&q

மருந்து தயாரிக்கப்படும் இயந்திரங்களாக மாற்றப்படும் ஆடுகள்
மரபணு மாற்றுச் சோதனையில் ட்ரேஸி என்ற செம்மறி ஆடு பேசுவதாக அமைந்த இந்த கீழ்க்காணும் கவிதை, இந்த மரபணு மாற்றுத் தொழிநுட்பத்தின் மற்றுமொரு கோரமுகத்தை உயிர்நேயம் மிக்க ஒவ்வொரு உள்ளத்திலும் உருக்கமாக பதிவு செய்கிறது.
நான் ஒரு சாதாரண செம்மறி ஆடு அல்ல...
மரபணு தொழில் நுட்பத்தால் உருவானவள் நான்
ஆல்பா ஆண்ட்டி ட்ரேஸின் - என்னும் மருந்தை
உற்பத்தி செய்வதற்காக மனிதனின் மரபணுக்கள்
புகுத்தப்பட்ட
ஒரு மரபணு மாற்று செம்மறி ஆடு நான்.
மனிதனின் டி.என்.ஏ. செலுத்தப்பட்ட
550 ஆட்டுக்கருக்களில்
தப்பிப் பிழைத்தவை வெறும் 112
அதிலும் மனித மரபணுவை உள்ளே ஏற்றுக்கொண்ட
ஐந்தே முட்டைகளில் நானும் ஒன்றாக ஆனேன்.
ஐந்தில் மூன்று மட்டுமே இந்த மருந்தை
தயாரிக்கும் திறன் பெற்றிருக்க
மற்றவர்களை விட அதிகமாக
லிட்டருக்கு 3 கிராம் என்ற அளவைத் தாண்டி
30 கிராம் மருந்தை உற்பத்தி செய்த
அதிசய ஆடு நான்.
என்னை வடிவமைத்த பொறியாளரிடம்
ஒருநாள் கேட்டேன்
எது என்னை மற்றவர்களிடமிருந்து
வேறுபடுத்துகிறது
கலந்துள்ள மனித மரபணுக்களும்
அவை உனது மரபணுக்களோடு
ஒத்துப் போவதற்கான பிற பொருட்களும் எனப்
பதில் வந்தது.
இயற்கை அன்னையால் அழகாய்ச்
செதுக்கப்பட்ட எனக்குள்
எனது உடல் ஏற்றுக்கொள்ளாத
மனித மரபணுக்கள்
வன்முறையாய் புகுத்தப்பட்டதால்
ஒவ்வொரு நாளும்
மரண வலியால் மறந்து
மறந்து ஓய்கிறேன்.
இதோ என்னவென்றே
தெரியாமல்
நான் இருக்கிறேன்
மனிதனா? ஆடா?
என் பெயர் என்ன?
இருக்கும் வரை? இறக்கும் வரை
ஒவ்வொரு நாளும்
இந்த மருந்தை உற்பத்தி செய்யும்
ஒரு மருந்து மெஷினாக நான் இருந்து கொண்டிருக்கிறேன்.