மனித மனத்தை நெகிழ்ச்சியுறச் செய்யவும், யோசிக்க வைக்கவும் கலகமுறச் செய்யவும் வல்லமை பெற்றவை. கலைகள் தேடலுடன் கூடிய படைப்பாளியின் படைப்புகள் கூடுதல் பலம் கொண்டவை. எழுத்து, ஓவியம், இசை போன்ற நுண் கலைகளைவிடக் காட்சி ஊடகமான குறும்படக் கலை இன்றைய சூழலில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஒரு புறம் சினிமாவுக்கான நுழைவுச் சீட்டாக இக்கலை பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட மறுபுறும் சமூகச் செயல்பாடாகவும் பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். அழகியல் நேர்த்தியுடன் சிலரது சிறுகதைகளும், கவிதைகளும், குறும்படமாக் கப்பட்டுள்ளன. சாதிமத மோதல், காவல் துறையினரின் அத்து மீறல்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளையும் பலர் விவரணப் படங்களாக்கிச் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த வண்ணமிருக்கின்றனர்.

Gouthaman அத்தகைய இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் வ.கௌதமன்.

இவர் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு', "நீல பத்மனாபனின் எழுத்துச் சித்திரங்கள்', ‘பூ', ‘மலை', ‘ஏரி', ‘பனை' ஆகிய குறும்படங்களை இயக்கியிருக்கிறார் வ.கௌதமன் அடிப்படையில் ஒரு திரைப்பட இயக்குநர் 1999இல் ‘கனவே கலையாதே' எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘நீலபத்மனாபனின் எழுத்துச் சித்திரங்கள்' எனும் ஆவணப் படத்தை, சாகித்ய அகாதெமிக்காக இயக்கினார். 1954 இல் நேருவால் ஆரம்பிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி இந்தியாவில் பல்வேறு மொழிகளில் இதுவரை பல குறும்படங்களையும் பல விவரணப் படங்களையும் வெளியிட்டுள்ளது. அவற்றில் நீலபத்மனாபனைப் பற்றி 2004 இல் வெளி வந்த இந்த விவரணப் படமே சிறந்த படமாக சாகித்ய அகாதெமிக்காரர்களால் பாராட்டப்படுவதாகப் பெருமிதம் கொள்கிறார் வ.கௌதமன்.

35 வயதாகும் இவர் கடலூர் மாவட்டம் திட்டக் குடி வட்டம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் இவர் மக்கள் தொலைக்காட்சிக்காக இயக்கிய பூ, மலை, ஏரி, பனை குறும்படங்கள் பெறும் வரவேற்பைப் பெற்றன.

வ.கௌதமன் இயக்கிய குறும்படங்கள் பற்றிய ஒரு பார்வை

‘சினிமாவுக்குப் போன சித்தாளு'

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு' குறு நாவலை ஒரு அழகான குறும் படமாக்கியிருக்கிறார். நடிகர்களின் மீதான கவர்ச்சி மோகத்தால் சீரழியும் ஒரு குடும்பத்தின் கதை இது. பணத்துக்காகவும், புகழுக்காகவும் நடிக்கும் நடிகனை தலைவனாகவும், தெய்வமாகவும் நினைக்கும் ரசிகனை அடித்து நொறுக்கும் குறும்படம் இது.

கணவன் பகலில் வாடகை ரிக்ஷா ஓட்டுபவன். இரவில் தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பவர். அவர் மனைவியோ சித்தாள் வேலை செய்பவள் என்றாலும் ஒருவர் மீது ஒருவர் கொள்ளை அன்பு கொண்டவர்கள். தன்னைவிடத் தன் தலைவன் (நடிகன்) மீது மனைவி அதிக ஈடுபாட்டுடன் இருப்பதால் அவன் நடித்த படத்திற்குப் போக அனுமதி மறுக்கிறான் கணவன்.

