இந்தியாவைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது. அப்புறம் எதுக்கு த் தேவையில்லாமல் வர்க்கம், வர்க்கம் என்று பேசுகிறார்கள்?

-சுந்தர் சார், திருச்சி.

திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது. ஆனால் தனக்கு வர இருக்கிற துணை தன் ஜாதிக்காரராக இருந்தால் மட்டும் போதாது, தன்னைப் போல் வசதியான அல்லது தன்னை விட வசதியானவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்களே, அது என்ன ஜாதி உணர்வா? தன் ஜாதிப் பெண்ணாகத் தேடி மணம் முடித்துக் கொண்டபின் வரதட்சணை கேட்டு துன்புறுத்துகிறார்களே, அவர்கள் எல்லாம் வேறு ஜாதிக்காரர்களா?

“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூடச் சொல்றதில்லை.

ஜாதி விட்டு கல்யாணம் பண்ண தயாராக இருக்கிறவர்கள் கூட வர்க்கம் பேதம் கடந்து கல்யாணம் முடிக்க தயாராக இல்லை.

‘டாக்டருக்குப் படித்திருக்கிற, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிற, நல்ல அழகான மணமகளுக்கு நல்ல வேலையில் உள்ள மாதம் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிற வசதியான மணமகன் தேவை. ஜாதி தடையில்லை.’ இந்த விளம்பரங்களை நீங்க பாக்கறதில்லையா? ஜாதி மாறி கல்யாணம் முடிச்சக் கூட, கலெக்டர் கலெக்டராதான் முடிப்பாரு. இல்லைன்னா டாக்டரை முடிப்பாரு.

சுய ஜாதியில் தன் படிப்புக்கும் தன் அந்தஸ்துக்கும் பொருத்தமாக பெண் கிடைக்காததால், வேறு ஜாதியில் ‘தகுதி- திறமையான’ பெண்ணை கட்டிக் கொண்டு, தன் ஜாதி மக்களுக்காக ‘பாடுபடுகிற’ ஜாதிய உணர்வாளர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

கிரிமினல்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் பாதுகாப்புத் தருகிற ஜாதி சங்கங்கள், தன் ஜாதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லையே.

இவ்வளவு ஏன்? கொலை செஞ்ச ஜெயேந்திரனுக்கு ஆதரவா போராடுன பிராமணர் சங்கம், கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் அய்யருக்கு ஆதரவா வரலையே ஏன்? அதாங்க வர்க்க பாசம்.

கலையம்சமே இல்லாமல் திரைப்படம் எடுத்தவர் இராம.நாராயணன். அவரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமித்திருக்கிறார்களே?
-எஸ்.கிருஷ்ணசாமி, விழுப்புரம்.

கலையம்சம் இல்லாமல் படம் எடுத்ததுகூட பரவாயில்லை. பகுத்தறிவுக்கு எதிரான மூடக்கருத்துகளை ஏற்கனவே மூடநம்பிக்கையில் மூழ்கி இம்சைப்படுகிற எளிய மக்களிடம் பரப்பி, பணம் பார்த்தவர் இராம.நாராயணன்.

குரங்கு, நாய், பாம்பு இவைகளை நடிக்க வைத்த கொடுமையைக் கூட மன்னித்துவிடலாம். எஸ்.வி.சேகர் என்கிற பார்ப்பன ஜாதி வெறியரை, தனது 16 படங்களில் கதாநாயகனாக நடிக்க வைத்து, தமிழர்களுக்கு அவர் செய்த தீமையை மன்னிக்கவே முடியாது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே எதிராக இருக்கிற பார்ப்பனரல்லாத பார்ப்பனரான இராம.நாராயணனுக்கு, கலைஞர் கொடுத்திருக்கிற முக்கியத்துவம் ரொம்ப அதிகம்.

கமல் எவ்வளவோ சிரமப்பட்டு நடிக்கிறார். ஆனால் எந்த சிரமமும் படாமல் கமல் படங்களை விட ரஜினியின் படங்களை மக்கள் விரும்புகிறார்கள்?
- டி.ரமேஷ், சென்னை.

அதற்குக் காரணம் இருக்கிறது. கமல் தனது படங்களில் தன்னுடைய ஆண்மையைப் பார்வையாளர்களுக்கு “நிரூபிப்பது” போல் காட்சிகளை வைப்பதுதான்.

ஜட்டி போடுவது, ஜட்டியை கழட்டுவது போன்றவகளை வலிந்து காட்சியாக்குவது. சிட்டுக்குருவி லேகியத்திற்கான விளம்பரப்படம் மாதிரியான அவரின் உடலுறவுக் காட்சிகள்தான், குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு அவரின் படங்களை பார்ப்பதற்கு நடுத்தரவர்க்கத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது. நடுத்தரவர்க்கதில் குடும்பத்தோடு சினிமாவிற்கு போவதை தீர்மானிப்பவன் ஆண். அவன் இப்படிப்பட்ட காட்சிகளைத் தன் மனைவி பார்ப்பதைக்கூட விரும்பமாட்டான்.

