்பகையும் முக்கியமானதாக இருக்கிறது.

(எ) இன்றைய தமிழக அரசு ஓர் உரிமை பெற்ற அரசாக இல்லாமல், இந்திய அரசின் தொங்கு சதையாக இருப்பதை அறிந்திருந்தாலும், அது தமிழக மக்களை எவ்வகையிலும் எழுச்சி கொள்ளாமல் அடிமைப் படுத்தி வைத்திருக்கவும், அம்மக்களை மேலும் ஒட்டச் சுரண்டிக் கொழுத்திடவும், உரிமைக்குரல் எழுப்புவோரைக் கடுமையாக ஒடுக்குவதுமாக இருக்கையில், தமிழக அரசுக்கும் பரந்துபட்ட தமிழக மக்களுக்கும் இடைப்பட்ட முரணும் அடிப்படையில் முக்கியமான முரணாகவே இருக்கிறது.

(ஏ) தமிழகத்திற்கும் அண்டைய தேசத்திற்கும் இடையில் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்றுச் சிக்கல்களும் சரியான வகையில் தீர்க்கப்படாத எல்லையோரச் சிக்கல்களும் இன்னும் நீடித்த நிலையிலேயே உள்ளன.

அதனால் தமிழகத்திற்கும், அண்டைத் தேச அரசுகளுக்கும் இடைப்பட்ட முரணும் ஓர் அடிப்படையான முக்கிய முரணாக இருக்கிறது.

(ஐ) தமிழகத்திற்குள்ளேயே மார்வாடி உள்ளிட்ட பிற மொழியினர் பெருமளவில் நிலங்களைப் பறித்திருப்பதும், தமிழர்களை இன, மொழி வழிப் புறக்கணித்து ஆளுமை செய்வதும் நடக்கிறது. எனவே அவ்வழிப்பட்ட பிற மொழி ஆளுமையர்க்கும், தமிழர்க்கும் இடைப்பட்ட முரணும் ஓர் அடிப்படை யான முரணாக இருக்கிறது.

(ஒ) இந்தியப் பார்ப்பனிய ஆளுமையோடும் அதன் வைதீகக் கோட்பாட்டோடும் உறழ்வதோடு தமிழக அரசிலும் மற்றும் சமூக ஆளுமைப் போக்குகளிலும் தங்களை முதன்மைப்படுத்தியிருக்கும் ஆரியப் பார்ப்பனர்க்கும் அவர்களின் ஆளுமைக்குள்ளாக்கப் பட்ட பிறர்க்கும் இடைப்பட்ட முரண்பாடும் ஓர் அடிப்படையான முக்கிய முரணாக இருக்கிறது.

ஆக மேற்சொல்லப்பட்ட பத்து முரண்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய எதிர்மை முரண்கள் தமிழக அரசியல் களத்தில் நிலவுகின்றன.

அவற்றையெல்லாம் தீர்ப்பது எப்படி? எல்லாச் சிக்கல்களையும் ஒரே நேரத்தில் தீர்க்க முடியுமா? அல்லது ஒன்றன் பின் ஒன்றாகத் தீர்ப்பதா? என்று முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரே நேரத்தில் முரண்பட்ட பல பணிகளைச் செய்திட இயலாது.

பதின்கவனகர் ஒருவர் கூட வேறுபட்ட பத்து நிகழ்வு களைக் கவனிக்கவும், அறிந்து கொள்ளவும் முடியுமே யொழிய, அந்தப் பத்தின் நிலைகளையும் அதன் விடை களையும் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் சொல்ல முடியும்.

அதுபோலவே சமூகத்தில் உள்ள பத்து முரண்பாடு களையும் ஒரே பொழுதில் விளங்கிக் கொள்வது என்பது வேறு; அவற்றைத் தீர்த்து வைப்பது என்பது வேறு.

ஆக எல்லா வகையான முரண்பாடுகளையும் ஒன்றன் பின் ஒன்றாகவே தீர்க்க முடியும்.

ஒன்றன்பின் ஒன்று என்று வரும்போது, எதன் பின் எது? முதலாவது எது? இரண்டாவது எது? என எவ்வாறு வரிசைப்படுத்துவது என்பதே அரசியலில் ஆழமான கேள்வி.

தமிழகத்தில் உள்ள மேற்சொல்லப்பட்ட அடிப் படையான முரண்பாடுகளையும் முகாமையான வையாக ஏற்றுக் கொண்டாலும் அவற்றில் எந்த ஒன்றைத் தீர்ப்பது மற்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் துணையாக இருக்கும் என்று கணித்திடல் வேண்டும்.

ஒரு சிக்கலைத் தீர்ப்பதும், பின் அடுத்த சிக்கலைத் தீர்ப்பதும் என்று அடுத்தடுத்து வரிசைப்படுத்துவது என்று கூட இல்லாமல், ஒன்றின் ஊடாக மற்றொன்றின் தீர்வு நோக்கி நகர்வது என்று இயங்கு போக்கில் சிக்கல்களை அணுகித் தீர்ப்பதே முறையாகின்றது.

அவ்வகையில் மேற்சொல்லப்பட்ட முரண்களை ஆய்ந்தோமானால், இந்திய அரசுக்கும் தமிழக மக்களுக்கும் இடைப்பட்ட முரண்பாடே முதன்மை முரண்பாடாக இருக்கிறது.

அந்த முரண்பாட்டைத் தீர்ப்பதன் வழிதான் இந்திய அரசோடு பிணைந்திருக்கும் வல்லரசு ஆளுமையை யும்  பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனக் கொள்ளைகளையும் எதிர்த்திட முடியும்; தடுத்து நிறுத்திடவும் முடியும்.