கணவனுக்குத் தெரியாமல் தன் கணவனின் முதலாளியுடன் (ரிக்ஷா உரிமையாளன்) சினிமாவுக்குச் செல்கிறாள். அவனோ அவளை மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துக் கெடுத்து விடுகிறான். தன் மீது பாசம் கொண்ட கணவனுக்குத் துரோகம் செய்விட்டதால் விபசார விடுதியிலேயே தங்கி விடுகிறாள் என்றாலும் எந்த ஆணையும் தன்னிடம் சேர்ப்பதில்லை. கணவன் வீட்டிற்கு அழைத்துப் போக மறுக்கிறான். பிறகொரு நாள் மன உளைச்சலில் பைத்தியமாகி விடுகிறாள்.

வீதியோரத்தில் நான்கு பேர் அவளை வண்புணர்ச்சி செய்து கொண்டிருக்கும் ஒரு கொடூர சூழலில் கணவன் மீண்டும் அவளைப் பார்க்க நேரிடுகிறது. கதறுகிறான். அவளோ தன்னை பலாத்காரம் செய்த தன் கணவனின் முதலாளியைப் பழிவாங்கப் போவதாகவும் தன் அன்பான கணவனுக்கு துரோகம் செய்து விட்டதாகவும் அரற்றிக் கொண்டிருக்கிறாள். கதை முடிவடைகிறது. தன்னுடைய ரிக்ஷாவிலேயே அவளை கை கால்களைக் கட்டி அழைத்துச் செல்வதுடன் கதை முடிவடைகிறது. பார்வையாளர்களைக் கலங்கச் செய்யும் அற்புதமான படைப்பு இது.

இயக்குனர் வ.கௌதமன், பூ, மலை, ஏரி, பனை ஆகிய குறும்படங்கள் எடுத்த விதமும் மிகவும் அலாதியானது. கவிஞர் பச்சையப்பனின் கவிதைகளைப் படித்து அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் தான் பூ, மலை, ஏரி ஆகியன. பனை என்கிற கவிதை கவிஞர் வையவனுடையது. அதை மேலும் விரிவுபடுத்தி பச்சையப்பன் எழுத, அதைப் படமாக்கினார் இயக்குநர்.

‘மலை' என்கிற கவிதை, ஒரு மலையின் அழிவைச் சொல்லுவது. இதையும் அக்கிராமத்தின் பக்கத்தில் இருந்த ஒரு மலையையே தேர்ந்தெடுத்திருந்தார் இயக்குனர். மக்கள் வாழ்வோடு கலந்திருந்த மலை, கல்குவாரியாக அது எப்படி சீரழிந்துப் போய் விட்டது என்பதைச் சொல்லும் படம்

மலை கவிதையைப் படமெடுக்க மலை மலையாய் அலைந்தது போல பனை கவிதையைப் படமெடுக்க தூத்துக்குடி வரை போய் பனை வாரியத்தை அணுகி உற்பத்தியெல்லாம் படம் பிடித்தது அக்குழு. பனையின் எல்லா அம்சங்களையும் படமாக்கினார்கள். மனிதனுக்கு எவ்வகையில் எல்லாம் பனை பயனளிக்கிறது என்பதை சிறப்பாகத் தொகுத்துள்ளனர்.

விவசாய வாழ்க்கையின் ஜீவனான ‘ஏரி' பற்றி அழகாக ‘ஏரி' என்கிற படம் எடுத்திருந்தனர். ஏரி எவ்வாறு கட்டிடங்களாக மாறிப் போனது என்பதைச் சொன்ன படம் அது.

‘கனமான விசயங்களைக் கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; இரசிக்க மாட்டார்கள் என்கிற மசாலாப் பட இயக்குநர்களின் கூற்றைத் தகர்த்தெறிந்தன இக்குறும் படங்கள். மக்கள் தொலைக்காட்சியில் இக்குறும்படங்கள் ஒளிபரப்பானபோது அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இனி அவருடன் நேர்காணல்...

திரைத்துறைக்கு வரவேண்டும் என்று எந்தச் சூழலில் முடிவு செய்தீர்கள்?

‘நான் ஏழாவது படிக்கும் போதே சினிமாதான் நம் துறை என்று முடிவு செய்தேன். என் அப்பா கம்யூனிஸ்ட். அவருடன் சிறு வயதில் நிறைய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களுக்குச் சென்றுள்ளேன். நான் பார்த்த முதல் படம் ‘சிவப்பு மல்லி'. அப்பா ஒரு கம்யூனிஸ்ட் என்பதால் கம்யூனிஸ்ட் கொள்கையுள்ள அந்தப் படத்திற்கு அழைத்துச் சென்றார்.