கதாசிரியர் ஆர்.கே.நாராயணனிடம் “நீங்கள் ஏன் உங்கள் கதைகளில் செக்ஸ் எழுதுவதில்லை” என்று கேட்டபோது, அவர் சொன்னார், “என் கதாநாயகனும், நாயகியும் தனியறையில் இருக்கும்போது நான் அந்த அறையை விட்டு வெளியே வந்து விடுவேன்.” இந்த நாகரிகம் கேமராவுக்கும் பொருந்தும்.

திரைப்படத்தில், யாரும் தொட அஞ்சுகிற காந்தி கொலை வழக்கை, மிகச் சிறந்த தொழில் நுட்பத்தோடு, துணிச்சலோடு ‘காந்தியைக் கொன்றது பார்ப்பனிய இந்து அமைப்புதான். பிரிவினையின் போது காந்தி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதுதான் அந்தக் கொலைக்குக் காரணம்’ என்ற உண்மையை சொன்ன படம் ‘ஹேராம்’. கமல்ஹாசனின் இயக்கத்தில் வந்த முதல் படம் அது. இந்தியாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று என்று ‘ஹேராமை’ உறுதியாகச் சொல்லலாம். ஆனால் அந்தப் படம் படுதோல்வி அடைந்தற்கான காரணங்களில் ஒரு முக்கிய காரணம், கதைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத உடலுறவு காட்சிகள்தான். சாகேத்ராமன் தனது இரு மனைவிகளிடமும் எப்படி விதவிதமாக உறவு கொள்கிறார் என்பது பார்வையாளர்களுக்குத் தேவையற்ற ஒன்று.

கலவரம் நடந்து கொண்டிருக்கிற கல்கத்தா வீதிகளில் தப்பி, வீட்டில் தனியாக இருக்கிற தன் மனைவியைப் பல மாதங்களுக்குப் பிறகு பார்க்க வருகிற சாகேத்ராமன், கலவரத்தில் இருந்து வீட்டின் கதவுக்கு வந்த அடுத்த வினாடியே ரொமாண்டிக்கில் ஈடுபடுவது ஒரு மனநோயாகவே இருக்கிறது.

நகரம் முழுக்க கலவரம் பரவி கிடக்கும் போது, கணவனின் மனது வீட்டில் தனியாக இருக்கிற மனைவியின் பாதுகாப்பு குறித்துதான் யோசிக்குமே தவிர, உடலுறவு குறித்தல்ல.

சிறந்த நடிகரும் மோசமான இயக்குநரும் கமல்ஹாசனின் ரசிகருமான நடிகர் நாசர் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியின் போது தனது நண்பர்களிடம் இப்படி சொல்லிக் கொண்டு வந்தார், “செக்ஸ் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாங்க. யதார்த்தமா அதை காண்பிக்கிறதுல என்ன தப்பு?”

மலம் கழிப்பது கூட எல்லோரும் செய்யிறதுதான். அதையும் யதார்த்தமாக் காட்டலாமே?

கமல்ஹாசன் கக்கூஸ் போறத தத்ரூபமான காட்சியா வைச்சா, அதுக்கப்புறம் அவருடைய கதாநாயக அந்தஸ்து எவ்வளவு ‘முக்கு’னாலும் திரும்பி வராது. ரஜினி தன் படத்துல ஸ்டைலா சிகெரட்டை போடுவாரு. ஆனா, ஸ்டைலா ஜட்டி போட மாட்டாரு. அதனால்தான் அவரு படம் பைத்தியக்காரத்தனமா இருந்தாக்கூட குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு அனைவரும் விரும்பிப் பாக்கிறாங்க.

இந்துக்களின் ஜாதி உணர்வைப் பற்றிச் சொல்கிறீர்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமும் ஜாதி உணர்வு இருக்கிறதே?
-த.நி.சங்கர்,சென்னை.

ஜாதி உணர்வுமட்டுமல்ல, ஜாதி வெறியே இருக்கிறது. அவர்களின் கடவுள் தான் வேறு. மற்றப்படி அவர்கள் இந்து உணர்வோடுதான் இருக்கிறார்கள். கிறிஸ்தவர் கிறிஸ்தவரையே கல்யாணம் செய்து கொண்டாலும், ஜாதியை குறிப்பிட்டு கலப்புத் திருமணம் என்கிறார்கள். ஒரு கிறிஸ்தவர் தன் ஜாதியைச் சேர்ந்த இந்துவை திருமணம் செய்து கொண்டால் அதைக் கலப்புத் திருமணம் என்று அவர்கள் சொல்வதில்லை. அந்த அளவுக்கு ஜாதி அவர்களிடம் ஆழமாகப் பரவியிருக்கிறது.