அவ்விரு பெரும் அரசியல், பொருளியல் ஆதிக்கங் களையும் எதிர்த்து அவற்றிலிருந்து விடிவு பெறுகிற பொழுதே நிலவுடைமை ஆளுமையிலிருந்தும் ஆதிக்கச் சாதி ஆளுமையிலிருந்தும், தரகு முதலாளியக் கொடுமையிலிருந்தும்  தமிழக மக்கள் விடுதலை அடைய முடியும்.

தமிழகம் தனி உரிமைத் தேசமாகிற போதே, அண்டைத் தேசங்களுக்கிடைப்பட்ட காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாற்றுச் சிக்கல்கள் உள்ளிட்ட சிக்கல்களை எளிதே தீர்க்க முடியும்.

இந்திய நாய்களே வெளியேறுங்கள் என்று அசாம், மணிப்பூர், காசுமீர மக்கள் குரெலழுப்பி மார்வாடி உள்ளிட்ட பிற இந்திய ஆளுமையர்களை விரட்டுவது போல் தமிழகத்திலிருக்கும் பிற தேச ஆண்டைகளை விரட்ட முடியும். அல்லது அவர்கள் தாமாக வெளியேற முடியும்.

தமிழகம்  ஒரு முழுமையான மக்கள் குடியாட்சி அமைப்பை உருவாக்கும்போதே இங்கு மக்கள் பண்பாட்டோடு கூடிய தமிழக மக்கள் வாழ்வியலுக்குரிய மெய்யியல் அறிவு ஊற்றெடுத்து வளர்க்கப்படும்.

ஆக, அத்தகு நீண்ட நெடிய உரிமைப் போராட்ட வழித்திட்டங்களுக்கு அடிப்படையான முதன்மைப் பணி இந்திய ஆண்டை அரசின் ஆளுமைப் போக்கிலிருந்து விடுபடுவதிலிருந்தே தொடங்குகிறது.

நாம் தமிழர்கள், தமிழ்த் தேசிய இனத்தினர் என்ற உண்மையைக் கூடச் சொல்ல முடியாமல் நம்மை இந்தியர், இந்தியத் தேசிய இனத்தினர் எனப் பொய்ம்மையாய், இல்லாத ஒன்றைச் சொல்ல வைக்கும் ஆளுமைப் போக்கைத் தமிழர்களிடையே வெளிப்படுத்திக் காட்ட வேண்டியுள்ளது.

நாம் எப்படி பிரிட்டீசின் அடிமையில்லையோ, அப்படி இந்தியாவின் அடிமையும் இல்லை  என்பதைச் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழக மக்கள் பழக்கப்பட்டு அமிழ்ந்து கிடக்கும் இந்திய, பன்னாட்டு அரசியல் களத்திலிருந்து விடுபட வேண்டுமென உணர்வை ஊட்டுகிற பணியை முதன்மையாய்ச் செய்ய வேண்டியிருக்கிறது.

தமிழகத்தின் அரசியல், பொருளியல் உரிமை களைப் போராடிப் பெறுவதற்கான அடிப்படையாக முதலில் தமிழ்த் தேசத்தின் அரசியல் போக்குகளை அறியச் செய்திடல் வேண்டும்.

தமிழகத்தின் குமுக, அரசியல் பொருளியலை ஆழமாகப் பயிற்றுவிக்க வேண்டும்.

நம் தேசம் தமிழ்த் தேசம் எனும் உணர்வோடு, அரசியலை, பொருளியலை, வரலாற்றை, வாழ்வியலை, பண்பாட்டை உணரவும், மதிப்பிடவும் வைக்க வேண்டும்.

அவ்வகையில், தமிழ்த் தேச அரசியலையே, தமிழக மக்கள் அனைவரின் அரசிய லாகவும் ஆக்க வேண்டும்.

தமிழக மக்கள் இந்தி யத்தை, பன்னாட்டு நிறுவனங் களை, பிற எவற்றையுமே தமிழ்த்தேச அரசியல் பார்வை யிலிருந்தே எடையிடப் பழக்க வேண்டும்.

அப்படியான அரசியல் பரப்பல் பயிற்சியே இன்றைக்குத் தமிழ்த் தேச அரசியல் பேசும் இயக்கங்களின் முதன்மைப் பணியாக இருத்தல் வேண்டும்.

அதுவன்றி ஆறாவது, ஏழாவது, எட்டாவது எனப் பின்னுக்குச் செய்ய வேண்டிய பணிகளை யெல்லாம் முதன்மைப் பணிபோல் பேசுவதும், பரப்புவதும் முதன்மைப் பணியை முன்னெடுப்பதற்கே தடையாக அமைந்து விடும்.

அதாவது, தமிழ்த்தேச உரிமை அரசியலுக்கு முதன்மை எதிர்மை நிலையிலுள்ள இந்திய அரசை எதிர்க்காமல், எதிர்த்துப் போராடாமல், மழுப்புவதும், திசை திருப்புவதுமான போக்கு தமிழ்த் தேச அரசியல் எழுச்சியை குழப்பியும், சிதைத்தும் விடும்.

எனவே, அத்தகைய எச்சரிக்கை உணர்வோடு தமிழ்த்தேச அரசியலை அறியவும் அணுகவும் வேண்டும். தமிழ்த்தேச அரசியலை, தமிழக மக்கள் அரசியலாக்கப் பெரு முனைப்புக் கொள்ள வேண்டும்.