நான் ஏழாவது படித்த போது ஆசிரியர் எல்லா மாணவர்களிடமும் ‘நீ என்னவாகப் போறே' என்று கேட்ட போது, எல்லோரும் இன்ஜினியர், டாக்டர், ஆசிரியர் என்று சொன்ன போது நான், ‘சினிமாவில் நடிக்கப் போறேன்' என்றதும், எல்லோரும் சிரித்து விட்டார்கள். நான் நடிப்பதற்கு வாய்ப்புத் தேடி சென்னை வந்திருந்த போது என்னுடன் படித்த ஒரு மாணவியைச் சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண்ணிடம் நான் நடிக்க வந்துள்ளேன் என்று சொன்னால் சிரிப்பாள் என்பதற்காக ‘டைரக்சன்' செய்யப் போவதாகச் சொன்னேன்.

ஆனால் சினிமாவிற்குள் வந்த பிறகு அங்கு நடப்பவற்றைப் பார்த்து சினிமா எனக்கு வெறுத்து விட்டது. அப்போது 1989, 90களில் நிறைய இலக்கியம் சார்ந்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். ‘தலைமுறைகள்' எனும் நாவலைப் படித்த பிறகு, தேடிதேடிப் படித்தேன். அதன் பிறகு, இதுபோன்ற சிறந்த இலக்கியங்களைத் திரைப்படமாக்க வேண்டும் எனும் எண்ணத்தில் உதவி இயக்குநரானேன். ‘கனவே கலையாதே' எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநரானேன். பிறகு சினிமாவுக்குப் போன சித்தாளு' எனும் குறும்படத்தை இயக்கினேன்.

குறுநாவல், கவிதை போன்ற படைப்புகளை குறும்படமாக்கும் போது சாதக, பாதக அம்சங்கள் என்னென்ன?

‘இலக்கியம் என்பது வேறு, சினிமா என்பது வேறு. ஒவ்வொரு கலைக்கும் ஒரு தனித்த மொழி இருக்கிறது. நாவலை அப்படியே குறும்படமாக்கினால் தோல்வியடையும். சினிமாவிற்கான மொழியைப் புரிந்து கொண்ட செயல்படும் போது தான் இதுபோன்ற முயற்சிகள் வெற்றியடையும். தங்கத்தை ஆபரணமாக மாற்றுவது போல் இலக்கியப் பிரதிகளை குறும்படமாக வடிவமாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் இலக்கியப் பிரதியும் கெட்டு விடும்; குறும்படமும் கெட்டு விடும். எந்தவொரு படைப்புக்கும் முன் கூட்டியே வரையறையை தீர்மானிக்க முடியாது என்றாலும், ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு இலக்கணம் இருக்கு.

அதை கவனமாகக் கையாள வேண்டும். நாவல் தொடங்குவது போலவே குறும்படம் தொடங்காது. இயக்குநர் விரும்பும் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் குறும்படத்தைத் தொடங்கிக் கொள்ளலாம்.

படைப்பாளிக்கு அந்தச் சுதந்திரத்தை இலக்கியவாதி அளிக்க வேண்டும். எழுத்தாளருக்கும் இயக்குநருக்கும் சரியாக புரிதல் ஏற்படும் போது தரமான சினிமா உருவாகிறது. எனக்கும் அத்தகைய முழு சுதந்திரம் கிடைத்ததால் என் குறும்படங்களை நேர்த்தியாகச் செய்ய முடிந்தது.

தமிழ்ச் சூழலில் விவரணப் படங்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?

‘படைப்பாளிகளுக்கு சமூகப் பொறுப்புணர்வு குறைவாக இருக்கிறது. பொருள் சேர்ப்பதில் தான் அவர்கள் பொறுப்பாக இருக்கிறார்கள். அத்தி பூத்தாற் போல் ஒரு சிலர் தான் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள். சமூகம் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. போகிற போக்கில் ட்ராபிக் போலீஸ் லஞ்சம் வாங்குவதை செல்போன் கேமராவில் பதிவு செய்து கூட அம்பலப்படுத்தலாம். விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பை சாமானியர்களும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அதன் மூலம் சீர்திருத்தங்களை உண்டாக்கலாம். இப்படியான முயற்சிகளால் தான் விவரணப் படங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க முடியும்'.