தேர்தல் நேரங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியில், கட்சிகள் தனது வேட்பாளர்களை கிறிஸ்தவராக மட்டும் பார்த்து நிறுத்துவதில்லை. பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் என்ன ஜாதியோ அந்த ஜாதிக்காரரே வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அதே தொகுதியில் வேற்று ஜாதியை சேர்ந்த ஒரு கிறிஸ்தவரையும், அவருக்கு எதிராக அந்த ஜாதியை சேர்ந்த இந்து வேட்பாளரையும் நிறுத்தினால், பரிதாபமாக கிறிஸ்தவ வேட்பாளர் கிறிஸ்தவர்களாலேயே தோற்கடிக்கப்படுகிறார்.

“எங்கள் ஜாதிக்குள் கிடைக்கிற சலுகைகளை கிறிஸ்தவர்களே அதிகம் பெறுகிறார்கள். அதனால் எங்கள் ஜாதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கூடாது” என்று சொல்கிற தலைவரை, தீவிரமாக ஆதரிக்கிறார்கள் அதே ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள்.

சில இந்துக்களை போலவே, இஸ்லாமியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிற கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். மாவீரன் திப்புசுல்தானை பார்ப்பனர்கள் விமர்சிப்பது போல், மிக மோசமாக விமர்சிக்கிற கிறிஸ்தவ பாதிரியார்கள் இருக்கிறார்கள்.

உலக அரசியல் பேசுகிற கிறிஸ்தவர்களில் பலர், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் இந்து அமைப்புகளைப்போல், இஸ்ரேலையே ஆதரிக்கிறார்கள். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கொலைக்கார யூதர்களின் அறிவுத்திறனை பேசி பேசி வியக்கிறார்கள். ஆண்டவருக்கு ஆணி அடிச்சது யூதர்கள்தானே என்கிற எண்ணங்கூட அவர்களிடம் இல்லை.

நாம் கிறிஸ்தவர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் இதுதான், நீங்கள் முற்போக்காளர்களாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் கிறிஸ்தவ உணர்வோடவாவது நடந்து கொள்ளுங்கள்.

பொருளாதாரமே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கிறது என்கிறார்களே,
அதெப்படி அன்புதானே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கும்?
-வி.மஞ்சுளா, சென்னை.

அப்படி ஒரு அவல நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவே மாமேதை காரல் மார்க்ஸ் அதை சொன்னார்.

நம் அன்புக்குரியவர்கள் இறந்துபோனால், அவர்கள் பயன்படுத்திய தலையணை, பாய் போன்றவற்றைத் தூக்கி தெருவில் வீசிவிடுகிறோம். ஆனால் 24 மணிநேரமும் அவர்கள் உடலோடு ஒட்டியிருக்கிற மோதிரம், செயின் போன்றவற்றைக் கழட்டிக் கொள்கிறோமே எதனால்?

பணமதிப்பைக் கழித்துவிட்டு, பயன்பாடு என்கிற அடிப்படையில் பார்த்தால் - படுக்க, உட்கார, சாய்ந்து கொள்ள, ஓய்வெடுக்க, உறங்க என்று நமக்கு அனுசரணையாக இருப்பது பாயும் தலையணையும். தங்கத்தால் என்ன பயன்? ஆனால், தங்கத்திற்கு இருக்கும் பணம் மதிப்புதானே, அதன் மீதான மதிப்பையும் உயர்த்தி இருக்கிறது.

ஒவ்வொரு திருமண நிகழ்ச்சிகளிலும் இந்த அன்பு அல்லோகலப்படுவதைக் கவனிக்கலாம். கல்யாண வீட்டுக்காரர்கள், கல்யாணத்திற்கு வந்திருக்கிற வசதி குறைந்த உறவினரை வரவேற்று பேசிக் கொண்டிருக்கும் போதே, தூரத்தில் வருகிற வசதியானவர் முகம் close upபில் தெரிவதும், அருகில் இருக்கிறவரின் முகம் Fade out ஆகி மறைவதையும் எது தீர்மானிக்கிறது? அன்பா?

திருமண நிகழ்ச்சிக்கு போய் வந்த நடுத்தர வர்க்கத்தின் குடும்பங்களில் இப்படியான பேச்சு கண்டிப்பாக இருக்கும், “நம்மள அவ கண்ணுக்கு தெரிஞ்சதா பாத்தியா?”