வியாபார சினிமா உலகில் இருந்து கொண்டு எப்படி உங்களால் குறும்படங்கள் எடுக்க முடிகிறது? அதற்கான மனநிலை எப்படி வருகிறது?

வெற்றிப் படங்களைத் தந்தாலும் அதிலும் ஏதாவது செய்தி சொல்ல வேண்டும் என்பது என் கருத்து. பார்வையாளனை உணர்வு பெறச் செய்ய வேண்டும் என்கிற விருப்பம் எனக்குண்டு. என் எல்லா க் குறும்படங்களிலும் இதைச் செய்துள்ளேன். பொறுப்புகளையும் நன்மைகளையும் உன்னத்தங்களையும் பதிவு செய்துள்ளேன். ஒவ்வொரு படைப்பாளியும் தன்னால் இயன்றதை இந்தச் சமூகத்திற்குச் செய்ய வேண்டும்.'

குறும்படங்கள் குறித்து உங்கள் கருத்து?

குறும்படம் என்பது ஒரு அற்புதமான விசயம். முழுநீளத் திரைப்படங்களை விடத் தாக்கம் உண்டாக்கும். இன்றைய சூழலில் உலக அளவில் முக்கிய இடம் வகிக்கின்றன. குறும்படங்கள் முழுநீளத் திரைப்படங்கள் நாவல்களைப் போன்றது. குறும்படங்கள் சிறுகதையைப் போன்றது. இப்பொழுது நிறைய பேர் குறும்படம் எடுக்க வருகிறார்கள். இதற்கென்று பெரிதாகத் திரைப்பட வடிவமோ, பெரிய நடிகர்களோ, தொழில்நுட்ப வல்லுநர்களோ தேவையில்லை. சாதாரண வீடியோ கேமராக்களிலும் கூடச் சமூகச் சிந்தனையுள்ள குறும்படங்களையும் விவரணப் படங்களையும் தர முடியும் என்பதே இதற்குக் காரணம்.

ஆரம்பத்தில் திரைத் துறையினர் குறும்படங்களை எடுத்தனர். இப்போது காட்சித் தகவலியல் மாணவர்களும் சமூகச் சிந்தனையுள்ளவர்களும் குறும்படங்களை எடுக்கின்றனர். நல்ல சமூக சிந்தனையும் ஹேண்டி கேமராவும் இருந்தால் போதும். ஒரு சிறந்த படைப்பாளியாகலாம். கூழ் காய்ச்சிக் குடிப்பதைக் கூட ஒரு அழகான குறும்படமாக எடுக்க முடியும்.

குறும்படத்திற்கான கருவை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

வாழ்க்கையைப் பிரதிபலிப்பது தான் கலை. எனது அனுபவத்திலிருந்து இதைச் சொல்கிறேன். எந்த ‘தியரி'யையும் படித்து விட்டு நான் இதைச் சொல்லவில்லை. நான் உணர்ந்த வாழ்க்கையைத் தான் பச்சையப்பனின் பூ, மலை, ஏரி கவிதைகளில் செய்தேன். பார்வையாளனின் ஏற்பு தான் வெற்றி. பார்வையாளன் தான் வெற்றியை நிர்ணயிப்பவன். வாழ்க்கையிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் இத்தகைய படங்கள் எடுக்கப்பட வேண்டும். தாகூர் சொன்ன ஒரு கருத்து மிக முக்கியமானது. ‘அற்புதத்தையும், அழகையும் தேடி உலகம் முழுக்க அலைந்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. களைத்து விட்டுக் கூடத்தில் விழுந்தேன். காலையில் விழித்த போது, புல் நுனியிலிருந்து பனித் துளியில் கண்டேன்' எனும் தாகூரின் இச் சிந்தனை, படைப்பை நம்மைச் சுற்றித் தேட வேண்டும் என்கிறது. இது தான் எனது கொள்கை.

விவரணப் படங்களுக்குக் கலை நேர்த்தி தேவையா?

விவரணப் படத்திற்கு அழகும் நேர்த்தியும் முக்கியம் தான். ஆனால், கட்டாயமில்லை. செல்போனில் எடுத்த சதாமின் மரண தண்டனைக் காட்சி தான் இன்றைக்கு முக்கியமான பதிவாக/ ஆவணமாக இருக்கிறது. சமூக அநியாயங்களை எல்லோரும் இது போல் கிடைக்கின்ற கருவிகளைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும். தகவல்களை வரிசைப்படுத்தித் தர வேண்டும். தெரிந்த செய்திகளாக இருந்தாலும் எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் அது அடுத்த தலைமுறைக்கான ஆவணம்.

பொதுவாகப் படைப்பாளிகள் சமூக உணர்வை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்களே?

சமூகப் பிரச்சினைகளைப் பேசாத படைப்பாளிகள், படைப்பாளிகளே அல்ல. இவர்களெல்லாம் சோரம் போன படைப்பாளிகள். முழுக்க முழுக்க குறும்படமாக, பிரச்சாரப் படமாக எடுக்காவிட்டாலும் ஏதேனும் ஒரு சிறு விஷயத்தையாவது செய்ய வேண்டும். சமூகச் சீர்கேட்டின் மீது சிறு கோபத்தையாவது வெளிப்படுத்த வேண்டும். நிலத்தின் தன்மையை எப்படி உரங்கள் மாற்றி விட்டதோ அதேபோல மனிதரின் மனமும் மாறி விட்டது. இதைப் படைப்பாளிகள் தான் மீட்டெடுக்க வேண்டும்.

‘ஆபாச விஷயங்கள் நாட்டில் நடக்கிறது. அதனால் படமாக எடுக்கிறேன்' என்பவன், "என் வீட்டில் நடந்தது' என்று சொல்ல வேண்டியது தானே? ஏன் சமூகத்தின் மீதே பழிபோட்டுக் கொண்டிருக்க வேண்டும்?

இளந்தலைமுறை படைப்பாளிகளுக்கும் குறும்பட இயக்குநர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது?

மாணவர்களுக்கு வரலாறு தவறாகச் சொல்லப் படுகிறது. கத்தியின்றி இரத்தமின்றி அஹிம்சை முறையில் சுதந்திரம் பெறப்பட்டதாக அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்கள் சிந்திய இரத்தமும் தியாகமும் மறைக்கப்படுகிறது. பெரும் போராட்டத்தாலும் தியாகத்தாலும் பெறப்பட்ட நம் சுதந்திரம். நாடாளுமன்றமும் பாராளுமன்றமும் தவறினால் கூட நீதிமன்றங்கள் சரியாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைக்கோ நீதியைக் காக்க வேண்டிய நீதிபதிகளே மீது கூட குற்றம் சாட்டப்படுகிறது. அதேபோல் படைப்பாளிகளும் தமது பொறுப்பிலிருந்து விலகித் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். இதை இளம் படைப்பாளர்கள் தான் மாற்ற வேண்டும். அவர்களும் தவறு செய்தால் பூஜ்யத்தில் தான் வந்து நிற்கும்.

உங்களுக்குப் பிடித்த குறும்பட இயக்குநர்கள்?

நல்ல கதைகளைக் குறும்படமாக்கிய பாலுமகேந்திரா, ‘நாக் அவுட்' எனும் சிறந்த படத்தை இயக்கிய எடிட்டர் பி.லெனின், ராமையாவின் ‘குடிசை' ஆவணப் படத்தை இயக்கிய பாரதி கிருஷ்ணகுமார்.

முக்கியமான எதிர்காலத் திட்டம்?

எதிர்காலத்தில் உலக அளவிலான வெகுவான படைப்புகள் இலங்கையிலிருந்து தான் தோன்றும். மனிதர்கள் சிதையும் மண்ணிலிருந்து தான் இப்படியான படைப்புகள் வரும். ஈழப் போராட்டமும் அம்மக்களின் சிதைவுகளும் பற்றிப் படைப்பதும் பதிவு செய்வதும் தான் என் வாழ்வின் முக்கியப் பணியாக இருக்கும்.
நேர்காணல்: யாழினி முனுசாமி