ஐ.டி. கம்பெனிகளின் சம்பளத்தைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது, இவ்வளவு நாள் இந்திய முதலாளிகள் நம் தொழிலாளர்களுக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு குறைவானது என்று?
-க.சத்தியமூர்த்தி, சேலம்.

உண்மையில் ஐ.டி கம்பெனிகள் தருகிற சம்பளம் குறைவானது. ஒப்பிட்டளவில் இதே வேலையை பார்க்கிற அமெரிக்கர்-, ஐரோப்பியர்களுக்குத் தருகிற சம்பளத்தில் பாதிதான் இந்தியர்களுக்குத் தரப்படுகிறது. இந்த குறைந்த சம்பளத்திற்காகத்தான் இந்தியர்களுக்கு அன்னிய நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை தந்து கோடி கோடியாய்க் கொள்ளை அடிக்கின்றன.

கிராமப்புறத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவருக்குச் சென்னை துணிக்கடை ஒன்றில் வேலை கிடைத்தால், அது சிரமமான வேலையாய் இருந்தாலும் மாதச் சம்பளமும் நகர வாழ்க்கையும் அவருக்கு ஒரு அந்தஸ்தையும் மயக்கத்தையும் தரும் அல்லவா? அதுபோல் ஒரு மயக்கத்தில் இருக்கிறார்கள் ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்.

உலகத் தொழிலாளர்கள் அனைவருக்காகவும் எட்டு மணி நேர வேலைத் திட்டத்தை எந்த அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்கள் இரத்தத்தையும் உயிரையும் சிந்திப் பெற்றுத் தந்தார்களோ? அதே அமெரிக்காவில் இருந்துதான் 12 மணி நேர வேலைத் திட்டம் உலகம் முழுக்கப் பரவிக் கொண்டிருக்கிறது.

டீக் கடையில் வேலை செய்கிற தோழர், எட்டு மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யச் சொன்னால், முடியாது என்று மறுத்துவிடுவார். முடியுமா, ஐ.டி. கம்பெனி ஊழியர்களால்?

திரைப்பட நடிகர்களைப் பற்றி அதிகம் சொல்கிறீர்கள். நடிகைகளைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லையே?
-சி.பாக்யலட்சுமி, சென்னை.

சொல்லியிருக்கிறேன். மீண்டும் அதை அழுத்தத்தோடு சொல்வதற்கான வாய்ப்பாக உங்கள் கேள்வியை பயன்படுத்திக் கொள்கிறேன். மனோரமா, ஒட்டுமொத்த நடிகர்களின் திறமையையும் ஊதித் தள்ளிய நடிகை. உலகத் தரம் வாய்ந்த ஒரே இந்திய நடிகை. ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டில் போன்ற இந்தியாவின் சிறந்த நடிகைகளை விடவும் சிறந்த நடிகை. இந்த இருவரிடமும் மேற்கத்திய நடிகர்களின் தாக்கம் அல்லது மேற்கத்திய மேனரிசங்கள் நிறைந்திருக்கும். திறமை வாய்ந்த இயக்குநர்கள் மூலம் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியவர்கள்.

ஆனால் மனோரமா ஒரு சுயம்பு. மிக மட்டமான இயக்குநர்களிடமும் கதாநாயகி அந்தஸ்தில் இல்லாதபோதும் தனக்கு வழங்கப்பட்ட குறைந்த வாய்ப்பில் நிறைவாகச் செய்தவர். மொழியை அவர் பயன்படுத்திய லாவகம், அவரின் உடல் மொழி முழுக்க முழுக்க சுயமான ஒரு தமிழ் அடையாளம்.

அதுபோல் கதாநாயகிகளில் ஸ்ரீதேவி. எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் கைதேர்ந்த முழுமையான நடிகை. திறமையான கதாநாயகர்கள் கூட ஸ்ரீதேவியுடன் நடிக்கும் போது நிறைய குறைபாடுகள் உள்ளவர்களாக தெரிவார்கள். குறிப்பாக கமல்ஹாசன். ஸ்ரீதேவியின் முன் அவரின் நடிப்புத் திறமை, திக்கித் திணறுவதும் - ஸ்ரீதேவியின் நடன நளினத்தின் முன் கதாநாயக அந்தஸ்தோடு கமல் ஆடுகிற நடனம், ஒரு கோமாளி கூத்தைப்போல் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. ‘மூன்றாம் பிறை’ படத்திற்கு ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது கிடைக்காமல், கமல்ஹாசனுக்குச் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இது சிவாஜிக்குச் சிறந்த நடிகர் விருது தராமல், ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் ‘சிறப்பாக நடித்ததற்காக’ எம்.ஜி.ஆருக்குத் தேசிய விருது தந்தது போன்ற தமாசு.